அஜீத்தின் அடல் சூர்யாவின் விறல்

சமீபத்தில் புதுகையில் நடந்த கவிதை வெளியீட்டு விழாக்களில் மிகுந்த நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது பச்சை பூமி அமைப்பின் முன்னோடிகளான கவிஞர்கள் அஜீத்குமார் மற்றும் சூர்யா அவர்களின் தொகுப்பு வெளியீடு.

அது என்ன பச்சை பூமி என்கிறீர்களா?

ஆண்டனீஸ் ஸ்போக்கன் இங்க்லீஷ் நிறுவனத்தின் நிறுவனரும், ஆங்கில அறிஞருமான ஆண்டனீ அவர்களின் மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் ஒரு பசுமை அமைப்பு.

வேண்டுவோருக்கு மரக்கன்றுகளை வழங்கி பசுமை பரப்பிவரும் இயக்கம் இது.

இதன் முன்னோடிகள் கவிஞர் சூர்யா மற்றும் அஜீத்குமார் இருவரும் தங்கள் கவி ஆர்வத்தை தங்கள் ஆசிரியரிடம்  பகிர அவர் இவர்கள் ஆர்வத்தை செழுமைப்படுத்தி வீதி கலை இலக்கிய கள நிகழ்வுகளில் பங்கேற்க தூண்ட கவிதைகள் அறங்கேறின.

வீதி கூட்டங்களில் இரண்டு கவிஞர்களையும் பார்த்துவந்த எனக்கு ஒவ்வொரு கூட்டத்திற்கும் இவர்களின் கவிதை வரி செழுமைப் பட்டு வந்தது மகிழ்வாக இருந்தது.

வீதியின் ஆதி கடமைகளில் ஒன்று புதிய எழுத்தாளுமைகளை உருவாக்குவது. கதை எழுதுகிறோம் என்று  நாங்கள் படுத்தியபாட்டில் முதலில் படிங்க என்று வழிகாட்டப்பட்டோம், இன்றுவரை படித்துக்கொண்டுதான் இருக்கிறோம் பலர்!

நிலைமை இப்படி இருக்க  புதிதாக கவிதைகளை படைக்கும் இளம் கவிஞர்களின் வரவு மகிழ்வைத்தராதா என்ன?

வீதிக் கூட்டங்களில் ஒவ்வொரு முறையும் சூர்யாவின் கவிதைகளைப் படிக்கும் பொழுது இரண்டு விஷயங்கள் தோன்றும், ஒன்று சூர்யா அடுத்த லெவலுக்கு முன்னேறிக்கொண்டே இருக்கிறார்.

இன்னொரு விசயம் அசாத்தியமான வார்த்தைவளம் ...நிச்சயம் ஆண்டனியின் வழிகாட்டல் இல்லாவிட்டால் இது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்தேன்.

அப்படி யாருப்பா இந்த அப்பாடக்கர் ஆண்டனி என்போருக்கு ஒரு சிறு தகவல்

இவரிடம் எத்துனை முதுகலைப் பட்டங்கள் இருக்கின்றன என்பதை இன்னும் என்னால் அறிய முடியவில்லை, படிப்பது, வாசிப்பது சமூகத்தை உற்றுநோக்குதல் என்ற தத்துவவாழ்வு ஆண்டனியின் பாணி.

வயதில் மட்டுமல்ல பல்வேறு விசயங்களில் எனக்கு ரொம்பவே மூப்பு என்பதால் அண்ணன் என்று அழைப்பேன்.

ஒருமுறை உதவித் தமிழ் பேராசிரியர் ஒருவர் தமிழ் கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அதை வாசித்த ஒரு அரை குறை ஆங்கிலப் பேராசிரியர் யோவ் என்னய்யா கேனத்தனமா புனித நீர் என்று பொருள்வரும் வார்த்தையை ஆங்கிலத்தில் வைன் என்று எழுதிவைத்திருக்க கன்றாவி, உனக்கு எதுக்கு இந்த வேண்டாத  வேலை என்று சொல்ல நம்ம ஆள் நேரே ஆண்டனியிடம் வந்து கண்ணீர்விட,

தலைவர் சொன்னதுதான் ஹை லைட், இயசுவின் ரத்தம் வைன் என்று அழைக்கப்படலாம், இஸ்லாமிய சடங்குகள் பலவற்றில் பயன்படும் புனித நீரையும் வைன் என்றே குறிப்பிடலாம், அதே போல இந்து திருமணச் சடங்கில் அக்னி குண்டத்தில் ஊற்றப்படும் நெய் புனிதமானது அதையும் வைன் என்றே குறிப்பிடலாம் இதற்கு பல்வேறு இலக்கிய மேற்கோள்கள் இருக்கு என்று அத்துணை மேற்கோள்களையும் கொடுத்து போய் சொல்லுங்க அவரிடம் என்று சொல்ல அவரும் அப்படியே செய்ய அந்த  கன்றாவி பார்டி டரியல் ஆகிவிட்டார்.

ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் ஆழ்ந்த புலமை உடையவர், அவரிடம் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்கு வந்த பெரும் படையில் இரண்டுபேரின் கவிதை ஆர்வத்தைக் கண்டறிந்து அவர்களை தொகுப்பை வெளியிடச் செய்து, நிகழ்வைத் திட்டமிட்டு பெரும் புகழ் பெற்ற கவிஞர்களை அழைத்து வெளியீட்டுவிழாவை வெற்றிகரமான இலக்கியச் சந்திப்பாக மாற்றிவிட்டார் ஆண்டனி.

நிகழ்வின் தலைமை விருந்தினராக வீதியின் நிறுவனர்களில் ஒருவரான கவிஞர் முத்து நிலவன் வந்திருந்தார், கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் கொடுத்த தேதியில் பள்ளிகள் மீளத் திறக்கும் நாள் என அறிவித்து அவர் வருகையை காலி செய்தது கல்வித்துறை!

அவருடைய தேதியை வாங்கியவன் என்கிற முறையில் எனக்கு கடும் அதிர்ச்சி, . 04/01.2020 சனிக்கிழமை நகரத்தார் மண்டபத்தில் விழா என்று அழைப்பிதழ்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.

சிறப்பு விருந்தினர்கள் கவிஞர்.தங்கம் மூர்த்தி, கவிஞர்.புகழேந்தி, கவிஞர்,இரா.ஜெயா போன்றோர் சாரி ஜென்டில் மேன் எங்களால் வர முடியாது என்று சொல்லிவிட நந்தவனமும் நொந்த குமரனும் நிலை எனக்கு.

இதற்கிடையே வாக்குச் சாவடி பணி, வாக்கு எண்ணும் பணி என என்னை வைத்து செய்தார்கள். விழா பற்றி நினைக்கவே முடியாத சூழல், மீண்டும் அண்ணன் ஆண்டனி  அழைத்து ஞாயிறு அன்று நடக்கும் என்றார்.

ஆக கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மட்டும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட குடியாத்தம் விழாவிற்கு செல்வதால் வர இயலவில்லை, மற்ற அனைவரும் ஆஜர், தங்கம் இல்லாமல் ஒரு விழாவா என்ற ஏக்கம் இருந்தாலும் கொஞ்சம் நிம்மதி.

மிகச் சரியாக ஒன்பதரை மணிக்கு விழா நிகழ்விடமான தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கக் கட்டிடத்திற்குசென்றேன்.
பரபரப்பாக இருந்தது அரங்கு, முதல் பிரதியை பெற்றுக் கொள்ள வருகை தந்திருந்த தோழர் மதியழகன், தமுஎகச, திருச்சியில் இருந்து வருகை தந்திருந்த திருமிகு. ஜெயஸ்ரீ, இராணியார் பள்ளியின் ஆசிரியை பாக்கியவதி, முதுகலை ஆசிரியர் சிவராஜ், கவிஞர் புகழேந்தி, இரா.ஜெயா, வீதியின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கீதா, கவிஞர் மாலதி, கவிஞர் பவல்ராஜ் என ஒரு பெரும் கூட்டம் மேடையிலும் பார்வையாளர் வரிசையிலும்.

வெளியீட்டு விழா வெகு சிறப்பாக இருந்தது, மிக முக்கியமாக இளம் தலைமுறை அசத்தியது, தங்கள் கல்லூரி நண்பர்கள் இருவரின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து ஊக்குவித்து, இறுதிவரை கலையாமல் இருந்து, நிகழ்வின் இறுதியில் கட்டுப்பாடான வரிசையில் நின்று நண்பர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து அசத்திவிட்டார்கள்.

நிகழ்வின் ஏற்புரையில் பேசிய விறல் சூர்யாவிற்கு வார்த்தைகள் குளறிவிட்டன, உணர்வு மிகுதியில், அடுத்துப் பேசிய அஜீத்தின் உரை என்னை உறைந்து போக வைத்துவிட்டது.


மூன்று ஆண்டுகளாக காத்திருந்தோம் இந்த விழாவிற்காக என்று துவங்கிய பொழுதே எனக்கு திகீர் என்றது...மூன்று வருட காத்திருப்பின் வலி புரியும் இல்லையா...

அடுத்த வரியில் ஏண்டா இந்த வேலை நமக்கு, தேவையில்லாமல் ஆண்டனி சாருக்கு ரொம்ப பிரச்னை கொடுத்துவிட்டோமே என்று நினைத்தோம், அத்துணை பிரச்சனைகள் என்றார்.

கஜா புயலின் காரணமாக ஒருமுறை விழா ஒத்திவைக்கப்பட்டதையும் ,  இன்று எங்களுக்கு நிறைய அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றும், ஆண்டனி சார்  எங்களுக்கு ஒரு தந்தை என்று நன்றியோடு சொல்லி நிறைவு செய்தார் அஜீத்.

பெரும் போராட்டங்களுக்கு பின்னர் நிகழும் விழாக்கள் அவ்வளவு எளிதில் நெஞ்சைவிட்டு அகலாது...அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்குமே.

பின்.குறிப்பு

பசங்க இரண்டு பேருமே கணிதப் பட்டதாரிகள் என்பதால் தொடர்ந்து மேம்பாடு அடைந்து செழுமையான கவிதைகளை கொடுப்பார்கள். (தமிழ் பட்டதாரிகள் ரசனையோடு நின்றுவிடுகிறார்கள்)

மேலும் தங்கம் மூர்த்தி அவர்கள் ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஐந்து தொகுப்புகள் வெளிவந்தால், ஐந்தாம் தொகுப்பில் தமிழகம் அறிந்த கவிஞர்களாக இருப்பார்கள் என்றார், இருவரும் ஷார்ப்பாக இருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

யோவ் கவிதைகள் எப்படியா தொகுப்பு எப்படியா என்று நீங்கள் எகிறுவது சரிதான் அது அடுத்த பதிவுகளில்.

அன்பன்

மது






Comments

  1. மிக்க நன்றி ❤🙏

    ReplyDelete
  2. இருவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். மேலும் பல படைப்புகள் வெளிவரட்டும்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக