ஆனந்த விகடன் தொடருக்கு ஒரு பதில் ஜெயப் பிரபுவிடம் இருந்து

நண்பர் ஜெயப் பிரபு ஒரு முன்னாள் பத்திரிக்கையாளர் என்பதாலும் ஆங்கில இலக்கிய மாணவர் என்பதாலும் அவர் எழுத்து எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதம் அவரது அனுமதியோடு இங்கு ...

இவ்வார ஆவியில் 'கற்க,கசடற' தொடர் வாசித்தேன். அதிலுள்ள கருத்துகளையும் ஒட்டி, என் மனக் குமுறல்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 'சிறப்புப் பதிவாக' முன் வைக்கிறேன்.


அன்புமிக்க அரசுப் பள்ளி ஆசிரியப் பெருமக்களே!
அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளை முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

*அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் இப்படித்தான் என இச் சமுதாயம் காலம் காலமாக சில கருத்துக்களை மனதில் கொண்டிருக்கிறது. அது ஜீன் வழிக் கடத்தல்கள் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

*சின்னத் திரை, பெரியத் திரை-என்ற பாகுபாடு ஏதுமின்றி, நகைச்சுவைக்கு ஏற்ற, கண்டாலே கேலி செய்யக் கூடிய அளாவிற்கு படைக்கப்படும் கதாப்பாத்திரங்களுள் ஒன்று, 'ஆசிரியர்' ஆவார். அதும் அரசுப் பள்ளி ஆசிரியர் என்றால், அல்வா சாப்பிடுவது போல கலாய்க்கலாம். கேட்க நாதி இல்லை.

* இவர்கள் செய்வது என்னவென்றே அறியாது செய்கிறார்கள் என்ற ஏசுவின் வாக்கை ஏற்று, நாமும் இவர்களை மன்னிப்போம். 

*இவ்வார ஆவியில், ஆசிரியகளுக்கான விடுப்புகள் குறித்து ஒருவர் பட்டியலிட்டிருந்தார். நான் மருத்துவர்களுக்கான பதிவில் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல, "சில மருத்துவர்கள்,ஆசிரியர்கள் அல்லது பல மருத்துவர்கள்,ஆசிரியர்கள்"- என்ற வார்த்தைகளே, விவாதம் ஒன்றை முன்னெடுத்துச் செல்கிறது. இங்கும் பொத்தாம் பொதுவாக, 12 தற்செயல் விடுப்புகள், மத விடுப்பு,மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு-என்றெல்லாம் பட்டியலிட்டிருக்கிறார்.
உங்களில் எத்தனை பேரால் 12 தற்செயல் விடுப்புகளை பயமின்றி, மறுப்பின்றி பெற முடிகிறது? மதவிடுப்பு மூன்றினையும் பெற முடிகிறதா? மருத்துவ விடுப்பு அவசியமிருப்பின், மருத்துவரின் சான்றின் பேரில் தானே பெற முடிகிறது? சான்றளிக்கும் மருத்துவர் தவறானவரா? தவறெனில், ஐயப்பாடிருப்பின், உங்கள் உடல் நிலை குறித்து மருத்துவக் குழுவிற்கு பரிந்துரைக்க வழி உள்ளது தாங்கள் அறியாததா?

*சமுதாயம் அப்படித்தான். பேருந்து வசதியற்ற, சாலை, மின்சாரம், குடி நீர், வகுப்பறை, கழிவறை வசதிகளேதுமற்ற ஒரு பள்ளி அமைந்திருக்கிற ஊரில் பணியாற்றுகிற உங்களைக் குறை கூற அவர்களுக்கு அருகதை இல்லை. 

* பிரபல நாளிதழில், 'அரசு ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளில் சேர்க்காதது வெட்கக்கேடான செயல்'-என அரசுப் பள்ளி ஆசிரியரே எழுதும் போது சமுதாயத்தை என்ன சொல்வது? இந்தப் புகழ் விரும்பிகள், 

இக் கல்வி முறையும்,இப்பாடத்திட்டமும் தான் அரசுப் பள்ளிகளில் தொடர வேண்டுமென சட்ட,திட்டங்கள் தீட்டி அவை செம்மையாக செயல் படுத்தப் படுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென முதலில் வலியுறுத்துவார்களா? 
அவர்கள் சொல்வதைத் தானே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? அவர்கள் சொல்வது சரி எனில் முதலில் அவர்களிடமிருந்தே தொடங்குவோம்.

*கல்வி உரிமை என்பது ஜனநாயக அடிப்படை உரிமை. பெற்றோர் விருப்பம் என்ற அரசமைப்பு சட்டத்தைக் கூட அறியாத மூடர்கள் இவர்கள். நீங்கள் பணியாற்றும் பள்ளியில் வகுப்பறை, இருக்கை வசதி, மின்சார வசதி, கழிவறை,குடி நீர் வசதி முக்கியமாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டிருந்தால் நீங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடப் போகிறீர்கள்? செலவு செய்ய வேண்டுமென வேண்டுதலா என்ன? 

* நீங்கள் பணியாற்றுவது ஒரு இடம். உங்கள் கணவனோ,மனைவியோ வேறு ஒரு ஊரில். பிள்ளைகள் உங்கள் வயதான பெற்றோரிடம் வளர்ந்து அது ஒரு ஊர் பள்ளிக் கூடத்தில் படிக்கும். காரணம் உங்களுக்கு 'ஸ்பவ்ஸ்' பிரிவிலும் உங்கள் கணவன் அல்லது மனைவி இருக்கும் ஊருக்கு மாறுதல் கிடைக்காது. அதற்கெல்லாம் பணம் கொட்டும் பிஸினெஸ் செய்யும் நீங்கள் நிறைய செலவு செய்தால் தான் உண்டு. இன்னொன்று இப்போது நீங்கள் பணியாற்றும் பள்ளி உங்களுக்கு நிரந்தரமல்ல. பணி நிரவல் என்ற் பேரில் எப்போதும் நீங்கள் தூக்கி அடிக்கப்படலாம். இதெல்லாம் அந்த நுனிப் புல் மேய்வோருக்குத் தெரியாது. எனவே 'அரசுப் பள்ளிகளுக்கு ஆபத்து' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவார்கள்.

* அரசுப் பள்ளிகளுக்கு அருகிலேயே தனியார் பள்ளிகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படும். ஆனால் நீங்கள் மாணவ்ர் சேர்க்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். "பிள்ளையைக் கிள்ளு,தொட்டிலை ஆட்டு". 

* நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சுமார் 1000 மாணாக்கர் பயிலும் பள்ளிக்கு கழிவறைகள் கட்டப்படும். ஆனால் அவற்றை தலைமையாசிரியரோ, ஆசிரியரோ தான் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறை,வளாகத்தை பேண வேண்டும். ஆளிருக்காது. மாணவர்களை வேலை வாங்கக் கூடாது சட்டப்படி குற்றம். 

*தேர்தல் பணி,மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, அனைத்து சமூக நலத்திட்டப் பணிகள், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் அத்தனையையும் நீங்கள் தான் பெற்றுத் தர வேண்டும். சாதி,இருப்பிட,வருமான சான்று பெற்றுத் தருதல், கல்வி உதவித் தொகை, சீருடை,காலணி,மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு, பை -என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் அலைந்து பெற்றுத் தருக. 

*ஒரு பள்ளிக்கு 20 கணினிகள் இருந்தாலும் இயக்க அதற்கென ஆசிரியர்கள் இருக்காது. பங்குச் சந்தை உயர்வைக் காட்டும் திரை போல,வரிசையாக வந்து விழும் மின்னஞ்சல்களை எடுத்து, அதற்கு உரிய பதில்களை அடுத்த ஒரு மணி நேரத்தில் அனுப்புங்கள். கேட்ட புள்ளி விவரமே திரும்பத் திரும்ப கேட்கப்படும். சளைக்காதீர்கள். வேறு வழியில்லை.கூடவே பாடம் நடத்தி 100 சதவீத தேர்ச்சியும் பெற போராடுங்கள். பதிவேடுகளை சரியாகப் பராமரியுங்கள். அதுதான் பணி.
நீங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவீகள் தானே?

*பயிற்சிகளுக்கு அவ்வப் போது சென்று பல்லை கடித்துக் கொண்டு அமருங்கள். அரசின் தலை சிறந்த கல்வி முறைகளை, திட்டங்களை,வழிகாட்டுதலை எந்த அளவிற்கு எந்த இடத்தில் பாழ்படுத்துகிறார்கள் என்பதை உணர கிடைக்கும் வாய்ப்பு அது.

- அன்பு நண்பர்களே! நீங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.உங்கள் மனசாட்சியைத் தவிர. உண்மை சூழலை புரிந்து கொள்ளுங்கள்.அரசுப் பள்ளிகளில் எல்லா இக்கட்டான சூழலையும் பொறுத்துக் கொண்டு பணியாற்றும் எல்லா ஆசிரியர்களுமே நல்லாசிரியர்கள் தான். நம்மை நம்பி வரும் அன்பு மாணவனை,மாணவியை ஒரு கலாமாகவும், மயில்சாமி அண்ணாதுரையாகவும் உருவாக்கிக் கொண்டே இருங்கள். எந்த சவாலையும் எதிர் கொள்ளத் தயாராகுங்கள். 

கூனிக் குறுகி எங்கும் நிற்காதீர்கள். உங்கள் மாணவர்களின் சாதனைகள் மூலம் நீங்கள் பேசப் படுவீர்கள். சமூகச் சம நிலை இப்போது உங்கள் கையில் தான் உள்ளது. உங்களுக்கு ஏற்படும் இக்கட்டான சூழல்களை மாணவர்களிடம் ஒரு போதும் காட்டாதீர்கள். அவன் நிலைக்காய் பரிதாபப்படுங்கள். எழுத்தறிவியுங்கள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளுங்கள். உள்ளத் தனையது உயருங்கள், தொட்டணைத்தூறுங்கள், வெற்றி உங்களுக்கே...

பின்னர் பிராய்லர் கடைகள் ஒவ்வொன்றாக உங்கள் கண் முன்னே மூடப்பட்டு விடும்.

#வாழ்த்துகள்

Comments

  1. ஆசிரியர்களின் பணியை அழகாகச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொன்றும் உண்மையெனவே நினைக்கிறேன்..வேறு என்ன சொல்வது..
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. மிக அருமையான பகிர்வு......வெளியுலக்குக்கு தெரியாத பல தகவல்களை அழகாக சொல்லி சென்ற விதம் பாராட்டுக்குரியது

    ReplyDelete
  3. வணக்கம்
    சகோதரி.

    தலைமையாசிரியரோ, ஆசிரியரோ தான் சுத்தம் செய்ய வேண்டும்

    ஒரு பள்ளிக்கு 20 கணினிகள் இருந்தாலும் இயக்க அதற்கென ஆசிரியர்கள் இருக்காது.

    தொடரை பார்த பின் நானும் ஆடி விட்டேன்...இந்தியாவில் நடப்பது மட்டமல்ல அனேகமான நாடுகளிலும் இதைப் போன்று பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில். நன்றாக சொல்லியுள்ளீரு்கள் வாழ்த்துக்கள்.
    இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யஅரசு அக்கறை செலுத்த வேண்டும்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அருமை அருமை....மனக்குமறலோடு இருந்தேன் ...மிக்க நன்றி...

    ReplyDelete

Post a Comment

வருக வருக