காற்றில் விரவிய கதைகள்

கதைகள்- காலம் மற்றும் கடல் கடந்தவை
முல்லாவின் விருந்து
கதைகள் சொல்பவருக்கும் கேட்போருக்கும் இடையே ஒரு அற்புதமான கண்ணுக்கு தெரியா ஒரு பிணைப்பை உண்டாக்குகின்றன. இங்கே ஒரு வேடிக்கையான முல்லா கதை.

முல்லாவின் விருந்து

ஒரு காலத்தில் முல்லா காட்டிற்குச் சென்று விறகு வெட்டி, சந்தையில் விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில் வாழ்ந்து வந்தார். ஓர்நாள் அவர் வெட்டிய விறகுகளை விற்க சந்தைக்கு வந்தார். அவரைப் பார்த்த அவரின் பழைய நண்பர், தன அரிசி கடைக்கு அழைத்து சென்று, அவரிடம் இருந்த விறகுகளை வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக 3 ராத்தல் உயர் ரக புலவு அரிசியை கொடுத்தார்.

முல்லாவுக்கு நீண்ட நாட்களாக புலவு செய்து அதை தன நண்பர்களுடன் அமர்ந்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. தன் ஆசையை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டதை எண்ணிய முல்லாவும் , தனக்கு கிடைத்த புலவு அரிசியை தன் மனைவியிடம் கொடுத்து ருசியான புலவு தயார் செய்யச் சொன்னார். பிறகு தன் மனைவியைப் பார்த்து, நான் வெளியே சென்று, என் பழைய நண்பர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வருகிறேன். அவர்களும் என்னுடன் அமர்ந்து, நீ தயார் செய்யும் புலவை வயிறார உண்டு மகிழட்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

முல்லாவும் தன் நண்பர்களை அழைக்க வெளியே சென்று விட்டார். முல்லா வெளியே சென்றதும் அவர் மனைவி, வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டு யோசனை செய்து கொண்டிருந்தாள். ஏனெனில் அவள் அவளுடைய கணவரைத் தவிர மற்றவர்களுக்கு சமைத்து போட விரும்ப வில்லை. அவள் எப்படி முல்லாவை ஏமாற்றலாம் என யோசித்து ஒரு முடிவுக்கும் வந்து விட்டாள். தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு முல்லா வீட்டிற்கு வந்தார். அவர் தன் மனைவியை அழைத்து, தனக்கும், தன் நண்பர்களுக்கும் புலவு பரிமாறச் சொன்னார்.

நீண்ட நேரமாக மனைவி வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த அவருக்கு சற்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

உள்ளே அவர் மனைவி அழுது கொண்டிருந்தாள். அவர் அருகில் சென்று அழும் காரணம் என்ன எனக் கேட்டார். அவள் அழுது கொண்டே தான் மிகவும் கஷ்டப்பட்டு சமைத்த புலவை நம் வீட்டிலுள்ள பூனை தின்று விட்டது என பொய் சொன்னாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த முல்லாவின் நண்பர்கள் புலவுதான் பூனை தின்று விட்டதே, இனி எங்களுக்கு இங்கு என்ன வேலை என்று அங்கிருந்து புறப்பட்டார்கள். உடனே முல்லா அவர்களைப் பார்த்து சற்று பொறுங்கள். இன்று உங்களுக்கு நிச்சயம் புலவு உண்டு எனக் கூறி நண்பர்களை வெளியே செல்லவேண்டாம் என தடுத்து நிறுத்தினார்.

அவர் பக்கத்துக் கடைக்கு சென்று, வீட்டிலிருந்த பூனையையும் பிடித்துக் கொண்டு, தன் மனைவியின் எதிரில், பூனையை தராசில் வைத்து நிறுத்தினார். பூனை இரண்டு இராத்தல் எடைதான் இருந்தது. உடனே அவர் தன் மனைவியை பார்த்து நீ சமைத்த மூன்று ராத்தல் புலவை பூனை தின்று விட்டதாக சொன்னாய். ஆனால் பூனை இரண்டு ராத்தல் எடைதான் உள்ளது. அப்படியானால் 3 ராத்தல் புலவை தின்ற பூனை எங்கே என கேட்டார்.

முல்லாவின் மனைவியும் திருதிருவென விழித்ததோடுஅவளுக்கு முல்லாவின் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க பிடிக்காததால்தான், பூனை தின்றதாக பொய் சொன்னதை ஒத்துக் கொண்டாள். அவள் தவறை மன்னிக்கும்படி கேட்ட அவள், சற்று நேரம் பொறுத்தால் புலவு செய்து விருந்தளிப்பதாகவும் சொன்னாள். முல்லாவும், நண்பர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.

ருசியான புலவு தயார் செய்யப்பட்டு எல்லோருக்கும் பரிமாறப் பட்டது. எல்லோரும் புலவை உண்டு மகிழ்ந்து அவரவர் வீட்டிற்கு திரும்பினர்.

Comments