வைகறை நினைவேந்தல் வீதி கூட்டம்

கடந்த வீதிக் கூட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர் திரு வைகறை, எதிர்பாராத உடல் நலிவால் இயற்கை எய்த அவரது நினைவில் இருந்து மீள முடியா அதிர்விலும், கடும் மனவேதனையிலும் வீதி அமைப்பு நண்பர்கள் நினைவேந்தல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.எந்த இடத்தில் பிறரின் கவிதைகளை வைகறை வாழ்த்திப் பேசினாரோ, எந்த இடத்தில் வீதி உறுப்பினர்களின் படைப்புகளை முன்னின்று வழிநடத்தினாரோ, எந்த மேடையில் தனது பூஞ்சிரிப்பால் அவையோரை கவர்ந்தாரோ அந்த இடத்தில் ஒரு  படமாக வைகறை.

இன்னும் பாலர் பள்ளியையே அடையாத இறைவனின் அருள் கொடையாக கிடைத்த சின்னஞ்சிறு ஜெய்சனை தன்னம் தனியே இந்த கொடிய உலகில் விடுத்து எப்படி விடைபெற்றார் அவர்.  யாரிடம் தனியே பேசினாலும் தனது மனைவி ரோஸ்லின் குறித்து அவர் சொன்ன  கருத்துக்கள், அவருடைய ஒவ்வொரு அசைவிலும் சகோதரி ரோஸ்லினின் பங்கிருந்ததை அவர் வார்த்தைகளில் வெளிப்படுத்திய  பாங்கு.

ஒரு மாபெரும் கவினாக உலகம் அறிந்திருக்க வேண்டிய ஒருவனை, சடாரென இழப்பது என்பது வேதனையிலும் வேதனை.

அரங்கை நிறைத்து விட்டார்கள் புதுகையின் இலக்கிய நேசர்கள். எப்போதும் எள்ளல், அதிரடி சிரிப்பு என்று நிறைந்திருக்கும் அவை அமைதியில் உறைந்தது. அட பின்வரிசையில் பதிவர்கள் இருவர், கரந்தையார் மூத்த பதிவர் தமிழ் இளங்கோ ஐயாவோடு.

நிகழ்வை தமிழாசிரியர் கழகத்தின் கு.மா திருப்பதி ஐயா, கவிஞர் நிலவன், கவிஞர் தங்கமூர்த்தி, கடந்த கூட்டத்திற்கு தலைமையேற்ற கவிஞர் கலியமூர்த்தி அவர்கள் வழிநடத்த வைகறையின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரது நினைவுகளைப் பகிர்ந்தனர்.

இத்துணை நபர்கள் இந்தக் கூட்டத்திற்கு வர மிக முக்கியமான காரணம் கவிஞர் தேவதா தமிழ் எனும் கீதா.

கூட்டத்தில் மிக முக்கியமான முடிவாக மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.

வைகறையின் மனைவி சகோதரி ரோஸ்லின் அவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணியை பெற்றுத்தருதல்.

வைகறையின் பாலகன் ஜெயசனின் பெயரில் ஒரு வைப்பு நிதி ஏற்படுத்துதல்.

வைகறையின் இறுதிப் படைப்புகளை வெளியிடுதல். அவர் பெயரில் முப்பத்தி ஐந்து வயதிற்குள் இருக்கும், சிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குதல்.

இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பாளர்கள் வெகு எளிதாக இதை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இதை விட பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்.

கவிஞர் தங்கமூர்த்தி, வைப்பு நிதிக்காக திரட்டவேண்டிய இலக்கு என்று சொன்ன தொகை, உண்மையில் தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். வேற்று அறிவிப்பாக இல்லாமல் அதை செயல்படுத்தும் வல்லமையும் அண்ணனுக்கு உண்டு.

அவர் வேண்டுகோளில் இரண்டு வாக்கியங்கள் இன்னும் காதில்.

கொடுக்கணும்னு நெனச்சா கொடுத்துவிட வேண்டும். இன்னொரு விசயம் கொடுக்கிற வரை உங்கள் கண்ணீரின் ஈரம் காயாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிகழ்வில் திரு தங்கம் மூர்த்தி அவர்கள் இலக்கு தொகையை சொல்லி ஏன் என்று விளக்கிய பொழுது எனக்கு வீதி அமைப்பு இன்னொரு முன்னுதாரணமான செயலில் ஈடுபட்டிருப்பதை உணர முடிந்தது.

வீதி அமைப்பு கூடு அமைப்பில் இருந்து வந்தது. கூடு திரு. பெருமாள் முருகன் அவர்களின் இலக்கியச் சந்திப்பு நிகழ்வு. கடந்த ஆண்டுவரை புதுகையின் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த உயர்திரு.அருள் முருகன் அவர்கள் திரு. பெருமாள் முருகன் அவர்களின் மாணவர். கூடு நிகழ்வில் புதுகையின் ஆளுமைகள் சிலருடன் கலந்துகொண்ட அவர் வீதியை வடிவமைத்தார்.

வெகு எளிய ஆரம்பம். அவரது பணி மாறுதலுக்குப் பிறகும் வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. இன்று நடந்த நினைவேந்தலில் வீதிக் அவையில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவையோரின் அனுமதியோடு முடிவுகளை வெளியிட்ட பொழுது எனது மனம் என்னை அறியாமல் நிறுவனருக்கு நன்றி சொன்னது.

இலக்கியப் பயிற்சிக் களமாக இருந்த அவை, இன்று எதிர்பாராமல் காலத்தின் கருணையற்ற செயலால் மரித்துப் போன ஒரு இளம் கவிஞனுக்கு தந்திருக்கும் ஏற்பும் மரியாதையும் ரொம்பப் பெரிய விசயம்.

தனது மரணத்தில் கூட தன்னைச் சார்ந்த இயக்கத்தை அடுத்த தளத்திற்கு உயர்த்திவிட்டார் வைகறை.

ஈரம் இருக்கிற கூடவே பணமும் இருக்கிற அத்துணை நண்பர்களிடம் பணிவோடு விண்ணப்பிக்கிறேன்.

உங்கள் நிதிப் பங்களிப்புகளை புதுகை கணினித்தமிழ்ச் சங்கத்தின் வங்கிக் கணக்குக்கே அனுப்பவும்.

விதைக்கலாமின் பங்களிப்பை ஸ்ரீ வெளியிடுவதுதான் சரியாக இருக்கும். அவரே வெளியிடுவார்.

குட்டி ஜெய் இனி ஒருபோதும் தகப்பன் முகத்தைப் பார்க்கப் போவதில்லை. ஆனால் அவன் அப்பன் எத்துனை நல்ல இதயங்களைச் சம்பாதித்துத் தந்துவிட்டு விடைபெற்றிருக்கிறான் என்பதை உணர இந்த பங்களிப்பு உதவியாக இருக்கும்.

வங்கிக் கணக்கு எண் நாளை காலை அறிவிக்கப்படும்.

அன்பன்
மது 

Comments

  1. என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை த.ம.1

    ReplyDelete
  2. விளக்கமாக எழுதியுள்ளமைக்கு நன்றி. வீதி வெறும் இலக்கியக்கூட்டமல்ல ..ஒரு குடும்பம் என்பதை நிரூபிக்கும் தருணம்.வீதி பக்கத்திலும் இதை பதிவு செய்யுங்கள்....சகோ..

    ReplyDelete
  3. வீட்டிற்கு போன கையோடு, மனதில் இருந்ததை இறக்கி வைத்து விட்டீர்கள் . நிச்சயம் வைகறை குடும்பத்திற்கு நம்மாலானதைச் செய்வோம். பணம் அனுப்ப வேண்டிய சேமிப்பு கணக்கு எண்ணைத் தெரியப் படுத்தவும்.

    ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

ஜான் விக் 3

வழிபாடு இல்லா சிவன் கோவில்கள்

பத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்