அப்பாவின் விசில் சத்தம்


“Full many a gem of purest ray serene
The dark unfathomed caves of ocean bear:
Full many a flower is born to blush unseen
And waste its sweetness on the desert air"


தாமஸ் கிரே எழுதிய அமரத்துவம் கொண்ட வரிகள். உண்மைதானே, நம் கவனத்திற்கு வராத நல்ல விஷயங்களை, படைப்புகளை நாம் கொண்டாடுவது இல்லை. நாணலின் தொகுப்பை வெகு தாமதமாக படித்தவுடன் எழுந்த நினைவு இதுதான்.

வெகு நேர்த்தியான எழுத்து ஒரு கனக மலராக நம்மை வியப்பிலாழ்த்துகிறது. எழுபத்தி இரண்டு பக்கங்கள் கொண்ட சிறுகதைத்தொகுதியில் அறுபது பக்கங்களை நிரப்பியிருக்கும் பதிமூன்று சிறுகதைகளும் பதிமூன்று இசைச்சுரங்களை நம் மனவெளியில் பாடுகின்றன.

அவற்றின் இசை தொலைதூரத்து மலைமுகடுகளில் இருந்து வழியும் மெல்லிய ஒலியாக நம்முள்ளே எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

அப்பாவின் விசில்சத்தம் என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் கதை தொகுதியின் தலைப்புக் கதை தரும் சித்திரம் வேதனையானது.

படுத்த படுக்கையாக இருக்கும் கணவன் ஊதுகின்ற விசில்சத்ததைக் கொண்டே, அது ரேடியோவின் ஒலியளவை மாற்றவா?, தண்ணீருக்கா?, உணவிற்கா? அல்லது மலஜல தேவைக்கா என்பதை அறிந்துகொள்ளும் மனைவி குறித்து போகிற போக்கில் சொல்லிவிடும் வித்தை நாணற்காடனுக்கு வெகு எளிதாக கைகூடியிருக்கிறது.

தொடரும் இறுக்கம் என்கிற கதை நம்மனசையும் ரொம்பவே இறுக்குகிறது. கணவனை இழந்த பார்வதியின் ஒரு நாள் பணிஅனுபவத்தை கண்முன் கொண்டுவரும் கதை, மலைஉச்சியில் இருக்கும் கோவிலுக்கு மணல் மூட்டைகளை சுமக்கவேண்டும்.
மாதவிடாயின்இறுக்கும் கோரத்துடன் ஒரு சித்தாள் எப்படி மலையேறுகிறாள் என்று சொல்லவிட்டு முடிக்கும் வரிகளில் ஆம்பளைக்கு மட்டும் கூட சம்பளம், அவங்களுக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு என்று முடியும் வரிகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல.


ஊர்மாற்றம் ஒரு ஹைபேண்டசிக்கு குறைவில்லாத கதை. எழுத்துக்கள் மறைந்துபோகும் ஊர். இத்துனைபேர் தமிழ் தமிழ் என்று கூவியும் கண்முன்னால் கீழடியில் மண்ணள்ளி போடமுடிகிறது. வாத்தியார்கள் ஆடுமேய்க்கும் கதைபோல கீழடியும் இன்னொரு நிகழ்வு என கடக்கிறபொழுது அழகாக இயல்பு வாழ்வோடுபொருந்துகிறது அழகாய் வரைபவள் அழகாகவும் இருக்க வேண்டுமா? என்று கேட்கும் கதை. என்னை ரொம்பவே படுத்திய கதைகளில் ஒன்று இது.


காதல்கதைகள் பலநேரங்களில் மகிழ்வு தருவதாக இருப்பது இல்லை என்பதைச் சொல்லும் ஒரு காதல் கதை (தலைப்பே இதுதான்), விடைதெரியா கேள்வியாக நான்குமாத சூலுடன் தூக்கில் தொங்கிவிட்டவளின் கணவனின்தற்கொலை முயற்சியை பேசும் "விதுரன்" என வெகு நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்ட கதைகள் தனித்த வாசிப்பனுபவத்தைத் தருகின்றன.


 ஆக, பதிமூன்று கதைகளும் வெகு நேர்த்தியாக,சிரத்தையாக எழுதப்பட்டிருக்கின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் தமிழ்ப்படைப்புலகின்அதிமுக்கியமான கதைத்தொகுப்புகளில் ஒன்று இது.

தவறவிடாமல் படிக்கவேண்டிய தொகுப்பு.

இந்த தொகுப்பு இதன் மதிப்பின் அளவிற்கு கொண்டாடப்பட்டதா என்கிற கேள்வியை என் முன் வைக்கிறது.

கொண்டாடப்படவேண்டிய தொகுப்புதான்.

மிஸ்பண்ணாம படிங்க ...

நூல் விவரம்

தலைப்பு : அப்பாவின் விசில் சத்தம்
எழுத்தாளர் : நாணற்காடன்
வெளியீடு : கீற்று
விலை : 70 ரூபாய்கள்

நாணல் தொடர்புக்கு : 9942714307

நூல்குறித்து

ஓடியன் லட்சுமணன் 
மீரா செல்வக்குமார் 


Comments

  1. நல்லதொரு அறிமுகம் மது. நன்றி.

    ReplyDelete

Post a Comment

வருக வருக