விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 11 கொடி காத்த குமரன் ஆக்கம் ஷாஜகான்

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 11
கொடி காத்த குமரன்

திருப்பூர் என்றதும் பின்னலாடைத் தொழில் நினைவுக்கு வருவது இந்தக் காலம். திருப்பூர் என்றாலே கொடி காத்த குமரன் நினைவுக்கு வருவது எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியது.



1885ஆம் ஆண்டில் பிறந்த காங்கிரஸ் இயக்கத்துக்கென கொடி ஒன்று தேவை என்ற எண்ணம் எழுந்தது. 1906ஆம் ஆண்டில் கல்கத்தாவில் வடிவமைக்கப்பட்ட கொடி சிவப்பு, பச்சை மஞ்சள் வண்ணங்களைக் கொண்டிருந்தது. சிவப்புப் பட்டையில்ல் எட்டு வெண்தாமரை மலர்கள், மஞ்சள் பட்டையில் வந்தே மாதரம் என்ற எழுத்துகள், பச்சைப் பட்டையில் கதிரவனும் பிறைச்சந்திரனும் நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. 1917இல் கொடியில் மாற்றம் செய்யப்பட்டது.

மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கையா என்பவர் பல்வேறு கொடிகளை உருவாக்கினார். இதன் அடிப்படையில் 1921இல் காந்தியடிகளின் யோசனைப்படி, சிவப்பு, வெள்ளை, பச்சை பட்டைகளும், நடுவில் ராட்டையும் கொண்ட கொடி உருவானது. நடவில் ராட்டையைச் சேர்க்கும் யோசனையை முன்வைத்தவர் பஞ்சாபைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர். காந்தியடிகளால் ஏற்கப்பட்ட இக்கொடிதான் எல்லா நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றது.
“கொடியைக் காக்க இலட்சக்கணக்கான மக்கள் உயிரையும் தருகிறார்கள். ஏனெனில், கொடி என்பது கொள்கையின் அடையாளமாகத் திகழ்கிறது” என்றார் காந்தி மகான். கொடியைத் தாங்குவதற்காக தன் உயிரையே தந்தவர் குமரன்.

1904 அக்டோபர் 4ஆம் தேதி, ஈரோட்டுக்கு அருகே சென்னிமலை என்னும் ஊரில், நாச்சிமுத்து-கருப்பாயி தம்பதிக்குப் பிறந்தவர் குமாரசாமி. திருப்பூரில் எழுத்தராகப் பணியாற்றி வந்த அவர், தேசபந்து இளைஞர் மன்றம் என்னும் அமைப்பில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.

1932 ஜனவரி 4ஆம் நாள் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். ஜனவரி 10ஆம் நாள் திருப்பூரில் காங்கிரஸ் தொண்டர்கள் கொடியுடன் ஊர்வலம் நடத்தினர். வந்தே மாதரம், அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிப்போம் என்ற கோஷங்களுடன் முன்னேறிச் சென்ற தொண்டர்களின்மீது காவல்துறை வழக்கம்போல வன்முறையை ஏவியது.

ஊர்வலத்தை முன்னின்று வழிநடத்திச் சென்றவர் பி.எஸ். சுந்தரம். காவலர்கள் அவரை அடித்து நொறுக்கினர். அவர் விழுந்ததும், இறந்து விட்டார் என்று எண்ணி மற்றவர்களை நோக்கிச் சென்றனர். சுந்தரத்தின் கையில் இருந்த கொடி மண்ணில் சாய்ந்து விடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டார் குமரன்.

காவலர்களின் பார்வை குமாரசாமியின்மீது விழுந்தது. கண்மூடித்தனமாகத் தாக்கினர். ஆயினும் கையில் பிடித்த கொடியை அவர் விடவில்லை. காவலர்களின் தாக்குதலால் மயக்கமானார் குமாரசாமி. மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மயக்க நிலையிலும் வந்தே மாதரம் என்று முணுமுணுத்தவாறே மறுநாள் காலையில் உயிரிழந்தார்.

குமரனின் மரணச் செய்தி கேட்ட சுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். சுந்தரம் யார் என்று கூறுவதும் இங்கே பயன்தரக்கூடிய செய்தி. பர்மாவிலிருந்து திரும்பியிருந்த லட்சுமி அம்மாள், கதர் சேவா சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் மைசூரில் காந்தியடிகளை சந்தித்து 15 ரூபாய் நன்கொடை அளித்தார். அப்போது அங்கே ராஜாஜியும் இருந்தார். லட்சுமி அம்மாளின் மூன்று மகன்களில் ஒருவரை நாட்டுக்கு நன்கொடையாகத் தரலாமே என்று கேட்டார் காந்தியடிகள். அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட லட்சுமி அம்மாள், பர்மாவில் இருந்த தன் மகன் சுந்தரத்தை - குடும்பத்துக்கு வருமானம் தேடித்தந்த ஒரே மகனை - வரவழைத்து, நாட்டுக்காக அர்ப்பணித்தார். போலீஸ் தடியடிக்கு ஆளான சுந்தரம், சுதந்திர இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார்.

புது மணமகனாக இருந்த குமாரசாமி, வறுமை நிலையிலும் கொடியின் பெருமையைக் காக்க 28 வயதில் தன் உயிர் துறந்தார். கொடி காத்த குமரன் என்று போற்றப்படுகிறார். குமரனின் நினைவாக, திருப்பூர் ரயில் நிலையத்தின் அருகே சிறுபூங்காவில் நினைவகம் அமைந்துள்ளது. அங்கொரு இலவசப் படிப்பகமும் செயல்பட்டு வருகிறது.
*
பி.கு. - விடுதலை வேள்வியின் வீரத் தமிழர்கள் நூலின் அட்டையின் உள்பக்கத்தில் நம் கொடி எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதைக் காட்டும் படங்களைத் தந்திருக்கிறேன். கடைசிப் பதிவில் அதையும் வெளியிட முயற்சி செய்வேன்.

திருப்பூரில் குமரன் பூங்காவில் படிப்பகம் இப்போதும் செயல்படுகிறதா என்று தெரியவில்லை.

‪#‎விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்‬

Comments