தாலிபான் - பா.ராகவனின் ஒரு அருமையான நூல்

ராகவனின் எழுத்துக்கள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். ஜூனியர் விகடனில் அவர் தொடர் எழுத ஆரம்பித்தார். சமகால வராற்றையும் அரசியலையும் எழுதும் எழுத்தாளர்கள் ரொம்ப கம்மி. அவர்களுக்கான வாசகர் வட்டமும் ரொம்ப கம்மி. இருந்தாலும் ராகவனின் வாசகர் வட்டம் மிகப் பெரியது. தல தொடும் விசயங்கள் அப்படி.

ஆச்யர்மாய் ஒருமுறை எனது அண்ணன் ஒருவர் அய்யோ ராகவன் என்ன எழுதறான். ஒன்னும் சரியில்லை என்றார். நான் கொஞ்சம் அதிர்ந்தேன். வாழ்வதே வாசிக்க என்பது அவர் தத்துவம். அண்ணாத்தேயின் வாசிப்பின் வீச்சு ரொம்ப ஆழமானது. அப்புறம் ஒருமுறை அண்ணாத்தே பொன்னியின் செல்வனையெல்லாம் எப்படி படிகிறாங்க என்று கேட்ட பொழுதுதான் அண்ணாத்தேயின் வாசிப்பின் சிக்கல் புரிந்தது. கொஞ்சம் டியூனாக வேண்டும் அவர்.

எதிர்பாராத ஒரு சந்திப்பில் ராகவனின் புத்தகம் ஒன்று கிடைத்தது. இரண்டு நாட்களில் 279 பக்கங்களை படிக்க வைத்த வேகம் கொண்ட எழுத்து. நல்ல விவரணை, எனக்கு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத விசயங்களை ஆய்ந்து எழுதியிருந்தார் ராகவன். புத்தகத்தின் பெயர் "தாலிபான்."

அப்பீட்டு ஆயிடாதிங்க. தாலிபான் என்று சொல்லின் பொருள் மாணவர் என்பதே. என்ன கொடுமைடா சாமி!

என்னைப் பொறுத்தவரை பின் லேடனை ஹீரோவாக பார்த்த தலைமுறை என்பதால் புத்தகம் ரொம்ப ஆர்வமூட்டுவதாக இருந்தது.

வியட்நாமில் சோவித் யூனியனிடம் வாங்கியஅடியை ஆப்கனில் அமெரிக்கா திருப்பி தந்தது என்பதுதான் எனக்கு தெரிந்த வரலாறு.  ஆனால் தாலிபன்களை பெனசிர் தத்தெடுத்து வளர்த்ததும் அவர்களை பாகிஸ்தானின் சரக்கு போக்குவரத்துக்கு  பயன்படுத்தியதும்தான் தாலிபான் மற்றும் அல் கொய்தாவின் ஆரம்பம் என்பது ஓர் ஆச்சர்யம்.

பின்னர் வந்த யூனோகால் என்கிற அமெரிக்கஎண்ணை நிறுவனத்தின்  திருவிளையாடல்கள் தந்த அதிர்ச்சி. தங்களை கொண்டாடிய மக்களுக்கு தாலிபான்கள் கொடுத்த அதிர்ச்சி என அடுக்கடுக்காய் விரியும் தகவல்கள் பகீர்.

மொட்டை மாடியில் தடையை மீறி பெண்குழந்தைகளுக்கு வகுப்பெடுத்த ஆசிரியையை கீழே தூக்கி போட்டு காலை ஒடித்தது, காய்கறி மார்கெட்டில் நெய்ல் பாலிஸ் போட்டுவந்ததற்காக ஒரு பெண்ணின் இரண்டு கட்டைவிரல்களை  வெட்டியது என ருத்ர தாண்டவ தாலிபான்கள்.

இதையெல்லாம்விட பிரச்சனையின் ஆணிவேர் என்ன என்பதை துல்லியமாக சொல்லியிருக்கிறார் ராகவன். ஏழ்மை... வாசிரிஸ்தான் மக்களை பாகிஸ்தான் மக்களாக கூட அங்கீகாரம் செய்யாமல் அவர்களை இரண்டாம்தர குடி மக்களாக நடத்திவருவதே. அவர்களின்பால் அக்கறை கொள்ள எந்த அரசும் அரசியல்வாதியும் தயாரில்லை. இந்நிலை மாறாத வரை புதிய புதிய முல்லா ஒமார்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.

அரசின் அலட்சியம் + ஏழ்மை +கல்வி வாய்ப்புகளை மறுத்தல் +கோபம் = தீவிரவாதம்.  

இது பலமுறை நிருபிக்கப்பட்ட ஒரு சமன்பாடு. 

தலைவர்கள்தான் பாடம் படிக்கவேண்டும்.

அன்பன்
மது

இந்தப் பதிவின் கவிதை

வெளிச்சம் வெளியே இல்லை 

 வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

கவலையும் பயமும்
என்னைக்
கட்டிப் பிடித்துக்கொண்டு
கட்டிலில்
என்னுடன்.

சாயங்காலத்துக்
காற்றுப் போல்
உரிமையோடு
உள்ளே நுழையும்
சலனம்.

விரக்தி-
ஒரு போர்வையாய்
என் தலை முதல்
கால்வரை
போர்த்தியிருக்கும்.

வீட்டுக்கு வெளியே
ஓர் ஓரமாய்த்
தயங்கித் தயங்கி
உட்கார்ந்திருக்கிறது
நம்பிக்கை
வெகு நேரமாய்!

நம்பிக்கையிடம்
சலனமும் பெரு மூச்சும்
சண்டை பிடிக்க
பயம் ஓடிச்சென்று
பரிகாசம் செய்கிறது:

“ஐயன்மீர் யாரோ?
ஓ…
பழைய நண்பரா?

பார்வையாளர் நேரம்
முடிந்துவிட்டது…
பயனெதுவும் இல்லை.

போவீர்… வருவீர்
போய் வருவீர்!”

வேக வேகமாய்
வந்த
விரக்தி
விரட்டுகிறது:

“அவசியம்
பார்க்க வேண்டுமென்று
அடம் பிடிக்காதே.

அவரோ -
நூறு வகையான
நோய்களில்
நொந்து போய்ப்

படுத்த படுக்கையில்
படுபாடு படுகிறார்.

இன்றோ நாளையோ
அவர்
இறந்த பிறகு

தந்தி கொடுக்கிறோம்
தாராளமாய் வா.

இப்போது உடனே
இடத்தைக் காலிசெய்!”

நகரா திருக்கும்
நம்பிக்கை
மோதும் குரலில்
முழக்கமிடுகிறது.

“உள்ளே நுழைவதைத்
தடுக்கிறீர்கள்…

எனது
உரத்த குரலினை
என்ன செய்வீர்கள்?”

பயமும் கவலையும்
பஞ்சினைத் தேடின…
என்
காதுகளை அடைக்கக்
கனத்த முயற்சிகள்…

குறுக்கீடுகளைத்
தாண்டி
நம்பிக்கை
குரல் கொடுக்கிறது:

“தோழனே!
ஓ! என் தோழனே!
நான் தான் உனது
நம்பிக்கை நண்பன்.

சுதந்திரக் கொடியின்
சுடரொளியாக
உச்சிக் கம்பத்தில்
உயரப் பறந்த நீ
ஏன் இப்போது

அரைக் கம்பத்தில்
இறங்கி
அழத் தொடங்குகிறாய்?

அவிழ்க்க முடியாமல்
உன்னை
அவதிப் படுத்தும்
விரக்தியின் முடிச்சுகளை
வெட்டி எறி!

உன்னுடைய
புண்களின் மீது
புன்னகையைத் தடவு!

எதிர் காலத்தை
எழுதுவதற்கு
உன்
மனதில் பட்ட
காயங்களில்
மை தொட்டுக் கொள்!

போர்வைகளில்
ஏன் இப்படிப்
புதைந்து கிடக்கிறாய்?

விழித்து நீ
எழுந்தால்
விலங்குகளே நொறுங்கும்!

சின்ன நூல்கண்டா
உன்னைச்
சிறைப்படுத்தி வைப்பது?”

நம்பிக்கையின்
வார்த்தை மின்சாரம்
நரம்புகளில் பாய்ந்து

உறக்கத்தைக்
கலைத்து
உசுப்பிவிட

விரக்திப் போர்வையை
வீசி எறிந்தேன் -

கவலை பயங்களை
ஓரத்தில் விழும்படி
உதறி எழுந்தேன்

தடைகளை மீறித்
தாழ்ப்பாள் திறந்து

அருமை நண்பனை
உள்ளே
அழைத்தேன்!

நானும்
நம்பிக்கையும்
கை குலுக்கிக் கொண்டு
நாற்காலிகளில்
அருகருகே
அமர்ந்திருக்க

எடுபிடி வேலை
செய்யத் துவங்கின
இதுவரை என்னை
ஏவிக்கொண்டிருந்த
கவலையும் பயமும்.

தேநீர் கொண்டுவந்து
மேசையில் வைத்து
“சர்க்கரை போதுமா
சார்?” என்று கேட்டன.

சலனம்-
பெருமூச்சோடு
காலிக் கோப்பைகளை
எடுத்துச் சென்று
கழுவி வைத்தது…

விரக்தி மட்டும்
ஒரு கௌரவமான
வில்லன் போல்
விடைபெற்றுக் கொண்டு
வெளியேறியது!

கவிஞர் மேத்தா


 

Comments

  1. வாசிக்க தூண்டும் விமர்சனம்... நன்றி... கவிஞர் மேத்தா அவர்களின் கவிதை மிகவும் அருமை...

    ReplyDelete
  2. வணக்கம் சகோ!
    இரண்டு நாளில் படித்து முடித்த சுறுசுறுப்பை என்னவென்று சொல்வது அருமை. தலைப்பே வாசிக்கத் தூண்டுகிறது. சிறப்பான விமர்சனத்தால் வாசிக்கத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். புத்தகம் கிடைத்தால் அவசியம் படிக்கிறேன். மேத்தா அவர்களின் கவிதையைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..

      Delete
    2. தங்களை விட சற்று முன் ஆரம்பித்த எனது பதிவுலக அனுபவத்தில் இந்தப் பதிவுதான் ஒரு போன் காலை தந்தது. புதுக்கோட்டையை பற்றி கட்டுரை எழுதும் ஒரு நண்பர் (நாரயணன்) அழைத்து நல்லா கீது நைனா என்றார்! ஒரு ஆச்சர்யம்.

      Delete
  3. புத்தக விமர்சனம் அருமை. 2792 பக்கங்கள் இரண்டு நாளில் படித்தது, நீங்கள் எந்த அளவிற்கு புத்தக விரும்பியர் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் அத்துணை விறு விறு என்பதே காரணம அய்யா
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. ஆமாம், தாலிபான் பின்னால் பெருங்கதை இருக்கிறது...புத்தக விமர்சனத்திற்கும் பகிர்தலுக்கும் நன்றி மது.
    நம்பிக்கை கவிதை மிகவும் அருமை!!

    ReplyDelete
    Replies
    1. நிகழக் கூடாத ஒரு பெரும் கதை...

      Delete
  5. வணக்கம்
    விமர்சனத்தை படிக்கும் போது மேலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமை உண்மை நிறைந்த நாவல் ..........
    என்னைக் கவர்ந்த முதல் கவிஞன் மேத்தா அழகிய கவிதை
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வலைச்சரத்தில் பார்த்தேன். தங்களின் இந்நூல் பற்றிய பகிர்வு சிறப்பாக உள்ளது. பாராட்டுகள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete

Post a Comment

வருக வருக