மாரத்தான் Marathon

ஷாஜகான் அவர்களின் முகநூல் பதிவொன்று

மாரத்தான் என்னும் சொல்லைக் கேட்டதுமே அவரவர் ரசனைக்கேற்ப பொருளோ வேறு சொல்களோ நினைவு வரக்கூடும். எனக்கு அத்தான்... என்னத்தான்.. அவர் என்னைத்தான்... என்கிற பாட்டுதான் ஞாபகம் வரும். :) அது போகட்டும்.


மாரத்தான் என்னும் சொல் கிரேக்க புராணக் கதையிலிருந்து பிறந்தது. மாரத்தான் என்னும் நகரில் பெர்சியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் பெரும் போர் நடைபெற்றது. இதில் பெர்சியர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். அந்தக் காலத்தில் - கி.பி. முதல் நூற்றாண்டில் தந்தியோ, தொலைபேசியோ, இன்டர்நெட்டோ இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நல்ல போக்குவரத்து வசதிகூட இல்லை. எனவே, செய்திகளைக் கொண்டு செல்வதற்கு ஓட்டக்காரர்களைத்தான் பயன்படுத்தினார்கள். இந்தியாவில்கூட 1857ஆம் ஆண்டு சிப்பாய்ப்புரட்சியின்போது புரட்சிக்கான செய்திகளை குதிரை வீரர்களும் ஓட்டக்காரர்களும்தான் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள், சப்பாத்திதான் ரகசியச் செய்திகளுக்கான குறியீடாகப் பயன்பட்டது என்பது வரலாறு. அதுவும் ஒருபக்கம் கிடக்கட்டும்.

கிரேக்கர்களின் வெற்றிச் செய்தியை பெய்டிப்பைட்ஸ் என்ற பெயர் கொண்ட கிரேக்க தூதுவன், மாரத்தான் நகரிலிருந்து ஓட்டமாக ஓடி ஏதென்ஸ் நகருக்குக் கொண்டு சென்றான். "நேனிகேகாமென்" - நாம் வெறறி பெற்றுவிட்டோம் - என்று கூவிவிட்டு அப்படியே விழுந்து இறந்து போனான். இப்படிப் போகிறது ஒரு கதை.

இது முழுக்கவும் உண்மையா பொய்யா என்பது தெரியாது. இருப்பினும், கிரேக்க வரலாற்று ஆய்வாளர் ஹெரோடோட்டஸ் என்பவர், கிரேக்க ராணுவ உதவி தேவை என்ற செய்தியுடன் ஏதென்ஸ் நகரிலிருந்து ஸபார்ட்டா நகருக்கு 240 கிமீ தூரத்தை பிலிப்பைட்ஸ் என்ற தூதன் கொண்டு சென்றான், மீண்டும் ஸ்பார்ட்டாவிலிருந்து ஏதென்சுக்கு ஓட்டமாக ஓடினான் என்று எழுதியிருக்கிறார்.

எது எப்படியோ, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்தபோது, கிரேக்கர்களின் பண்டைய பெருமையை வெளிப்படுத்தும் வகையில், மக்களைக் கவரக்கூடிய போட்டி ஏதேனும் நடத்த வேண்டும் என்று சிந்தித்தனர். 1896ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதல் ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற போது, மாரத்தான் என்ற நீண்ட ஓட்டத்தை நடத்தலாம் என்றார் மைக்கேல் பிரியல் என்பவர். ஒலிம்பிக் நிறுவகரான பியரே டி கௌபர்ட்டின் இதற்கு ஆதரவளிக்கவே, மாரத்தான் போட்டி பிறந்தது. இதில் ஆடவர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற விதி 1984இல் மாற்றப்பட்டு பெண்களும் பங்கேற்கத் துவங்கினர்.

நவீன ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மாரத்தான் போட்டி இறுதி நிகழ்ச்சியாக இடம் பெறத் துவங்கியது. 1896இல் 40 கிலோமீட்டர் என்று இருந்தது படிப்படியாக மாற்றம் பெற்று, 1924 முதல் 42.195 கிலோமீட்டர் தூரம் கொண்ட போட்டியாக நிலை பெற்றது. ஒலிம்பிக் மாரத்தான் புகழ்பெற்றது என்றாலும், ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 800 மாரத்தான் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பாஸ்டன், நியூயார்க், சிகாகோ, லண்டன், பிரிட்டன் ஆகிய மாரத்தான் போட்டிகள் புகழ் பெற்றவை.

சரி, ஹாஃப் மாரத்தான் என்றால் என்ன? 42 கிலோமீட்டருக்கு பதிலாக அதில் பாதியை - 21.097 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது ஹாப் மாரத்தான் - அதாவது அரை மாரத்தான். இதிலும், டேய்டன், லாஸ் வேகஸ், நியூ ஆர்லியன்ஸ், மான்செஸ்டர், பிலடெல்பியா, பர்மிங்ஹாம், ஈஸ்ட் லண்டன், மிலான், ரோட்டர்டாம், பீனிக்ஸ், ஹேக் போன்ற அரை மாரத்தான்கள் புகழ் பெற்றவை.

ஆரம்பத்தில் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சிறந்து விளங்கி வந்தனர். கடந்த பத்து இருபது ஆண்டுகளாக கென்யா, எதியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாட்டினரும் சாதனை புரிந்து வருகின்றனர். 

அண்மைக்காலங்களில் தில்லி ஹாஃப் மாரத்தான், மும்பை ஹாஃப் 
மாரத்தான் போட்டியும் புகழ் பெற்று வருகிறது.

இந்த மாரத்தான் ஓட்டம் பற்றி முக்கியமான ஒரு கேள்வி அதைப் பார்ப்பவர்களுக்கு எழக்கூடும். அதாவது, ஆயிரக்கணக்கானோர் இதில் ஓடுகிறார்கள். துவக்கப் புள்ளியில் அத்தனை பேரும் நிற்க முடியாது. எனவே துவக்கப் புள்ளிக்குப் பின்னே வரிசையாக நிற்க வேண்டும். போட்டி துவங்கியதும் துவக்கப் புள்ளிக்கு அருகில் இருப்பவர் முதலில் ஓடி விடுவார். பங்கேற்பவர் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால், வரிசையின் கடைசியில் நிற்பவர் துவக்கப் புள்ளியை அடைவதற்கு சில சமயங்களில் 10-20 நிமிடம்கூட ஆகிவிடும். 2002இல் சிகாகோ ஒலிம்பிக்கில் கடைசியில் இருந்தவர் துவக்கப் புள்ளியை எட்டுவதற்கே எட்டரை நிமிடம் பிடித்தது.
அப்படியானால், எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் முதலில் ஓடிய நபரை கடைசியில் ஓடும் நபர் எட்டவே முடியாது. இது எப்படி நியாயமான போட்டியாகும் என்பது முக்கியமான கேள்வி. அதேபோல, இறுதிக்கோட்டை ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் எட்டினால், யார் முதலிடம் பெற்றார் என்பதை முடிவு செய்வதும் கடினம். என்னதான் அதிவேக காமிராக்கள் இருந்தாலும், மில்லிசெகண்ட்களை கணக்கிடுவது சிரமம்.
இந்தப் பிரச்சினைக்கு நவீன கணினித் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் காலணியில், கணுக்கால் பகுதியில் ஒரு சில்லு - அதாவது சிப் ஒன்று பொருத்தப்படுகிறது. இந்த சில்லு, தண்ணீரில் நனைந்தாலும் வெயிலில் பட்டாலும் கெடாது. ஒவ்வொரு சிப்புக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கும். துவக்கப் புள்ளியில் மின்னணு காந்தப்புலன் கொண்ட ஒரு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும்.

ஓடி வருகிற நபர் எப்போது துவக்கப் புள்ளியில் விரிக்கப்பட்டுள்ள கம்பளத்தை எட்டுகிறாரோ அப்போது அந்த சிப்பிலிருந்து சிக்னல் புறப்பட்டு கம்பளத்தை அடையும். கம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ள கணினியில், அவர் துவக்கப்புள்ளியை மிதித்த நேரம் துல்லியமாகப் பதிவாகி விடும். அதேபோல போட்டி முடியும் இடத்திலும் இதே போன்ற கம்பளம் இருக்கும். ஓடிவந்தவர் எப்போது அதைத் எட்டுகிறாரோ அந்த நேரமும் கணினியில் பதிவாகி விடும். சேர்ந்த நேரத்திலிருந்து புறப்பட்ட நேரத்தைக் கழித்தால் அவர் ஓட்ட நேரம் துல்லியமாகத் தெரிந்து விடும். பத்தாண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான இந்த சிப் டைமிங் முறை இன்று மாரத்தான் போட்டிகளுக்கு பெரிதும் கைகொடுக்கிறது.

- 2008 ஒலிம்பிக்கின்போது வானொலியில் வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து சுருக்கப்பட்டது. 

படம் - 2016 மும்பை மாரத்தானில் ஓ.பி. ஜெய்ஷா.


Comments

  1. Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  2. மிகவும் பயனுள்ள சுவாரசியமான தகவல், மாரத்தான்னுக்கானப் பெயர்க்காரணத்தை இதுவரை அறிந்திருக்கவில்லை. பகிர்வுக்கு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  3. மாரத்தான் குறித்து விவரமான பகிர்வு...
    அறியாத தகவல்களை அறியத்தந்தீர்கள் மது சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்
      வழங்கியவர் திரு.ஷாஜகான் தோழர்

      Delete
  4. சிப் டைமிங் முறை இப்போது அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவரே

      Delete
  5. சிப் டைமிங் முறையை அறிந்து கொள்ள முடிந்தது ,விளக்கமான பதிவுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. நன்றி பகவானே

      Delete
  6. மாரத்தான் பற்றிய அருமையான பகிர்வு. அறியாத பல தகவல்கள்! மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர்

      Delete
  7. அவரது தளத்திலும் படித்தேன். மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக