துவரங்குறிச்சி, செவல்பட்டி பள்ளியில் நிகில் பயிற்சி

செவல்பட்டி, (துவரை நகர் அருகே) பள்ளியின் நேர்த்தியான மாணவர் அடையாள அட்டை!

நிகில் நிறுவனப் பயிற்சிகள் குறித்து நீங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன். கிராமப்புற பள்ளி மாணவர்களுக்குத் தன்னை அறிதல், இலக்கமைத்தல், தொடர்பாற்றல் மற்றும் நினைவாற்றல் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வரும் நிறுவனம் நிகில். 


நிகில் பயிற்சிகளை கடந்த சில ஆண்டுகளாக நானும் வழங்கி வருகிறேன். மேலும் அறிய இந்தப் பதிவுகளைப் படிக்கவும். 


இப்போதைக்கு போதும் எண்டு நினைக்கிறன்! 

ஆனால் இந்த பயிற்சிகளில் கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் சரிவர கலந்துகொள்ள இயலவில்லை. தங்கையினைச் சந்திக்க பல வார இறுதிகளில் சென்னைப் பயணம், மீதி நாட்களில் சிறப்பு வகுப்பு என எனது  நிகில் பங்கேற்பு கிட்டத் தட்ட நில் (Nil) பங்கேற்பாக போய்விட்டது. நமனசமுத்திரம் எம்.சி.டி.எம் பள்ளியில் எனது கிளை இயக்கத்தின் சார்பில் தரப்பட்ட ஒரு பயிற்சிதான் நினைவில் இருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரை ஒரு கல்வியாண்டு காலாண்டோடு முடிந்துவிடுகிறது. காலாண்டுத் தேர்வு வருவதற்குள் அந்தக் கல்வியாண்டியின் பெரும்பான்மை கற்றல் அடைவுகளை வெற்றிகரமாக அடைந்துவிட்டாலே பெரும் வெற்றி. அப்புறம் அரையாண்டுத் தேர்வு ஏதோ அரைவினாடியில் வருகின்ற மாதிரி இருக்கும். முழிச்சு பார்ப்பதற்குள் முழுஆண்டு முடிந்துவிடும்! 

பணிச்சூழல் சவால்களும், சொந்த வாழ்க்கை சாகசங்களும் என்னை நிகில் பயிற்சிகளில் இருந்து தள்ளி வைத்தன. 

எனவே நிகில் நிறுவன பயிற்சி நிகழ்வுகளில் சரிவரப் பங்கேற்க முடியவில்லை. எனக்கு இருக்கும் வருத்தம் போலவே நிறுவனர் நாகலிங்கம் அவர்களுக்கும் வருத்தம் இருந்தது. 

இந்நிலையில் கடந்த 25/10/2014 அன்று சிவகாசிப் பள்ளியில் ஒரு பயிற்சி இருக்கிறது வர இயலுமா என்றார் நிறுவனர். சரி என்று சொல்லிவிட்டேன். திடீரென திட்டங்கள் மாறி சிவகாசியில் இரண்டு பள்ளிகளோடு கூடவே துவரங்குறிச்சி அருகே உள்ள செவல்பட்டி மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சியைத் தர முடிவானது. 

காலை ஆறு ஐம்பதிற்கு பழனி பேருந்தில் ஏறி விராலிமலை சென்று அங்கிருந்து துவரை செல்ல திட்டம். இப்படி ஒரு பனிசூழ் நாளை பார்த்து வெகுகாலம் ஆகிறது. உங்களுக்காக ஒரு படம்.
பனிவிழும் பேருந்துப் பாதை!
துவரையில் மதுரைப் பயிற்சியாளர்கள் வந்தவுடன் திரு.ஆர்.கண்ணன், (விவேகானந்தர் பேரவை அமைப்பாளர்) அவர்களின் கனிவான உபசரிப்பில் மகிழ்ந்து செவல்பட்டி பள்ளி சென்றோம். 

 திரு.ஆர்கண்ணன் அவர்கள், ஆமணக்கன்பட்டி பள்ளியின் முன்னாள் ஆசிரியரும்கூட. இவரது சீரிய முயற்சியில் நிகழ்வு அருமையாக திட்டமிடப்பட்டு செம்மையாக நடந்தேறியது. 

நிகழ்வின் தலைமைப் பயிற்சியாளராக திரு.ஆர்.ஆர் கணேசன் அவர்களுடன், திரு.ரத்னசபாபதி, திரு.தயானந்தன், திரு.ஜீத், திரு.குமரகுரு, திரு.தேவராஜன், திரு. வைரமணி, திரு.பாலமுரளி போன்ற பயிற்சியாளர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்து ஒரு மிகநல்ல சமூகக் கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட நிறைவைத் தந்தது விழா. 

தலைமை ஆசிரியர் திரு.டி.பிரேம்குமார்  முன்னர் புதுகை மாவட்டத்தில் பணிபுரிந்தவர். அசத்தலான ஏற்பாட்டை செய்திருந்தார். உணவு ஏற்பாடும் பரிமாறலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆச்சர்யம்! புஷ்பராஜ், கருப்பையன், என ஆசிரியர்கள் அருமையாக ஒத்துழைத்தனர். வியப்பிலும் வியப்பாக அனைவரும் மாணவர்களோடு அமர்ந்து பயிற்சியிலும் பங்கெடுத்தனர்! 

மாணவர்கள் வெகு ஆர்வமாக கவனித்தனர் அத்துணைப்பேரும் பயிற்சியில் சொன்ன விசயங்களை கடைபிடித்தால் மகிழ்வாக இருக்கும் உங்களுக்காக சில படங்கள்.

மாணவர்களை திரட்டும் பான்ட் ஓசை ~! சும்மா அதிருதுல்ல~!

மாணவச் செல்வங்களின் ஒரு பகுதி 

திரு.கண்ணன் அவர்களின் நன்றியுரை 

திரு.கண்ணன் அவர்களுக்கு தலைமை ஆசிரியர் மரியாதை செய்கிறார் 

கையெழுத்து வேட்டை, பயிற்சியாளர்களின் பேனா மை தீர்ந்துவிட்டது!

இப்படி ஒரு தோப்பைத்தானே பாரதி கேட்டான்!
வெறும் இரண்டரை மணி நேரப் பயணத்தில் மேகங்கள் தவழும் மலைகள் சூழ்ந்த துவரங்குறிச்சியை இப்போதுதான் பார்கிறேன்! கவிஞர் சல்மாவின் சொந்த ஊர் என்றுமட்டுமே தெரியும். பள்ளி துவரை அருகே உள்ள செவல்பட்டியில் இருந்தது. காலம் சென்ற எனது மாமனார்  திரு.க. சோலைராஜ் அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்கிய மருங்காபுரி தொகுதியில் இந்த ஊர் இருந்தாலும் இப்போதுதான் முதல் பயணம். இந்த வாய்ப்பைத் தந்த நிகில் நிறுவனத்திற்கும், திரு.கண்ணன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். 

மனிதராய்ப் பிறந்து மனித மாண்பை வெளிப்படுத்த உதவிய நல்உள்ளங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.

நிகழ்வு முடிந்த பின்னரும் மறுநாள் காலை அலைபேசியில் அழைத்து நன்றிகளைச் சொல்லி தனது இல்லத்திற்கு அழைத்த திரு.கண்ணன் அவர்கள் வெகு அரிதான மனிதர்களில் ஒருவர்.  இறைவன் அவருக்கு எல்லா நலன்களையும் அருளட்டும். 

அன்பன் 
மது


அப்புறம் ஒரு தளம் இங்கு ... அறிமுகம் செய்த ஜாக்கி சேகர் அவர்களுக்கு நன்றி.

Comments

  1. வணக்கம்
    நல்ல முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மாணவச் செல்வங்களுக்கு நல்ல பயிற்சி ,தொடரட்டும் !
    நேற்றைய பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி !
    த ம 2

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு! இதுபோன்ற பயிற்சிகள் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும்! நன்றி!

    ReplyDelete
  4. //கவிஞர் சல்மாவின் சொந்த ஊர் என்றுமட்டுமே தெரியும்.//

    கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ஊரும் இதே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தகவலுக்கு
      முதல் வருகைக்கு நன்றி

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    துவரங்குறிச்சி நிகில் பயிற்சி ...தங்களின் நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். தங்களால் பல மாணவர்கள் பயன் அடைவது மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் மாமனார் மறைந்த எம்.எல்.ஏ. திருமிகு.சோலைராஜ் அவர்கள் மருங்காபுரியில் உள்ள துவரங்குறிச்சி மற்றம் சுற்று வட்டாரங்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர். சிறந்த கபாடி வீரர் என்பது மணவைக்குப் பெருமை.
    மனித நேயமிக்க மாவீரர் அவர்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா ..
      இன்னும் நினைவில் நிற்கும் வண்ணம் இருப்பதே மகிழ்வு...

      Delete
  6. எத்தனை எத்தனை நல்ல பயிற்சிகள் எல்லாம் நடக்கின்றன! அதுவும் கிராமப்புற மாணவர்களுக்காக! தொடர வேண்டும் இந்தச் சிறந்த பணி! தங்களது பணியும் தொடரட்டும் நண்பரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உங்களை மாதிரி ஆசிரியர்கள், இம்மாதிரியான பயிற்சிகளில் கலந்துகொண்டு, வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தினால் தான், கிராமங்களில் நடப்பது தெரியவரும்.
    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் அறுபது பேருக்கு மேல் பயிற்சியாளர்களாக இருகின்றனர் நிகில் நிறுவனத்தில்

      Delete
    2. நன்றி தோழர்

      Delete
  8. நிகில் நிறுவனர் திரு. நாகலிங்கம் ஒரு மிகப்பெரிய பணியை சத்தமில்லாமல் செய்து வ்ருகின்றார். அவரை நான் நன்றாக அறிவேன். நீங்கள் பயிற்றுவிக்கும் குழுவில் ஒருவர் என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். தொடரட்டும் பணி.....

    ReplyDelete

Post a Comment

வருக வருக