அறிமுகமாகாதவள்


தொகுப்பின் வழக்கத்துக்கு மாறாக தனித்துத் தெரியும் கதை இது. பெயரற்ற ஆண் கதை சொல்லி, அவன் குடும்பம், பணத்தாசை பிடித்த அவன் மாமா, அவனுக்கு பெண் கொடுக்கவிரும்பும் குடும்பம் இவர்களுக்குள் சுழலும் கதை.


நாயகனின் அப்பா ஒரு வழக்குரைஞர், ஓய்வே இல்லாமல் உழைத்து பொருளீட்டி அதை அனுபவிக்காமல் மரித்துப்போன துரதிஷ்டசாலி. குடும்பத்தை நடத்தும் பொறுப்பு தாய்மாவிடம் போகிறது, கர்வம்பிடித்த கஞ்சன் அவர். நாயகனை எம்.ஏ வரை படிக்க வைக்கிறார். எந்தவித கெட்டபழக்கங்களும் இல்லாத நாயகனுக்கு பெண் கொடுக்க பல பெரிய குடும்பங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் பெண் பார்க்கும் படலத்தைத் தள்ளிப் போடுகிறார். கேட்பதெல்லாம் கொடுக்கும் ஒரு மாமனாரைத் தேடுகிறார்.

இதற்கிடையே நாயகனின் நண்பன் ஹரீஷ் ஒரு நல்ல பெண் இருப்பதாகவும் பேசலாமா என்றும் கேட்கிறான். மாமாதானே முடிவெடுக்கவேண்டும், மாமாவிடமே பேசுகிறான் ஹரீஷ் வாழ்ந்து நொடித்த குடும்பம் என்று கேள்விப்படுகிறார், அதிலும் பெண்ணுக்கு பதினைந்து வயது வரை திருமணமாகாது இருப்பது வேறு உறுத்துகிறது. ஏதும் குறையோ என்கிற சந்தேகம் வேறு. இறுதியில் சோதித்து பெண்ணை ஒக்கே செய்கிறார்.

பெண்ணுடைய தகப்பனார் சம்புநாத் நேரே வந்து வரனைப் பார்க்கிறார். ஆனால் உரையாடல் ஒன்றும் அப்படி சிறப்பாக இல்லை. நாயகனின் மாமா வெகு கறாராக தேவைப்பட்டியலை வைக்கிறார். சம்புநாத் ஒப்புக்கொள்கிறார்.

காயே சலூத் என்கிற சடங்கில் மாப்பிள்ளைவீட்டில் இருந்து பெண் வீட்டுக்கு சீர் அனுப்பப்படும், சீர் கொண்டு செல்லும் ஒவ்வொருவருக்கும் மரியாதை சடங்குகளை பெண் வீட்டார் செய்ய வேண்டும். இந்த நிகழ்வில் நாயகனின் மாமா அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுப்பிவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.

மறுநாள் திருமணத்தில் உணவு ஏற்பாடுகள் எதிர்பார்த்த வகையில் இல்லை எனவே மாமாவிற்கு சந்தேகம் வருகிறது, ஒரு ஆசாரியை அழைத்து சம்புநாத் தன் மகளுக்கு போட்ட நகைகளை சோதிக்கிறார். இந்த செயல் சரியா என்று நாயகனை கேட்கிறார் பெண்ணின் தந்தை. நாயகன்தான் பேசா மடந்தை ஆயிற்றே! ஒவ்வொரு நகையாக சோதிக்கப்படுகிறது.

சோதனை முடிந்தவுடன் மாமாவை உணவுக்கு அழைக்கிறார் பெண்ணின் தந்தை. வழக்கம் இல்லையே என்றவரை கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொல்கிறார், பிள்ளை வீட்டார் அனைவரும் சாப்பிடுகிறார்கள். தொடர்ந்து நாயகனை சாப்பிட அழைக்கிறார். நாயகன் மீண்டும் மாமாவைப் பார்கிறான்.

அவன் சாப்பிட மாட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு அமைதியாக அவன் மாமாவைப் பார்த்துக் கேட்கிறார் சம்புநாத் "உங்களுக்கு வண்டிக்கு சொல்லவா?" திடுக்கிடும் மாமா திருமணம் நின்றுபோய்விட்டதை உணர்கிறார். ஒரு கலாட்டாவுடன் வீடு திரும்புகிறார்கள்.

ஒரே ஜோககீதம். அவமானம். நாயகன் மீண்டும் அந்தப் பெண்ணை அழைத்து தாலிகட்டும் பொழுது நிராகரிக்கவேண்டும் என்றும், அவள் எப்படி தன்னை மறந்தாள் என்றும் புலம்பி நாட்களை ஓட்டுகிறான்.

இந்நிலையில் தன் தாயாரை புனிதயாத்திரைக்கு அழைத்துச்செல்கிறான். முதல் வகுப்பு பயணச்சீட்டை வாங்கியிருந்தாலும் வெள்ளையர் வந்ததால் அந்த பெட்டியில் செல்ல முடியாது என்று உணர்கிறான். பக்கத்து பெட்டியிலிருந்து தேனினும் இனிய குரல் ஒன்று அழைக்கிறது. இங்கே இடம் இருக்கு வாங்க என்று, அடித்துப் பிடித்து அந்த பெட்டியில் ஏறுகிறான். அந்த குரலின் உருவத்தை தரிசிக்கிறான். அவ்வளோ அழகு! இனிமையான குரலின் மயக்கத்தில் பிளாட்பாரத்தில் தன்னுடைய கேமேரவை வைத்துவிட்டு வந்ததைக் கூட பொருட்படுத்தவில்லை அவன்.

அடுத்த நிறுத்தத்தில் சில வெள்ளை சிப்பாய்கள் வந்து நாயகனை இறங்கச் சொல்கிறார்கள். அதிகாரத் திமிர். நாயகன் பரிதாபமாக இறங்க முயற்சிக்கிறான். திடுமென அங்கே வருகிறாள் அந்த அழகி, சிப்பாய்களோடு வாதிட்டு விரட்டுகிறாள், சிப்பாய்கள் பின்வாங்குகிறார்கள். இதன் விளைவாக புதிய பெட்டி ஒன்றை தொடரில் சேர்த்தபின்னரே புறப்படுகிறது ரயில்.
அவளுடைய நிறுதத்தில் இறங்க முற்படுபவளிட்ம் அம்மாதான் கேட்கிறார் உன் பெயர் என்னம்மா?

கல்யாணி என்கிறாள்

உன் அப்பா என்ன செய்கிறார் ?

ஒ, அவரா ஒரு டாக்டர், சம்புநாத் என்றால் இங்கே எல்லோருக்கும் தெரியும் என்று சொல்லிவிட்டு தன் குழுவோடு அவள் சென்று விடுகிறாள்.

இந்தக் கதை என்ன சொல்கிறது ?

தன் மனைவி குறித்துக்கூட பேசத் தெரியாமல், வாதிடத்தெரியாமல் இருக்கும் நாயகன், தன் உள்ளம் கவர்ந்த பெண்ணை எப்படித் தவறவிடுகிறான் என்பதை சொல்கிறது.

பெண்ணைப்பெற்றவர்கள் சொரணையற்று இருக்க வேண்டும் எனும் இந்திய பொதுப் புத்தியின் மீது ஆர்.டி.எக்ஸ் வைக்கும் சம்புநாத்தான் கதையின் உண்மையான நாயகன் என்றே தோன்றுகிறது.

ஏழையாகப் பிறந்தும் தன் உழைப்பால் தன் குடும்பத்தை கரையேற்றிய நாயகனின் தந்தை இங்கே பெரும்பாலான உழைக்கும் வர்க்கத்தந்தைகளின் குறியீடென்றும் கொள்ளலாம். அல்லது வாழத் தெரியமல் வாழ்த்து முடித்த ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன் என்றும் கொள்ளலாம்.

கல்யாணி, நாயகனுக்கு அவளைத்தெரியாது, ஒருமுறை கூட பார்க்கவில்லை, ஆனால் அவள் இவனைப் பார்த்திருக்கிறாள், ஒரு போட்டோ வேறு இருக்கிறது, இந்நிலையில் அவனை தன் பெட்டியில் அமரச் சொல்வதும், இடம் இல்லை இறங்கு என்று வெள்ளையன் சொன்னபொழுது தகராறு செய்வதும் காதல் அல்ல. நாயகனை ஒரு சக மனிதனாக மட்டுமே பார்க்கிறாள், சொல்லப் போனால் அவன் தொடர்பான நினைவுகளை முற்றாக மறந்துவிட்டு தன் திருமணம் நின்றுபோன சோகம் கூட இல்லாமல் அவ்வளவு மகிழ்வாக, ஒரு வாழ்வை வாழ்கிறாள் அவள்.

அறிமுகமற்றவள் என்ற தலைப்பில் கல்யாணியை நமக்கு அறிமுகம் செய்துவிட்டு நாயகனின் பெயரைக்கூட சொல்லாமல் கதையை நிறைவு செய்வதை கதை சொல்வதின் உச்சம் என்றே கருதுகிறேன் நான்.

தான் விரும்பும் பெண்ணை நேரில் பார்க்காத, தன் திருமண நிகழ்வில், தன் மனைவியாக வரப்போகிறவளை அசிங்கப்படுத்தும் பொழுது மௌனமாக இருப்பது பெயரில்லாமல் இருப்பது என்பதை சொல்கிறாரா தாகூர்?

இன்றும் கூட இப்படி பசங்க இருக்காங்க, இதுகுறித்து மருத்துவர் ஷாலினி எழுதிய திடுக்கிடும் தகவல்கள் மனதில் எழுகிறது,

எது எப்படியோ செமையான கதை.

தொடர்வோம்
அன்பன்
மது

Comments

  1. படிக்கும் போது மனம் நிறைவாக அப்படி போடுன்னு சொல்கிறது..... பெண்ணின் அன்பை உணர ஆண்கள் தகுதி ஆகவில்லை என்பதை உணர்த்தும் கதை சிறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஏன் மன நிறைவாய் இருக்காது ...
      பொதுப் புத்திகளை சம்மட்டியால் அடிக்கும் கதை

      Delete
  2. நல்ல கதை. அவரது சில கதைகள் படித்ததுண்டு - ஆங்கிலத்தில்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பயணச் சித்தரே

      Delete
  3. அறிமுகமற்றவள் என்ற தலைப்பில் கல்யாணியை நமக்கு அறிமுகம் செய்துவிட்டு நாயகனின் பெயரைக்கூட சொல்லாமல் கதையை நிறைவு செய்வது நிச்சயம் உச்சம்தான்

    ReplyDelete
    Replies
    1. தான்விரும்பும் பெண்களின் அவமரியாதையை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பெயரற்றவர்கள் என்பதுதான் என் புரிதல்

      Delete
  4. அருமையான கதை

    ReplyDelete

Post a Comment

வருக வருக