தமிழ் இலக்கிய உலகில் பயணிக்க விரும்புவோர் கவனத்திற்கு



வேறு ஒரு புள்ளியில் இருந்து துவங்குகிறேன்.

அற்புதமாக சிந்திக்கும் ஒரு மாணவர் என்னிடம் பயின்றார்.



பிளஸ் டுவிற்கு பிறகு ஆசிரியராகப் போகிறேன் என்று என்னிடம் சொன்னார்.

ஏன் என்றேன்.

சமூக மாற்றத்தை முன்னெடுக்க ஒரு அருமையான இடம் அல்லவா என்றான்.

சிரித்துவிட்டேன். ரிசல்ட் நோக்கி நாக்குத்தள்ள ஓடும் பிழைப்பு அவனுக்குத் தேவையில்லை.

கடும் வார்த்தைகளால் பேசி என்ஜெநீரிங் பக்கம் தள்ளிவிட்டேன்.

அவன் என்ன ஆனான் என்பதை பின்னிணைப்பில் பாப்போம்.

இப்போதைக்கு இலக்கிய உலகுக்கு வருவோம்.

தமிழ் நாட்டின் புதிதாக உருவாகும் தலைமுறைகளில் பெரும்பகுதியினர் வாசிப்பை குறித்து, அதன் சுவை குறித்து, அது செய்யும் மாயம் குறித்து அறியாதோரே.

சுருக்கமாகச் சொன்னால் தங்கள் திரை நாயகர்களின் பிளக்ஸ் பாணருக்கு பால் ஊற்றுவோரே.

என் வட்டத்திலேயே நிறயப்பேர் இப்படி இருக்கிறார்கள்.

இதை ஒரு பெரும் கலாச்சார மரபாகவே கொண்டிருக்கிறது தமிழகம்.

இந்தச் சூழலில் இரண்டு சதவிகித புதிய தலைமுறை இளைஞர்கள் வாசிப்பின் பக்கம் வருகிறர்கள்.

அவர்களில் சரிபாதி படைப்புக்குள் வருகிறார்கள்.

பலர் தங்கள் படைப்புகளை தாங்களே அச்சிட்டு தாங்களே விற்பனை செய்கிறார்கள்.

இந்த புத்தகங்கள் பல அவர்களின் வீட்டிலேயே இருப்பதை நாம் அறிவோம்.

எனது இணையர் பணியாற்றும் பள்ளியில் திடுமென வராத குழந்தை ஒருத்தியை ஏன்
நேற்று வரவில்லை என்று கேட்டிருக்கிறார்,

மாமா இறந்துவிட்டார்.

அப்புறம் மிஸ் மாமா ஒரு கவிஞராம் மிஸ் எங்களுக்கு தெரியாது, ஆனால் இவங்கெல்லாம் வந்தார்கள் என்று தமிழகத்தின் அறியப்பட்ட கவிஞர்களின் பட்டியலை சொல்லியிருக்கிறாள்.

ஆக, அவள் வீட்டில் தமிழகம் அறிந்த ஒரு கவிஞன் இருக்கிறான் என்பதை அவன் சாவுக்கு வந்த சக கவிஞர்களை கொண்டே அறிந்திருக்கிறார்கள்.

இதுதான் தமிழக இலக்கிய உலகின் எதார்த்தம்.

சார் நீங்க வேற பல கவிஞர்கள் படத்திலேயே நடிக்கிறார்கள், அரசியல் பேசுகிறார்கள், உலகம் சுற்றுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்றால் சார் ஐம்பது லெட்சம் கவிஞர்களில் இவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான்.

ஏதோ, ஊழின் புண்ணியத்தில் இவர்கள் வண்டி ஓடுகிறது, சில பல வித்தைகளும் தேவை என்றாலும் அறியப்படாமல், தங்கள் படைப்புக்குறிய அங்கீகாரத்தை பெரும் முன்னே மரித்துப் போன பலரை நமக்குத் தெரியும்.

இத்துணை எதார்த்தங்களுக்குள் இவர்கள் ஒருவரை ஒருவர் இழித்து பேசுவதும் சகிக்க முடியாது.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரே கேள்விதான் ..

வாசிப்பின் சுவையறியா, டாஸ்மாக் தமிழகத்தில் என்ன கூந்தலுக்கு தமிழில் எழுத வேண்டும்?

நிச்சயமாக சோறு போடாது.

சமூகமும் அங்கீகாரம் செய்யாது.

யாரவது ஒரு சக படைப்பாளி கொஞ்சம் குடித்துவிட்டு பேஸ்புக்கில் அமர்ந்தால் இன்னொரு படைப்பாளிக்கு என்ன தெரியும் என்று கேட்பது, கருத்து புரட்சி செய்வது.

இப்போதெல்லாம் என்னிடம் கவிதை எழுதிக் காண்பிக்கும் குழந்தைகளிடம் நான் சொல்வது ஒன்னே ஒண்ணுதான்,

உனக்கென்ற வலைப்பூவில் வெளியிடு.

காலம் அங்கிகரிக்கும் அல்லது அங்கீகரிக்காமல் போகலாம்.

ஆனால் பிழைப்புக்கு ஒரு வழியை பார்த்துக்கொள்.

வாழ்தலுக்கு படைப்பு என்றால் பிழைப்புக்கு ஒரு நிச்சயமான வழியை பார்த்துக்கொள்.

படைப்பின் லே பிரிந்த் உள்ளே போனால் இழுத்துவிடும். வெளியேறக் கூட வழியில்லாமல் போய்விடும்.

இன்று ஒரு கவிஞர் அருகே இருந்த ஒரு பிச்சைக் காரருக்கு வலிப்பு வரவே அவரைத்தூக்கி மடியில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

துரதிஷ்டவசமாக காக்கைவலிப்பில் அந்த மனிதர் இறந்துவிட்டார்.

பார்த்துக்கொண்டிருத்த மக்கள் கவிஞரை கொலைகாரர் என்று சொல்லி நையப்புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

கடைசியல் பி.எம் ரிப்போர்டில் மரணம் காக்கை வலிப்பினால் என்று வரவே விடுதலை ஆகியிருக்கிறார்.

தமிழகம் அறிந்த ஒரு கவிஞர் ஏன் சாலைக்குப் போனார், என்ற கேள்வியில் இருக்கிறது இலக்கிய உலகின் இன்றைய நிலை.

இவரைப் போன்றே இன்னும் நிறைய கவிஞர்கள் என் நட்பில் இருகிறார்கள்.

அதீத தமிழ் அறிவு, செருக்கு, யாரிடமும் தொடர்ந்து பணியாற்ற இயலா மனநிலை என இவர்கள் உலகம் வேறு.

இவர்கள் சாலைகளில் படுத்துறங்குகிறார்கள் என்பதுதான் வாழ்வின் கோரம்.

அரசு நினைத்தால் இது மாறிவிடும், நூலக கொள்முதலை நேர்மையானதாக நடத்தினாலே இவர்கள் இந்த நிலைமைக்கு வர மாட்டார்கள்.

ஆனால், பாவம் அவர்கள் ஓட்டுக்கு ஐநூறு அறநூறு என்று கொடுத்து ஆட்சிக்கு வருவதால் போட்டதை எடுக்கவேண்டிய நிலையில் இருக்கும் பரிதாபத்திற்குறியவர்கள்.

சரி புதிய தலைமுறையாவது வாங்குமா என்றால், எல்லோரும் சினிமா தியேட்டரில் இருக்கிறார்கள்.

கடந்த வாரம் தனது கவிதைகளை என்னிடம் கொடுத்து எப்படி இருக்கு என்று கேட்டான் தம்பி ஒருவன்.

இரண்டு மொழிகளிலும் எழுதுகிறான், குறிப்பாக ஆங்கிலத்தில் நல்லாவே எழுதுறாப்ல என்றார் இணையர்.

நான் என்ன சொல்லியிருப்பேன் என்று உங்களுக்கே தெரியும்.

பி.கு
என்ன ஆச்சு அந்த பொறியாளருக்கு ?

அந்த மாணவர் நான்கு ஆண்டுகள் பயின்ற பொழுது என்ஜீநீரிங் படிப்பு மதிப்பிழந்துவிட்டது.

நம் மந்தைச் சமூகம் எஞ்சிநீரிங் படிப்புக்கு மிகப்பெரிய விமர்சனத்தை வைத்தது, பொறியாளர்கள் சாலைகளில் திரிகிறார்கள் என்றது.

எனக்கே கொஞ்சம் நடுக்கம் பயல் நம்மை கடும் வார்த்தைகளில் பேசப்போகிறான் என்று.

அவன் சிந்தனைத்திறனை அறிந்தவன் என்பதால் மேல் படிப்புக்கு ஜெர்மன் போ என்றேன்.

அவனோ

நேரே ஒரு பால் நிறுவனத்தில் மெஷினிட்டாக இணைந்துவிட்டான். தற்போது ஒரு இயற்கைப் பண்ணையை நிர்வகிக்கிறான்.

ஆனால், அவன் அப்பாவிற்கு அவ்வளவு வருத்தம். காலம் முழுக்க நான் கிடந்த மண்ணுக்கு திரும்பிட்டான் என்றார்.

அவருக்காகக்கூட அவனிடம் பேசிப் பார்த்தேன் பயன் இல்லை.

இயற்கைப் பண்ணையை விட்டு வரவில்லை அவன்.

Comments

  1. முற்றும் உண்மை கஸ்தூரி. நம் விருப்பத்திற்குரியதைத் தொடர வேண்டும் என்று நினைத்தாலும் வயிற்றுப் பாட்டிற்கு ஒரு தொழிலைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். பதிவு அருமை

    துளசிதரன், கீதா

    கீதா: அவன் விரும்பித்தானே அந்த இயற்கைப் பண்ணையை நிர்வகிக்கிறான் அதில் வருமானம் உண்டுதானே?! அப்படி என்றால் அதிலிருந்து அவன் ஏதேனும் நன்மை இந்த சமூகத்திற்குச் செய்ய முடியும் என்றால் நல்லதுதானே இல்லையோ? கஸ்தூரி?

    //அதீத தமிழ் அறிவு, செருக்கு, யாரிடமும் தொடர்ந்து பணியாற்ற இயலா மனநிலை//

    இதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடியும். தமிழ் என்ற சொல்லை மட்டும் நீக்கிவிட்டு.....அதீத அறிவு...மற்றவை டிட்டோ!! இதனால் மன நிலை பாதிப்பு யதார்த்த நிலையில் ஒட்ட முடியா மனநிலை.....இது ஒன்று சாலையோரத்திற்குத் தள்ளும் இல்லை என்றால் மருத்துவரிடம் தள்ளும்.

    நீங்கள் உங்கள் மாணவரை ஆசிரியராக வேண்டாம் என்று தள்ளியதற்குச் சொன்ன காரணம் அந்த முழி தள்ளூம் ரிசல்ட் காரணம் உண்மை உண்மை. நம் கல்வி முறை பற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இங்கு முதல் முறை பள்ளி காணும் தலைமுறைக்கு பள்ளியில் சேர்க்கை மட்டுமே பேசப்படுகிறது குரல் எழுப்பப் படுகிறது. ஆனால் அதன் பின் அக்குழந்தை சிந்தனை பூர்வமான கல்வி பெறவோ, இப்போட்டி உலகில் தகுதி உள்ள குழந்தையாக வெளிவரவோ, அல்லது கல்லூரிக்குச் செல்லும் போது திணறாமல் இருக்கும் அளவு அடிப்படைக் கல்வி, சிந்தனை, தேடல் என்று பெறவதற்கான வழியோ அல்லது வாழ்வை ஃபேஸ் பண்ணும் அளவிற்கு கான்ஃபிடன்ஸ், தைரியம் என்று வாழ்க்கைக் கல்வியோ பெறுவதில்லை. இதற்குத்தன குரல் எழுப்பப்பட வேண்டும். எத்தனைக் குழந்தைகள் கல்லூரி வந்து திணறுகிறார்கள் என்பதை நான் அறிகிறேன் எங்கள் வீட்டில் பலர் கல்வித்துறையில் இருப்பதால்.

    உங்களைப் போன்ற, மைதிலி போன்ற ஆசிரியைகள் நீங்கள் நிறைய இப்படியானவற்றை அடிப்படையாக விதைக்க நல்ல முயற்சி எடுக்கிறீர்கள் என்பதை உங்கள் பதிவிகளின் மூலம் அறியவும் முடிகிறது. எல்லா ஆசிரியர்களும் ரிசல்ட் ஓரியண்டட் கல்வியிலிருந்து கொஞ்சமேனும் விலகி வாழ்க்கைக் கல்வி மற்றும் சிந்தனையை வளர்க்கும் கல்வியை மோட்டிவேட் செய்து முதன்முறை பள்ளி காணும் தலைமுறைக்கு விதைத்தாலே பெரிய விஷயம்....தான் எதிர்கால சமுதாயமேனும் நல்ல சமுதாயமாக உருவாகும்.

    ReplyDelete
  2. அருமையான வழிகாட்டல் வரவேற்கிறேன்.
    பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக