அமெரிக்காவிற்குப் போ! -முனைவர் மு பிரபு


"தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக செய்ய வேண்டிய அய்ந்து மாற்றங்கள் என்ன?" என்ற கட்டுரையில் (தமிழ் தி ஹிந்து, 30-4-2017) தேவையான மூன்றாவது மாற்றமாக 'கல்வியை அரசியல்மயப்படுத்துங்கள்' என்று சமஸ் அடையாளப் படுத்தியிருக்கிறார். கல்வி அரசியல் மயப்பட்டுதான் இருந்தது எழுபதுகளுக்கு முன்னால். ஹிந்தி மொழி எதிர்ப்பு ஒரு மாணவர் இயக்கமே.திராவிடக் கட்சிகள் மாணவர்களைத் தங்கள் வசம் வைத்திருந்தன. எண்பதுகளின் மத்தி வரை அந்த நிலையே தொடர்ந்தது எனலாம். 1983-ல் யாழ் சர்வகலா சாலை எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வட இலங்கையில் எழுந்த கலவரங்களின் பாதிப்பு தமிழகக் கல்விச் சாலைகளில் மிகப் பெரிய அளவில் எதிரொலித்தது. ரகசியமாக ஒத்த கருத்துடைய ஆசிரியர்களிடம் மட்டும் பரிமாறப் பட்டுக்கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் சஞ்சிகைகள் மாணவர்களிடம் வேண்டுமென்றே கசியவிடப் பட்டன.

ஆசிரியர்களிடம் ஒருவிதமான கொந்தளிப்பு இருந்தது. மாணவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பரித்த போது, பெரு மகிழ்வுடன் ஆதரவு வழங்கினர் ஆசிரியப் பெருந்தகைகள். அவர்களில் பெரும்பாலோர் கருப்பு நிறச் சட்டையுடன் மாதக் கணக்கில் பள்ளிக்கு வந்தனர். நினைவு சரியாக இருந்தால், முதலமைச்சர் எம்ஜியார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கருப்புச் சட்டையுடனேயே விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் அவ்வமயம் கலந்து கொண்டனர்

.
கல்வி அரசியலோடுதான் இருந்தது. ஹாலிவுட் நடிகர்களைப் பற்றிச் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும். அதை அவர்கள் மறைப்பதில்லை. மாறாக, அதற்கான குரலை பொதுவெளியில் தொடர்ந்து ஒலித்தவாறு இருப்பார்கள். கல்வி வியாபாரமாக்கப்பட்ட போதுதான் மாணவர்களிடம் அரசியல் உணர்வு மறையத் தொடங்கியது. பொறியியல் கல்லூரிகளின் எழுச்சி, நுழைவுத் தேர்வுகளின் துவக்கம் ஆகியவை மாணவர்களை அரசியலிடமிருந்து பிரித்தன என்று சொல்லலாம். இந்த காலகட்டத்தில்தான் சுயநிதி கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள் / கல்லூரிகள் மற்றும் பிற நிலைகள்) காளான்கள் போல பல்கிப் பெருகின. கல்வி முதலாளி வசம் போனபோது, அரசியல் நிறுவன வளாகங்களிலிருந்து துரத்தப் பட்டது. பாஸ் செய்த மகன் / மகள் அமெரிக்கா போனதால், பெற்றோர்களும் அரசியல் தங்கள் தலைமுறைக்கு வேண்டாமென முடிவுகட்டி விட்டார்கள்.


கேரளாவில் நிலைமை வேறு. அங்கே அரசியல் நிறுவன வளாகங்களில் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. பெரிய தலைவர்கள், நடிகர்கள், இலக்கிய கர்த்தாக்கள் உட்பட பல பிரமுகர்கள் படிக்கும் காலத்தே அரசியல் தத்துவங்களுக்காக குரல் கொடுத்தவர்கள்தான். தனி நபர் வழிபாடுதான் அரசியல் என்ற நிலை தமிழகத்தில் எழுந்தது பரிதாபம்தான். அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா என்ற தனி ஆளுமைகள் ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியலைத் தங்கள் வசப் படுத்தியிருந்தனர். அத்தகைய தனிப் பெரும் ஆளுமை இல்லாத நிலைமை இப்போது வந்திருப்பது ஒரு வகையில் நன்மையே என்று சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டுப் பத்திரிக்கைகள் நாட்டை depoliticize செய்ததில் முக்கியமான பங்களித்துள்ளன. சினிமாக் கவர்ச்சியை மக்கள் முன் நிறுத்தி, தனி நபர் வழிபாட்டை தமிழக அரசியல் கூறாக முன் நிறுத்தியதில் இந்தப் பத்திரிக்கைகளுக்கு ஆகப் பெரிய பங்குண்டு. அண்ணா, விடுதலை, மக்கள் குரல், முரசொலி, தீம்தரிகிட போன்ற கட்சிப் பத்திரிக்கைகள் செய்த பங்களிப்பைக் கூட வெகுஜனப் பத்திரிக்கைகள் செய்துவிட வில்லை. குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுஜன சஞ்சிகைகள் எல்லாம் pornography-யாக மலிந்து போய் ஐம்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது.

தன்னுடைய சாவு வரை மக்களை அரசியல் படுத்தியவாறு இருந்த ஒரே தமிழக அரசியல்வாதியாக ராமசாமி நாயக்கரை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. அவர் போன பிறகு, திராவிடக் கட்சிகளுக்கு தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரே watchdog இல்லாத நிலை. சந்தோசம் தாங்காமல் தனிநபர் வழிபாட்டை உறுதிப்படுத்தி எம்ஜியார் - கருணாநிதி என்ற இரு துருவ அரசியலை நிச்சயப் படுத்திக் கொண்டனர் திராவிடக் கிளைகள்.

பெற்றோர்கள் மத்தியிலும் அரசியலுக்கு எதிரான மனப்போக்கு வளர்க்கப் பட்டது. குழந்தைகள் உருப்பட வேண்டுமானால் அமெரிக்கா போக வேண்டும். அமெரிக்கா போக வேண்டுமானால் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வேண்டுமானால், பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு நிறைய பேர் போயாகி விட்டது. மாணவர்களிடையே அரசியற்ற தமிழ்நாடும் நாசமாகி விட்டது. சமஸ் சொல்வது போல, இட ஒதுக்கீட்டு கொள்கையால் மட்டுமே "உருப்பட்டவர்கள்" இன்று அதற்கு எதிரான குரலெழுப்புவது காலத்தின் விந்தை மட்டுமல்ல, முட்டாள் தனத்தின் உச்சமும் கூட.

திராவிடத்தின் - தமிழகத்தின் அரசியலை தமிழ்நாடுப் பாடநூல் நிறுவனம் தன்னுடைய பாடப் புத்தகங்களில் அனுமதிக்கா விட்டால், வேறு யார் அதைச் செய்ய முடியும்? வேறு எவருக்குமே அத்தகைய தேவையில்லை. சமூக அறிவியல் மற்றும் மொழிப் பாடங்கள் முற்று முழுக்க அரசியல் படுத்தப் பட வேண்டும். அரசியல் படுத்தப் படுவது என்றால், பன்மைத்தன்மைக்கு எதிரானது என்று நினைக்கும் மனிதர்களிடம் விவாதிக்க எனக்கு ஒன்றுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வின் அத்தனைப் பக்கங்களும் மாணவர்களிடம் கொண்டுசெல்லத் தக்கவையே. மாற்று அரசியல் கருத்துக்களால் மாணவர்கள் அரசியல் தெளிவைப் பெற முடியும். கட்சி மாச்சர்யங்களைத் தாண்டிய அரசியல் நேர்மை இதற்குத் தேவைப்படுகிறது. பாடப் புத்தகங்கள் open ended-ஆகக் கூட இருக்கலாம்.

கல்வியில் அரசியல் என்பது உப்பைப் போன்றது அல்ல; சுவாசம் போன்றது. தந்தை தாயைத் தெரிந்து கொள்வதைப் போன்றது. வரலாற்றின் நீட்சியில் தனது இடம் எது என்று தெரியாதவன், அமெரிக்கா போய்ச் சாக வேண்டியதுதான்.

Comments

 1. கல்வியில் அரசியல் என்பது உப்பைப் போன்றது அல்ல; சுவாசம் போன்றது. தந்தை தாயைத் தெரிந்து கொள்வதைப் போன்றது.
  உண்மை

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 2. நல்லதொரு கட்டுரை மது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...