லிங்கன் (Lincoln 2012 )

 அமெரிக்கா குறித்த தற்போதய செய்திகளால் அதன் செயல்பாடுகளினாலும்  ஒரு நியாமான பரவலான வெறுப்பு நம்மிடையே இருப்பது என்னவோ உண்மை தான். அதற்காக அமெரிக்க சார்ந்த எல்லா விசயங்களையும் வெறுப்பது அறிவீனம். குறிப்பாக இளைங்கர்களுக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்புகள், திறமையாளர்கள் எதிரி நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கும் வாய்ப்பு தரும் கொள்கை என சில விசயங்கள் அமெரிக்க வெற்றியின் அடித்தளங்கள். கற்றுக் கொள்ள விளைந்தால் சாத்தானிடமிருந்தும் நல்ல விசயங்கள் இருக்கும், (விடாமுயற்சி!)  

ஆனால் அமெரிக்காவின் ஆதர்சத் தலைவர்களின் ஒருவர் லிங்கன், இவர் குறித்த ஒரு பாடம் த ஒன் மினிட் அபாலாஜி என்கிற பெயரில் தமிழக ஒன்பதாம் வகுப்பு ஆங்கில பாடநூலில் உள்ளது. மேடையில் பேசும் நமது பழைய தலைமுறை பேச்சாளர்கள் லிங்கனை தவிர்த்து பேச முடியாது. இவர் குறித்து நமது தமிழக மேடைகளில் கூட வாய் அலுக்க பேசியாகிவிட்டது. எனக்கு இது கொஞ்சம் அலுப்பு தரும் விசயமாக இருந்தது. இந்த திரைப் படத்தை பார்க்கும் வரை. 

ஒரே ஒரு தலைவன் நல்ல மானுடம் மலர தனது நல்ல நோக்கத்தை விடாது துரத்தி அதை அடைந்து பின்னர் அதற்காகவே உயிரிழந்தால்? சரித்திரம் இருக்கும் வரை அவன் தியாகம் நினைவு கூறப்படும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சாட்சி. 

அப்படி என்ன நல்ல நோக்கம் அமெரிக்க அதிபரின் உசிரை எடுக்கிற அளவுக்கு? வேற ஒன்னும் இல்லை சட்டத்தின் முன் எல்லாரும் சமம் என்று சொன்னார். குழம்பாதீர்கள் அவர் காலத்தில்(1809-1865) அடிமைகளாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்கர்களும் வெள்ளையரும் சமம் என்று சொன்னார். இது என்ன அவ்வ்ளோவு பெரிய விசயமா என்பவர்கள் வருடத்தில் அவர் சொன்னதை இந்த வருடத்தில் தமிழ் நாட்டில் சொல்லிப் பாருங்க நம்ம எல்லோரும் சமம், ஒடுக்கப்படோரோ தாழ்த்தப்பட்டரோகிடயாது எல்லாரூம் மனுஷன் தான் என்று சத்தமா சொல்லுங்க, லிங்கனை உடனே சந்திக்கிற பாக்கியம் கிடைக்கும். ஆயிரம் வருசங்களுக்கு முன் அமெரிக்காவில் லிங்கன் சொன்னதை இன்று இங்கு நாம் சொல்ல முடியாது.. எத்தகைய கற்காலத்தில் இருக்கிறோம் நாம்? இந்த லட்சணத்தில் 2020 கனவு வேறு?  இந்தியர் அனைவரும் ஒரே குலம் ஒரே நிறை என்கிற நிலை வராதவரை நம்முடைய சாதனைகள் அனைத்தும் பிணத்திற்கு செய்யப்படும் அலங்காரங்களே. 

சரி படத்திற்கு வருவோம், ஒரு நாட்டின் அதிபரின் முன்னர் வெகு சாதரணமாக அதுவும் அவர் அலுவலகத்திலேயே புகைக்கும் அரசு செயலாளரை பார்த்ததுண்டா? தனது கணப்பிற்கு தானே மரத்துண்டுகளை போடும் அதிபரை பார்த்ததுண்டா? அதுவும் அவ்வளவு உயரமான லிங்கன் தரையில் தவழ்ந்து கணப்பின் கோலை எடுத்து நெருப்பை தூண்டுகிறார். அருகில் அசால்டாக புகைவிட்டபடி அதிபருடன் பேசிக்கொண்டே நடக்கும் அரசு செயலர். நம்ம நாடு நினைவிற்கு வந்து ரொம்பவே சங்கடப் படுத்துகிறது. 

விரையும் கார்களும் மின்சாரமும் இல்லாத அமெரிக்காவில் லிங்கனால் குதிரை வண்டிகளில் பயணித்து சாதிக்க முடிந்த எதயாவது இங்கே நாம் இப்போ நினைக்கவோ பேசவோ முடியாத நிலையில்தான் இருகிறோம். என்ன இழை தழைகளுக்கு பதில் குழாய்களை மாட்டிக்கொண்டு திரிகிறோம். ஆனால் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.

படத்தில் லிங்கனை பார்க்க வரும்அவரது மூத்த மகன் இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவிப்பார் லிங்கன் மறுப்பார். லிங்கனின் மனைவியோ லிங்கனிடம் எக்காரணம் கொண்டும் தனது பிள்ளை இராணுவத்தில் சேர அனுமதிக்க கூடாது என்று சத்தியம் கேட்கிறார்.

ஒருமுறை தனது மகனுடன் போரில் காயம் பட்ட வீரர்களை காண மருத்துவ மனைக்கு செல்லும் லிங்கன் தனது மகனை உடன் அழைத்து செல்கிறார். கை கால்களை இழந்த தனது சம வயது வீரர்களை சந்திக்க மறுக்கிறார் மகன். லிங்கன் உறுப்பிழந்த வீரர்களை சந்திக்கிறார். வெளியில் காத்திருக்கும் மகன் மருத்துவமனை வெளியே வரும் ஒரு சிறிய தள்ளு வண்டியை பார்க்கிறான். அது மூடப் பட்டிருக்கிறது. என்ன அது என்று தெரிந்து கொள்ள பதைப்புடன் பின்தொடர்கிறான். மருத்துவ மனையின் பின்புறம் செல்லும் அந்த வண்டி ஒரு குழியை அடைகிறது. வண்டி குழியில் கவிழ்க்கப்படுகிறது குழியில் நிறைகின்றன வெட்டப்பட்ட கால்களும் கைகளும்.

அதிர்ந்து அங்கிருந்து ஓடி வந்து ஒரு மர நடைபாதையில் அமர்ந்து குலுங்கி அழ ஆரம்பிக்றான் அதிபரின் மகன். லிங்கன் மெல்ல நடந்து அவனை ஆறுதல்படுத்த முயல்கிறார். நான் ராணுவத்தில் சேரப் போகிறேன் என்று தீர்மானமாய் சொல்கிறான் மகன் தொடரும் விவாதத்தில் கோபப்பட்டு லிங்கன் அவனை அறைகிறார். அவன் அழுதுகொண்டே ஒரு உறுதியுடன் ராணுவத்தில் சேர செல்கிறான்.
வீட்டில் அதகளம் ஆரம்பிக்கிறது. கத்தி அழும் மனைவியை மகனின் உணர்வுகளை எடுத்துக்கூறி சமாதானப் படுத்துகிறார் லிங்கன்.

லிங்கன் சில பல அரசியல் உள்குத்து வேலைகளை பார்த்தே பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை செய்ய முடிந்தது என்பது ஒரு ஆச்சரியம். முதலில் முடிந்து போயிருக்க வேண்டிய யுத்தத்தை அவர் நீட்டித்தார்! அப்படி சட்ட திருத்தத்திற்கு முன் அவர் யுத்தத்தை முடித்திருந்தால் அவரது கனவு கனவாகவே போயிருக்கும், ஆப்ரிக்க அமெரிக்கர்கள் அடிமைகளாகவே தொடர்திருப்பர்! 

அப்புறம் கொஞ்சம் மனசாட்சி உள்ள எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்! இதற்காக அவர் தனது செயலாளர் மூலம் மூன்று தரகர்களை நியமித்திருந்தனர். அவர்கள் எல்லா விதத்திலும் எதிர் கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கி சட்ட திருத்தத்திற்கு ஆள் சேர்த்தனர்.
ஒரு உறுப்பினர் விசயத்தை தரகர் சொன்னவுடன் துப்பாக்கியை எடுத்து அவரை சுடுவார்! எவ்வளவு கறுப்பின வெறுப்பு! நம்ம தரகர் லோக்கல் ட்விட்டர் மாமாவிடம் பயிற்சி பெற்றது போல் தவ்வி உயிர் தப்பி ஓடிவருவார். (அவர் நல்லதுக்கு தான் செயல்பட்டார் நம்ம ட்விட்டர் மாமா மாதிரி இல்லை) 

இதற்கிடயே வெள்ளை மாளிகையில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து மீதம் உள்ள உறுப்பினர்களையும் மன மாற்றம் செய்ய முயற்சிக்கிறார் லிங்கன். இதில் அதிசயிக்க தக்க வகையில் முதல் பெண்மணியும் ஈடுபடுகிறார். எதிர் கட்சி பிரதிநிதியாகிய டாமி லீ ஜோன்ஸ் பார்டியில் தனது ஆதரவு திருத்தத்திற்கு இருப்பதை சூசகமாக சொல்கிறார்.


டாமி லீ ஜோன்ஸ் திரை வாழ்வில் இந்தப் படம் ஒரு ஒரு வைரக்கல். மனிதரின் தெனாவெட்டு, மனிதநேய சிந்தனைகள், வெகு திறமையாக பேசி எதிரிகள் ஒத்துக் கொள்ளாத விசயத்தை வேறு வார்த்தைகளில் கூறி அவர்களையும் ஒத்துக் கொள்ள செய்வது என வெகு அற்புதமான நடிப்பு. ஒரு ஸ்டான்டிங் அவேசன் பர்பாமான்ஸ்! இவரது விவாதப் பகுதிகளை கட் செய்து மொழி மற்றும் சரித்திர வகுப்பறைகளில் பயன்படுத்தலாம். படம் இல்லை சார் பாடம்.

கிளைமாக்ஸ் காட்சியில் வாக்கு எண்ணிக்கையில் முதல் பந்திலேயே அவுட்டாகும் பாட்ஸ்மேனைபோல யுத்தத்தின் சமாதானக் குழு ஒன்று தலை நகரில் இருக்கிறது எனவே இந்தத் திருத்தமே தேவையில்லை என எதிக்கட்சிகள் வாதிக்க அசல்ட்டாக அப்படி எந்தக் குழுவும் தலைநகரில் இல்லை என ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டில் ரொம்ப ரிலாக்ஸ்டாக  தனது மகனுடன் ஒரு ராக்கிங் சேரில் அசைந்தாடும் லிங்கன் என்னவொரு அற்புதமான தலைவன்!

திருத்தம் மேற்கொள்ளப் பட்ட நாள் அன்று தயங்கி உள்ளே நுழையும் ஆப்ரோ அமெரிக்கர்களை வரவேற்கும் பாராளுமன்ற உறுப்பினர் மிக நெகிழ்வான ஒரு வரவேற்பு தருவார். வாக்குபதிவு நடக்கும் பொழுது டாமியிடம் வரும் அவரது சக கட்சி உறுபினர் எந்தக் காரணம் கொண்டும் கருப்பர்களும் வெள்ளையர்களும் சமம் என்று சொல்லவிட வேண்டாம் என்று கதறி கட்சி காணமல் போய்டும் என்று சொல்லி விரைகிறார். எந்த ஒரு சூழலிலும் டாமியால் தீர்மானத்தை ஆதரிக்க முடியாத சூழல். பேச எழும் அவர் மிக நேர்த்தியான சொல்லாடல்களுடன் சட்டத்தின் முன்னால் அணைத்து மனிதரும் சமம் என்று கடும் கூச்சல்களுக்குள்ளும் ஆரவாரதிற்குள்ளும் கூறுகிறார். தவ்விக் கொண்டு எழும் உறுப்பினர் ஒருவரிடம் உன்னை மாதிரி மூளை இல்லா பிணங்களும் சட்டத்தின் முன் சமம் என்று தான் நான் கூறுகிறேன் என்று ஒரு போடாக போடுவதாகட்டும்.. வாவ் நடிப்பு. வசனம் புரிபவர்களுக்கு பாராளுமன்ற உரையாடல்கள் எல்லாமே திகைப்பையும் நகைப்பையும் தரும்.
டானியல் டே லீவிஸ் லின்கனாகவே வாழ்த்திருக்கிறார். 

ஆஸ்கார் வரலாற்றில் மூன்று முறை பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கியவர் என்பதே இவரைப் பற்றி சொல்லிவிடும். மெதட் ஆக்டிங் மைல் ஸ்டோன் இந்தப் படம். லிங்கன் செட்டில் இருப்பது போலவே உணர்ந்தோம் என்கின்றனர் படக் குழு. நானும் அப்படியே உணர்ந்தேன். நீங்க பார்த்துட்டு சொல்லுங்க. வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு ராணுவ முகாமில் நிலைமையை சொல்கிறது வானொலி. அருகே மிடுக்குடன் ராணுவ ஜெனரல் மற்றும் சிப்பாய்கள் கவலையுடன் செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சற்றே தணியும் காமிரா ஒரு ஓரத்தில் மிக இயல்பாக தனது பணியை செய்துகொண்டிருக்கும் ஒரு சிப்பாயை காட்டுகிறது. லிங்கனின் மூத்த மகன்! அங்கேயெல்லாம் இளைஞர் அணி கிடையாதோ?

இறுதிக்கட்டத்தில் லிங்கனின் இரண்டாம் மகன் ஒரு இசை நாடகத்தை ரசித்துக்கொண்டிருக்க ஒலிபெருக்கி நாடகத்தை நிறுத்து அமெரிக்க ஜனாதிபதி சுடப்பட்டார் என்று அறிவிக்கிறது. தன் முன் இருந்த கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு கதறும் சிறுவனின் அலறல் ஈர இதயங்களின் தசைகளேங்கும் அதிரும். 

மிகுந்த சிந்தனைக்கு பின் எழுதும் மிக நீண்ட திரை விமர்சனம். என் மனதுள் இன்னும் பல பதிவுகளை இந்த திரைப்படம் ஆக்ரமிக்க காத்திருக்கிறது.

மனிதத்தை நேசிக்க ஒரு படம். கட்டாயம் பார்க்கவும்...  

படக்குழு 
இயக்கம்             : ஸ்டீவன் ஸ்பீல் பேர்க் 
லிங்கன்             : டானியல் டே லீவிஸ் 
லிங்கனின் மனைவி  : சாலி பீல்ட் 
செயலர்              : டேவிட் ஸ்ட்ராத்தைறன்
எதிர்க்கட்சி தலைவர்  : டாமி லீ ஜோன்ஸ் 
காமிரா               : ஜானுஸ் காம்னுச்கி 
இசை                : ஜான் விலியம்ஸ் 
எடிட்டர்              : மைக்கல் கான் 


Comments