மகேஷின்றெ ப்ரதிகாரம் / நிமிர் ராஜசுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில்மகேஷின்றெ ப்ரதிகாரம் / நிமிர்
______________________________

மலையாளிகள், தமிழர்களை ஒப்பிட, சற்றுத் தீர்க்கமானவர்கள்.இப்படி பொதுப்பட விளம்புதல் கூடாததுதான். இது எப்படி இருக்கிறது என்றால், "பட்டரில் பொட்டரில்லா” என்னும் மலையாளப் பழமொழி போன்று இருக்கிறது. ‘பட்டர்’ என்றால், அங்கே, தமிழ்ப்பார்ப்பனர். பாலக்காட்டு பட்டரினத்து நடிகர் ஜெயராமன், ஆனால் பாருங்கள், தன்வீட்டு வேலைக்காரித்தமிழச்சி பற்றி வேண்டாதது பேசி ‘பொட்டர்’ (முட்டாள்) ஆனார். திரைக்கலை என்றாலும் இப்படி பொதுமைப்படுத்துதல் ஆகாது. என்றாலும்...

இப் படத்திலொரு குணவார்ப்பு பேபிச்சாயன் (பேபி + இச்சாயன்). இச்சாயன் என்றால், பொதுப்பட, கிறிஸ்தவன் என்று பொருள். அவர் வீட்டுக்கு ஒருவன் வருகிறான். இச்சாயனின் மகள், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, ஸோஃபாவில் சாய்ந்துகிடக்கிறாள்.

தொ.கா. திரைப்படத்தில், அக் கட்டத்தில், மோகன்லால் வசனம் பேசுகிறார் இப்படி: “ஞானொரு பாவம் வர்மா. தேவன். தேவராஜன். தேவராஜ ப்ரதாப வர்மன்.”

வீட்டுக்கு வந்தவன் பேபிச்சாயனின் மகளைக் கேட்கிறான், “லாலேட்டன் ஃபேனா?”

“அல்ல, மம்மூக்கா.”

“மம்மூக்க எல்லா ரோல்களும் செய்யும். தேங்க்கீட்டக்காரன், சாயக்கடக்காரன், பொட்டன், மண்ணூதி. பக்ஷே நம்முடெ லாலேட்டன் உண்டல்லே? நாயர், வர்மா, மேனோன்... டாப்க்ளாஸ் ஒன்லி. இது விட்டொரு களியில்லா.”

பேபிச்சாயன் மகள் அவன்திக்கம் கழுத்தைத் திருப்பி முறுவலிக்கிறாள்.

இதுபோன்றொரு விமர்சனம் – ஓர் உச்ச நடிகனின் சாதிப்ரக்ஞையைக் கிழித்துத் தொங்கவிடுதல் – பெரியார் காரணம் பெயரில் சாதிப் பின்னொட்டுகளை உதிர்த்துவிட்ட தமிழ்நாடிது என்றாலும், இங்கே சாத்தியமில்லை. பிரதமர் மோதீயை, சோமாலியா ஒப்பீட்டிற்காக, நக்கலடித்தார்களே, அந்த சொரணையும் எழாது.

படத்தின் முதற்காட்சி, காணாமற்போன தன் தந்தையை வாழைத்தோப்பின் நடுவே நாயகன் கண்டுபிடித்துக் கொண்டுவருவது. படத்தின் ஒருவரிக்கதை அதுதான். அவ்வாறே, பிறகு, நாயகன் தன் திறமையைக் கண்டடைகிறான்.

மரத்திலேறி பலாப்பழம் வெட்டுகிறவன் விழுந்துசெத்தான் என்பதில், அவனைக் காண்பிக்காமல் பழாப்பழம் தாழே விழுந்து தெறிக்கிறதைக் காண்பிக்கிறார்கள். இது பிரதிமொழி. அப்பன் தன் மகளிடம் போய், “உனக்கொரு வரன்பார்த்திருக்கிறேன்,” என்று சொல்வதற்குமுன், அங்கே, ஓர் இளந்தளிர்ப் புதுவல்லியை ஒரு கொம்பில் ஏற்றிவிடுகிறான். இது குறியீட்டுமொழி. காதலனை மறக்கமுடியாமல் உறக்கம்வராது வெம்பும் மகளை, “ஞான் நின்றெ மம்மி; என்னெக் கெட்டிப்பிடிச்சு தீராத்த ப்ரஸ்னையித்த நோக்குக!” என்கிற அம்மையைக் கட்டிப்பிடித்து மகள் அழுகிறாள். இது வரலாற்றுமொழி – பெண்வரலாற்றுமொழி. அடுத்து வரும் காட்சி: சிலுவைப்பாடு. (படத்தில், அவர்கள் கிறிஸ்தவ தர்மத்தைச் சார்ந்தவர்கள்.) அது தார்மீகமொழி.

திரைமொழி என்பது இப்படித்தான் இருக்கவேண்டும். தமிழர்களுக்கு இது தெரியாததொன்றும் இல்லை. ஆனால் இங்கே இப்படிச் செயல்பட முடியாது. வெட்ட வெளிப்படையாய்த் திரைத்துக்காட்டி தெருச்சண்டை போடுவதே இங்கு கலை. தவறி, ஓரிருவர் நுண்ணுணர்வு காட்டிவிட்டால் அவர்களைக் ‘கபாலி’கரம் பண்ணிவிட வேண்டும்.

ஒரு நகைச்சுவைச் சைக்கிள்விபத்தில் தொடங்கி அடிதடி நெருக்கடிக்குள் போகிற கதையில், பகைவனின் வீட்டு வறுமையை நாயகன் உணர்கிற அக் கட்டத்தில்தானே முடிவு இன்னதென்று யூகிக்க முடிகிறது. ஆனால், ஒளிவுமறைவினால் அல்ல, கதைசொல்லப்படும் சுவைநயத்தால் இப்படம் ஈர்க்கிறது.

திரையிசையில், சிலசமையம், அடுத்தகாட்சிக்கான பின்னணி இசையை முதற்காட்சி முடிவதற்கு முன்பாகவே தொடங்கிவிடுவார்கள். இவனைக் கழற்றிவிட்ட காதலி, தன் கல்யாண விருந்துக்குப்பின், ஓர் ஓரமாய் வந்து கைகழுவிக்கொண்டு நிற்கிறாள். கேரளா நிலவெளி மேடும்பள்ளமும் ஆனதுதானே? அவள் மேட்டில்; தாழே சாலையில் அவன், தன் ‘பைக்’கில் இருந்தமேனிக்கு அவளை ஏறிட்டு ஓர் அசட்டுச்சிரிப்பு சிரிக்கிறான். அக்கணத்தில்தானே நான் அழுதுவிட்டேன். அடுத்த காட்சியில்தான் நாயகன் தன் வீட்டுக்குள், தனிமையில், அழுது குமுறுகிறான்.

மொழி, இடுக்கித்தமிழ் கலந்த மலையாளம். நன்றாகப் புரியும். பாருங்கள்!

(இது அந்தப் படம் வெளிவந்தபோது எழுதியது.)

*
நிமிர்
-----------

பிரியதர்ஷனின் ஒரு ஹிந்திப் படத்தில், நாயகி சிவப்புக்குடையோடு மழைக்குள் வரும் ஒரு காட்சி என் கண்ணுக்குள் நிற்கிறது. இயக்குநர் பரதன்க்கு அடுத்து காட்சியாப்பில் எனக்குப் பிடித்த இவர்க்காக “நிமிர்” படத்துக்குப் போனேன்.

எழுத்துப்போடுகையில் ஒற்றையோர் ஆட்டக்காரியைக் காண்பிக்கிறார். செமசெம. கதாநாயகிகளில் ஒருத்தியாக அவள் வருவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனேன். அவளைத்தவிர இந்தப் படத்தில் என்னை ஈர்த்ததா ஒன்றும் இல்லை.

ரஜினி vs கமல் வெறும் மொக்கை. பலாப்பழத்துக்குப் பதில் பனங்காய்க் குலை. அதோடு விழுகிறவனும் காட்டப்படுகிறான். அப்புறம் என்ன குறியீடு வாய்க்கும்? கொடி-கொம்புக் காட்சி வைக்கப்படவில்லை. தாய்-மகள் உரையாடலும் மொக்கை. தாய்க்குள் ஒரு வேதனையும் இல்லை. சிலுவைப்பாடு? ஊஹூம், இதில் இவர்கள் ஹிந்துக்கள். கல்யாண விருந்து/ கைகழுவல் இல்லை. அதனால் எனக்கு அழுகையும் வரவில்லை. நாயகன் ஏதோ அழுதார்.

மலையாளப்படத்தில் அழுதேன் என்ற அந்த ஒரு காட்சியைத் தவிர, நெடுக சிரித்துக்கொண்டு இருந்தேன். இந்தப் படம் நெடுக சீரியஸ்நெஸ். நடிகர்கள் காரணமாகலாம்.

போரூர் Gk அரங்கில், நேற்று “நிமிர்”க்கு கூட்டம் அதிகம். இன்று “பாகமதி”க்கு.

Comments

 1. வணக்கம் நண்பரே, நலமா ?

  " திரைமொழி என்பது இப்படித்தான் இருக்கவேண்டும். தமிழர்களுக்கு இது தெரியாததொன்றும் இல்லை. ஆனால் இங்கே இப்படிச் செயல்பட முடியாது. வெட்ட வெளிப்படையாய்த் திரைத்துக்காட்டி தெருச்சண்டை போடுவதே இங்கு கலை. தவறி, ஓரிருவர் நுண்ணுணர்வு காட்டிவிட்டால் அவர்களைக் ‘கபாலி’கரம் பண்ணிவிட வேண்டும்... "

  உண்மையான வரிகள் !

  இப்படி இருந்தால்தான் பார்த்து ரசிப்பார்கள் என ஒரு தமிழ் சினிமா கூட்டம் தாங்களாகவே வகுத்துக்கொண்ட விதியை உடைத்தெரிந்து பல புதிய முயற்சிகளை வெற்றி படைப்புகளாக்கும் புதிய தலைமுறை படைப்பாளிகள் கொண்டதாக தமிழ்சினிமா பரிணமிக்கும் இன்றைய சூழலிலும் " தெருச்சண்டை " படங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன !

  " ஓரிருவர் நுண்ணுணர்வு காட்டிவிட்டால் அவர்களைக் ‘கபாலி’கரம் பண்ணிவிட வேண்டும்... " வரிகள் ஒரு சமீப நிகழ்வை எனக்கு ஞாபகப்படுத்தின....

  " ஏற்கனவே கமல் எடுத்த குருதிப்புனல்தான்... படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள் !... " என ஒரு சினிமா விமர்சகர், விக்ரம் வேதா படைத்தை பற்றி விமர்சித்தது ஞாபகம் வந்தது ! கலைப்படைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாதுதான் என்றாலும் Action crime thriller வகையை சார்ந்த தமிழ் படங்களில் விக்ரம் வேதா மிக சிறந்த படைப்புகளில் ஒன்று என்பதையும் மறுக்க முடியாது !

  " கபாலிகரம் " பண்ணிய அந்த விமர்சகர் பிரபலமானவர் ! ஒரு சில படங்களில் காமெடி வேடத்திலும் நடித்தவர் !!

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
  http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி


  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை