நிசாதகன் என்ற ராட்சதன்

பிரம்மசேனருக்கு கொஞ்சம் மூச்சிரைத்தது. முன்னே சென்றுகொண்டிருந்த அவரது சிஷ்யர்கள் அடர்ந்த காட்டினை கவனத்துடன் ஊடறுத்து ஒரு பாதையை உருவாக்கி கொண்டிருந்தனர். பின்னே வந்த சிஷ்யர்களோ காட்டினை கவனமாக உள்வாங்கி கொண்டு முன்னேறினர்.

வசந்த காலக் காடு மிக ரம்மியமாய் இருந்தது. படர்ந்திருந்த பசுமை கண்களை கொஞ்சியது. தாடகாரண்யம் அதன் எல்லா  வனப்புகளையும் பகட்டாக காட்சிப்படுத்தியிருந்தது. அத்துணையும் கண்களால் பருகிக்கொண்டே பயணத்தை தொடர்ந்தது அந்தக்குழு.

வனப்பு மட்டுமே வனத்தின் இருப்பல்லவே? எந்த நேரமும் எதாவது ஒரு கொடிய மிருகம் எதிர்ப்படும் ஆபத்தையும் நன்றாகவே உணர்ந்திருந்தது அக்குழு. ஏதேதொ பட்சிகள் எழுப்பிய இசையின் பின்னணியோடு தொடர்ந்தது பயணம்.

திடீரென ஒரு உறுமல். முன்னே சென்ற சிஷ்யர் குழு அப்படியே நின்று  பிரம்மசேனரை பார்த்தது. முன்னே செல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பயம் கலந்த தயக்கத்தோடு தங்கள் குருநாதரை பார்த்தனர் சிஷ்யர்கள். பிரம்மசேனரோ பகவான் வழிகாட்டுவான் தொடர்ந்து போங்கள் என்றார்.

பகவான் பெயரை கேட்டவுடன் சற்றே மனத்தேறுதல் அடைந்த சிஷ்யர்குழு  மீண்டும் முன்னேற ஆரம்பித்தது. சில அடிகள் எடுத்து வைத்ததும் மீண்டும் கேட்டது அந்த உறுமல். இந்த முறை முன்னே போன சிஷ்யர்கள் அடுத்தது என்ன என்ற கட்டத்தில் தங்களின் தற்காப்பு ஆயுதங்களை இறுகபற்றினர்.

விண்ணை மறைக்கும் நெடிய மரங்களின் கீழே சில மணித்துளி பதைத்தபடி நின்றனர் சிஷ்யர்கள். பிரம்மசேனரோ எதுகுறித்தும் கவலையில்லாமல் குழுவின் நடுவே சில ஸ்லோகங்களை உச்சரித்தபடி நின்றுகொண்டிருந்தார். அந்த நிலையிலும் கலங்காத அவரின் பக்குவம் சிஷ்யர்களுக்கு அவர்மீது இருந்த பக்தியை பன்மடங்கு உயர்த்தியது.

மரங்களினூடே இப்போது சிறு அசைவு தெரிந்தது. மெல்ல மெல்ல அவர்களின் முன்னே இருந்த செடிகளின் இடையே ஒரு மிருகம் பதுங்கி பதுங்கி வருவது தெளிவாக தெரிந்தது. வழியும் வியர்வையோடு அவர்கள் தங்கள் ஆயுதங்களை இறுகப்பற்றி தாக்குதலுக்கு தயாரானார்கள்.

மிக அருகில் அசைந்த இலைகளை விலக்கிக்கொண்டு வெளியே வந்தது ஒரு மனிதன்!  மிகப்பெரிய பெருமூச்சோடு தங்களது ஆயுதங்களை தளர்த்திய சிஷ்யர் கூட்டம் திடீரென பிரசன்னமான அந்த மனிதனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

அவர்களின் ஆச்சர்யத்திற்கும் காரணமிருந்தது. அந்த காட்டுவாசியின் உதடுகள் வெளிர் ரோஜா நிறத்தில் இருந்தன. அவன் உடலில் சிவப்பாய் இருந்த ஒரே பாகம் அதுமட்டுமே. தொட்டால் ஓட்டும் கரிய நிறம், பளீரென மின்னும் கூறிய விழிகள், படிகள் விழுந்த உடற்கட்டு என எந்த ஒரு விசயத்திலும் அந்த குழுவினை ஒத்திருக்கவில்லை அவன். வில்லும் அம்பும் தரித்த அவன் தாக்குதலுக்கும் தயாராகவில்லை. குழுவினரை பார்த்தும் இரண்டு கையையும் கூப்பி வணங்கினான்.

இப்போதுதான் உயிர் வந்தது குழுவினருக்கு. பிரம்மசேனரோ அப்பா நீ யார்? இந்த அடர்ந்த காட்டிற்குள் தனியாக என்ன செய்கிறாய்? என வினவினார்? ஐயா நான் நிசாதகன் இந்தக்காட்டில் வேட்டையாடி பிழைக்கிறேன் என்றான் அவன். சாமி யாருங்க அய்யா என்று கேட்கவும் செய்தான். சிஷ்யகோடிகளின் முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை விளைந்தது.

பின்னே இருக்காத? பாரத தேசமெங்கும் புகழ்பெற்ற பிரம்மசேனரை ஒரு காட்டுவாசி எப்படி அறிந்திருக்கமுடியும். மன்னாதி மன்னர்களே பிரம்மசேனர்  பாதம் தங்கள் ராஜ்யத்தில் பட தவமிருக்க, காட்டில் ஒரு ராட்சசன் கேட்கிறான் சாமி யாருன்னு. யாகங்கள் செய்வதில் அவற்றின் பலன்களை பெற்றுத்தருவதில் பிரம்மசேனர் நிகரற்றவர் என்பது இந்திர லோகத்தில் உள்ள தேவர்களுக்கு கூட தெரியுமே.

ஆனால் அமைதியாக பதில் சொன்னார் குருநாதர். அடியேன் பிரம்மசேனன். பெயரை சொன்னவுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுவான் ராட்சசன் என்று எதிர்பார்த்தனர் சிஷ்யர்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. பயந்திருந்த அவர்களை பார்த்த நிசதகன் சாமி இந்தக்காடு எனக்கு அத்துப்படி நீங்க போக வேண்டிய இடத்திக்கு நான் பத்திரமாக கூட்டிட்டு போறேன் என்று அவனாகவே முன்வந்தான்.

எல்லாம் பகவன் சித்தம். நான் பாடலிபுத்திரம் போகிறேன், எங்களை காட்டை கடந்து ராஜ பாட்டையில் விட முடியமா? என்றார் பிரம்மசேனர். இன்னும் நாலு காதம் நடந்தா  போதும் சாமி என்று சொன்னான் நிசாதகன்.  சரி இவன் பின்னே போங்கள் என்றார் குரு.

நாலு காத தூரமும் தனக்கு தெரிந்த காட்டின் ரகசியங்களையெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தான் நிசாதகன். ஆச்சர்யமாய் அதனை கேட்டுக்கொண்டே வந்த சிஷ்யர்களுக்கு பயணக்களைப்பே தெரியவில்லை. அடர்ந்த காடு திடீரென தீர்ந்து போனது. சிறிது தூரத்தில் தெரிந்தது ராஜபாட்டை. அப்போ நான் போயிட்டு வரேன் சாமி என்ற நிசாதகனை நிறுத்தினார் பிரம்மசேனர்.


 அப்பா ஒரே ஒரு மந்திரத்தைத்  தெரிந்து கொண்டு போ உனக்கு இறைவன் அருள்புரிவான் என்றார். நிசாதகனின் கண்களோ ஆர்வத்தில் மின்னியது. மறை பொருளை காட்டுகிறேன் என்கிறாரே தனக்கும் தனது சந்ததிக்கும் என்றென்றும் சாத்தியமில்லா ஒரு சமாச்சாரத்தை தருகிறேன் என்கிறாரே?

கண்கள் நீர் பனிக்க பிரம்மசேனரின் முன் மண்டியிட்டான் நிசாதகன்.  சிஷ்யர்களுக்கோ குழப்பம். ராட்சதன் மறை படிப்பதா?  உலக அழிவின் ஆரம்பம் அல்லவா இது. குருவிற்கு தெரியாத சட்டமா தர்மமா என அமைதியாக நடப்பதைப் பார்க்கத் துவங்கினர்.

மாலை மயங்க துவங்கிய வேளையில் தனது மந்திர உச்சாடனத்தை ஆரம்பித்த   பிரம்மசேனர் அவர்களுக்கு ஒரு புதிய சூரியனாக தெரிந்தார். ஒரு பதினைந்து முறைக்கு பிறகு குருவின் முகத்தின் ஒரு சிறிய ஏமாற்றத்தை கண்டனர் சிஷ்யர்கள். முப்பது முறை மந்திர உச்சாடனதிற்கு பின்பும் ராட்சதனால் சொல்லமுடியவில்லை மந்திரத்தை.

பிரம்மசேனர் தனது ஆயாசத்தினை மறைத்துக்கொண்டு சரி நிசாதாகா  சென்றுவா உனக்கு பகவான் விதித்தது அவ்வளவுதான் என்றார். நிசாதகன் சொர்கத்தின் கதவுகள் அவனது முகத்தில் அறைந்த சாத்தப்பட்டதாக உணர்ந்தான். வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே போய்ட்டுவரேன் சாமி என்றான்.

குறும்புக்கார சிஷ்யன் ஒருவன் நீ எப்படி சாமி கும்புடுவே எங்களுக்கு கொஞ்சம் காட்டு என்றான். அவன் பேச்சில் வழியும் விசத்தை அறியாத நிசாதகனோ மெல்ல எழுந்து வானத்தை பார்த்து சாமி என்று சொல்லி வணங்கினான்.  கண்களை மூடிக்கொண்டு கைகளை கூப்பியிருந்த அவனை அந்த பண்டிதற்குழு பார்த்துகொண்டிருந்தது. அவர்களின் பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருந்தது.

மாலை மயங்கிய அந்தக்காட்டின் எல்லையில் திடீரென ஒரு வெளிச்சம் பரவியது. அது நீள்வட்ட வடிவில் சுழன்றவாறே நிசாதகனை பார்த்து இறங்கியது. நிசாதகன் அந்த ஒளியோடு பேசுவதாக தோன்றியது குழுவினருக்கு.

குரு சாஸ்டாங்கமாய் விழுந்திருந்தார் நிசாதகன் என்ற ராட்சதனின் கால்களில்.

பிற சேர்க்கை

காலம் தோறும் பிரமணியம் புத்தகத்தை படித்ததின் பின்விளைவு.
லியோ டால்ஸ்டாயின் மூன்று குருமார்கள் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

Comments

 1. மூன்று குருமார்கள் மட்டுமா வருகிறார்கள்?
  பரமார்த்த குருவும் வருகிறார்.
  பற்பல அற்ப குருக்களும் வருகிறார்கள்.
  அருமையாகச் சொல்லியிருக்கிறீரகள் நண்பா!
  தயவு செய்து இதுபோல அடிக்கடி எழுதுங்கள்...
  காலந்தோறும் நமது உருப்படா வேலைகளால்தானே உருப்படியான படிப்பு இல்லாமல் நகர்கிறது நரகவாழ்க்கை? பார்க்கலாம் விரைவில் முடிப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணாத்தே

   Delete
 2. சொல்ல மறந்து விட்டேன்...
  அந்த முதல்படத்தில் அசந்து விட்டேன்... உள்ளே தெரியும் பெண்முகம்... வெகு அழகும் நுட்பமும்... கடைசிப் படம் மனசுக்குள் மழை...
  இதெல்லாம் எங்கய்யா புடிக்கிறீங்க...
  நல்லாருங்க... நன்றி.

  ReplyDelete
 3. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 4. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்
  நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 5. நல்லதுதை சொல்லுங்க கதையில
  அல்லது கேட்கும் காலத்தில்
  நன்றி

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...