விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 12 ஷாஜகான்

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 12
ஜீவா என்றொரு மானுடன்

காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, சிறந்த கவிஞராக, தேர்ந்த பத்திரிகையாளராக, பொதுவுடைமை இயக்கத் தலைவராக பரிணாமம் பெற்ற தலைவர், மகாத்மா காந்தியால் இந்தியாவின் சொத்து என்று பாராட்டப்பட்டவர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து தொடங்கி சுதந்திர இந்தியாவில் பொதுவுடையை நிலைநாட்ட தொடர்ந்து போராடி வந்த மனிதர் ஜீவானந்தம்.



1906 ஆகஸ்ட் 31ஆம் தேதி பிறந்த ஜீவானந்தத்தின் இயற்பெயர் சொரி முத்து. தமிழுலகில் ஜீவா என்றே அறியப்பட்டவர். 1922இல், 16 வயதில், ஒத்துழையாமை இயக்கத்தின்போது அவரது பொதுவாழ்க்கை துவங்கியது. சிராவயலில் காந்தி ஆசிரமத்தை நிறுவி செயலராகப் பணியாற்றி வந்தார். அங்குதான் 1927ஆம் ஆண்டு காந்தியடிகளை சந்தித்தார். அப்போதுதான் “உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது?” என்று கேட்டார் காந்தி. “இந்தியாதான் என் சொத்து” என்றார் ஜீவா. “இல்லையில்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” என்றார் காந்தி.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தொடர்பு ஏற்பட்டது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பெரியாருடன் சேர்ந்து செயல்பட்டார், சிறைப்பட்டார். சிறையில் பகத் சிங்கின் தோழர் பூதேஸ்வர தத் நட்புக் கிடைத்தது. அரசியல் பார்வை விரிவடைந்தது. பகத் சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலை தமிழாக்கம் செய்தார். அதற்கும் வெள்ளையர் அரசு ஜீவாவையும் பெரியாரையும் கைது செய்தது.

அப்போதுதான் சிங்காரவேலர் - இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் - முன்னே வந்து கொண்டிருந்தார். சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகிய ஜீவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கடைசி வரை கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

அவருடைய தமிழார்வமும் தமிழறிவும் அளவற்றது. பேச்சாற்றல் யாரையும் மலைக்க வைப்பது. பாரதியின் பாடல்களை நாடெங்கும் பரப்பியவர் ஜீவா. ஏழைகளின் துயரங்களைப் பாட்டாக்கி தொழிலாளர் இயக்கத்தின்பால் ஈர்த்தவர் ஜீவா.

காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே
பசையற்றுப் போனோமடா...

என்ற பாடல் கேட்பவர்களை எல்லாம் கண்ணீர்விடச் செய்த பாடல்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்த ஜீவா, தேசபக்திப் பாடல்களை எழுதினார். தனது பாடல்களில் ஜாதி அமைப்பையும் சாடினார். காங்கிரஸ் கொடியின் கீழ்நின்றே ஆங்காரமுடன் போர் செய்வோம் என்று அறைகூவல் விடுத்த அவர், சுதந்திரப் போருக்கு மட்டுமல்ல, புரட்சிக்கும் அழைப்பு விடுத்தார் --
இருக்கிற நிலைமையில் எதுவும் உதவாது
இன்குலாப் ஜிந்தாபாத் என்போம் இப்போது
பொறுப்புடன் சமதர்மப் போர்செய்ய அஞ்சோம்
பூரண விடுதலைக்கு யாரையும் கெஞ்சோம்.

தமிழகத்தின் இலக்கியவாதிகளை இணைத்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அமைத்தார். அவர் துவக்கிய தாமரை இலக்கிய இதழ் இன்றும் தரமான இலக்கிய இதழாக வெளிவருகிறது.

அரசியலில் அனைவரையும் மதிக்கும் பண்பாளராகத் திகழ்ந்ததில் ஜீவாவுக்கு நிகர் அவரேதான். கையில் கட்சி நிதி அடங்கிய பை இருந்தாலும் சொந்தக் காசு இல்லை என்பதால் கட்சி அலுவலகத்துக்கு நடந்தே சென்றவர் ஜீவா.
ஜீவா என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்குப் புகழ் பெற்றிருந்த நிலையில் ஒருநாள், சென்னை அருகே தாம்பரத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்காக காமராசர் சென்று கொண்டிருந்தார். அங்கேதான் ஜீவாவின் குடிசையும் இருந்தது. குடிசைக்குள் நுழைந்த காமராசர், ஜீவாவையும் வருமாறு அழைத்தார். “நீ முன்னால் போ, நான் பின்னால் வர்றேன்” என்றார் ஜீவா. கூடவே வருமாறு காமராசர் வற்புறுத்தினார். ஜீவா மறுத்துவிட்டு அரைமணிநேரம் கழித்துப் போனார். அப்போதுதான் உண்மையை காமராசரிடம் சொன்னார். “என்னுடைய சட்டையையும் வேட்டியையும் துவைத்துக் காயப்போட்டிருந்தேன். காய்ந்ததும் போட்டுக்கொண்டு வருகிறேன்” என்றார் ஜீவா.

குமரி மாவட்டம் தந்த குமரன் ஜீவா 1964 ஜனவரி 18ஆம் நாள் மறைந்தார். வாழ்ந்தது 56 ஆண்டுகள். பொதுவாழ்வில் 40 ஆண்டுகள். அதில் சிறைவாசம் 10 ஆண்டுகள். தொண்டிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஜீவாவின் வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.
தமிழக அரசு ஜீவா நினைவாக நாகர்கோவிலில் ஒரு மணிமண்டபம் எழுப்பியுள்ளது.
*
பி.கு. - வருணாசிரமக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பி காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார் ஜீவா. காரைக்குடிக்கு வந்த காந்தியடிகள், சிராவயல் பக்கத்தில்தானே இருக்கிறது, ஜீவாவை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உடனே ஜீவாவை அழைத்துவர ஆட்கள் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்துவிட்டு தானே சிராவயல் சென்று 20 வயது இளைஞன் ஜீவாவை சந்தித்தார் காந்தி.
கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்ட தாம்பரம் சந்திப்பிற்குப் பிறகுதான் ஜீவாவுக்குத் தெரியாமல் அவர் மனைவிக்கு வேலை தர காமராசர் ஏற்பாடு செய்தார். தன் இறுதிநேரம் நெருங்கியதை அறிந்ததும், காமராசருக்குத் தெரிவிக்கச் சொன்னார் ஜீவா. இருவருக்கும் இடையே அப்படியொரு நட்பு நிலவியது.
‪#‎விடுதலை_வேள்வியில்_வீரத்தமிழர்கள்‬

Comments

  1. காமராஜர் ஜீவா நட்பு கேள்விப்பட்டிருக்கிறேன் சார், சிராவயல் எங்கள் ஊர் பக்கம் தான். அந்த வேட்டி நிகழ்வை எங்கள் தமிழ் ஐயா கூறிய நினைவு. மற்றபடி அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாது. இன்று தெரிந்து கொண்டேன். எழுதிய ஷாஜகான் சாருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள் சார்....

    ReplyDelete

Post a Comment

வருக வருக