யாழியின் என் கைரேகை படிந்த கல்லும் - மகாசிவராத்திரியும் சில தேநீர் கோப்பைகளும்

பொங்கல் உங்களுக்கு எப்படியோ எனக்கு இரண்டு கவிதை நூல்களோடு கழிந்தது.


நந்தனுடன் பேசிய பொழுது இப்போ கவிதை புதுமாதிரியாக இருக்கிறது என்று சொல்ல அப்படி என்ன புதுமாதிரி என கவிஞர் வைகறையைக் கேட்க அவர் நான்கு நூல்களைக் கொடுத்து படிங்க என்றார்.

பின்விளைவுகளை அறியாத அப்பாவி அவர். என்னிடம் நூல்களைக் கொடுத்துவிட்டு அய்யா எப்போ தருவீங்க என்று பலமுறை கேட்டுவிட்டு இனி இவன் தரமாட்டான் என்றே முடிவெடுத்துவிட்டார்.  



கொடுக்கக் கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. படிக்க வேண்டும் என்று தள்ளிப் போய்விட்டது.

நான்கு நூல்களில் நரனின் உப்பு நீர் முதலையை மட்டுமே பெற்றுக்கொண்ட அவர் மற்ற மூன்று நூல்களையும் வராக்கடனில் வைத்துவிட்டார்.

பொங்கல் அன்று கையில் எடுத்தேன் இரண்டு நூல்களையும் முழுதாக படித்துவிட்டு வழக்கம் போல எழுதி வைத்துக்கொள்ளமல் பிடித்த கவிதைகளை மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

கிட்டத்தட்ட முழுப் புத்தகமும் காலரியில் இருக்கிறது இப்போ.

இப்படி ஒரு தொகுப்புகளை ஒரு நல்ல நாளில் ரசித்துப் படிக்க நேர்ந்தது ஒரு இனிமையான அனுபவம்.

யாழி தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமை என்பதை உணரச்செய்கிறது அவரது படைப்புகள்.

கவிதைகளே அழகாக இருக்க, இளஞ்சேரல் அவர்களின் அறிமுக உரை இலக்கியம் படிக்க விரும்புவோர்கள் கவிதைகளை நேசிக்கிறவர்கள் பத்திரப் படுத்தவேண்டிய உரை அது. வார்த்தைகளை இப்படித் தொடுத்து இவர் எனக்கு ஒரு முகவுரை எழுத்தினால் இரத்தத்திலே கூட கவிதை எழுதலாம் என்று தோன்றியது.

எழுத்தை தவம் போல நேசித்து படைப்பவர்கள் மட்டுமே இப்படி எழுத முடியும். இல்லை என்றால் ஏதோ காளியோ சாமியோ இந்தக் குழுவிற்கு ஆசிர்வாதம் செய்திருக்க வேண்டும்.

தகிதா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் என் கைரேகை படிந்த கல் காலம் சென்ற கலாம் அய்யா அவர்களினாலேயே பாராட்டப் பட்டிருக்கிறது.

எஸ்.ராவின் படைப்புகளை நூல்வடிவில் வாசிக்கிற பொழுது ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயத்தை மட்டுமே படிப்பேன் நான். எக்ஸ்ப்ரெஸ் வேகத்தில் பயணிக்க முடியாத படைப்புகள் அவை.

யாழியின் கவிதைகளும் எனக்கு அந்த அவஸ்தையைக் கொடுத்தன.  சில கவிதைகளைப் படித்தவுடன் கொஞ்சம் அவை மனசில் இறங்கி செய்யும் மாயவித்தைகளை அனுபவிக்க நிறுத்தி நிறுத்திப் படிக்க வேண்டியிருக்கிறது.


அனாதையான காதலையும், சாய்வு நாற்காலியில் அசையும் இறந்தகாலத்தையும், எல்லா இடங்களிலும் கேட்கும் குறைப்போலியை கடந்து நடக்க வேண்டியிருப்பதையும் சொல்லும் கவிதைகளை இயந்திரம் மாதிரி படித்துவிட முடியுமா என்ன?

யாழியின் கவிதை உலகு அழகானது, அதன் மறுபாதி பேசும் இலக்கிய அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு இடத்தில் இரண்டு பேர் இருந்தால் அங்கே மூன்று அரசியல் இருக்கும் என்பார்கள். அரசியல் இல்லாத இடமே இல்லை என்கிற பொழுது இலக்கிய உலகு மட்டும் எளிதாக தப்பிவிடுமா என்ன.

இலக்கிய உலகின் அரசியலைக் கவிதையில் கவித்துவத்தோடு கொணர்ந்திருப்பது யாழியின் தனித்த அடையாளங்களில் ஒன்று.  இதன் காரணமாகவே யாழி வாசகனின் நேசத்துக்குரியவராகிறார்.

என்னைக்
காயப்படுத்தும் நோக்கில்
விழுந்த கற்களை
அப்புறப்படுத்தும் பொழுது
சிக்கியது
யார்மீதோ
வீசப்பட்ட
என் கைரேகை
படிந்த கல்


என்ற தலைப்புக் கவிதை ஒன்றே போதும் பருக்கைப் பதமாக.

யாழியின் மற்றோர் தொகுப்பு.  மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும் தமிழ் இலக்கிய உலகில் கவிஞரின் பெயரை அழுந்தப் பொறித்திருக்கிறது.

உண்மையைச் சொல்லப் போனால் இந்த தொகுப்பின் மூலமாகத்தான் இப்படி ஒரு கவிதைக் குழு இருப்பதே எனக்குத் தெரியும். எனது முகநூல் நண்பர் கவிஞர் நந்தன் ஸ்ரீதரன் இதன் வெளியீட்டுக்கு போய் கவிதையை முகநூலில் கொண்டாட வைகறை யாழி என அறிமுகமானார்கள்.

பின்னர் வைகறை நிகழ்த்திய கவிதை வாசிப்பில் பல கவிஞர்கள் கலந்து கொள்ள சகோ கீதா அழைத்து நந்தனை சந்திக்க வைத்தார். வழக்கம் போல பணிக்குச் சென்றுகொண்டிருந்த நான் பாதியில் திரும்பி பழனியப்பா மெஸ்ஸில் கவிஞர்கள் கூட்டத்தை சந்தித்தேன்.

யாழியுடன் எனது முதல் சந்திப்பு அப்படிதான் சாத்தியமானது. சிறிது நேரம் என்றாலும் தகப்பன் கையை கூட்டத்தில் விட்டுவிட்டு பேந்த பேந்த விழிக்கும் குழந்தைமாதிரி  நின்று கொண்டிருந்தார் யாழி. வெகு எளிய மனிதராக இருந்த அவருக்குள் இருந்த கவிஞன் இன்றுவரை என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

இதன் பின்னர்தான் வைகறை என்னிடம் யாழியின் கவிதை நூல்களை தந்தார்.

பலமுறை  படித்த பின்னரும் திருப்தி இல்லாமல் மீண்டும் மீண்டும் படித்தபின்னரே எழுத முடிகிறது.

கானலின்
பெருவெள்ளம் சூழ்ந்து
பாலையாக்கும் தருணமொன்றில்
வெயில் குடித்துப் பறக்கிறது
மழைப் பறவை
கடலாகிறது பாலை

எனும் கவிதை எழுப்புகிற சித்திரம் ஒரு அற்புதம்.

இன்னொரு கவிதையில் "துயரைப் போல வெளியேறும் இருள் விழுங்கத் துவங்கியது இந்தப் பகலை' என்கிறபொழுது எழும் மென் அதிர்வுகள் சுகமானவை.

இப்படி பக்கங்கள் தோறும் நேர்த்தியான கவிதைகளை பார்வைக்கு வைத்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

எளிய கவிஞர்கள் அவ்வளவு எளிதாக ஏற்பினைப் பெற்றுவிட முடியாது இலக்கிய உலகில். அது வார்தைகளினால் ஆன சதுப்பு நிலம். முகம் நிறையப் புன்னகையோடு உங்கள் குடலை உருவும் வித்தை அங்கே நிறையபேருக்கு தெரியும்.  சிநேகமாய் தோளில் விழும் கைகளெல்லாம் உங்களை உயர்த்தவும் என்று நினைத்தால் நீங்கள் ஓர் அக்மார்க் அப்பாவி. துரதிர்ஷ்ட வசமாக அங்கே நிற்க நிலைக்க பல நல்ல மனிதர்கள் கூட அதே ஆயுதங்களைத்தான் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது.

இத்துணைப் பிரச்சனைகளையும் எப்படி யாழியால் கவிதையில் சொல்ல முடிகிறது உணர்த்த முடிகிறது. அங்கே நிற்கிறார் யாழி.

நிற்பார்.

அன்பன்
மது

பிரியத்திற்குரிய வைகறை,

உங்கள் அண்ணா கையொப்பமிட்ட கவிதை நூல்கள் பத்திரமாய் உங்கள்  இல்லத்திற்கு வரும். தாமத்திற்கு மன்னிக்கவும். 

Comments

  1. பொங்கல் விடுமுறையைச் சிறப்பாகப் பயன்படுத்தி, கவிதை நூல்களைப் படித்து, பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி முனைவரே

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ‘யாழி’ யின் கவிதை நூல்களையும் அவரைப் பற்றியும் நல்ல அறிமுகம்.

    நன்றி.

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மணவையாரே

      Delete
  3. எஸ்ரா அவர்களின் எழுத்துகளை அவ்வளவு லைட்டாகப் படித்துச் செல்ல முடியாது. நானும் வாசிக்கின்றேன் அவரை. பல மனதைக் கனக்கச் செய்துவிடும். மீண்டும் வாசித்தால்தான் மனதில் பதியும். ஆழ்ந்த வாசிப்பு வேண்டும்.

    யாழியின் நூல் அறிமுகத்திற்கு நன்றி சகோ!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தோழர்
      தன்தாயை காசி, கங்கை கூட்டிச் சென்ற ஒரு மகனின் அனுபவத்தை எழுதியிருப்பார்..
      திடும்மென அந்தத் தாய் நீரில் குதித்து ஆற்றோடு போக முயற்சிக்க மகன் நீந்திக் காப்பாற்றி கரைசேர்த்து .. தவறி விழுந்துட்டாங்க என்று சொல்லி இருவரும் அமைதியாக அமர்திருப்பார்கள் - இப்படி ஒரு விசயத்தை எப்படி ஜஸ்ட் லைக் தட் படிக்க முடியும் ...
      என்ன பிரச்னை என்றால் ஒவ்வொரு சாப்டருக்கும் வைத்து வைத்துப் படித்து ஒரு ஆண்டு கூட ஆகிறது முடிக்க

      Delete
    2. எஸ் ராமகிருஷ்ணனின் நூல் வாசிப்பு அனுபவத்தைக் குறிப்பிட்டேன்.

      Delete
  4. கைரேகை படிந்த கல் படித்துவிட்டு பல நிமிடங்கள் கழித்தே அடுத்த வரிக்குச் சென்றேன். இப்படியெல்லாம் நம்மால் எழுத முடியுமா என்று தோன்றியது. பகிர்விற்கு நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. வெகு நேரம் கவிதைகளப் பற்றி பேச நண்பர்களும், ஆழமான வாசிப்பும், நுட்பமான பார்வையும் இருந்தால் எல்லோருமே இப்படி எழுதிவிட முடியும்...


      ஐயாம் ஆன் ய ராட் ரேஸ்...

      சுலபம்தான் கிரேஸ் எண்ணி ஒரு நூறு மணிநேரம் நல்ல கவிதைகளைக் தேடித் படித்தாலே போதும் ..
      ஆல் த பெஸ்ட்

      Delete

Post a Comment

வருக வருக