மலாலா எனும் மாயை!

முகநூல் நண்பர் திரு.ரபீக் அவர்களால் பகிரப்பட்ட ஒரு தகவல். ஆப்கனின் நம்பிக்கை நட்சத்திரம் ஒன்றைக் குறித்த பதிவு. எனக்கு இந்தியாவில் இருந்த கைலாஷ் சத்யார்த்தியைப் குறித்த தகவல்கள் நோபலின் மூலமே தெரிந்தது.

உண்மையில் இப்படி பலர் அடையாளம் இல்லாமல் மானுட மேன்மைக்கு உழைப்பதால்தான் பூமி இன்னும் பிழைத்துக் கிடக்கிறது.
ஷபானா பாஸிஜ் ராஸிக்கை அறிமுகம் செய்த அய்யா திரு ரபீஃக் அவர்களுக்கு நன்றிகள்!
மலாலா எனும் மாயை! - Rafeeq
இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்…சரி, பிறகு எழுதலாம் என்று.விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும்.

முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொள்வோம்!

அது தகுதியுடையதா அல்லது இல்லையா என்பதை இக்கட்டுரையின் முடிவில் உங்களின் தீர்ப்பில் தெரிந்துகொள்வோம்.

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை பெறுவதற்காக இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தனிநபர்களின் மனுக்கள் மற்றும் 47 நிறுவனங்கள் உள்பட 278 மனுக்கள் பரிசீலனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதியாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் பாகிஸ்தானைச் சார்ந்த இங்கிலாந்து வாழ் சிறுமி மலாலா யூஸுஃப்ஸாய்.

“சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வி அவர்களைச் சென்றடைய பாடுபடுதல் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் / இளைஞர்கள் நலன் காக்கப் போராடுதல், குறிப்பாக ’தஃலிபான்’களின் அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் கல்வியில் உயர உழைக்கிறார்.” எனும் அடிப்படையில் நோபல் பரிசுக்கு மலாலா தேர்வானார் என்ற பரிசு ஊக்குவிப்புச் செய்தியினை அறியமுடிகிறது.
பாகிஸ்தானில் பல பள்ளிக்கூடங்களை நடத்திவரும் ஜியாவுதீன் யூஸுஃப்ஸாய் மற்றும் தூர்பெகாய் யூஸுஃப்ஸாய் ஆகியோரின் மகளாக 1997ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் 12ம் தேதி வடமேற்கு மாகாணமான மிங்கோராவில் பிறக்கிறார் மலாலா யூஸுஃப்ஸாய்.

செல்வந்தரின் மகளாக வளர்கிறார். தன்னுடைய 11ம் வயதில் BBC Blogல் ’தஃலிபான்’களின் அடக்குமுறை பற்றி எழுதுகிறார். அதன் உண்மைநிலை அறிய BBC குழு அங்கு வருகிறது. பின்பு மலாலாவுக்கு ஒரு சர்வதேச விருது அளிக்கப்படுகிறது. பிறகு ’தஃலிபான்’களின் பார்வை மலாலா பக்கம் திரும்புகிறது.

அதாவது, 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி பள்ளிக்கூடம் செல்லும் வழியில் மலாலா, ’தஃலிபான்’களின் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகிறார். பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று பின் மேல் சிகிச்சைக்காக இலண்டன் செல்கிறார். சிகிச்சைக்குப் பிறகு பள்ளிப் படிப்பினை அங்கேயே தொடர்கிறார். இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமெரிக்கா செல்கிறார்; அதிபரை சந்திக்கிறார். வேறு சில நாடுகளுக்குப் பயணிக்கிறார். புத்தகம் எழுதுகிறார். இப்போது நோபல் பரிசளிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்சொன்னவைதான் ஊடகங்கள் வாயிலாக நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட மலாலா கதை.

சரி, இப்போது ஷபானா பாஸிஜ் ராஸிக் என்பவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஆம் இவரைப் பற்றி நமது ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிந்திராத நிலையில் அறிமுகம் என்பதே சரியான சொல்லாய் இருக்கும்.
இவரது வாழ்க்கை மலாலா போன்று மலர்களால் மூடிய சோலையல்ல; முள்கள் நிறைந்த பாலை.

தங்களின் பள்ளியில் சேர்த்து கல்வியூட்ட, மலாலா போன்று பள்ளிக்கூடங்களின் முதலாளி அல்ல இவரின் பெற்றோர்கள்!
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து அவர்களுக்கு கல்வியூட்ட வேண்டும் என்று நினைத்த கருணைமிகு பெற்றோருக்குப் பிறந்தவர் ஷபானா பாஸிஜ் ராஸிக்.
ஆஃப்கான் தலைநகர் காபூலில் பிறந்து வளர்ந்த இவரின் தற்போதைய வயது 24.

ஷபானா சிறுமியாக இருந்த பொழுது ஆஃப்கான் தஃலிபான்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. எங்கும் கெடுபிடி, பெண் குழந்தைகள் வெளியில் செல்லமுடியாத சூழல். படிப்பிற்காக வெளியே செல்லுதல்கூடாது என்று ஊர்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலம். அன்று வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் மட்டுமே (25வயது அதற்கு மேற்பட்டோர்) முறையாக பள்ளி சென்று எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.

42 இலட்சம் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் (இதில் பெண் குழந்தைகள் சதவீதம் அதிகம்) கல்வியை எட்டாக் கனியாகப் பார்த்திருந்த சூழல். காரணம் அன்று அங்கு நிலவிய போர் மேகம், போர் என்ற பெயரில் வன்முறை, வாழ்வாதாரங்களை இழந்த ஏழ்மை நிலை இவையனைத்திற்கும் மேலாக ஊர்க்கட்டுப்பாடு என்று அன்று பிள்ளைகள் வீடுகளில் முடங்கிக் கிடந்த பரிதாப நிலை.

இதுபோன்ற சூழலில்தான் ஷபானாவின் தந்தை, மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும் தன் மகளுக்கு கல்வி போதிக்கப்பட வேண்டுமென நினைக்கிறார். இவர் போன்ற பெற்றோர் எடுத்த முடிவினால் நகரத்தில் ஆங்காங்கு நடைபெறும் இரகசியப் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்பி படிக்க வைக்கின்றனர்.

பள்ளி என்றால் நாம் கற்பனை செய்வது போலில்லாமல், ஒரு வீட்டின் ஹாலில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கப்படும். அனைவரும் ஒரே நேரத்தில் வருவது கூடாது; அதேபோல கலைந்து செல்லும் போதும் கூட்டமாக செல்லுதல் கூடாது. இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமன்றி, போதிக்கும் ஆசிரியர்கள், பாதுகாப்பிற்கென வரும் பெற்றோர்கள் என எவரின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.

இதுபோன்ற ஒரு பள்ளிக்குத்தான் ஷபானா அனுப்பப்படுகிறார். எப்படித் தெரியுமா? ஆண் பிள்ளையின் உடைகளை அணிந்து, மளிகைக் கடைக்கு சாமான்கள் வாங்குவது போன்ற தோற்றத்தில் பையில் புத்தகங்களை அடுக்கி சென்று வருகிறார். தினமும் ஒரே பாதையில் சென்றால் சந்தேகம் ஏற்படுமென்று தினமும் வெவ்வேறு பாதைகளில் அந்த இரகசியப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்.

இப்படி நித்தமும் உயிரைப் பணயம் வைத்து பள்ளி சென்று வந்த நிலையில், 2001ம் ஆண்டு ’தஃலிபான்’களின் ஆட்சி கவிழ்கிறது. அப்பாவிற்கும் மகளுக்கும் மனம் நிறைய மகிழ்ச்சி, என்னவெனில் இனிமேல் நாம் முறையான வழக்கமான பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்கலாம் என்பதே. ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை, கலவரம் காரணமாக அது கனவாகிப் போனது. ஆனால் தொடர்ந்து இரகசியப் பள்ளியின் கல்வியில் மிளிர்கிறார் ஷபானா.
ஒருமுறை மிகவும் விரக்தியான மனநிலையில், “இப்படி ஒரு சூழலில் நான் படிக்க வேண்டுமா அப்பா?” என்று ஷபானா கேட்க, ”இதுமட்டுமல்ல மகளே, உன் வாழ்க்கையில் நீ செல்வங்களை இழக்கலாம், பெற்றோரை இழக்கலாம் ஏன் நீ கூட நாடு கடத்தப்படலாம். ஆனால் இறுதிவரையிலும் உன் கூடவே இருக்கப்போவது நீ கற்கும் கல்வியும் பெறும் அறிவும் மட்டுமே! உன் படிப்பின் கட்டணத்திற்காக எங்கள் இரத்தத்தை விற்றேனும் பணம் கட்ட வேண்டிய சூழல் வந்தாலும் அப்படியே தருகிறோம்” என்று கல்வியின் அவசியத்தை உணர்த்தினார் தந்தை.

இந்நிலையில், படிப்பில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஷபானா, அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெறுகிறார். அதிகமான சகமாணவர்கள் ஆஃப்கான் பற்றி தெரிந்துகொள்ள இவரிடம் வந்து குவிகின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மூலம் தன் நாட்டின் முகம் தெரிகிறது. பட்ட துன்பம் தெரிகிறது, அடிப்படைக் கல்வி, சுகாதாரம் மறுக்கப்பட்டு இருப்பதை, ஏறத்தாழ 90 சதவீத பெண்கள் முறையான கல்வியறிவற்று இருப்பதை உணர்கிறார். ஆஃப்கான் பற்றி அதிகம் அமெரிக்காவில் பேசுகிறார். ஆஃப்கானின் தூதுவர் போல பார்க்கப்படுகிறார்.

இவரை துணை நிறுவனராகக் கொண்டு 2008ல் SOLA (School Of Leadership Afghanistan) என்ற சர்வதேச தரம் கொண்ட பெண்களுக்கான உறைவிடப் பள்ளி ஆரம்பிக்கப்படுகிறது. இதுவே ஆஃப்கானின் முதல் மற்றும் ஒரே பெண்களுக்கான உறைவிடப்பள்ளி ஆகும். 34 மாகாணங்களைக் கொண்டுள்ள ஆஃப்கானின் அனைத்து தரப்பு மாணவிகளும் இங்கு வந்து பயிலும் நோக்கத்துடன் உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டுகிறது.
கள ஆய்வுப்பணி, பள்ளிக்கூடம் நிறுவுதலுக்குப் பிறகு 2011ம் ஆண்டில் அமெரிக்கா திரும்பி Middlebury கல்லூரியில் International Studies and Women & Gender Studies எனும் ஆய்வுப் படிப்பில் பட்டம் பெறுகிறார். தாம் சிறுவயதில் கல்விக்காக பட்ட துயர், துன்பம் இனி ஆஃப்கான் பெண் குழந்தைகள் படக்கூடாது என்ற நோக்கத்தில் தம் கல்லூரிக் காலத்திலேயே HELA எனும் பெயர் (ஆஃப்கான் மொழியில் நம்பிக்கை எனும் பொருள்) கொண்ட ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல், திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல், உலக மொழிகள் கற்பித்தல், நெருக்கடியான சூழலில் சிந்திக்கும் ஆற்றல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயிற்றுவித்தல், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை சுகாதாரம் மற்றும் சத்துணவு பற்றிய விழிப்புணர்வுக் கல்வி என ஒரு பெரிய திட்டங்களுடன் இந்த தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுகிறது.

நான்கு மாணவிகளுடன் 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இன்று ஆஃப்கானின் 14 மாகானங்களிலிருந்தும் மாணவிகள் தங்கிப் பயிலுகின்றனர், இங்கு பயின்று மேற்படிப்பிற்காக இதுவரை 40 மாணவர்களுக்கு ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள உறைவிடப் பள்ளி, பல்கலைக்கழகங்களில் படிக்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 34 மாகாணங்களுக்கான ஆளுமைகளை தலா பத்து வீதம் 340 தலைவர்களை உருவாக்குவது என்று சொல்கிறார் ஷபானா.

ஒரு மாணவியை உருவாக்குதல் என்பதிலிருந்து விலகி அதற்கும் மேலாக இந்நாட்டின் ஒரு தலைவியை உருவாக்குவதே SOLAவின் இலட்சியம் என்கிறார். மாணவி எந்த பிரிவைச் சார்ந்தவராய் இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல இங்கு வந்தவுடன் நீ ஒரு SOLA பெண் என்பதாக அவர்களிடம் அறிவுறுத்துகிறார்.

ஐந்தாம் வகுப்பிற்கு மேல் ஆஃப்கானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு போகமுடியாத நிலை இருந்தது. அரசியல் என்பது ஒருபுறமிருந்தாலும், மேலே படிக்க பள்ளிகள் இல்லை, பொருளாதார சரிவுநிலை, கல்வி பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை, இதுபோன்ற சில காரணங்களுக்காகவும் 12 வயதினையெட்டிய பெண் பிள்ளைகள் வீட்டில் வைக்கப்பட்டனர், வீட்டில் இருக்கும் குழந்தைகளை கவனிக்கும் படி பணிக்கப்பட்டனர். சமையல், வீட்டைப் பராமரித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர், பிறகு திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவார்கள்.

இந்நிலையை மாற்றி அவர்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும், எனக்கு கிடைத்த இந்த கல்வியறிவு மற்ற பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு முயற்சியில் அவர்களது பயனுள்ள நேரங்கள் அனைத்தும், அவர்களை இந்த உலகிற்கு பயனுள்ளவர்களாக மாற்றுவதற்கு எனக்கு வேண்டும். அதுதான் இந்த உறைவிடப் பள்ளியின் இலட்சியம், நோக்கம் என்று தன் உறைவிடப் பள்ளியின் கனவினை விவரிக்கிறார் ஷபானா.

இந்த வெற்றிகரமான திட்டத்தை மற்ற நாடுகளில் எங்கெங்கெல்லாம் பெண் குழந்தைகளின் உரிமைகள் நசுக்கப்படுகின்றதோ அங்கு தொடங்குவதே அடுத்த கட்டப் பணி என்கிறார் திடமாக. தன் நாட்டின் பெண்களின் கல்விக்காக கல்லூரிப் பருவத்தி்லேயே அயாராது சிந்திக்கும், உழைக்கும் இவருக்கு, மிக உயர்ந்த பத்து கல்லூரி மாணவிகளில் ஒருவர் என்று ஒரு அமெரிக்கப் பத்திரிகை விருது வழங்குகிறது.இவர் படித்த கல்லூரி இவருக்கு தலைசிறந்த பொதுச்சேவகி பட்டம் /விருதினை வழங்கி கௌரவிக்கிறது.இவரை 2011-2012ம் ஆண்டின் தேசிய பெண்கள் நலன் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அரசின் கிராம மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சகம் நியமித்தது.
இந்த ஆண்டின் வளரும் ஆராய்ச்சியாளர் எனும் பட்டத்தை நேஷ்னல் ஜியோக்ராபிக்ஸ் கொடுத்துள்ளது.

சர்வதேச அரங்குகளில் இவரின் குரல் பெண்களின் முன்னேற்றம், கல்வி, பொருளாதாரம், தலைமைப் பண்பு ஆகியவைப் பற்றி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இவரின் முயற்சிகளை.இப்படியே இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்.
இப்போது சொல்லுங்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆஃப்கான் போன்ற நாடுகளில் வளரும் பெண் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் உழைத்தல் என்பதினைப் போற்றி அமைதிக்கான நோபல் பெற வேண்டியது யார்?
உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்!
இந்தப் பதிவின் ஆசிரியர் தோழர். ரபீக்
பதிவர் நீண்ட காலம் ஒரு செய்தி வாசிப்பளராகவும் இருந்தவர்.
பதிவரின் மின்னஞ்சல் yesrafi@gmail.com

கொஞ்சம் பதிலைத்தான் அனுப்புங்களேன்.
அன்பன்
மது







Comments

  1. ஷபானா பாஸிஜ்க்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
    Replies
    1. மின்னல் வேக வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. ஆஹா ஷபானா அருமையான பெண்.அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..

    ReplyDelete
  3. ஷபானா பாஸிஜ் ராஸிக்கும் நோபல் பரிசு பெற தகுதி உள்ளவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .அடுத்தாண்டு அவருக்கு கிடைக்க வாழ்த்துகள்!
    மலாலா எனும் மாயை என்று கூறுவது மலாலாவின் தொண்டினை குறைத்து மதிப்பிடுவதாக தோன்றுகிறது !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      நிச்சயமாக பலவிசயங்களை ஒப்பிட்டு நோக்கினால் ஷபானா மலாலாவைவிட உயர்ந்தவர்தான். அய்யா...
      மலாலா எதிர்கொண்ட தீரமிகு போராட்டத்தினால் நமது வாஞ்சைக்குரியவராகிவிட்டார் ... இதுகுறித்து விரிவாக பதிவிடுகிறேன்.

      Delete

  4. அன்புள்ள அய்யா,
    வணக்கம்,
    மலாலா யூஸுஃப்ஸாய் பாகிஸ்தானைச் சார்ந்த இங்கிலாந்து வாழ் சிறுமி கல்வியைப் பெறுவதற்கு தன் உயிரைப் பணயம் வைத்து போராடி...மறுபிறவி எடுத்து ‘ நோபல் ’பரிசினை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லைதான்.

    ஷபானா பாஸிஜ் ராஸிக்கை அறிமுகம் செய்த அய்யா திரு ரபீஃக் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

    புதுகையில் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் கல்லூரியில் முதன் முதலாக பெண் மாணவியாக சேர்ந்து பயில பட்ட துன்பங்களை நாடறியும். அந்த ஊரில் வாழும் தாங்கள்... நாடறியா ஷபானா பாஸிஜ் ராஸிக் என்பவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து...
    முள்கள் போன்ற துன்பங்கள் நிறைந்த ஆஃப்கான் தலைநகர் காபூலில் தன் கல்வி பாலையாகிப் போய் விடமால் சோலையாக்க போராடிய போராட்டங்களை படிக்கையில் ...உண்மையிலேயே அவர் பட்ட கஷ்டங்களை நினைத்தால் நெஞ்சம் நெக்குருகிறது.
    எவரின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்கிற நிலையிலும் உயிரை துச்சமென் எண்ணி கல்வியே உச்சமென தந்தை சொல்லுக்கு அடிபணிந்து ...அயாராது உழைத்துப் படித்து அமெரிக்காவின் YES (Youth Exchange Studies) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் தனது (மேல்நிலைப்) பள்ளிப் படிப்பை அமெரிக்காவில் தொடரும் வாய்ப்பினைப் பெற்று கல்வி கற்று சிறந்த நிலையில் தேர்ச்சி பெற்று வெற்றித்திகழமாக திகழ்கிறார்.

    இன்று தேசிய பெண்கள் நலன் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அரசின் கிராம மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சகம் நியமித்தது பெருமைப்டுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.


    சர்வதேசஅளவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுக்கும் இவருக்கு இனிவருங்காலத்தில் நோபல் தேடி வரும்...வர வேண்டும்.

    முன்னவர் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்....எல்லோருக்கும் தெரிகிறார். பின்னவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்துவிட்டார்...எல்லோருக்கும் தெரியாமல் இருக்கிறார். இப்பொழுதான் அவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி விட்டீர்களே!
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருக அய்யா,
      உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்

      Delete
  5. Replies
    1. வருகைக்கு நன்றி அய்யா
      தேவகோட்டையில் எப்படி பொழுது போகிறது ..?

      Delete
  6. அருமையான பகிர்வு! நானும் ஷபானா பற்றி முகநூலில் படித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. திரு.ரபீக்தான் அதை எழுதியிருந்தார்..
      நன்றி சுவாமி...

      Delete
  7. மலாலாவின் பணி போற்றுதற்குரியது என்றாலும் ஒப்பீட்டளவில் ஷபானாவே மிளிர்கிறார்.
    ஆனால் ஏழைகள் போராடுவதற்கான தேவை இருக்கிறது.பணக்காரர்களுக்கு அந்த தேவை இல்லை . அப்படிப்பட்ட சூழலில்தான் மலாலா நடுவர்களின் வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடும்.
    கைலாஷ் சத்யார்த்தியை நோபல் பரிசு பெரும் நாளன்றுதான் நமக்கு தெரிய வந்தது உண்மையில் வெட்கப் படவேண்டிய விஷயம்

    ReplyDelete
    Replies
    1. ஏழை பணக்காரன் என்கிற வாதத்தையெல்லாம் தாண்டி மாலாவின் மண்டையோட்டை துளைத்த குண்டு அவருக்கு நோபலாக கிடைத்திருகிறது ஆனால் அதற்கு பின்னர் அவர் லண்டனில்தான் இருக்கிறார்.
      ஒரு பிஞ்சின் மீது வீசப்பட்ட கோடரி நமது இதயத்தை பிளந்ததால் கிடைத்த விருது இது... ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து பெண் கல்வி மறுக்கப்படுகிற மீறினால் சுட்டுக் கொல்லப்படுகிற ஆப்கன் மண்ணை விட்டு அசையாமல்

      பெண்களுக்கு கல்வி என்பதோடு நில்லாமல் அவர்களை எதிர்காலத்தில் தலைவர்களாக்க ஒரு பள்ளியை நிறுவி மரணத்தின் நிழலில் தனது சகோதரிகளுக்காக செயல்படும் ஷபானவிற்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் ... நியாயம் இது தான் ...

      வழக்கம் போல ஒரு துப்பாக்கி ரவையாக இருந்து விடக் கூடாது என்பதே எனது பிரார்த்தனை...

      நோபல் தான் அங்கீகாரம் செய்ய வேண்டுமா நீங்கள் ஒரு கூகிள் தேடலில் ஷபானவை அறியலாம் நீங்களும் எழுதலாமே...

      செயல்பாட்டாளர்களை அங்கீகரிப்போம் ... நீங்களும் நானும் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்...?

      வருகைக்கு நன்றி ...

      Delete
  8. தான் படித்தது மட்டுமல்லாது தனது நாட்டின் மற்ற பெண்களும் படித்து நற்பாதையில் செல்ல வேண்டும் என்ற நல்ல மனம் கொண்ட இவரும் பாராட்டுக்குரியவர். இவரது புகழும் மேலும் பரவட்டும்.....

    நோபல் பரிசிலும் சில சமயங்களில் அரசியல் விளையாடுகிறது போலும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் குழந்தையின் ஓவியங்கள் இன்னும் கண்ணுக்குள் இருக்கின்றன...
      வருகைக்கு நன்றி ..

      Delete
  9. எனக்கும் அந்த நெருடல் இருந்தது மது. மலாலாவின் துணிவில், செயல்பாட்டில் அவரது தந்தையின் பின்னணி உதவி இருப்பதும், சுடப்பட்ட பின்னர் சரியாக இரண்டாண்டில் நோபல்பரிசு அளவிற்கு உயர்ந்ததும் தனீ. அதன் பின்னர் அவர் நாடு திரும்பாவிட்டாலும், அவரது தந்தையின் செயற்பாடுகள் தன் நாட்டு அரசியலில் மகளை இறக்கும் முன்வேலைகளோ என்னும் ஐயம் எனக்குள் இன்றும் உண்டு. இது ஒருபுறமிருக்க சபானா பற்றிய அருமையான செய்திகளைப் பகிர்ந்துகொண்ட திரு ரபீக் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நீங்கள் இட்டிருக்கும் பதிவு எனக்குள் முற்றிலும் புதிய அதிர்வை ஏற்படுத்தியது. மிக்க நன்றி மது. தங்களின் நாகரிகம் மிகுந்த நன்றிக்கு என் நன்றியும வணக்கமும். சபானா நிச்சயமாக மலாலாவைவிட உயர்ந்தவர்தான், விருதுகளும் அவரைத் தேடிவரும். ரபீக், மது போல எத்தனைபேர் உலகம் முழுவதும் இருப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. பதிவு வெளியான அன்று பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்தார் ... புதுக்கோட்டைக்காரர், தெரியுமா பொன்காவின் மாணவர்!

      இவர் எழுதிய ஆயிஷா நடராஜன் குறித்த பதிவை நான் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சியில் பகிர்ந்துகொண்டேன்... ஆனால் அன்று இவர் எனது முகநூல் நட்புப் பட்டியலில் இல்லை ...

      சில தினங்கள் கழித்து மலாலா மாயை என்கிற தலைப்பு என்னை இழுக்கவே படித்தேன் அனுமதி வேண்டினேன் கிடைத்தது ... பகிர்ந்தேன்..

      அன்று கூட நான் ஏற்கனவே பயிற்சியில் பகிர்ந்து கொண்ட பதிவினை எழுதியது இவர்தான் என்பது தெரியாது. என்னைவிட நான்கு ஆண்டுகள் மூத்தவர். தமிழ் உணர்வு, இறையச்சம், வாசிப்பு என எல்லா தளங்களிலும் எனது அலைவரிசை... எனவே இப்போ நண்பர்..

      நன்றி சொன்னதற்கே அதிர்வா ... ரொம்ப கலாய்க்கவேண்டாம்..

      வருகைக்கு நன்றி ... சரவணா தியேட்டர் அருகே வீட்டிற்கு முன்னால் ஒரு பிளாக்ஸ் வைக்கப் போகிறேன்... உங்கள் வருகைக்கு நன்றி சொல்லி

      Delete
  10. ஷபனா பற்றி இது வரை அறிந்ததில்லை அவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே மேலும் அவர் புகழ் ஓங்கட்டும் அருமையான பகிர்வு நன்றி சகோ !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாய் முகூர்த்தம் ஷபானவிற்கு பரிசு கிடைக்கட்டும்.

      ஆப்கானில் பெண்கள் பள்ளி நடத்தினால் மரணம்தான் பரிசு.
      பெண்கள் படிக்ககூடாது. (அப்படியே மனு சொல்வதுதான்)
      ஒரு முறை மீறி நடந்த பெண்களுக்கான ரகசிய பள்ளியின் கதவைச் சாதி உள்ளே ஒரு வெடிகுண்டை வீசினார்கள்.

      பெண்கள் படிக்க படுகிற சிரமம் ரொம்ப கொடூரமானது ..
      1. பள்ளிக்கு செல்வது ரகசியமாக இருக்கவேண்டும்.
      2. சமயத்தில் தண்ணீர்க் குழாயை பற்றி ஏறி மொட்டைமாடியில் நடக்கும் வகுப்பிற்கு போகவேண்டும்.
      3. எந்த நேரமும் உயிர் பறக்கலாம் ...
      4. குறைந்த பட்ச தண்டனையாக கையை அல்லது காலை இழக்க நேரிடலாம்.
      இப்படி எத்தனையோ கொடுமைகளைத் தாண்டி படிக்க முன்வரும் பெண் குழந்தைகள் எனக்கு வியப்பை தருகின்றனர்.

      இந்த நிலையில் ஆப்கன் மண்ணில்
      படித்தால் மரணம் என்கிற சூழலில் படிப்பை நோக்கி இவர்களை செலுத்துவது எது ?

      நினைத்துப் பார்க்கவே பெரும் ஆச்யர்யமாக இருக்கிறது அது...
      இந்த நிலையில் அங்கு இப்படி ஒரு பள்ளியை நடத்தும் ஷபானவை காப்பது இறையருள்தான் என்று நம்புகிறேன்.

      Delete
  11. சிந்திக்க வைத்த பதிவு !

    மாலாலாவையும் கைலாஸையும் வாழ்த்தும் அதே நேரத்தில் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நோபலிலும் அரசியல் உண்டு ! திறமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் உலக அரசியல் வியூகமும் இதில் கருத்தில் கொள்ளப்படும் ! ஆப்கானிஸ்த்தானில் இனி ஆகவேண்டியது ஒன்றும் இல்லை ! ஆனால் பாகிஸ்த்தான் தேவை... அதே நேரத்தில் இந்தியாவையும் நோகச் செய்ய கூடாது ! ...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி சாம்.

      Delete
  12. ஷபனா பற்றியா தங்களின் பதிவு நிச்சயம் அதிர்வை ஏற்படுத்தும்..! மலாலாவின் ஒவ்வொரு அடியும் யாரோ ஒருவரால் இயக்கப் படுகிறதோ என்ற ஐயம் இருந்தது.பாகிஸ்தான் அரசியலை எதிர்நோக்கி மலாலா பேசுகிறார்;இயங்குகிறார்;அல்லது இய்யக்கப்படுகிறார் என்றே தோன்றுகிறது.
    உண்மையான தியாகத்திற்கு எப்போதும் அங்கீகாரம் கிடைப்பதில்லை.மணிப்பூரில் தொடர்ந்து போராடிவரும் இரோம் ஷர்மிளா மீது விளம்பர வெளிச்சம் படவில்லை.அண்ணல் காந்திக்கு 'நோபல்'கிடைக்கவில்லை....அனால் ஷபன வரலாற்றில் நிலைத்து நிற்பார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா தங்கள் வருகைக்கு

      Delete
  13. நண்பரே ஷபானா பற்றி இப்போதுதான் அறிகின்றோம்....மலாலா பற்றி அறிந்து நாங்களும் பதிவுஇட்டோம்!

    நிச்சயமாக ஷபானாதான் நோபலுக்குத் தகுதியானவர்! அதில் எந்த வித சந்தேகமும் இல்லை! ஆனால், இப்படித்தான் பலரும் கவனிக்கப்படாமல் போகின்றனர்.

    கைலாஷ் சத்யார்த்தியைப் குறித்த தகவல்களும் இப்போதுதானே பரிசு அறிவிக்கப்பட்டதும்தானே தெரியவந்தது.....நோபலிலும் அரசியல்?! ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது!

    ஷபானாவிற்கு விருது கிடைக்க நாம் வாழ்த்துவோம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் வருகைக்கு

      Delete
  14. ஆஃப்கானிஸ்தானைப் பற்றி நன்றாகவே தெரிந்தது. பாகிஸ்தானைப் பற்றியும்.....5 வருடங்களுக்கு முன் அங்கிருந்து இங்கு சென்னையில், மருத்துவர்களின் கருத்தரங்கில், டாக்டர் ரங்கா நர்சிங்க் ஹோம்....மது, புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க ட்ரீட்மென்ட் அளிக்கும் மருத்துவமனை ஏற்பாடு செய்த கருத்தரங்கைல், பங்கெடுத்துக் கொண்ட அந்தப் பெண்களின் கருத்துக்கள் செய்தியாக வெளிவந்தன....அதை வாசித்த போது நம் நாடு எல்லாம் ரொம்பவே நல்ல நிலையில் உள்ளதோ என்று கூடத் தோன்றியது! அத்தனைக்கு வேதனை மிக்க நாடு....அதுவும் கல்வியும், பெண்களின் வாழ்க்கையும் மிகவும் மோசம் அங்கு....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒரு தகவல் பெட்டகம் தோழர்...
      நன்றி வருகைக்கு

      Delete
  15. அன்பு நண்பர்களுக்கு, மரியாதைக்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு,

    மலர்த்தரு வாயிலாக எனது வாழ்த்துக்களயும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கட்டுரை, நான் பிறந்து வளர்ந்த ஊரின் நட்புக் கூட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அந்த அற்புதமான அறிமுகத்தினைப் பெற்றுத்தந்த “மலர்த்தரு”விற்கும் அதன் ஆசிரியர் திரு.கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கும் எனது நன்றியினை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய இளைஞர்களுக்கு அநேக சாதனையாளர்கள் அறிமுகப்படுத்தப்படாமலே இருக்கின்றனர். சாபக்கேடாக, இந்தியாவில் 400 மில்லியன் பள்ளி-கல்லூரி செல்லும் வயதில் உள்ள மாணவர்களுக்கு / இளைஞர்களுக்குத் தேவையான உள்ளீடு இல்லாமலே இருப்பதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதற்கும் மேலாக உலக அளவில் நடைபெறும் கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பாக நடத்தப்படும் தேர்வில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டது. இதில் இந்திய மாணவர்களின் தேர்ச்சி திருப்திகரமானதாக இல்லையென்பதால், இந்தியாவைப் பட்டியலிலிருந்து நீக்கவிருப்பதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட ஒரு அதிர்ச்சித் தகவலைக் காண நேர்ந்தது.

    உலகத்திலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாமிருந்தும் இன்னும் விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களைத் தேடிக்கொண்டுதானிருக்கிறோம் என்பது அவலம்.

    தன்சுய இலாபத்தி்ற்காக நாட்டின் மிகப்பெரும் சொத்தான இளைஞர் கூட்டமதை சொத்தையாக்கிக் கொண்டிருக்கும் சினிமா அதன் வழிவரும் மது, புகை இன்னபிற என அனைத்திலிருந்தும் அவர்களை மீட்டு வலிமையான இளைய பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம்.

    நட்பிலிருப்போம்.
    அன்புடன்
    ரஃபீக்.
    துபை - 23-10-2014

    ReplyDelete
  16. அர்ஜுன்,

    மலாலாவை மாயை என சொல்லுவதே ஒரு அரசியல். அதை விடுங்கள். சிலர் இத்தனை ஆர்ப்பரிக்கும் ஷபானாவுக்கு இதே நோபெல் பரிசு கிடைத்திருந்தாலும் மலாலா மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு எழுந்திருக்கும். இது ஒரு திசை திருப்பும் முயற்சி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக