ஜிஅய் ஜோ ரிடாலியேசன்


ஜி. அய் ஜோ ரைஸ் ஆப் தி கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் நம்பமுடியாத அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியோடு நடந்த அதிரடி திருவிழா என்றால் இரண்டாம் பாகம் அதைவிட சிறந்த அதிரடி சரவெடி.

ஜி.அய் ஜோ ஒரு அமெரிக்க ரகசிய அதிரடிப் படை, பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் வாவ் ரகம். (சில கருவிகள் உண்மையிலேயே பயன்பாட்டில் இருந்தாலும் மற்றவை சிறப்பான அறிவியல் கற்பனைகள்.) விரைவில் அவைகளும் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

காமிரா மூலம் படமெடுத்து பிரீஸ் செய்து படத்தில் குறிவைத்து சுட்டால் குறியை தப்பாமல் தாகும் துப்பாக்கி. மனித உடல் சக்தியை பலமடங்கு கூட்டும் ஒரு கவச உடை. விமானத்தை கூட வீழ்த்தும் அல்ட்ர சோனிக்  துப்பாக்கிகள் என பட்டையை கிளப்பும் அடுத்த தலைமுறை அறிவியல் போராயுதங்கள் படத்தை இந்த தலைமுறைக்கு கவர்சிகரமாக மாற்றி இழுப்பதில் வியப்பேதுமில்லை.

படம் பாகிஸ்தான் பிரதமர் கொலையில் ஆரம்பிகிறது. பாகிஸ்தானில் அரசியல் சூழல் அபாயகரமாக இருப்பதால் அந்த நாட்டின் இரண்டு அணு ஏவுகணைகளை மீட்டுவர ஜிஐ ஜோக்கள்  உத்தரவிடப் படுகிறார்கள். (பாகிஸ்தானில் வெறும் இரண்டு அணுகுண்டுகள் தான் இருக்குமா? என்கிற குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேட்க கூடாது படம் பாஸ்).

அணுகுண்டுகளை ஒரு அதிரடிக்கு பிறகு கைப்பற்றும் ஜோஸ் இண்டஸ் சமவெளி பாலைவனத்தில் அணுகுண்டுகளை ஒப்படைக்க காத்திருக்கிறார்கள். இரவில் நடக்கும் எதிர்பாரா தாக்குதலில் ஜோஸ் அனைவரும் அழிக்கப் படுகின்றனர். சென்ற பாகத்தின் கதாநாயகன் டியுக் இந்தப் பாகத்தின் இருபது நிமிடங்களில் பரலோக பதவி அடைகிறார்.   திரைபடத்தை பொறுத்தவரை இது மிகவும் துணிச்சலான முடிவு இரக்கமற்ற முடிவும் கூட.

எப்படியோ தப்பும் ரோட் ப்ளாக்(ராக்) லேடி ஜோ , பிளின்ட்  என்கிற மூன்று ஜோக்களும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. அத நீங்க தியேட்டரில் போய் பாருங்க. கட்டாயம் குழந்தைகளோடு போங்க. ஆங்கிலப் படங்களில்  கண்ணியமாக வந்த படங்களில் ஒன்று இது.

 கிளாஸ் காட்சிகள்
 என்னுடைய பார்வையில் நான் ரசித்த காட்சிகள்.
தன்னுடைய குழு அழிய ஒரு கிணற்றுக்குள் பதுங்கும் மூவரில் ராக் முன் நீருக்கு அடியில் பாயும் இரண்டு குண்டுகள்.

அணுகுண்டு மீட்பில் அனாயசமாக தாவும் பிளின்ட், (மனுஷ கொரங்கு?).

பயர்பிளையாக வரும் ரே ஸ்டீவென்சன் சும்மா பட்டாசு. அவர் பயன்படுத்தும் நானோ  ஈக்கள் எதிரிகளின் இடத்தில் ஊடுருவி வெடித்து பெரும் நாசத்தை உண்டு பண்ணுவது கூல். அப்புறம் இவர் தனது பைக்கை உயர எழுப்பி பல பாகங்களாக பிரித்து சிறையை வெடிக்க செய்வது ஜோர். (இப்படியெல்லாம் நம்ம பசங்க எப்ப படம் எடுப்பாங்க?) எல்லாம் சி ஜி தான் என்றாலும் ஜோரான விசுவல் ட்ரீட். இவர் பயன்படுத்தும் அத்துணை கருவிகளுமே அருமை. வில்லன் டீமின் ட்ரம்ப் கார்ட் இவர்.

 போன பாகத்தின் வில்லன் ஒருவர் இந்த பாகத்தில் ஜோக்களுடன் பணி புரிகிறார். ஸ்ட்ராம் ஷாடொ! இவரின் நின்ஜா பாணி சண்டை படத்தின் பலம். அப்பறோம் இவரின் உடலை ஒரு பாடி பாக்கில் வைத்து மலை உச்சியில் இருந்து கயிற்றில் அனுப்பி ஸ்நேக் ஐசும் ஜின்க்சும் செய்யும் மலைசிகர சண்டை காட்சி அருமை. இதற்காக நான் மீண்டும் ஒருமுறை படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன். நம்பமுடியாத சண்டை காட்சி என்றாலும் கொஞ்சம் ஜாலியாக ரொம்ப த்ரில்லிங்காக இருக்கும். ஹிமாலயாஸ் என்று சொல்கிறார்கள் மலைப்பகுதி அவ்வளவு அழகு.

கிளைமாக்சில் டங்ஸ்டன் ராடு ஒன்றை விண்வெளியில் இருந்து அனுப்பி லண்டனை அழிப்பது திகீர். அணு குண்டை விட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வந்துவிட்டது என்று வில்லன் கொக்கரிப்பது ஓவர். லண்டன் மீது டைரக்டருக்கு என்ன கோபமோ தெரியலே. கோப்ரா தப்பிசெல்ல உலகை காக்கிறார்கள் ஜோக்கள். (அடுத்த பார்ட் எடுக்கனுமில்ல?)

படத்தில் ப்ரூஸ் வில்லீஸ் வேறு அவர் பாணியில் ஒரு கலக்கு கலக்குகிறார். இவரது வீடு ஒரு ஆயுத கிடங்காக காட்டப் படுகிறது. சிரிப்பு  சிரிப்பாக வந்தால் நான் பொறுப்பல்ல.

படத்தை தியேட்டரில் பார்த்தத்தில்  ஒரு விசயம் புரிந்தது ராக்கிற்கு ரசிகர்கள் நிறயப்பேர் இருக்கிறார்கள், ராக்கின் படம் என்பதாலே அவர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அனேகமாக ஐந்து வருடங்களுக்கு முன் டபில்யூ  டபில்யூ எப் ரசிகர்களாக இருந்திருக்க  வேண்டும். தமிழன் ரசனை உலக தரத்திற்கு விரிந்தால் மகிழ்ச்சியே.

அன்பன் 
மது  

குழு
இயக்கம் 
ஜோன் எம் சூ (சத்தியமாக இதுதான் பெயர்)
நட்சத்திர பட்டாளம் 
டி ஜே கொட்ரனா, லீ பிங் ஹன், ரே பார்க், ரே ஸ்டீவென்சன்,ப்ரூஸ் வில்லீஸ், டுவைன் ஜான்சன்(ராக்), சானிங் டாட்டம் .......

இசை 
ஹென்றி ஜாக்மேன்

ஒளிப்பதிவு 
ஸ்டீபன் விண்டன்

எடிட்டிங் 
 ரோகர் பார்டன், ஜிம் மே




பின் குறிப்பு :

பறக்கும் இயந்திர ஈக்கள் வன்னிக்காட்டில் புலிகளை அழிக்க பயன்படுத்தப் பட்டதாக  ஒரு செய்தி காற்றில் உலவுகிறது. படத்தில் வரும்மாதிரி வெடிக்காமல் வன்னிக்காட்டின் செய்திகளை உளவறிந்து ஒளிபரப்ப பயன்பட்டதாக உணர்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும் தகவலுக்கு அதிர்வு வலைத்தளத்தை பார்க்கவும். இறுதிக்கட்ட போரில் புலிகளின் இழப்பிற்கு ஒரு முக்கிய காரணம் இதுவே என்று கருதப் படுகிறது.

Comments