மரபு நடை 2017 கவிநாடு கண்மாய் நடை

மரபு நடை 2017

புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் பல்வேறு களப்பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், தொல்லியல் ஆர்வலர்களை தாண்டி சாமானியர்களும், மாணவர்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய சுவடுகளை நோக்கி பயணிக்கும் மரபுநடை மட்டும் தள்ளிக்கொண்டே போனது.புதுகை செல்வா பொறுத்தது போதும் பொங்கியெழு என்று கவிநாட்டு கண்மாய் நடைப்பயணத்தை முன்மொழிந்தார்.

ஒருவழியாக 30/09/2017 அன்று துவங்கினோம்.

காலை ஆறுமணிக்கு என்று துவங்கி, ஏழுமணிக்கு செல்வாவும், செல்வன் கௌதமும் மட்டுமே களத்தில். மெல்லமெல்ல உறுப்பினர்கள் வரத்துவங்க ஐம்பது பேர் கூடினோம்.

மிகச்சரியாக ஏழு முப்பதுக்கு புதுகை தொல்லியல் ஆய்வுக்கழக மணிகண்டன் ஆறுமுகம் அழைத்தார். நிலவரத்தை அறிந்தார், உங்களைப் பற்றி நன்கு தெரிந்ததால்தான் காலை உணவை எடுத்துக்கொண்டிருக்கிறோம். வந்துவிடுகிறோம் என்றார்.

வழக்கம்போல என்னை அழைத்துச் சென்றது இளங்கதிர், புதுகையில் கார்ட்டன் நிறுவனத்தை நடத்திவரும் இளம் தொழில்முனைவர்.

கவிநாட்டு கண்மாய் சுமார் இரண்டாயிரம் ஏக்கர்களில் விரிந்த ஒரு நீர்சேகரிப்பு அமைப்பு.

புதுக்கோட்டையின் மேற்கு பகுதிமுழுக்க வளம் கொழிக்கும் வயல்வெளிகள் இருந்தமைக்கு இந்த ஏரிதான் காரணம்.

இரண்டு மடை அமைப்புகள். மிகை நீர் செல்ல ஒரு அமைப்பு. இந்த மடையைத் திறந்தால் பிறப்பது குண்டாறு!

ஓர் ஏரியில் இருந்து உருவாகும் ஆறு ஒன்று எனதுமாவட்டத்தில் இருப்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதைவிட அதிர்ச்சி அந்த மதகுகள் அருகே இருந்த சோழர்கால கல்வெட்டு. இன்னமும் இருக்கிறது. வாவ்.

மிகச் சரியாக, கல்வெட்டு ராஜேந்திரன் அய்யா அந்த கல்வெட்டை அடையாளப்படுத்திக் காட்டினார். வாசிக்க வாசிக்க வியப்பின் எல்லைகள் விரிந்தன.

வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் மதகுகள் முழுதும் நிறைந்திருந்த கண்ணாடி பாட்டில்கள், அவற்றின் உடைந்த சிதறல்கள்.

மிகை நீர் மதகை, கடந்து கரையில் நடக்க துவங்கினோம்.

ஒரு கிமி நடந்தவுடன்  கண்மாயின் உள்ளே தகர்க்கப்பட்ட ஒரு கல்மண்டபத்தின் அடையாளங்கள் இருந்தன.

அய்யாவிடம் அது என்ன என்று கேட்டவுடன் சமணப்பள்ளியின் எச்சம் என்றார்.

ஒருநிமிடம் நின்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் பார்த்துவிட்டு கடந்தோம்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் நடந்தவுடன் சமண தீர்த்தங்கரர் சிலையின் அடிப்பாகம் கிடந்தது.

அருகே உடல்பாகம் கைகள் உடைக்கப்பட்ட நிலையில்.

தலையை மட்டும் காணவில்லை.

உடலை தூக்கி அடிப்பாகத்துடன் பொருத்தியவுடன் தலையை தேடி அய்யா ராஜேந்திரன் நகர்ந்தார்.

சிறிது தூரத்தில் உருளைக் கல் ஒன்று கிடைக்க, இந்தா கிடக்கு தலை, தலை கிடைச்சுருச்சு என்றார்.

உறுப்பினர்கள் வெகு ஆர்வத்துடன் அதை சுமந்து வந்து உடலில் பொருத்தினார்கள்.

சமண தீர்த்தங்கரர் என்று அறியப்பட்டிருந்த அவர் இப்போது அமைதியாக சிரித்தார்.

பிறகு என்ன அவருடன் நிகழ்ந்தது ஒரு செல்ஃபீ செஷன்!

பிறகு நடந்தது ஒரு களேபரம். குழுவில் செய்தி அனுப்பும் வேலையை மணிகண்டன் மட்டுமே பார்ப்பார். ஆனால் இம்முறை மரபு நடை உறுப்பினர்கள் சிலர் வெகுஆர்வமாக அவர்களே செய்திகளை அனுப்பிவிட்டனர்.

அதுவும் களத்தில் இருந்தே.

அதைவிட விரைவாக அந்த செய்தி எல்லாத்  தொலைக் காட்சிகளிலும் வந்துவிட்டது.

இதனால் ஒரு சிறு நிகழ்வு நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதைவிட முக்கியமான விசயம், இந்தச் சிலை ஏற்கனவே பல ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருப்பது மரபு நடையை முன்னெடுத்த சிலருக்கு மட்டுமே தெரியும்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்கிற தகவல் வந்தவுடனேயே இல்லை இதை நாங்கள் ஏற்கனவே கண்டறிந்துவிட்டோம் என்றனர் பலர்.

உண்மைதானே, எவ்வளவோ எள்ளல்களுக்கும், சிரமங்களுக்கு நடுவேதான் இத்தகைய கண்டறிதல்கள் நிகழ்கின்றன.

அப்படி பதிவான விஷயங்களை பின்னர் வருவோர் உரிமைகோருகையில் விமர்சனங்கள் எழுவது இயல்பு.

புதிய கண்டுபிடிப்பு என்ற தகவல் பரவிவிட்டது என்றவுடனேயே மரபு நடை ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்களை சரிசெய்யக் கோரினர்.

பின்னர் சரிசெய்யவும்முடிந்தது.

பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்தச் சிலையை சமண தீர்த்தங்கரர் என்கிறார்கள்.

அய்யா ஜம்புலிங்கம் போன்றோர் வெகுநுட்பமாக கையால் சிலையை ஸ்பரிசித்து இது சமணச் சிலை என்று சொல்கிறார்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டே முனைவர் ஜம்புலிங்கம் இந்தச் சிலையை கண்டறிந்துவிட்டார். இதன் தலையைத் தேடி கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைத்து நீரில் இறங்கி சேற்றில் தேடியிருக்கிறார். அருகே இருந்த மேய்ப்பர்கள் அய்யா உள்ளே இழுத்துவிடும் என்று சொல்லி எச்சரித்திருக்கிறார்கள்.

மரபுநடை உறுப்பினர்கள் நிகழ்த்தியது ஒரு மீள் கண்டுபிடிப்புதான். அதன் உடைந்த பாகங்களை இரண்டு திசைகளில் இருந்து தூக்கி வந்து ஒன்றாக நிறுவினார்கள்.

பிறகு தலையை மட்டுமே ஐயா ராஜேந்திரன் அவர்களின் அறிவுரைப்படி மாவட்ட அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தோம்.

தொலைக்காட்சிகள் அலறிய அலறலில் ஒரு சி.ஐ.டி அலுவலர் இடத்திற்கு வந்து அய்யா தலை எங்கே என்றார்?

தலை உரிய இடம் சென்றதை அறிந்த, அதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் சென்றார்.

இன்னும் உடலும், அடிப்பாகமும் மட்டும் இருக்கின்றன, விரைவில் அவற்றையும் ஒப்படைக்க கூறியிருக்கிறார் ராஜேந்திரன் ஐயா.

மணிகண்டன் சொல்கிற சுபமுகூர்த்த சுபயோக தினத்தில் சிலை முழுதுமே அருங்காட்சியகம் சென்றுவிடும்.

இதன் பிறகு இன்னும் சில கிமி நடந்து தென்புறத்தில் இருக்கும் பாசன வாய்க்காலை பார்த்தோம்.

அதன் கல்வெட்டை படித்து கவிநாட்டு கண்மாய் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்தோம்.

ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னர் பாண்டியர்கள் புதுகையில் ஒரு வேளாண் புரட்சியை நிர்மாணித்திருக்கிறார்கள்.

ஒரே மடை ஆனால், ஐந்து வாய்க்கால்கள்.

இங்கே துவங்கும் பாசனம் வெள்ளாறு பகுதிவரை செல்கிறது. ஐயாயிரம் ஏக்கருக்கு அதிகமான வயல்வெளிகள் நீர்பெரும் வாய்க்கால்கள் அவை.

மிக நேர்த்தியான அனுபவத்திற்கு பிறகு தங்கச்சி வீட்டில் இருந்து வந்த அருமையான மதிய உணவை சுவைத்து விடைபெற்றோம்.

மரபு நடை இனி தொடரும் ...

அன்பன்
மது

link 1
link 2
link 2


Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே
    நடையும் தேடுதலும் தொடரட்டும்

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...