தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம் …!


விமர்சனம் செல்லையா முத்துகண்ணன்
சமூகத்தின் மீது வருத்தப்பட்டும் வருத்தப்படாமல் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் தொகுப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்துள்ளது.

இன்றைய தமிழ் சமூகத்தின் அடையாள அரசியலுக்கு ஆயுதமாக சாதிய வெறியர்களால் காதல் எதிர்ப்பு கையிலெடுக்கப்படுகிறது. உயிரினங்களின் இயல்பான எதிர்க்கும் அவர்கள், காதல் நிறைவேறினால் தலையே போய்விட்டது போல் இயற்கைக்கு முரணான தங்கள் அரசியலை முன்னெடுப்பதை – வருத்தப்படாத வாலிபர் சங்கம் சரியாகவே சொல்லிவிடுகிறது.

இரண்டரை மணிநேரத்தில் பாடலில், நகைசுவையில் இழையோடும் காட்சிகள் வயிறு குலுங்க வைத்துவிடுகின்றன… திரைக்கதை நகர்த்தலில் இயக்குனர் பொன்ராம் வெற்றி பெறுகிறார்.

பால்ய விவாகம் – சாதியின் பெயரால்,
பெற்றோர்களின் பயம் என்ற பார்வையில்,
பெண்ணை நீண்ட நாள் வீட்டில் வைத்திருக்க முடியாது என நியாயம் கற்பித்து தொடர்கிறது.
படிக்க வேண்டிய வயதில் பிள்ளைபெறும் இயந்திரமாக,
சமையற்கட்டில் எரியும் மரக்கட்டையாக மட்டுமே பார்க்கும் சமூகத்தில் ’பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என பாரதி சொல்லியதைப் போல – இந்தப் படமும் வலியுறுத்துவது முதல் செய்தி..

காதல் என்ற சொன்னால் காதை அறுப்பேன் என, சவால் விட்டு – பெண்ணை பூட்டிவைக்கும் கொடுமையை நிகழ்த்தும் பிற்போக்குதனமான, பழமைவாதிகளுக்கு பயந்து பெண்ணைப் பூட்டி வைத்தாலும், பெற்ற மகளின் ஆசையை, கனவுகளை மதித்து மனம் மாறும், அதே நேரத்தில் புறவெளிக்கு பயந்து நாடகமாடினாலும் காதலர்கள் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு பண உதவியும் செய்து தொலை தூரத்தில் சென்று வாழ வைக்கும் பெற்றோர்கள் இன்றும் உள்ளனர்.

இப்படி பயந்து ஒழியும் பெற்றோர்கள் பொதுவெளிக்கு தைரியமாக வர வேண்டும் என்று ஊருக்குள் உண்மையை சொல்லிடும் காதலர்கள், போலி கௌரவத்தை உடைத்து வெளியே வரும் அப்பனும் என்று படம் சொல்வது இரண்டாவது செய்தி.

வேலை இல்லாமல் உள்ள இளைஞர்கள் என்றால் குடியும், குட்டி சுவரும் என்று இருக்காமல் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் முயற்சி செய்து – ஊருக்கும் அடிக்கும் வம்பு தும்பு ஊரை கூட்டி வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்துபவர்களை ஆப்படிக்கும் விசயம் பாராட்டத்தக்கதென்றாலும், அதற்காக அவர்கள் ரிக்கார்டு டேன்ஸ் என்று யோசிப்பது பழைய பாணி நெருடல்.

இருந்தாலும் இன்றைய சாதி வெறியர்களின் காதலுக்கு எதிரான கூச்சல்களைத் தாண்டி தியேட்டர்களில் இளைஞர்களின் விசிலும், கைதட்டலும் ஒலிக்கிறது. அடையாளங்களை தாண்டியது காதல், அதற்கு பெற்றோர்களும் ஆதரவானவர்களே … என நகைச்சுவையோடு பொழுது போக்கு அம்சங்களை காதலுக்காக சொல்லி செல்லும் வருத்தப்படாத வாலிபர் சங்கமென்ற பிம்பம் வெற்றி விழா கொண்டாட்டும்.

எதார்த்தில் சமூகத்திற்கு தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம். அதுதான் நிஜத்தில், சாதிய கட்டமைப்பை உடைக்கும்..

மலருக்கும் மகரந்தத்திற்கும் தேவை பூச்சிகளின், பறவைகளின், காற்றின் காதல்.. மேகத்திற்கும், பூமிக்குமான காதலின் சாட்சிதான் மழை என்றால்.. அதற்கு இது போன்ற திரைப்படங்கள் உதவி செய்யட்டும்…

Avatar of செல்லையா முத்துகண்ணன

Comments