என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 1


உலகத் திரைப்பட வராலாற்றில் இப்படி ஒரு வசூல் !

இரண்டு பில்லியன் அமரிக்க டாலர்களை விரைந்து நெருங்குகிறது அவன்ஜர்ஸ் என்ட் கேம். இந்த இடுகையை எழுதும் தருணத்தில் வசூல் (One billion nine hundred fourteen million five hundred thirty-one thousand six hundred thirty-eight dollars) தமிழில் நீங்களே பார்த்துக்கங்க.

ரூசோ பிரதர்ஸ் அசத்துவாங்க என்று "விமர்சன உலகம்"  மெக்னேஷ் திருமுருகன் சொன்னார். (ஒரு அற்புதமான திரைப்பட விமர்சகரை தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் பணியைக்கொடுத்து விமர்சனங்களை நிறுத்திவிட்டது) 

இது அசத்தல் அல்ல அதற்கும் மேலே. 

இந்த இற்றையில் என்ட் கேமில் பாசமலர்க் காட்சிகளைப் பார்க்கலாம். 

ஸ்பாயிலர் என்பதால் கொஞ்சம் தாமதமாக எழுதலாம் என்று காத்திருந்தேன். 

என்னுடைய வரிசைப்படி 

1. ப்ளாக் விடோவிற்கும் ஹாக்ஐக்கும் இடையே நிகழ்வதுதான் படத்தின் உச்சகட்ட செண்டிமெண்ட். 


சோல் ஸ்டோனை எடுக்க வார்மியர் செல்லும் பொழுது ஒருவரை பலியிட்டால்தான் கல் கிடைக்கும் என்றவுடன் ஹாக்ஐயை மின்சாரம் பாய்ச்சி செயலற்றுப் போக வைத்து பலிபீடத்தில் குதிக்க ஓடும் ப்ளாக் விடோ, அதற்குள் சுதாரித்து அவளை இழுத்துப் போட்டுவிட்டு குதித்துவிடும் ஹாக் ஐ, குதித்தாலும் அவனை விடாமல் பின்னாலேயே தானும் குதித்து  அந்தரத்தில் அவனைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு உயிர்துறக்கும் ப்ளாக் விடோவை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. 

ப்ளாக் விடோ பாத்திரத்திற்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு, மிக அதிகமாக ஊதியம் பெரும் நடிகர்களில் ஒருவர் இந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்கார்லட் ஜோஹன்சன். மனுஷி பல திரைப்படங்களில் அதிரடித்தவர். முன்னணி பாடகியும் கூட. 

இந்த இடத்தில ப்ளாக் விடோ ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும்?

படத்தின் துவக்கத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் இழக்கும் ஹாக்ஐ, ரோனின் என்கிற நிலைக்கு போய் ஒரு வேட்டை விலங்காக இருக்கிறான்.

அவனை அழைக்கும் ப்ளாக் விடோவிடம், எனக்கு நம்பிக்கை தருகிறேன் என்று சொல்லாதே என்று உடைந்துஅழுகிறான்.

அத்துணை நம்பிக்கைகளையும் இழந்துவிட்டு, வெறித்தனமாய் கொலை செய்வதை மட்டுமே தன் அன்றாடப்பணியாக வைத்திருக்கிறான் ஹாக்ஐ.

திரைப்படத்தில் வரும் ஹாக்ஐக்கு குடும்பம் உண்டு, ஆனால் ப்ளாக் விடோவிற்கு யாரும் இல்லை, அவளது உலகமே அவளது நண்பர்கள்தான், ஹல்க்கோடு ஒரு கெமிஸ்ட்ரி இருந்தாலும் அவனை கட்டுப்படுத்த மட்டும் அதை பயன்படுத்துகிறாள். 

அவன்ஜர் குழுவில் எல்லோருடனும் நேசமோடு இருந்தது ப்ளாக்விடோ. (காமிக்சில் ஹாக்ஐயோடு கோர்த்துவிட்டார்கள்)

அய்யய்யோ இனி ப்ளாக் விடோ அவ்வளோதானா என்று பதறும் ரசிகர்களுக்கு,  இவளுக்கென்று தனியே ஒரு திரைப்படமே வரப்போகிறது. 

சாமி தலைய சுத்துதே, கதைப்படி சோல் ஸ்டோனுக்காக செத்தா எப்படிப்பா திரும்பி வருவாங்க உயிரோட ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. 

சோல் ஸ்டோனுக்கு தானோசால் பலியாகத் தரப்பட்ட கமோரா இந்தப் பாகத்தில் உயிரோடு வரவில்லையா ?

சூப்பர் ஹீரோக்களுக்கு மரணமும்  மீண்டும் உயிர்ப்பதும்  காமிக்ஸ் உலகில் வழக்கமாக நடக்கும்  ஒன்றுதான்! இதை காமிக்ஸ் ரசிகர்கள் அறிவார்கள். இதே நிகழ்வு திரைப்படத்திலும் நிகழலாம்.

அப்புடியும் இல்லையா ?

இருக்கவே இருக்கு ப்ரீக்குவல்... இந்தக் கதைக்கு முன்னால என்ன நடந்துச்சுன்னா என்று துவங்கி பழைய டைம் லைனில் ஒரு கதையை சொல்ல ஆரம்பிப்பார்கள். 

குறிப்பாக எக்ஸ்.மென் படங்களில் இது நடந்திருக்கிறது.  முதல் படத்தில் சக்கர நாற்காலியில் இருக்கும் சார்ல்ஸ் சேவியர், திடுமென நான்காம் படத்தில் எழுந்து நடப்பதை காட்டி ஆரிஜின்ஸ் என்பார்கள். 

ஆக ப்ளாக் விடோ ரசிகர்கள் இப்போதைக்கு ஆறுதல் அடையலாம். 

வெய்ட் பண்ணுங்க இன்னொரு ஆக்சன் அதகளம் வரப்போகிறது.


அன்பன் 
மது 

  

Comments