இசை எனும் இளையராஜா விஜி கனைக்ட் அவர்களின் ரசனை

நண்பர் விஜி கனைக்ட் அவர்களின் முகநூல் பகிர்வொன்று ..

#மறக்க_இயலா_கானங்கள் 103 : ராஜாவிடம் ரஹ்மான் தன்னை தந்த .. " ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ... "

#மறக்க_இயலா_கானங்கள் 103 : " ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ... "

             நேற்று இரவு ஒரு பத்து மணி இருக்கும், தான் ஸ்வர்ணலதாவின் தீவிர ரசிகன் என்று எனக்கு அறிமுகமான  பாலாஜி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான், அண்ணா .. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாட்டு கேட்டுருகீங்களா??  என்று கேட்டான் , எனக்கு மிக மிக ஆச்சரியம், ஏனென்றால் என் வாட்சப்பில் ஒரு குரூப் உண்டு, அதில் பல்வேறு நாடுகளில் இருந்து இருபது பேர் கொண்ட ஒரு குழு இருக்கிறது, ஸ்வர்ணலதவை பற்றி பேசுவதும், அவர் பாடல்களை பாடுவதும், அவர் மறைவை எண்ணி அழுவதும், எந்நேரமும் அவரை குறித்தே உரையாடுவதும்  அவரின் பாடல்களில் இருக்கும் விசேடங்களை பேசுவதுமாக இருப்பார்கள், என் வட்டத்தில் என்னை "வாப்பா .. ஸ்வர்ணலதா தம்பி " என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு நான் ஸ்வர்ணலதா பைத்தியம், ஆனால் நானே தலை கிறு  கிறுத்து போகும் அளவுக்கு இவர்களின் உரையாடல்களும், பரிமாறல்களும், அறியாத ஸ்வர்னலதாவின் பாடல்களையும் புகைப்படங்களையும் பரிமாறிக்கொள்வார்கள், மற்ற பாடகிகளில்  ஜானகியை பற்றி பேசுவார்கள் அவ்வளவுதான், ஆச்சர்யமாக அந்த குழுவில் நேற்று சித்ரா "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் " பாட்டை பற்றி பேசும்போது ஆச்சர்யம் இல்லாமலா இருக்கும் ???  இதே ஆச்சர்யத்தோடு ஏற்கனவே இப்பாடலை மறக்க இயலாகானங்களில் எழுதிவிட்டேன் , நாளை மீள்பதிவிடுகிறேன் என்று நான் கூறினேன்... இதோ இட்டாகிவிட்டது ..



              எனக்குமே இப்பாடலோடு மிக பெரிய பந்தம் இருக்கிறது, நான் சில அன்பின் தேடலில் மனதொடிந்து போனபோது மிக ஆறுதலாய் இருந்த பாடல்களில் முதன்மையானது இப்பாடல், எப்போதெலலாம் "தேவனின் கோவில் மூடிய நேரம் " கேட்டு கதரியிருக்கிறேனோ அடுத்ததாக "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் " பாடலை கேட்பதே வழக்கமாக இருந்தது, மனதின் ஆதாரமாக இருந்த எல்லாமும் போன பிறகு ஒவ்வொரு முறை சித்ரா ஏதோ அலை மிகுந்த அரபிக்கடற்கரையின் தொட்ட மலை உச்சியின் இருந்து பாடும் "கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தையா .." என்ற போது மனது உடைந்து போவேன் ..  எல்லா காதல்களும் இப்படிபட்ட ஆறுதலில் தானே ஆர்ம்பிக்கின்றன .. ஆனாலும் உண்மையான அன்பை தேடும் பந்தங்கள் எப்படியும் சோகத்தில் தான் முடிகின்றன .. அந்த கண்ணீரை துடைக்கும் அடுத்த பாடலாக " எது வந்த போதும் இந்த அன்பு போதும் " இன்று இதே சித்ராதான் , இளையராஜாவின் கை பிடித்து வந்து நம் கண்ணீரை துடைக்கிறார் .. சென்ற பதிவிலேயே நிறைய புலம்பிவிட்டேன் .. ஆகையால் தான் இப்போதைக்கு அந்த சோகத்தை விட்டு விடுவோம்..

                     இதோ சித்ராவின் பாடல் , ஆனாலும்  மீண்டும் இளையராஜாவின் பாடல் ..  ராஜாவின் இசையில் சித்ரா தனிமுத்திரை பதித்த பாடல்களுள் முதன்மையானது என்று இப்பாட்டை நான் குறிபிடுவேன் , நான் அடிக்கடி ராஜாவை பற்றி எழுதுகிறேன் என்பதால் என் பட்டப்பெயரே "ராஜாவின் அதி தீவிர ரசிகன்" என்று முகநூலில் மாறிவிட்டது .. அப்படி அழைக்கப்படுவதில் பெருத்த சந்தோசமே .. அவரின் ரசிகனாக தனிப்பட்ட முத்திரையோடு அழைக்கப்படுவதில் பெருமையே அன்றி வேறு என்ன இருக்கமுடியும் ...    நான் இசையின் ரசிகன் ...எங்கு நல்ல  இசை இருந்தாலும் ஆராதிப்பவன் , அது ரஹ்மானாக இருக்கட்டும், எம் எஸ்வி, கண்டசாலா, கே. வி மகாதேவன், ரவீந்திரன் மாஸ்டர், தேவராஜ் மாச்டம், சலீல் சவ்த்ரி, சாம், ஆர் டி பர்மன், விதயாசாகர், பாலபாரதி  யுவன் கார்த்திக்ராஜா, என எல்லோரின் இசையையும் பற்றி உங்களிடம் பகிரவே விரும்புகிறேன் ,ஆனால்   நல்ல இசையில் எக்கசக்க பாடல்கள் , பெரும்பாலான பங்கு ராஜாவிடமே இருப்பதால் அவரின் நிறைய பாடல்கள் அடிக்கடி அவரை ஆராதிக்கிறேன் ... நிஜம் என்னவென்று சொல்லட்டுமா ... ராஜா நம் மண்ணில் பிறந்ததற்கு நாம் பெருமை கொள்ளவேண்டும் .. இவ்வுலகின் இசை சாம்ராஜயத்தில் மிக பெரும் சாதனை படைத்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு அரங்கில் தன்னை ஒடுக்கிக்கொண்டிருக்கும் அவரை பற்றி என்ன சொல்ல ??..

               சென்ற மாதம் இளையராஜா பேன்ஸ் க்ளப் விசயமாக இசைஞானியை சந்திக்க எங்களுக்கு அழைப்பு , நானும் நான் தங்கியிருந்த ஹோட்டலின் அறையிலிருந்து  பிரசாத் ஸ்டுடியோ நோக்கி நடந்து கொண்டிருந்தேன் , ஏ வி எம் ஸ்டுடியோவில்  இருந்து பிரசாத் ஸ்டுடியோ செல்வதற்குள் நான்கு இடங்களில், கடைகளில் , ஆட்டோவில் என ராஜாவின் பாடல்களை கேட்க நேர்ந்தது ,நூறு அடி தூரத்தில் அவரின் அருகில் இருப்பவர்கள் கூட அவரின் பாடல்களை கேட்டுகொண்டே இருக்கிறார்கள், அந்த வழியாக தினமும் ராஜா காரில் போய் வருவார் ...  திடீரென நினைக்க தோன்றியது “ நம்மை  போலவே ராஜாவும் இவ்வாறு அவரின் பாடல்களை கேட்க்க நேர்ந்தால் என்ன செய்வார் .. தனது பாடல்கள் போகும் இடமெல்லாம் ஒலிக்கும்போது அவரின் மனது என்ன யோசிக்கும்??, அவரே மறந்து போன பாடல்கள கூட திடீரென எங்காவது ஒலிக்கும்போது அவர் மனதில் என்ன என்ன நினைவுகள் தோன்றும்? அந்த ரெக்கார்டிங்கில் நடந்த சம்பவங்கள் தோணுமா?.. அல்லது வெறும் ஆர்மொனியத்தின் கருப்பு வெள்ளை கட்டைகள் மட்டுமே தோன்றுமா ? என்று என்னனவோ தோணியது .. தன படைப்பு ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் ஒலிக்கும்போது அவரின் மனது  எவ்வளவு கர்வமாக இருக்கும் ? இருக்கவேண்டும் ...  ராஜா கர்வகாரன் என்று சொல்ல கேட்டிருக்கிறேன் . ஆமாம் . இன்னமும் கர்வமாக இருக்கவேண்டும் .அப்போதுதான் அந்த திறமைக்கு மரியாதை ... . அதுதான் வித்யாகர்வம் ..

                நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம் ..   மூன்றாம் வகுப்பு பெரிய டீச்சர் (அவரை அப்படிதான் அழைப்போம் ..  அவர் பெயர் என்ன என்று இன்னமும் தெரியாது..) அவர் இருந்தால் யாராவது ஒருவர் செமத்தியாக அடி வாங்குவார்கள். வயதானாலும் அவ்வளவு கடுங்கோபக்காரி ... ஆனால் என் மேல் மட்டும் ஏதோ கொஞ்சம் பாசக்காரி ..  அதற்கும் ஒரு காரணம் இருந்தது ..என் தந்தை என் பள்ளிவயதுக்கு ஒரு வருடம் முன்பே என்னை பள்ளியில் முதலாம் வகுப்பு டீச்சர் மிக்கேலம்மாவிடம் சண்டையிட்டு சேர்த்து விட்டார் .. கை சூப்பி கொண்டே நின்றிருந்த என்னை பார்த்தாலே அந்த மிக்கேலம்மாவுக்கு பற்றிக்கொண்டு வரும் போல.. அந்த வருடம் முழுவதும் என்னை மட்டும் வகுப்பு அறைக்கு வெளியே அமரவைத்தே முதலாம் வகுப்பை முடித்து வைத்தார்,  என் தந்தை அடிக்கடி வந்து சண்டையிட்டும் அந்த டீச்சர் என் தந்தை மேல் இருந்த கோபத்தை என்னை வெளியே அமரவைத்து தீர்த்து கொண்டது , அந்த காலங்களில் அந்த வழியாக பாத்ரூம் செல்லலும் இந்த மொன்றாம் வகுப்பு பெரிய டீச்சர் என்னதான் கோபம் இருந்தாலும் இப்பிடி கொழநதையை வெளியே உக்காரவைகலாமா ? இது எங்காவது கொரங்கு மாதிரி ஓடிபோயிடுச்சுன்னா அவங்கப்பனுக்கு என்ன பதில் சொல்வீங்க டீச்சர் என்று கேட்டு சண்டையிட்டார் , அன்று முதல் எனக்கு இந்த டீச்சரை ரொம்ப பிடிக்கும்,

                ஆனால் ஒன்னாம் வகுப்பு மிக்கேலம்மா டீச்சருக்கு என்னை அடிக்க வாய்ப்பே இராது , ஏனென்றால்  அ.ஆ, இ, ஈ மற்றும் 1, 2, 3, 4 எல்லாம் சரியாக எழுதிவிடுவேன் , அப்படியே ஒன்று , இரண்டு என தாவி மூன்றாம் வகுப்பு பெரிய டீச்சரிடம் வந்தேன் , எல்லோரையும் அடி பின்னி எடுக்கும் டீச்சர் நோஞ்சானாக இருக்கும் என்னை அடித்ததே இல்லை , ஒரு முறை பெரிய டீச்சர் ஏதோ திருக்குறள் சொல்ல சொன்ன போது கணேசன், சரஸ்வதி, லீசா , சிவகாமி என எல்லோரும் அமைதியாக நின்று "திரு திரு "வென முழித்த போது  நான் மட்டும் படபடவென சொல்லிவிட்டேன் , “அடேய் . நாயிங்களா ... இத்துன்டூண்டு தான்  இருக்கறான் , ---------- கூட கழுவ தெரியாத  பையன் சொல்லுது . உங்களுக்கு சொல்ல தெரியலே .. என்று அவர்களை அடி பின்னி எடுத்தார் , என்னை “சுள்ளாண்டி “ என்று கேலி செய்யும்  எல்லோர் முன்பும் எனக்கு ஒரே பெருமை .. பந்தாதான் ... அதிலிருந்து எப்பவுமே டீச்சர் என்னை செல்லமாக "சுள்ளாண்டி" என்றுதான் அழைப்பார் ,

              ஒரு நாள் நீதி போதனை வகுப்பில் டீச்சர் எங்கள் எல்லோரையும் ஏதாவது பாட சொன்னார் , எல்லோரும் தயங்கியபோது  "ஏலே.. பாடத்தானே சொன்னேன், என்ன சாணி அள்ளவா சொன்னேன், இப்ப்டிடி முழிக்குதுக. ஏலெ.. சுள்ளாண்டி .. நீ பாடுவயே ... பாடு ... " என்று என்னை அழைத்தார், நான் "மடால்" என எழுந்து “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் “ பாடலை பாடினேன், என்னையே உற்று பார்த்த டீச்சர் பாடி முடித்தவுடன் வாஞ்சையாக தலையை கோதியது , எப்போதும் நீதி போதனை வகுப்பில் நிறைய அறிவுரை சொல்லி திட்டி அடிக்கும் டீச்சர் அன்று யாரையுமே திட்டவில்லை, ஆனால் அன்று என்னை வீடு வரை கொண்டு வந்து விட்டு என் அப்பாவிடம் " பையன் நல்லா பாடறானே, அவனுக்கு நீங்க என்கரேஜ் பண்ணனும்..  எங்க சர்ச்க்கு வேணா அனுப்பிவிடுங்க .. கொயர் பாடட்டும் : என்று சொல்லிவிட்டு போனது, அது வரை என் அப்பா அந்த டீச்சரை “ராட்சசி “ என்றே சொல்வார், அதன் பிறகு திட்டியதில்லை , அந்த டீச்சர் அப்படிதான் , கல்லுக்குள் ஈரம் போல ,

             அன்று முதல் தான் என் அப்பா நிறைய பாடல்களை எனக்கு அறிமுகபடுத்தினார் .. எனவே என் இசை வாழ்வின் முதல் பாடல் என்று கூட “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என்று கூட சொல்லலாம் ,      ஒவ்வொரு முறை கேட்கும்போதும் இப்பாடலை “பாடல்களின் ராணி “ என்பது உறுதிப்படுத்துவது போலவே இருக்கும் , சித்ரா இளையராஜாவால் அறிமுகபடுத்தப்பட்டு பாட ஆரம்பித்த நேரம் அது , சித்ராவின் குரல் பிஞ்சுகுரலாய் இருக்கும், அந்த காலகட்டத்தில் ராஜா சித்ராவுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்கள் பாடல்கள் வாரி வழங்கினார்,  சித்ரா பாடிய சில பாடல்களில் எனக்கு  அவ்வளவு இஷ்டமில்லை , ஏனோ சித்ராவின் குரலுக்கு பொருத்தமில்லாத பல பாடல்களையும் பாடியது போல தோன்றும் , ஆரம்பம் தொட்டே சித்ரா ராஜாவின் குருவுக்கு அடங்கிய சிஷ்யையாகவே இருந்ததால் அவரின் பயபக்தி பாடல்களில் அப்படியே எதிரொலிக்கும், என் ரசனையில் அதிலிருந்து சில பாடல்கள் மட்டுமே விதிவிலக்கு, அந்த பாடல்களை சித்ராவை அப்படியே வாரி கட்டிக்கொள்ளத்தோணும்,

       ராஜா தனக்கு முதன்முதலாய் வழங்கிய “பூஜைக்கேத்த பூவிது..” சுதந்திரமாக பாடிய சித்ரா மிக அழகாக பாடியிருப்பார், அடுத்த பாடலான “பாடறியேன்.. படிப்பறியேன் “ பாடலுக்கு கிடைத்த தேசிய விருது கொடுத்த மரியாதையால் ராஜாவின் மேல் இருந்த குருபக்தி சித்ராவை மனப்பாடம் செய்து ஒப்பித்த குழந்தையைபோல ஆக்கியதோ என்று தோணும்.. அதுவும் சில காலம்தான் , பரவலாக சித்ரா வெளியே பாட ஆரமபித்த பின்பு மிக அழகாக தன குரலை மெருகேற்றிக்கொண்டார், அதன் பிறகு சித்ராவின் திறமை  ஊரறிந்த ஒன்று ... ஆனாலும் இன்று வரை ராஜாவிடம் பாடும் போது மட்டும் அந்த பயம் இப்போதும் இருக்கும் ...

                85 -90 காலகட்டத்தில் அந்த ராஜா  பயத்தில் இருந்து விடுபட்டு சித்ரா பாடி எனக்கு மிக பிடித்த பாடல்கள்

அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்,
சிவராத்திரி தூக்கமேது ஹோய் ...
தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன செய்வேன் தேவனே, “வா வா அன்பே அன்பே ..” ,
மாருகோ மாருகோ மாருகயி ...
ஜிங்கடி ..ஜிங்கடி.. ஒனக்கு ...
குடகு மலை காற்றில் ஒரு பாட்டு கேட்குதா ,
துள்ளி எழுந்தது பாட்டு ,
ஒன நெஞ்சை தொட்டு சொல்லு  ,
பூங்காவியம்.. பேசும் ஓவியம்,
வந்ததே குங்குமம்..

போன்ற சில பாடல்களில் சித்ராவின் குரல் இனிமையை, அந்த வெள்ளந்தித்தனமான அப்பாவி கன்னி குரல் போன்ற திறமையை அடித்துக்கொள்ள ஆளில்லை ,  குறிப்பிட்ட பாடல்களில் சித்ராவின் குரலோடு பயணம் செய்யும் பேஸ் கிடாரே அவரின் பிஞ்சுகுரலுக்கு அடர்த்தியை கூட்டும், அதில் மிக முக்கியமான பாடலாக ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலை எனக்கு மிக மிக பிடிக்கும், பதின்மூன்று வயது வரை என் குரலின் மகரந்த கட்டு உடையும் வரை நிறைய பள்ளி, கச்சேரி மேடைகளில் இப்பாடலை பெண்குரலில் நான் பாடியிருக்கிறேன், அதனாலேயே இப்பாட்டு எனக்கு பிடித்ததா?? என்று கேட்டால் அந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ..

                   இப்பாடலை எங்கு கேட்டேன் ? , எப்படி கேட்டேன்?என்று நினைவில்லை , ஆனால் எங்கோ கேட்டேன் ? கேட்ட நாள் முதலாய் முனுமுனுக்கும் பாடலாக இப்பாடல் அமைந்திருந்ததாகவே எனக்குப்படுகிறது, ஏனென்றால் இப்பாடலை எனக்கு அறியாத வயதில் இருந்தே பாடிய காரணமே ... சித்ராவின் குரல் ஒரு இளம் கன்னியின் குரலாக அல்லாமல் ஒரு குழந்தை குரலாக இருந்த காரணமோ என்னவோ எனக்கு மிக மிக பிடித்தம் .. கீ போர்டின் அழுத்தத்தின் பிதுங்கி வரும் இசையோடு ஆரம்பிக்கும் ஆரம்ப இசையோடு புல்லாங்குழல் ஜோடி கட்டி தாலாட்ட எந்த இடைவெளியும் இல்லாமல் சித்ரா பாட ஆரம்பிப்பார் ,

                    வழக்கம்போல பிஞ்சு குரலாக இல்லாமல் அந்த குரலின் அடர்த்தியும், அதன் ஊடான ஒரு “கிர்ர்..” சத்தமும் நம் மனதில் ஏதோ மெது மெதுவாக . ஒவ்வொரு வரியாக நாத்து நடவு செய்வது போல ஏதோ ஒரு தனிமை உணர்வை விதைக்கும் அந்த வித்தை இந்த பாடலுக்கு உண்டு . கேட்டு பாருங்களேன்... அப்படிதான் தோணும், ஒவ்வொரு வரிக்கும் பேஸ் கிடார் தரும் அழுத்தம் அப்படியே நாற்று நடவு செய்ய ஈர மண்ணில் விரல்விட்டு ஓட்டை செய்வார்களே....  அது போல நம் மனம் என்னும் விளை நிலத்தில் ஓட்டை போடுவது போல ஒரு உணர்வு . நான் ஒரு பைத்தியக்காரன் . எனக்கு அப்படிதான் தோணும் .. ஆனால் என்னை போல அத்தனை கோடி பைத்தியக்காரர்களை உருவாக்கியதே இளையராஜாதான் ..

                  இந்த  பாடல் என்னவோ பேச்சு வழக்கில் சித்ராவின்  சோலோ பாடல்தான், ஆனால் ராஜாவின் இசை வழக்கில் இது டூயட் பாடலே . ஒவ்வொரு வரியையும் சித்ரா பாடும்போது ஊடால் புகுந்து அந்த மெட்டுக்கும்  சம்பந்தமே இல்லாதது  போலவும்,  ஆனால் சம்பந்தப்பட்டு நெருக்கமாகவே பின்னி பிணைந்து வருவது போலவும் இசைக்கும்  பெஸ் கிடாரை மட்டும் கேளுங்கள், அது ஒரு தனி மெட்டு கொண்ட  பாடலாக இருக்கும், அது என்ன மாயம்??.. அதுதான் ராஜாவின் டூயட்  .. சித்ராவின் குரலோடு ஆளுமை செய்யும் அளவுக்கு  யார் இந்த பேஸ் கிடாரை வாசித்திருப்பார்கள், கண்டிப்பாக இசைஞானியின்  ஆஸ்தான பேஸ் கிடார் கலைஞர் சசி அண்ணா வாகதான் இருக்கும்,

               சமீபமாக கிடார் வாசித்து பழகும் என் நண்பன் “இந்த பாடலை நான் ஒரு இருபது நாளில் வாசித்து காட்டுகிறேன் பார்!!”  என்று சவால் விட்டான், அதற்க்கு நான் மெதுவாக சொன்னேன் “ "அடேய் மடையா ... இந்த பாடலுக்கான நோட்சை ராஜா ஒரு மணி நேரத்தில் எழுதி கொடுத்திருப்பார், வாசித்த கலைஞர்களும் ஒரு மணி நேரத்தில் ப்ராக்டிஸ் செய்து ரெக்கார்டிங்க்கு போய் ஆகவேண்டும், இதை நீ இருபது நாளில் வாசிப்பது என்ன பெரிய ஆரிய வித்தையா ?? ஆனாலும் சொல்கிறேன் . இருபது நாட்கள் கற்றுகொண்டாலும் அதை அவ்வளவு சரியாக உன்னால் வாசிக்க இயலாது , ஏன் என்றால் அது தான் ராஜவின் நோட்ஸ், அதுதான் ராசாவின் இசை கலைஞர்கள் !!" என்று சொன்னேன், அவன் ஒன்றுமே சொல்லாமல் மண்டையை ஆட்டி ஆட்டி ஆமோதித்தான், விஷயம் தெரியாதவன் வாக்கு வாதம் செய்வான், ஆனால் இவன் இசைப்பள்ளியில்  படிக்கிறான் , கண்டிப்பாக என் பேச்சின் அர்த்தம் புரிந்ததால் தான் ஒன்றுமே சொல்லாமல் ஆமோதிக்கிறான் ...

                  புன்னகை மன்னன் படத்தோடு இப்பாடல் தனித்து இருப்பதால் கதையை ஒட்டி பேச ஒன்றும் இல்லை, இப்பாடலை டைட்டில் பாடலாக ஏன் தேர்வு செய்தார் என்ற கோபம் மட்டும் எனக்கு பாலசந்தர் மேல் இருந்தது, இப்பாடலை ஒரு அருமையான சிச்சுவேசனுக்கு பயன்படுத்தியிருக்கலாமோ என்ற கோபமும் உண்டு ... ஒருவேளை இறந்து போன காதலியை  நினைத்து நாயகன் ஏங்கும் பாடலோ ??.. அதற்க்கு எதற்கு நாயகி "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் " என்று பாடுகிறார் ..

                    படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் காட்சிகளின் கேமிரா வியூ கொண்டே  கத்தி சொருகும் அளவுக்கு இயக்கும் மிக பெரும் இயக்குனரான பாலசந்தர் பாடல் காட்சிகளில் மட்டும் அந்த பொறுப்பை கேமிராமேனிடமும், நடன இயக்குனரிடமும் ஒப்படைத்துவிடும் தவறால் விளையும் தவறே இது .. ஆனால் இப்பாடலை ஒளிப்பதிவு செய்த ரகுநாதரெட்டி இப்பாடலை சில் அவுட் டெக்னிக்கில் படமாக்கியதில் கொஞ்சம் நெஞ்சை தொட்டார் , படத்தை விடுத்து யோசித்து பார்த்தால் இந்த பாடலும் வரிகளும் காதல் தோல்வியடைந்த ஒரு பெண்ணுக்கு மிக பொருத்தம் ...  7G ரெயின்போ காலனி படத்தில் ஸ்ரேயா பாடும் "நினைத்து நினைத்து பார்த்தால்" பாடல் போல .. அவ்வளவு அழகான ஸ்ரேயா கோசல் வெர்சனை இயக்குனர் செல்வராகவன் பயன்படுத்தாத காரணம் புரிகிறதா ...

                         அதிலும் இரண்டாம் இடை இசையில் கமல் ஒரு துணியை  உதறுவார், புறாக்கள் அதிலிருந்து பறக்கும், ரேகா புறாக்களை பிடிக்க ஓடுவார், (அது ரேவதியா .. ரேகாவா என்ற சந்தேகமும் எனக்கு நிறைய நாள் இருந்தது,  அந்த அளவுக்கு  இருவரின் முக வடிவம் இருக்கும்  .. Rekha Harris இதை தெளிவு படுத்துங்களேன் ... இது உங்களின் பாடலா ... ) அந்த காட்சிக்கு இந்த இசை தரும் ஒற்றுமை அழகோ  அழகு ,

          ராஜாவின் இசைக்கு எந்த காட்சியை காட்டினாலும் அழகுதான் .. அது தெரிந்தே அந்த கால கட்டத்தில் வெகு அசிரத்தையாக நடிகர்களை நடக்கவிட்டும், ஓடவிட்டும் கிளாங் சாட்டில் இயக்குனர்கள் பாடல்களை  படமெடுத்தார்கள், அப்படி ஒரு பாடல் எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது, "மயங்கினேன் சொல்ல தயங்கினேன் " பாடலுக்கு இடையில் ஒரு இண்டர்லூடு, அதாவது ஒரு இடை இசை,  ஒற்றை வயலின் ஒலிக்கும்,  கேமிராவின் மிக பெரிய லாங் சாட், மிக தூரத்தில் வைத்திருப்பார்கள், ராதிகா கேமிரா கோணத்தின் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு கைகளை கட்டிக்கொண்டு, முடியை விரித்து விட்டு லூஸ் ஹேரில், முந்தானை புரள புரள அமைதியாக நடந்து செல்வது போல ஒரு காட்சி , அந்த காட்சியில் கேமிராவுக்கோ, இயக்குனருக்கோ, ஏன் நடிகை ராதிகாவுக்கோ கூட ஒரு வேலையும் இல்லை, முழு இடை இசைக்கும் வெறுமனே ராதிகா நடந்து செல்வார், ஆனால் அந்த காட்சி தந்த பாதிப்பு என்னால் மறக்கவே முடியாது , ஒரு தலையை நாயகனை காதலிக்கும் நாயகியின் மன நிலைமையும், அவளை விரும்பாமல் தன் மாமன் பெண்ணை விரும்பும் நாயகனின் நிலையையும், அவன் தன் முதலாளி ஆகிபோன விதியை நினைத்தும், தான் பேராசைப்படுவதன்  விளைவை அறிந்து வேதனையையும் அதை விட ஒரு நாயகி எப்படி கூறுவாள், ?? ராஜாவின் இசையே கூறிவிடும் ... பாருங்கள் அந்த காட்சியைப்புரியும்  இசைஞானியின் மகிமை ...

               இசைஞானியின்   பாடல்களுக்காகவும், ராஜாவின் பின்னணி இசையையும் கொண்டே படங்கள் நூறு நாட்கள் ஓடியது , சின்ன குயில் சித்ராவிற்கு இப்பாடல் ஒரு மைல்கல்  என்றே கூறலாம் , இன்றும் நான் சித்ரா ஹிட்சில் இப்பாடலைத்தான் முதல் பாடலாக வைத்திருக்கிறேன் ,  சித்ரா பாட பாடத்தான் மெருகேறினார்,  ஆனால் இப்பாடலில் சித்ராவை தவிர நமக்கு தெரியாத விஷயங்கள் அவ்வளவு இருக்கின்றன, இன்று ராஜாவின் பேஸ் கிடாரிஸ்ட் சசி அண்ணாவுடன் கேட்டபோதுதான் நானும் அறிந்து கொண்டேன் ,  பாடலின் முதல் ஆரம்பமே கிடார்தான் , அதை வாசித்தது சதா அண்ணன், ஊடால் கை கோர்த்து வருவது பியானோ , சட்டென ஆரம்பிக்கும் சித்ராவின் குரலோடு பயணிக்கும் பியானோவையும், பேஸ்கிடாரையும் பாருங்களேன்,  என்ன ஒரு அழகான பயணம், இதுதான் பியானோவுக்கான சரியான பாடல்,

           சித்ரா பல்லவியை பாடி முடித்ததும் வரும் ஒரு நொடி அமைதி... அதனை அடுத்து ஆரம்பிக்கும் அந்த முதல் இடைஇசையில் கிடார் ஆரம்பிக்கும் நாதத்திற்க்கு அருகருகே வந்து செல்லும் ட்ரம்ஸ் இன் "சில்" என்ன ஒரு அழகு,  கிடார் நடனமாட ஆரம்பித்தவுடன் மெது மெதுவாக நூல் விட விட பயணிக்கும் பட்டமாய் மனம் மேலே எழும்புகிறது, அப்படியே பயணிக்கும் நமது மனசு பட்டம் மேலே ஜிவ்வென்று பறக்க எத்தனிக்கும்போது கிடார் முடிவடைந்து வயலின்கள் சத்தம் பலமாகிறது , அதுவரை வயலின்கள் கொஞ்சம் அடக்கி வாசித்து அமைதியாக வந்து கொண்டே இருப்பதும், அது நமக்கு அறியாதவாறு பின்னணியில் இருக்குமாறும் அமைத்தது என்ன ஒரு திறமை.. இசைஞானியை பற்றி பாராட்ட வேறு ஏதாவது இருக்கிறதா .. அடடா.. முதல் இடை இசையை கிடாரில் வாசித்த மகானுபாவன் சதா சுதர்சனம் என்று அழைக்கப்படும் நமது சதா அண்ணா..

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்னக் கூறு பூவும் நானும் வேறு..

                       என்று சித்ரா பாட பாட கூட துணைக்கு வரும் தபேலாவை கவனிதீர்களா .. என்ன ஒரு இயல்பான நடை .. என்ன ஒரு சோகத்திற்கு ஆறுதலான துணை .. அதை வாசித்தவர் திரு. கண்ணையா அண்ணன், இசை ஞானியின் பயணத்தில் ஆரம்பம் தொட்டு அவர் உடனே பயணித்தவர் , நீ பார்க்கும்போது பனியாகிறேன் என்று சித்ரா பாடும் பொது சித்ராவின் குரலை கவனித்தீர்களா.. உச்சத்தில் கூட  என்ன ஒரு தெளிவு, என்ன ஒரு பொறுமை, என்ன ஒரு சுருதி சுத்தம், இப்பாடலுக்காக விருது தந்திருக்கலாம் என்று நான் நினைப்பேன்.. நிஜமாகவே சித்ரா சின்ன குயில்தான் ..

                       இரண்டாம் இடை இசையில்தான் விசயமே இருக்கிறது , ஆமாம்  நண்பர்களே.. இரண்டாம் இடை இசையும் ஆரம்பிக்கும் போதும் ஒரு சிறு மௌனம் விட்டே இரண்டாம் இடை இசை ஆரம்பிக்கிறது , இளையராஜாவுக்கு மட்டும்தான் எங்கெங்கு மௌனம் காட்டவேண்டும், எங்கு இசையை வைத்து ஆர்ப்பரிக்க வேண்டும் என்றெல்லாம் தெரியும், நம்மை எப்படி இசை கடலில் தள்ளமுடியும் என்று புரியும் என்பதற்கு இந்த இடை இசையே ஒரு சாட்சி ... இரண்டு கீ போர்டுகள் வாசிக்கும் அந்த டூயட் என்ன ஒரு அழகு, தன் ஜோடி மேல் பரவி காதல் கொள்ளும் காதலன் போல ஒரு கீபோர்டு ஒரே மாதிரியான "ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் " என்று பாடிக்கொண்டே இருக்க இன்னொரு கீபோர்டு (அதன் பெயர் சிந்தசைசராம் ... சசி அண்ணா சொல்லித்தான் எனக்கே தெரியும்) .. அடடா.. கோர்வை விட்டு விட்டதே .. மறுபடியும் வருகிறேன் ..  இரண்டு கீ போர்டுகள் வாசிக்கும் அந்த டூயட் என்ன ஒரு அழகு, தன் ஜோடி மேல் பரவி காதல் கொள்ளும் காதலன் போல ஒரு கீபோர்டு ஒரே மாதிரியான "ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் " என்று பாடிக்கொண்டே இருக்க இன்னொரு வாத்தியம்தான் சிந்தசைசர், அதுவும் கீ போர்டு மாதிரியான வாத்தியம்,

                     "டொய்ங் டொய் டோடைங் ..  டொடொ..டொய்.. டொய்ங் டொய் டோடைங் .." கேட்டீர்களா., அதுதான் அதேதான் .. அந்த வாசிப்பை வாசித்தவர்தான் திலிப்.. அதாவது ஏ . ஆர். ரஹ்மான் ...  இன்னோரு கீ போர்டை வாசித்தவர் "விஜி மேனுவல் " ராஜாவின் எண்ணற்ற கம்போசிசன்களை வாசித்தவர் , ராஜாவுடனான இவரின்  சமீபத்திய வாசிப்பு " நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி "   அதாவது ராஜாவின் தலை சிறந்த கலைஞர்களான பேஸ் கிடாரிஸ்ட் சசி அண்ணா, கிடாரிஸ்ட் சதா அண்ணன், விஜி மேனுவல், ஏ. ஆர் ரஹ்மான், தபேலா கலைஞர் கண்ணையா அண்ணன் , வைரமுத்து  மற்றும் ஸ்ட்ரிங் செக்சன் வயலின் கலைஞர்கள், & சின்னகுயில் சித்ரா ஆகிய இமயங்கள் அனைவரும் இவர்களுடன் பாலசந்தர், கலைஞானி கமலஹாசன் ஆகியோரும் பணி புரிந்த பாடல் என்ற பெருமை இப்பாடலுக்கே சாரும் ..  ஏனோ ரஹ்மானே  ராஜாவிடம் "உன் கையில் என்னை கொடுத்தேன் " என்று கூறுவது போல ஒரு பிரம்மை ..

                       வைரமுத்துவின் வரிகள் குறித்து சொல்ல மேலும் வார்த்தைகள் இல்லை, பதின்ம வயதுகளில் ஏற்பட்ட காதல் பயணங்களில் இப்பாடலை பாடித்தான் சோகத்தை ஆற்றிக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது , ஆனால் இன்று இப்பாடல் அமைதியான சூழ்நிலைகளில் பழைய நினைவுகளை அசை போடும் பாடலாக மாறிய விந்தை  என்ன ? என்று மட்டும் வியந்து வியந்து கேட்கிறேன் , இப்போதும் பார்ட்டிகளில்  சோகமாக இப்பாடலை பாடி கொண்டே “எது வந்த போதும் இந்த அன்பு போதும்” என்று பாடும் போதே நம் சோகத்திற்கு நாமே மருந்திட்டு கொள்வது போல இருக்கும் , அதுதான் வாழ்க்கையின் நிதர்சனமும் கூட .. நிஜமே . வாழ்வில் ஏகப்பட்ட நேரங்களில் நாம் மட்டுமே நமக்கு துணையாக  இருக்கிறோம், ஆறுதலாக இருப்பது ராஜாவின் இசை மட்டுமே .. அந்த வரிகளை பற்றி விவரிக்க தேவையே இல்லை ..ஒவ்வொரு வரிக்கும் அடுத்தவரிக்கும் இருக்கும் சம்பந்தமும் நெருக்கமும், உணர்வும் கண்டு வியக்கிறேன் .. வைரமுத்து ... என்ன கவிஞா நீவீர் .. அதை  படித்தாலே புரியும் .. ஆகவே அவரின் வரிகளை அப்படியே பதிவிடுகிறேன் ..

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்னக் கூறு பூவும் நானும் வேறு..

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே...
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே..

படத்தின் ஓரிஜினல வெர்சன்  : https://www.youtube.com/watch?v=QMRI8tUkWZI

             சமீபமாக சித்ரா துபாய் கச்சேரியில் " ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ... "  பாடியபோது .. அவ்வளவு சரியாக வாசிக்கும் மலையாள கலைஞர்கள் கூட ஏதோ மிஸ் பண்ணுவது போல பிரம்மை .. சித்ராவின் பிஞ்சு குரலில் இருந்த இனிமை மட்டும் இல்லை .. ஆனால்   தவிர்த்து இந்த பாடலின் சித்ராவின் " நீ பார்க்கும் போது பனியாகிறேன் .." என்ற இடங்களில் மேம்படுத்தல் எவ்வளவு அழகாக இருக்கிறது https://www.youtube.com/watch?v=yWFmud45Gz4.. கேட்டு பாருங்களேன் ...

By Viji Connect

நண்பர் விஜி கனைக்ட் 

Comments

  1. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,

    அன்புடன்
    தங்களின் நண்பன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மெல்ல இணையலாம் என்று இருக்கிறேன்..

      Delete
  2. இதைப்படிக்க பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  3. அன்புள்ள அய்யா,

    இசை எனும் இளையராஜா விஜி கனைக்ட் அவர்களின் ரசனை மெய்சிலிர்த்துப் போனேன்.

    ‘ ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
    உன் கையில் என்னைக் கொடுத்தேன்
    நீதானே புன்னகை மன்னன்’ பாடலை இப்படி அணுஅணுவாக இரசித்ததைக் கண்டு வியந்து போனோன். இசை மீது ஒரு மனிதனின் காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

    நான் இரசித்தது...‘என்ன சத்தம் இந்த நேரம்?’ கமல் ரேகாவின் ...காதலின் உச்சகட்டம்...அருமையாக படமாக்கி இருப்பார்கள்...!

    சின்னக் குயில் சித்ரா‘ ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்...’ பாடல் பற்றி அருமையாகக் கருத்தைப் அழகாகப் பதிந்த நண்பருக்கு பாராட்டுகள். சித்ரா சமீபத்தில் சிறிய அலட்சியத்தால் அவரின் சின்ன பெண் குழந்தையை இழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. மீளாத்துயரலிலும் மீண்டு(ம்) பாடும் அவருக்கு நமது பாராட்டுகள்.

    நல்ல பதிவை பகிர்ந்ததற்கு திரு.கஸ்தூத அய்யாவுக்கு நன்றி.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.


    ReplyDelete
  4. --- நான் இசையின் ரசிகன் ...எங்கு நல்ல இசை இருந்தாலும் ஆராதிப்பவன் , அது ரஹ்மானாக இருக்கட்டும், எம் எஸ்வி, கண்டசாலா, கே. வி மகாதேவன், ரவீந்திரன் மாஸ்டர், தேவராஜ் மாச்டம், சலீல் சவ்த்ரி, சாம், ஆர் டி பர்மன், விதயாசாகர், பாலபாரதி யுவன் கார்த்திக்ராஜா, என எல்லோரின் இசையையும் பற்றி உங்களிடம் பகிரவே விரும்புகிறேன் ,ஆனால் நல்ல இசையில் எக்கசக்க பாடல்கள் , பெரும்பாலான பங்கு ராஜாவிடமே இருப்பதால் அவரின் நிறைய பாடல்கள் அடிக்கடி அவரை ஆராதிக்கிறேன் ...----

    இவர் கண்டிப்பாக எல்லோரையும் ரசிப்பவரல்ல. இவர் கூறும் நல்ல இசை என்னவென்று படிப்பவர்கள் அறிவார்கள். ராஜா ரசிகர்கள் எல்லோருமே பொதுவாக அவரை விட மற்ற இசை அமைப்பாளர்களை மன ஆழத்திலிருந்து பாராட்டியதாக எனக்கு நினைவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள் ஆனால் ராஜா அவர்களைவிட மேலானவர் என்பது போன்ற கருத்தையே அவர்கள் எப்போதும் முன்வைப்பார்கள். இந்தக் கட்டுரையை எழுதியவரும் ஒன்றையும் புதிதாகச் சொல்லவில்லை. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் நல்ல பாடல்தான். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிவின் இடையே அவ்வப்போது இளையராஜா பற்றி கட்டுரையாளார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறும் பல கருத்துக்கள் கிளிஷே போல இருக்கின்றன. இளையராஜாவைப் பற்றி எழுதினாலே இப்படித்தான் எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பது போல தெரிகிறது. எனக்குத் தோன்றும் கேள்வி என்னவென்றால் கட்டுரை உங்களின் அபிமானவரைப் பற்றியது. அவரை புகழுங்களேன்.. நடுநிலை என்று வலிந்து காட்டிக்கொள்ள எதற்காக எனக்கு எம் எஸ் வி கே வி மகாதேவன் ஜி ராமநாதன் என்று பழைய இசை சகாப்தங்களை துணைக்கு இழுக்கிறீர்கள்? இளையராஜாவே இந்த அபத்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. சிறுவயது சம்பவங்கள் ஏதோ நேற்று நிகழ்ததுபோல் சுவைபட கூறியது அருமை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக