அலைகள்-அரவான்



நான் மிகவும் எதிபார்த்த ஒரு திரைத்துறை நிகழ்வு அரவான். ஒரு சில இயக்குனர்களே தங்களது பெயரை நிறுவனப்படுத்தியிருக்கிறார்கள். அதில் வசந்தபாலன் என்கிற நிறுவனம் எனது ஆதர்சத்திற்க்குரிய ஒன்று. எனது ஆதர்சங்களை யாரேனும் சிதைக்கமுயன்றால் எனக்கு சொல்லொனாகோபம் வரும், அது வசந்தபாலனே ஆயினும்.

கதைவிவாதத்தில் சொக்க தங்கமாக மிளிர்கிற கதை திரையில் எப்படி சொதப்பும் என்பதை இந்நேரம் வலிகளை மீறி உணர்ந்திருப்பார் இயக்குனர். காவல் கோட்டத்தின் பத்து பக்கங்களை இரண்டரை மணிநேர திரைப்படமாக்கியது ஒரு வெற்றி என்றால் அதை வணிக ரீதியில் வெற்றிபெற வைக்க எடுத்த முயற்சிகள் கைகொடுக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழன் மறந்துபோன கலாச்சாரவேர்களை நோக்கிய ஒரு ஆரோக்கியமான நீண்ட பயணத்தின் தொடக்கம் இப்படம். திருட்டின் நுட்பங்களை விளக்குவதில் நிறைகிறது முதல்பகுதி. பலியாள் என்கிற கருத்தை சுற்றி சுழல்கிறது இரண்டாம் பகுதி. பலகோடி ரூபாய்களுக்கு நிறுவப்பட்டிருக்கும் மலைக்கிராம செட், திரைமிகையில்லா பாளையக்காரர் என வசந்தபாலன் டச் நிறையவே உண்டு. குறிப்பாக மணியக்காரர் வீட்டில் ஆதி நுழைகிற அந்த காட்சியில் மிரளவைக்கும் ஆதியின் உடல்மொழி. தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் துக்கடா கேரக்டரின் ஒட்டு மொத்த வாழ்வையும் வெறும் இரு நிமிடங்களுக்குள் காட்டுவது இயக்குனரின் முத்திரை.

எங்கேப்பா புடிச்சாங்க கதாநாயகியை. பொண்ணு ஒரு சுத்து வரும். பிரேவ் ஹார்ட் கடைசிக்காட்சியில் பார்வையாளன் பதைத்ததைபோல் படத்தின் கடைசிக்காட்சியில் நடந்திருந்தால் தமிழ்சினிமாவின் வெற்றிகரமான காவிய சினிமாவாக மாறியிருக்கும் இப்படம். ஆதியின் தியாகங்கள் மனதில் ஒட்டாமல் போவதுதான் படத்தின் பலவீனம்.பசுபதி மிகவும் கஷ்டப்பட்டு வித்யாசம்காட்ட முயன்றிருக்கிறார். பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். இசை மனதில் ஒட்டவில்லை.திரையில் காடப்படவேண்டியது இயக்குனரின் அறிவின் ஆழமல்ல இதயத்தின் ஆழம். வெயில் வாட்டியதற்கும் அங்காடித்தெரு நெரிசலானதிற்கும் அறிவுமட்டுமல்ல காரணம்.

எனக்கு நம்பிக்கைஇருக்கிறது இத்தவறுகள் அரவான் இரண்டாம் பாகத்தில் இருக்காது.

Comments