ஜெகதீஸ்வரன் தட்சிணாமூர்த்தி


புதுகையின் புகழ்மிக்க தொழில் முனைவுக் குழுமத்தின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர் ஜெகன். இவரது சகோதரர் மதன் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர்தான் அருவியில் நடித்தவர். கலப்பு தோசை டயலாக் மூலம் உங்களை சில நொடிகளுக்கு கலங்க வைத்த அதே மதன்.



ஜெகன் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மாதம் சில லகரங்கள் ஊதியத்தில் இருந்தவர். திடுமென மக்கள் சேவை பற்றி சிந்தித்து அரசியலில் குதித்துவிட்டார். லோக் சட்டா என்கிற தேசிய கட்சியில் தேசிய பொறுப்பில் இருந்தார். லோக் சட்டா இப்போது இல்லை என்றாலும், அது செயல்பட்ட காலங்களில் ஒரு அரசியல் இயக்கம் எப்படிச் செயல்பட வேண்டும் எனபதற்கு முன்னுதாரணமாக இருந்தது. விசில் என்கிற ஒரு பத்திரிக்கையை நடத்தியது. மிக விரிவான புள்ளி விவரங்களை தொகுத்து அவற்றின் மூலம் மக்கள் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாக புரிந்துகொண்டு தீர்வுகளை பிரச்சாரம் செய்வது என அற்புதமான அரசியல் செயல்பாடுகள்.

தற்போது பாடிக்குப்பம் என்கிற சேரியில் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து அவர்களுக்கு ஒரு நூலகத்தை அமைத்துத்தந்து அவர்கள் அடுத்த வாழ்வியல் பாணிக்கு வரச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

எங்கோ இருக்கும் சென்னைக்கே இவ்வளவு செய்பவர், கஜா புரட்டிபோட்டது அவரது புதுக்கோட்டையை என்கிறபொழுது?

இரண்டாம் நாளே களமிறங்கிவிட்டார். வந்தவுடன் செய்த முதல் பணி பூங்கா நகர்பகுதியில் சாலைகளை அடைத்துக்கொண்டு கிடந்த மரங்கள் அத்தனையையும் வெட்டிப் பாதையை உருவாக்கியதுதான்.

ஒரு குரல் கொடுத்திருந்தால் என்னுடைய தெருவையும் புழக்கத்துக்கு கொண்டுவந்திருப்பார். ஆனால், கிராமப் பகுதிகளுக்கு செல்லட்டும் என்று நான் கருதிய காரணத்தால் அழைக்கவில்லை. அதேபோல இவர் கஜா புரட்டி எறிந்திருந்த டெல்டா பகுதிகளின் கிராமத்தை நோக்கி பயணித்து இன்றுவரை மீட்புப் பணிகளில் இருக்கிறார்.

இளைஞர்கள் பொதுச்சேவையில் இறங்குகிற பொழுது மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உடனடியாக கிடைகின்றன என்பதற்கு ஜெகன் ஒரு சோற்றுப் பதம்.

தொடர்வோம்
அன்பன்
மது

Comments

  1. ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பயணச்சித்தரே

      Delete

Post a Comment

வருக வருக