வணக்கமும் நன்றியும் கசியும் கண்களுடன் ஒரு வழியனுப்பல்


புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகல்வித் துறையில் ஒரு புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் நா . அருள்முருகன் அவர்கள் .




இவரது மேன்மை மிக்க வழிகாட்டுதல்களால்தான் இம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் சேர்க்கையும் தேர்ச்சியும் சரசரவென உயர்ந்தன .
பத்தாம் நிலையில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தைவிட அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி உயர்ந்திருந்தது என்பது அனேகமாக இம்மாவட்டத்தில் மட்டுமே இருக்க கூடும்
மாவட்டம் முழுவதிலுமுள்ள அரசு பள்ளிகளில் மின் ஆளுமை நிர்வாகம் இவரது அரும் முயற்சியால்தான் சாத்தியமானது .
தமிழகத்திலேயே முதன் முறையாக புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகம் ISO தரச் சான்றினை பெற்றது இவரது நவீன சிந்தனைக்கும் முழுவதுமான மின் ஆளுமை முறையில் அலுவலக நிர்வாகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி .
எளிய மாணவர்களின் வெற்றியே இவரது கனவாக இருந்தது . அதனால் தான் மாநில அளவில்அரசுப்பள்ளிகளில் இரண்டாமிடத்தை மேல்நிலைத்தேர்வில் இம்மாவட்டம் பெற முடிந்தது . ஒரு துப்புரவுத் தொழிலாளரின் மகன் பத்தாம் நிலையில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற முடிந்தது .
இவை மட்டுமல்லாது இம்மாவட்டத்தின் தொன்மை குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகளும் பதிவுகளும் தமிழக வரலாற்றுக்கு கிடைத்த அரிய கொடை .
இங்குள்ள திருமயம் சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் இவர் கண்டறிந்து உலகுக்கு வெளியிட்ட பாறை ஓவியங்கள் தொல் பழங்கால ஆதித் தமிழனின் வாழ்வியலை அறிவிக்கும் ஒப்பற்ற சான்றுகள் .
சுதந்திரமான கற்றல் என்பதை மட்டுமின்றி சுதந்திரமான கற்பித்தல் என்றால் என்ன என்பதையும் ஆசிரியர்களை அறியச் செய்தவர் இவர்
இவற்றோடு இன்னும் நிறைய சிறப்புகளுக்கு உரியவரான முனைவர் நா. அருள்முருகன் நிர்வாக இயந்திரத்தின் சுழற்சியின் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு மாற்றலாகி செல்கிறார் .
அவரை நோக்கி விடை சொல்லி அசைகின்றன ..மாவட்டத்தின் 1618725 பேரின் கைகள் .

ஆக்கம் 
இலக்கிய விமர்சகர் கவிஞர் திரு. ராசி பன்னீர் செல்வன் அவர்கள் 

Comments

  1. வருத்தமாய் உள்ளது..சகோ

    ReplyDelete
    Replies
    1. அவர் வெம்மை மிகு புதுகையிலிருந்து குளுமையான கோவைக்கு செல்கிறார்.
      அதை நினைத்து மகிழவேண்டியதுதான்..

      Delete
  2. முதன்மை கல்வி அலுவலர் முனைவர் நா . அருள்முருகன் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைப்போம்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. இத்தகு மனிதர்களால்தான் நாடு இன்னும் செழித்திருக்கிறது....

    அவரது மாற்றம் உங்களுக்கு வருத்தமானதாக இருந்தாலும், உங்களுக்கான பங்களிப்பை இந்த உயர்ந்த மனிதர் கொடுத்துவிட்டார் !... இனி அவர் தூக்கி நிறுத்திய வெற்றித்தூணை காக்கும் பொறுப்பு மாவட்டத்தின் 1618725 பேரின் கைகளுக்கும் உண்டு !

    இவரது மாற்றலால் மற்றொரு மாநிலமும் கல்வியில் சிறக்க இருக்கிறது என்பதை எண்ணி நான் மகிழ்கிறேன். .

    1618726 கையாய் எனது கையும் அவரை நோக்கி நன்றியுடனும் வாழ்த்துடனும் அசைகிறது !

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    நன்றி
    சாமானியன்


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சாம்...
      அருமையான நீண்ட பின்னூட்டம்
      மலர்கள் மலர்ந்துகொண்டிருக்கின்றனவா ..

      Delete
  4. முனைவர் நா.அருள் முருகன் போன்றோரின் சேவை
    இன்று அனைத்துமாவட்டங்களுக்கும் தேவை
    ஐயாவின் சேவை தொடரட்டும்
    வாழ்த்தி வழியனுப்புவோம்
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் தோழர் நம்மால் செய்ய முடியும்...

      Delete
  5. இவரை நான் புதுக்கோட்டையில் கணினிப் பயிற்சி வகுப்பில் சந்தித்துள்ளேன். பண்பாளர், பழகுவதற்கு இனியவர், நல்ல நிர்வாகி, வரலாற்று ஆர்வலர். தமிழகம் முழுவதும் இவர் புகழும் பணியும் பரவட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் முனைவரே..
      நினைவில் வைத்திருப்பது மகிழ்வு.

      Delete
  6. அவரைச் சந்தித்து பேசியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வரியில் நச்சென சொல்லிவிட்டீர்கள்..

      Delete
  7. வணக்கம் தோழர்.

    உங்கள் பதிவால் தான் செய்தி அறிந்தேன்.

    முதன்மைக் கல்வி அலுவலர் என்பதைக் கடந்து அறியப்பட வேண்டிய தமிழ் ஆளுமை அவர்.

    அலுவலர் பணியினூடேயும் அவர் சத்தமில்லாமல் செய்துவரும் ஆய்வுகள் பெரும்பாலான பொழுதை ஓய்விலேயே கழிக்கும் என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கற்க வேண்டிய பாடம்.

    இவருடன் நான் அறிந்த இன்னொரு முதன்மைக்கல்வி அலுவலரும் மாற்றப்பட்டுள்ளதை அறிந்தேன்.

    நமக்கு இழப்பு இன்னொருவருக்கு ஆதாயம்.

    அந்த மட்டில்தான் இயந்திரச் சுழற்சியில் பலநேரம் தன்விருப்பற்ற மாறுதலுடன் இவர்கள் நின்று பணிபுரியத் தொடங்கும் இடங்கள்.


    கற்றவரின் தொழில் என்று வள்ளுவன் கூறுவான்,

    “யாவருடைய மனமும் கோணாமல் மகிழ்ச்சி தரும் விதத்தில் இணைந்திருந்து நெறிப்படுத்தி, இப்படி ஒருவர் நம்மைப் பிரிந்து அப்பால் போகிறாரே என்று அவருடன் இணைந்திருந்தவர்கள் நினைந்து மனச் சோர்வடையும் வண்ணம் பிரிந்து போதலே இந்தக் கல்வி அறிவுடையவர்களின் வேலையாகப் போய்விட்டது“

    என்று.

    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்

    அவருக்கான புலமும் களமும் வரவேற்கும் கைகளும் கோவையில் காத்திருக்கின்றன.

    த ம 6

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கோவை கல்வித்துறை பல சாதனைகளை செய்யக் காத்திருக்கிறது..
      ஒரு யுகபுருஷர் அவர்....
      சாதிப்பார்

      Delete
  8. நல்ல மனிதரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!
    தமிழ்மணத்தில் நுழைய 7

    ReplyDelete
    Replies
    1. வருக பதிவரே
      வாக்கிற்கு நன்றி

      Delete
  9. இப்படிப்பட்டக் கல்வியாளர்கள் இருப்பதால்தான் நம் கல்வி ஒரளவேனும் மிளிர்கின்றதோ?!!! தங்கள் மாவட்டத்திற்கு ஆற்றியது போல் இன்னும் பல மாவட்டங்கள் இருக்கின்றனவே! அவரது சேவை வேண்டி....நல்லதுதான்...இவர் செய்ததை இனி வரும் கல்வியாளர் தொடர்ந்தால் நல்லதுதான்....கோவைக்கு ஒரு நல்வரவு....அவர்களுக்கும் இது போன்று நல்லவை நடக்கட்டும்.//ஒரு துப்புரவுத் தொழிலாளரின் மகன் பத்தாம் நிலையில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற முடிந்தது .// குடொஸ்!! எங்களது வணக்கங்களும்....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒருமுறை இவரை சந்திக்க வேண்டும் தோழர்...
      வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டீர்கள்..
      நிறைகுடம்...

      Delete
  10. புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் பயிற்சியின்போது அவர் ஆற்றிய பங்கும் கொடுத்த ஒத்துழைப்பும், அவரோடு சில நிமிடங்களே நான் பேசிய காட்சியும் நிழலாடுகின்றன..

    பதிவில் உள்ள கட்டுரையைப் படிக்கும்போதே படைப்பாளியின் (ராசி பன்னீர் செல்வன்) பிரிவாற்றாமையை உணர முடிகிறது. அதனால்தான் நீங்கள் (எஸ்.மது) உங்கள் கட்டுரையை எழுதவில்லை என்று நினைக்கிறேன்.

    நெஞ்சம் தழுதழுக்க இருக்கும், புதுக்கோட்டை கல்விப்பணி நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை. இவர் மற்ற அதிகாரிகளினின்றும் வேறுபட்டவர்; அன்புடையார் என்றும் (என்பும்) உரியர் பிறருக்கு. இந்த ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு வலைப்பதிவர்கள் மாநாட்டில் அவரை அழைத்து கவுரவிக்க வேண்டுகிறேன்.

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. நினைவு கூர்ந்ததற்கு நன்றி ...
      அதெல்லாம் இனி ஒரு இனிமையான பழங்கனவு ..

      Delete
  11. வாழ்க அவர்! வளர்க அவர் பணி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி புலவரே

      Delete
  12. அரசு அலுவலர்களில் இப்படி ஒருவரா என்று ஆச்சர்யப் படவைத்தவர் திரு அருள்ருகன் ஐயா அவர்கள்.புதுக்கோட்டையில் அவரை சந்தித்ததில அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். மாற்றல் பெற்று செல்வது புதுகைக்கு ஏமாற்றம் என்றாலும். இன்னொரு மாவட்டமும் பயன்பெறட்டும் என்று மகிழ்வோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா உ.தொ.க. அ சொன்னால் சரிதான்...
      நீங்களும் வித்தியாசமானவர்தான் ..

      Delete

Post a Comment

வருக வருக