விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் - 14 ஷாஜகான்

ஆக்கம் ஷாஜகான் - pudhiavan.blogspot.in

தீரர் சத்தியமூர்த்தி

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அறிக்கை வைக்கிறார் பொதுச்செயலர் ஜவாஹர்லால் நேரு. “1930-31ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் சட்டமறுப்புப் போராட்டம் அவ்வளவு வேகமாக நடைபெறவில்லை” என்றார் நேரு. பொங்கியெழுந்தார் தமிழர் ஒருவர். அறிக்கையிலிருந்து அந்த வாசகங்களை நீக்குவதாக நேருமும் திருத்திக் கொண்டார்.



எங்கே இருந்தாலும், எவர் முன்னிலையிலும், தவறுகளைத் தட்டிக் கேட்கத் தயங்காதவர் சத்தியமூர்த்தி. காமராசருக்கு இணையாக சுட்டிக்காட்டக்கூடிய தமிழகத் தலைவர். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர், சிறந்த பேச்சாளர்.

1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் என்னும் கிராமத்தில் வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர் சத்தியமூர்த்தி. உடன்பிறந்தவர்கள் எட்டுபேர். சத்தியமூர்த்தியின் இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பு மூத்தமகன் சத்தியமூர்த்தியின் தோள்களில் விழுந்தது.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த சத்தியமூர்த்தி சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தான் படித்த கல்லூரியிலேயே சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு சட்டம் பயின்றார்.

சென்னையில் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். ஆனால் அன்றைய அரசியல் நிலவரம் அவரை விடுதலைப் போராட்டத்தின்பால் இழுத்தது.
1919இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு காஞ்சியில் நடைபெற்றது. அதுதான் சத்தியமூர்த்தியின் அரசியல் பிரவேசம். அதே ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் குழு ஒன்று இங்கிலாந்தில் பிரச்சாரம் செய்யச்சென்றது. 1925இல் அயர்லாந்தில் விடுதலைக்கு ஆதரவு தேட மற்றொரு குழுவும் சென்றது. இந்த இரண்டு குழுக்களிலும் இடம் பெற்றவர் சத்தியமூர்த்தி.
1923 முதல் 1930 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1930இல் காந்தியடிகள் அறிவித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். சிறைத்தண்டனை பெற்றார். 1935இல் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவராக இருந்தார். அவர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார் என்றாலே ஆங்கிலேயர்களுக்கு கதிகலங்குமாம். அந்த அளவுக்கு ஆற்றலுடன் உரையாற்றுவார்.
1939இல் யுத்த எதிர்ப்பு இயக்கத்தை காந்தியடிகள் துவக்கினார். தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார் சத்தியமூர்த்தி. 1941இல் விடுதலையாகி வந்தபின், சென்னை மேயராக ஓராண்டு காலம் பணியாற்றினார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம், மீண்டும் சிறைவாசம்.

சென்னையில் வங்கத் தலைவர் சென் குப்தாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம். வரவேற்றுப் பேசினார் சத்தியமூர்த்தி. “வடநாட்டுத் தலைவர்களை தென்னாட்டினர் எப்படி வரவேற்கிறார்கள் பார்த்தீர்களா...? தென்னாட்டுத் தலைவர்கள் வந்தால் உங்கள் மக்கள் இப்படித் திரண்டு வந்து மதிப்புக் கொடுப்பதில்லை” என்றார் அவர். “மதிக்கப்பட வேண்டியவர்கள் வந்தால் அங்குள்ள மக்கள் மதிப்பளிக்கத் தவறுவதில்லை” என்றார் சென்குப்தா. “பெருந்தலைவரான ராஜாஜிக்குக் கூடத்தான் வடக்கே உள்ளவர்கள் தனி மதிப்புத் தருவதில்லை” என்று சூடாக அடிகொடுத்தார் சத்தியமூர்த்தி. இருந்தாலும், இன உணர்வு தேசிய உணர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட அனுமதித்தில்லை. நாட்டின் ஒற்றுமையே அவரது மூச்சாக இருந்தது. நாடு முழுவதும் புகழ்பெற்ற பேச்சாளராகத் திகழ்ந்த தமிழர் தலைவர் சத்தியமூர்த்தி.

நாட்டு விடுதலைக்காக அயராது உழைத்த தீரர் சத்தியமூர்த்தி, அந்த விடுதலையைக் காணும் முன்பே 1943ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி சென்னையில் உயிர் நீத்தார்.

சிறந்த தேசியவாதி. ஆங்கிலத்தில் புலமை, அதே நேரத்தில் தமிழ்வழிக் கல்விதான் சிறந்தது என்று கருதியவர். சிங்கம்போல கர்ச்சிக்கும் பேச்சாற்றல், அதே நேரத்தில் கலைகளை மதிக்கும் பண்பு. பெயருக்கேற்ப அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்த சத்தியமூர்த்தி, அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

Comments

  1. ஆஹா தொடர் அருமை...குழந்தைகளுக்கு படிக்க ஏதுவான கட்டுரைகள்...தொகுப்பாய் மலரட்டும்..வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete
  2. பல தகவல் அறிந்துகொண்டேன்..பகிர்விற்கு நன்றி அண்ணா.
    //“மதிக்கப்பட வேண்டியவர்கள் வந்தால் அங்குள்ள மக்கள் மதிப்பளிக்கத் தவறுவதில்லை” என்றார் சென்குப்தா.// என்ன ஒரு ஆணவம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி

      Delete

Post a Comment

வருக வருக