துளித்துளியாய் ஒரு மரணம்


கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களோடு  நண்பர் முத்துமார்த்தாண்டன் அவர்களின் எதிர்பாரா மரணம் குறித்து பேசிக்கொண்டிருந்தபொழுது முடிந்தவரை மரணம் நிகழ்ந்த வீடுகளில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்ப்பதாக சொன்னார்.



மரணம் தரும் வலியிலிருந்து, அதன் தரிசனம் தரும் அதிர்வுகளின் இருந்து வெளிவருவது மிகுந்த சிரமம்தரும் நிகழ்வாக இருக்கிறது என்றார்.

நானுமே பல ஆண்டுகள் மரணம் நிகழ்ந்த வீடுகளை தவிர்த்திருக்கிறேன். இறுதிமரியாதை செலுத்துவதை தவிர்த்திருக்கிறேன்.

குறிப்பாக எதிர்பாராவிதமாக எனது மாமா  இறந்த பொழுது எழுந்த அதிர்ச்சி விலக ஆண்டுகள் ஆனது. அப்போது எம்.எட் தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்தேன்.

இறுதி தேர்வுக்கு பிறகு நிகழ்ந்தது அந்த மரணம்.

உயிரோடு இருந்தவரை அவர் அருகில் செல்லாததற்கு மிகுந்த வருத்தமடைந்த நாள் அது.

அந்த மரணத்திற்கு பிறகு வேறு எந்த இறுதி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவதே இல்லை. ஒரு பத்தாண்டுகளுக்கு இது தொடர்ந்தது. அப்படியே சென்றாலும் உறவினர்களை பார்த்து பேசுவேனே தவிர உடலின் அருகே செல்லமாட்டேன்.

மிக ஆழமான மாற்றங்களை என்னுள் விதைத்தது அந்த மரணம்.

வெகு சமீபமாகத்தான் இந்த பழக்கம் மாறியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக எனது சின்ன உலகினுள் அத்துணை இறுதி அஞ்சலிகள்.

ஒரு பெண்  வழக்குரைஞரின் கணவர் கிட்டத்தட்ட கோடி ரூபாய்களை  செலவு செய்தும் காப்பாற்ற முடியாமல் இறந்துபட அந்த பெண்ணுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியாமல் திகைத்துக் கிடந்தோம். ஒருவழியாக பள்ளியில் இருந்த ஒவ்வொருவராய் சென்று பார்த்துவந்தோம்.

இரண்டு பெண்குழந்தைகள், அவர்களின் வலி மிகுந்த, இழப்பின் கோரமறிந்த மூத்தவளின் பார்வை வேறு இன்றுவரை என்னைப்படுத்துகிறது.

இன்னொரு ஆசிரியையின் கணவர் குடிமீட்பு மையத்தில் மர்மான முறையில் இறந்துவிட அவரின் பெருந்துயர்.

சரி இரண்டாயிரத்து பதினேழில் நடந்த கோர இழப்புகளின் பின்னர் விதி கொஞ்சம் கருணையோடு இருக்கும், இதுபோன்ற எதிர்பாரா அகால மரணங்கள் நிகழாமல் இருக்கும் என்று நம்பினேன்.

வாழ்வோ விதியோ அவ்வளவு கருணையோடு இருந்துவிடுவதில்லை.

என் வட்டத்தில் இருக்கும் உயர் அலுவலர் அவர். வகிக்கும் பதவிக்கு தொடர்பில்லாமல் வெகு எளிமையாக இருப்பவர்.

காதல் மணம் வேறு. தன் மனைவியின் அத்துணை பணிகளிலும் உதவியாக இருப்பவர். சமையல் முதல் தூய்மைப்பணிவரை.

நேசம் நெஞ்சில் இருந்துவிட்டால் அது செயலில் வர தாமதிப்பதில்லை.

ஆஸ்திக்கு ஒரு ஆண், ஆசைக்கு ஒரு பெண்.

நிறைவான வாழ்க்கை.

இந்த பொங்கல் அன்று காலை எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் இடுப்பு வரை எரிந்து போய்விட அதன் விபரீதம் புரியாமல் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அவர்கள் நிலைமை மோசம் என்று சொல்ல புதுகையின் எல்லையில் இருக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அங்கும் கைவிரிக்க திருச்சி சென்று ஒரு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.

 விவரம் அறிந்த நண்பர்கள் புதுகையின் செல்வாக்கு மையங்களை அணுகி மேற்கொண்டு நடக்க வேண்டிய விஷயங்களை பேசியிருக்கிறார்கள்.

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் பொங்கலுக்கு வழிபட தயாரானபொழுது அவரது அலைபேசி ஒலிக்க அதை மௌனித்துவிட்டு வழிபாட்டை தொடர்ந்திருக்கிறார்.

வாழ்த்து செய்தியோடு யார் அழைத்திருக்கிறார்கள் என்று அலைபேசியை பார்த்தால் ஒரே எண்ணில் இருந்து பத்துமுறை அழைப்பு.

கவிஞருக்குத்தான் முன்னனுபவம் உண்டே.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குருநாத சுந்தரம் அவர்கள் இறந்த செய்தியை தீபாவளி அன்றுதான் அறிவித்தது ஒரு மெர்சல் மருத்துவமனை.

அன்று முழுதும் பொதுமருத்துவமனையின் பிணவறைக்கு முன்னர் காத்துக்கிடந்தார் கவிஞர்.


ஆக இது வாழ்த்து செய்திக்கல்ல என்கிற புரிதலோடு அந்த எண்னை அழைத்து கேட்டால் விவரம் சொல்லியிருக்கிறார்கள்.

கவிஞர் அவரது நண்பர் ஒருவரிடம் பேசி திருச்சியில் ஒரு மருத்துவமனையை ஏற்பாடு செய்திருக்கிறார்.

பிறகு  திருச்சியிலிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை மெர்சல் மருத்துவமனை ஒன்றிற்கு   கொண்டுசெல்லப்பட்டுவிட்டார்.

சென்னை மருத்துவமனைக்கு  தங்கம் மூர்த்தி அவர்களின் நண்பரான  செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவர் நேரடியாக  சென்று பார்த்திருக்கிறார்.

அன்றே தெளிவாக சொல்லியும் விட்டார்.

ஒருவாரம்தான். இடுப்பிற்கு கீழே இருக்கும் ரத்த நாளங்களெல்லாம் மொத்தமாக சிதைந்துவிட்டன. பிழைத்தெழ வழியே இல்லை.

ஆனால்

நான் வேறு ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தேன்.

நல்ல மனிதர், நல்ல குணம் அதற்காகவே அவர் பிழைத்துக்கொள்வார் என்றுதான் நம்பியிருந்தேன்.

நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன.

ஒரு நாளுக்கு ஒன்னரை லட்சம் செலவிட்டும் மரணத்தை வெல்லமுடியவில்லை.

நம்மை விட மருத்துவர்களுக்கும், மருத்துவமனைக்கும் அவர் பிழைப்பது இயலாத காரியம் என்று தெரியும். ஆனால் எந்த மருத்துவ அறத்தை வைத்துக்கொண்டு ஒரு நாளுக்கு ஒன்னரை லட்சம் வாங்கினார்கள் என்றுதான் புரியவில்லை.

இந்த நிகழ்வில் காதல் எங்கே வருகிறது என்கிறீரா ...?

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பொழுது தனது மனைவியை அழைத்து சொல்லியிருக்கிறார் "சும்மா கோவில் கோவில்னு போகாதே, உடம்ப பார்த்துக்க, தைரியமா இரு"

மகளை அழைத்து "அம்மாவை பார்த்துக்க, கோபப்படாதே"

இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மகனை அழைத்து "ஒழுங்கா படிப்பா" என்று சொல்லியிருக்கிறார்.

ஆக தனது முடிவை தானே அறிந்தவராக இருந்திருக்கிறார். தன் குடும்பத்தினரை  தானே தேற்றிவிட்டுதான் விடைபெற்றிருக்கிறார்.

மனசு ஆறாத துக்கம்தான்.

இத்துணை ஆண்டுகளுக்கு பின்னரும் தன் மனைவி மீதான காதலை மாறாமல் வைத்திருந்த அவரது வாழ்வு உண்மையில் முழுமையான வாழ்வுதான்.

தீப்பிடித்து எரிந்த சுவரின் கருமை நிகழ்வின் துக்கத்தை சொல்ல, இன்று அவரது குடும்பத்தினரை பார்த்துப் பேசினோம்.

அவரது மனைவி ஒரு தலைமை ஆசிரியை. அப்படியே அவரைப் போலவே தலையில் எந்த கிரீடமும் இல்லாமல் எல்லோருடனும் சக மனுஷியாக பழகும் பாங்கு.

நல்ல மனிதர்கள் நன்றாக வாழ்வது அரிதாகத்தான் இருக்கிறது.

அவர் எரிந்துகொண்டிருந்த பொழுது அவரை பிடித்து இழுத்த மகளின் கரங்களில் வெடித்துக் கிடக்கின்றன கொப்புளங்கள்.

சாமி சாமின்னு இருந்தேன். இனி சாமியே இல்லை. அப்பாதான் எனக்கு சாமி என்கிற வார்த்தைகளில் தெறிக்கும் வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

காலம் ஒரு அருமருந்து.

ஈடு செய்ய முடியாத இழப்புகளில் இருந்து மீட்டுகொண்டுவர காலத்தினால் மட்டுமே முடியும்.

தனது பணிக்காலத்தில் பெரிதாக பொருளீட்டிவிடாத அவர் சேர்த்து வைத்திருப்பது  நட்பென்றும் பெரும்படை.

அவர் இல்லாதது பெருங்குறைதான் என்றாலும் அவர் நண்பர்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அந்தக் குடும்பம் மீண்டெழும்.

பிரார்த்திப்போம். 

Comments