ஆர்கே நகர் தேர்தல்கள் அய்யா ஷாஜகானின் பார்வையில்

மிக பக்குவமான பார்வையுடன் ஆர்கே நகர் தேர்தலை அலசி ஆராய்ந்திருக்கும் அய்யா ஷாஜகான் அவர்களின் கட்டுரை...இது


ஆர்.கே. நகர் தேர்தல்

தினகரன், அதிமுக, திமுக - இவர்களுக்கு இடையில்தான் போட்டி. பாஜக, சீமானை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றி-தோல்வி ஆட்சி அமைப்பில் - சட்டமன்றத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஆனால் எதிர்கால தமிழக அரசியலில் முக்கியமான தேர்தல் இது.

அதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா என்பவர் இருந்திருந்தால் இப்போதும் அவர்தான் வென்றிருப்பார் அல்லது அவர் நிறுத்திய ஆள்தான் வென்றிருப்பார். ஆனால் இப்போது ஜெயலலிதா இல்லை. இரட்டை இலை சின்னத்துக்காக வாக்களிப்பார்களே என்றால், அது கிராமப் பகுதிகளுக்கே அதிகம் பொருந்தும். நகரத்தில் இருப்பவர்களுக்கு இரட்டை இலை சின்னம் முக்கியமில்லை. அதுபோக, கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் மோதல்களையும் மக்கள் அறிந்தே இருப்பார்கள். ஆட்சியிலிருக்கும் அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள் என்பதையும் அதிமுக அபிமானிகள் கவனித்திருக்கக்கூடும். ஜெயலலிதாவின் தொகுதி என்பதற்காக அரசு அந்தத் தொகுதிக்கு ஏதும் சிறப்பாகச் செய்ததும் கிடையாது. பின்னே ஆளும் அதிமுகவுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் நினைப்பது இயல்பு. அதுபோக, இந்த ஒரு தொகுதி கிடைப்பதால் மட்டும் அதிகாரபூர்வ அதிமுகவுக்கு புதிய பலம் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை, தோற்பதால் ஆட்சிக்கு ஏதும் நஷ்டமும் இல்லை என்பதும் வாக்காளர்கள் கருத்தாக இருந்திருக்கலாம்.

திமுக - வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் போட்டியிட்டிருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சி போட்டியிடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக களமிறங்கிய கட்சி அது. திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதால் சட்டமன்றத்தில் திமுகவுக்கு புதிதாக எந்த பலமும் கிடைத்துவிடப் போவதில்லை. எதிர்க்கட்சியை வெற்றி பெறச் செய்தால், தொகுதிக்கு நன்மைகளும் கிடைக்காமல் போகும், பின்னே எதற்கு திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் நினைக்கும் வாய்ப்புகள் அதிகம். பாஜகவுக்கு வால் பிடிக்கும் அதிகாரபூர்வ அதிமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும் திமுகவினர்கூட தினகரனுக்கு வாக்களித்திருக்கும் சாத்தியங்களும் உண்டு. (வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, முந்தைய தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வாக்குகளோடு ஒப்பிட்டால் இது தெளிவாகி விடும்.)

தினகரன் - அதிமுக என்பது எப்போதும் யாரேனும் ஒருவரின் ஆணைக்கு அடிபணிந்தே இருப்பது. அந்த ஒருவராக எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தனர். அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர்கள் எடப்பாடியோ பன்னீரோ இல்லை என்பது அதிமுக அபிமானிகளுக்குப் புரிந்து போனது. அவர்களிடம் கவர்ச்சியும் கிடையாது. பெரிய அளவுக்கு பேச்சாற்றலும் கிடையாது. எனவே, அதிமுகவுக்கு தலைமை வகிக்கக்கூடியவர் - ஆணையிடும் வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் தினகரன்தான் என்று அதிமுக அபிமானிகள் நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
தினகரனுக்கு இது முக்கியமான தேர்தல். கிட்டத்தட்ட வாழ்வா-சாவா போன்றது. எனவே, இதில் வெற்றி பெற அவர் அனைத்து முயற்சிகளும் செய்வார்தான். அதை சரி என்று சொல்லவில்லை. செய்திருப்பார் என்கிறேன். சொல்லப்போனால், வெற்றி வாய்ப்பு இல்லை என்று தோன்றியிருந்தால், தேர்தல் நடக்காமல் போவதற்கான வேலைகளையும் அவர் செய்திருப்பார்.

அதுபோக அவருக்குக் கிடைத்த சின்னம் பெரியதொரு சாதகம். தொப்பி சின்னம் கிடைத்திருந்தாலும் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். தொப்பி விலை மலிவானது, குக்கர் விலை அதிகமானது. தொப்பி அன்றாடப் பயன்பாட்டில் இல்லை. குக்கர் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளது. பெண்களின் வாக்குகளை ஈர்க்கக்கூடியது. அதுபோக பண விநியோகம். 20 ரூபாய் டோக்கன் கதைகள் உலவுகின்றன. பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்காகக் கையாளும் வழிகளில் தமிழகம் எப்போதும் முன்னோடி. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகம் இதில் புதிய புதிய உத்திகளைக் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்துகிறது.

அதிமுகவினர் என் பக்கம்தான் என்று சொல்வதற்கு தினகரனுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. முன்னரே தினகரன் பக்கம் போயிருக்கலாமே என அதிமுகவில் இருக்கும் சில தலைகள் இப்போது மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் சாத்தியமும் உண்டு. விரைவில் சில தலைகள் இடம் மாறவும்கூடும்.

தினகரன் வெற்றியால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அதிமுக அணி சற்றே கவலை கொண்டிருக்கலாம். ஆனால் இது தற்காலிகக் கவலையாகவே இருக்கும். நாளைக்கே தினகரன் காலில் அவர்கள் விழவும் கூடும். இரண்டு அணிகளும் மீண்டும் ஒன்றாகும் சாத்தியங்களும் உண்டு. இப்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி பாஜகவின் கைப்பொம்மையாக இருக்கிறது. ஒருவேளை தினகரன் அணியுடன் ஒன்றுபட்டு, ஒரே அதிமுகவாக ஆகிவிட்டாலும், தினகரனும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருப்பார்.


ஆக மொத்தத்தில் தினகரன் வெற்றி திமுகவுக்குத்தான் கவலைக்குரிய விஷயம்.
Share on Google Plus

About Kasthuri Rengan

  Blogger Comment
  Facebook Comment

2 comments:

 1. கணிப்பு மிகத்தெளிவு

  ReplyDelete
 2. பணம் வாங்கி
  வாக்குப் போடும் மனநிலை
  மாறவேண்டும் - அதை
  ஆர்கே நகர் தேர்தல்
  உணர்த்தும் என்பேன்!

  ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...