உலக கல்வியாளர்கள்- இரா. நடராசன்

வாசிப்பு அனுபவப்பகிர்வு
கல்வி சிந்தனைகளும் கல்வியாளர்களும்

தங்களது வாழ்வினை கல்விக்கு அர்ப்பணித்து கல்விச்சிந்தனைகளை மேம்படுத்தி கல்வி சரித்திரத்தில் தங்களின் பெயரை அழுத்தமாக பதித்துவிட்டுப்போன எட்டு கல்விச் சிந்தனையாளர்களின் பணியினை சுருக்கமாகவும், அழகாகவும் தந்திருக்கிறார் நடராசன். இவர் வேறு யாருமல்ல தனது ஆயிசா என்ற படைப்பின் மூலம் கல்வியாளர் மத்தியில் ஒரு அதிர்வினை ஏற்படுத்திய அதே நடராசன் தான்.

மரியா மாண்டிசோரி அம்மயார் இந்தியாவில் சிறிது காலம் தங்கியிருந்தார் அப்போது அவர் இந்திய விடுதலைக்கு குரல்கொடுக்கவும் தயங்கவில்லை என்ற தகவல் ஆச்சர்யமளிக்கிறது. மிக நீண்ட காலத்திற்குப்பின் பல்வேறு வடிவ மாற்றங்களுடன் அம்மையாரின் கல்விமுறைதான் ஏ.பி.எல் எனவும் ஏ.எல.எம் எனவும் தமிழக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை ஆசிரியர் தெளிவாக நிறுவுகிறபோது நமக்கு ஏற்படுவது வியப்பு.

ஜான் ஹோல்ட் என்ற பெயரே இந்நூலின் மூலம்தான் எனக்கு அறிமுகமானது. இவரின் How Children fail? (1964) How Children learn? (1967) Instead of Education (1976) Escape from childhood என்ற நூல்களை 15 வருட ஆசிரியப்பணியில் படிக்கவில்லை என்பது வேதனை தருகிறது. நிச்சியமாக கூகிள் புக்ஸ் வசம் இருக்கும். கட்டாயம் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய நூட்கள்.

பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையிலிருந்தும் கட்டுபாட்டு பயங்கரங்களில் இருந்து ஆசிரியரின் கொடுமைளிருந்தும் தப்பி உடனடியாக ஒழிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எழுதுகிறார் ஜான் ஹோல்ட்.

ரேனய் ஸாசோ டிஸ்லெக்ஸ்யா என்கிற கற்றல் குறைபாட்டினை இனம்கண்டு அத்தகைய குழந்தைகளை கருணையுடன் அணுக வழிவகுத்தார் ரேனய் ஸாசோ. ஒடுக்கப்பட்டோருக்கான கல்விமுறையை உலகிற்க்களித்த பாலோ ப்ரயரே அவரது மனைவியின் (அவரும் ஆசிரியர்) அர்ப்பணிப்பான ஒத்துழைப்பு என சராசரி வாசகனுக்கு தெரியா புதிய தகவல்களை தருகிறது இந்நூல்.

தொழிற்கல்வியை உலகிற்க்குதந்த அலக்சாந்தர் உட்னோவிச், மாற்று திறனாளிகளின் கல்வித்தந்தை அபி சார்லஸ் மைக்கல் எபி ஒவ்வொரு ஆசிரிய நியமனத்தேர்விலும் கேட்கப்படும் பாவ்லோவ் மற்றும் செய்து கற்போம் என்ற ஜான் டுயி என்ற எட்டு கல்வியாளர்களின் கல்விச்சிந்தனைகளை சுருக்கமாக தெளிவாக தந்திருக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் படிக்கவேண்டிய நூல் இது.


நூலின் பெயர் : உலக கல்வியாளர்கள்
ஆசிரியர் : இரா. நடராசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
421 அண்ணாசாலை,
தேனாம்பேட்டை
சென்னை - 600 018்

18/03/2012

நூலின் வாசிப்பு பகிர்வு கஸ்துரி ரெங்கன்


Comments