விஸ்வரூபம்


உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுத்திரைப்படம்.  ஏகப்பட்ட பிரச்சனைகளோடு எதிர்பார்ப்புகளையும் கிளறிய படம்.  நாங்கள் போனது இரண்டாம் காட்சி என்றாலும் தியேட்டர் திமிலோகப்பட்டது. ஒன்று தெளிவாய்ப் புரிந்தது. கமல் அவர் படத்தை எதிர்த்தவர்களுக்கு நிறையவே கடன்பட்டிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் நிரம்பி வழிகின்றன தியட்டர்கள்.

அமரிக்காவில் மேல்படிப்பு படிக்க ஆசைப்படும் நிருபமா (பூஜா குமார்) கொஞ்சம் ஒருமாதிரி இருக்கும் மாமாவை திருமணம் செய்துகொள்கிறார். நிருபமாவின் உளவியல் விசாரணையில் துவங்குகிறது படம். கணவர் விஸ் வீட்டு வேலைகளை பொறுப்பாக பார்க்கும், சமைக்கும் நல்லவர்.

விஸ் அலைஸ் விஸ்வநாதநாக வரும் கமல் காட்டும் பாவனைகள், மைக்ரோ வேவில் சிக்கனை எடுக்க ஓடும் போது காட்டும் உடல் மொழி கமல் தன்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை ஐ.எஸ்.ஒ தரத்துடன் நிருபித்திருக்கிறார்.

அடி வாங்கி கதறும் இடங்களிலும், ஒரு கொலையை நேரில் பார்த்த பின் கதறி அழும் கமல் கைக்கட்டை அவிழ்த்தவுடன் எடுக்கும் விஸ்வரூபம் தமிழ் திரையுலகு எப்போதும் கண்டிராத ஆக்சன் விருந்து. இனி இப்படி வருமா என்று சந்தேகிக்க வைக்கும் உழைப்பு.

டாக்டர் நிருபமா பேசும் வசனங்கள் இன்னொமொரு சமூகத்தை தேவையில்லாமல் சீண்டுகிறது.  அம்மா பாப்பாத்தி நீ உப்புக்காரம் பார்த்து சொல்லு என கமல் சொல்வது ஒரு உதாரணம். உப்பு பார்க்க சொல்வது சிக்கனுக்கு!

ஆப்கன் மண்ணை காமிராவில் காட்டும் போது ஒலிக்கும் இசை காட்சியின் தீவிரத்தையும் ஆப்கனின் ரணத்தையும் பதிய மறுக்கிறது. எதோ நிலவுக்கு ஒரு சாகச பயணம் என்கிற ரேஞ்சில் ஒளிகிறது இசை. சங்கர் என்ன ஆச்சு? ஆப்கன் என்ன இன்பசுற்றுலா நகரா?  மனிதம் மிக மோசமாக பாதிக்கப் பட்ட ஆப்கன் எப்படி உங்களுக்கு இப்படி ஒரு இசையை தந்தது?


ஆப்கானிஸ்தான் அழகாக சிகியிருக்கிறது ஷானு ஜான் வர்கீசின் காமிராவில். கரும்பாம்பாய் நெளியும் சாலைகள், மண்குடிசைகள் என ஆப்கன் திரையில் பதிவாகிற பொழுது திரைக்கதை வேகம் மட்டுப்பட்டுவிடுகிறது.

பர்தாவில் வெடிகுண்டுகளுடன் அமெரிக்க ராணுவ கவச வண்டியை தகர்க்கும் சிறுவனை நினைத்து கமல் வருந்துவது, துப்பாக்கி சூட்டில் இறக்கும் மனிதர்களை பார்க்கும் போதெல்லம் கமல் அருகில் உள்ள சுவத்துக்கு முட்டுக்கொடுப்பது எல்லாம் பழைய பாணி.

வானுயர்ந்த அமரிக்க கண்ணாடி மாளிகைகளிடமிருந்து புழுதி பறக்கும் ஆப்கன் பாலைவனங்களுக்குள் பயணிக்கும் காமெர இரண்டு மூன்று திரைப்படங்களை ஒன்றாக பார்த்த உணர்வை தருகிறது.


டர்டி பாம் கிளைமாக்ஸ் முழுவதும் கொஞ்சம் கூட நம்ப முடியாத கோடம்பாக்கம் கொத்து.  அப்புறம் அந்த சேசிங் காட்சிகள். அனேகமாக அமெரிக்காவின் முதல் தமிழ் சேசிங் காட்சி இதுவாகத்தான் இருக்கும். நன்றாகவே வந்திருகிறது.சில இடங்களில் லோக்கேசன்களை காட்டுவதில் கேமெரா துருத்திக்கொண்டு தெரிகிறது. நாங்களும் போயிருக்கோம்ல இந்த இடதிற்கெல்லாம் என்கிற மாதிரி இருக்கிறது.

ஆகா அமெரிக்காவிற்கு உதவும் இந்திய ரா அதிகாரி. ஆகா ஆகா. ராஜீவ கொன்னது யாருப்பா? இப்படியெல்லாம் கேட்காமல் படத்தை பார்க்கவேண்டும். சுவாரஸ்மான அம்புலிமாமா கற்பனை என்றாலும் இத்தனை எதிர்ப்பு தேவையில்லாதது. சாதாரண வெற்றியை விஸ்வரூபமாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கமல் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இசை சங்கர் எசான் லாய், கண்ணா பாடலும் அதற்க்கு கமல் காட்டும் நடன அசைவுகளும் முக பாவங்களும் ஆகா அருமை.

 புதிய முயற்சி, புதிய களம் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காக்கவைக்கும் திரைப்படம்.

மறக்கக்கூடாத விசயம் எதிர்ப்பாளர்கள். அவர்கள் இல்லையென்றால் இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது. ஐ எம் டி பியில் உலகின் சிறந்த 250 படங்களில் ஒன்றாக ஆகவும் வாய்ப்புள்ளது.

அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

அன்பன்
மது


Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...