புதிதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு ...
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த சமுகத்தின் மிக அற்புதமான பணிவாய்ப்பு தங்களுக்கு கிடைத்திருக்கிறது. பலநூற்றாண்டு கலாச்சார தொன்மை கொண்ட இந்த பாரத திருநாட்டின் எதிர்கால சிற்பிகள் நீங்கள். இது எல்லாருக்கும் வாய்க்காது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டவர்கள்!
மாணவர் நலன்
உங்களில் அநேகர் தனியார் பள்ளிகளில் பணியாற்றி இருக்ககூடும். தனியார் பள்ளிகளில் அநேக மாணவர்கள் அருமையாக படிப்பார்கள். ஒரு பாடத்தை மாணவர்களுடன் இயந்து நடத்துவதில் உள்ள சுகத்தை நிறையபேர் அனுபவித்து இருப்பீர்கள்.
உங்களுக்கு சவாலாக சில மாணவர்களும் இருந்திருப்பார்கள். அரசுப் பள்ளிகளில் இருக்க கூடிய அநேக மாணவர்கள் சவாலான மாணவர்கள் தான்.
நான் அரசுப் பள்ளியில் சேர்ந்த புதிதில் எனது கல்வியியல் பேராசிரியர் திரு ஜம்புநாதன் அய்யா தனது மாணவர் ஒருவருக்கு சொன்னதை அடிக்கடி நினைவுகூர்வது வழக்கம்.
புதிய ஆசிரியர் ஒருவர் அவரிடம் பயலுகளுக்கு ஒன்னும் தெரியல சார், என்று சொல்லி வருத்தப்பட சிறிய புன்னகையோடு ஜம்பு அய்யா திரும்ப கேட்டார் "அவனுக்கு எல்லாம் தெரிஞ்சுட்டா உனக்கு என்னப்பா வேலை?" அவனுக்கு ஒன்னும் தெரியாததால்தான் அவன் மாணவன் நீ ஆசிரியன்" அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டால் அப்பரும் வாத்தியாருக்கு என்ன வேலை?
எப்போதோ சொன்ன இந்த சம்பவம் எனக்கு பசுமரத்து ஆணி போல் பதிந்துவிட்டது.
என்னுடைய 17 ஆண்டு ஆசிரியப் பணியில் நான் அனுபவபூர்வமாய் கற்றுக்கொண்ட, நிறைய தவறுகளுக்கு பின்னர் உணர்ந்த சில பாடங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
மணி ஒலித்த பின் வகுப்பை விட்டு வெளியேறுங்கள்.
ஆச்சர்யமாக இருக்கும் மணி ஒலித்த பின் வகுப்பில் இருப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மணி ஒலித்த பின் வகுப்பை விட்டு வெளியேறுவதும். நேர நிர்வாகம் ரொம்பவே அவசியம்.
கடினமான பாடங்கள் தேவையா?
ஒவ்வொரு பாடத்திலும் கடினப் பகுதிகள் உண்டு. பெரும்பாலான ஆசிரியர்கள் இவற்றை நடத்தினாலும் சிலர் தவிர்ப்பார். மேல் வகுப்புகளில் ஆண்டிறுதி தேர்ச்சி சதவீதம் ஒரு முக்கிமான தகுதி என்பதால் தேர்ச்சி மட்டும் பல ஆசிரியர்களின் இலக்காகி போய்விட்டது. கடினப் பகுதிகளை ஆசிரியர் நடத்தினாலும் மாணவர் அவற்றை விரும்புவதில்லை என்பது நொண்டி சாக்கு.
கடினப்பகுதி மட்டுமே உங்களுக்கான மரியாதையை மாணவர் மத்தியில் உருவாக்கும். குறிவைத்து அடிங்க கடினப்பகுதியை சுலபமாக நடத்துங்கள்.
மாணவர்கள் உங்களை ஆராதிப்பர்.
கருணை அன்பு தோழமை
மாணவர்களை அவர்களின் குறைபாடுகளுடன் நேசிக்கிற மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஜூன் மாதம் செய்த தவறை ஒரு ஆசிரியர் மார்ச் மாதம் வரை சொல்லிக்கொண்டே இருந்தால் அந்த மாணவன் உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாவான். அந்த ஆசிரியருக்கும் அவனுக்கும் ஒரு எதிர்மறை உளவியல் சக்தி உருவாகும். அவன் அவரை மட்டுமல்ல அவருடைய பாடத்தையும் சேர்த்தே வெறுப்பான்.
மன்னிக்கிற மனோபாவம் ஆசிரியருக்கு அவசியம்.
கற்றல் ஆர்வம் இல்லா மாணவர்கள் பள்ளிக்கு தேவையா?
தேர்ச்சி சதவிகிதத்தின் வில்லன்கள் கற்றல் ஆர்வம் குன்றிய மாணவர்கள். இவர்களை என்ன செய்வது? கட்ட்றல் ஆர்வத்தை உருவாக்குங்கள். பாடம் சார்ந்த விசயங்களை வேறுமாதிரி கொடுங்கள். மொழிப்பாடம் என்றால் ஒரு உரைநடை பாடத்தின் பாத்திரங்களை தனி நடிப்பு தலைப்புகளாக கொடுத்து நடிக்க சொல்லுங்கள். உங்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். அடுத்தடுத்த நாட்களில் அந்த மாணவரின் நடவடிக்கை நிச்சயமாக மாறியிருக்கும். இது போல அறிவியல் ஆசிரியர்கள் பாடத்திற்கான மலர்களை, கனிகளை கொண்டுவர ஆர்வம் குன்றியவர்களை பணித்தால் தானாக அவர்களுக்கு ஆர்வம் வரும்.
உங்கள் பாடத்திற்கான ஆர்வமூட்டும் பணியை கண்டறியுங்கள்.
இவர்கள் தானாகவே பள்ளியை விட்டு நின்றுவிட்டால்?
தேர்ச்சி சதவீதம் கூடும்தான். ஆனால் எது தேர்ச்சி. ஒரு ஆர்வம் குன்றிய மாணவன் பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பில் பாதியில் பள்ளியை விட்டு நின்றால் என்ன ஆகும்? இந்தியா வல்லரசு ஆவது ஒன்றும் தள்ளிப் போகாது.
அவனுடய வாழ்க்கையில் என்ன ஆகும்?
ஒரு ஓட்டுனர் உரிமம் கூட எடுக்க முடியாது.
மின் வாரியத்தில் பணிபுரியும் தினக் கூலிகள் அடுத்த நிலை பதவி உயர்வுக்கு கண்ணீர் விட்டு அழுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தந்தையின் புத்தகங்களை தனயன் பயன்படுத்துவதை பார்த்திருக்கிறீர்களா?
நீங்கள் தேர்ச்சியை மனதில் கொண்டு செயல்படாதீர்கள். சமுக நீதி உங்கள் மனதில் இருக்கட்டும். கற்றல் குறைபாட்டால் பள்ளியை ஒரு கிராமத்து மாணவனுக்கு மறுப்பது மாபெரும் சமுக அநீதி.
அப்போ ஆபீசர்களுக்கு யார் பதில் சொல்வது?
நீங்கள்தான். சுமாரான உழைப்பை கொடுத்தாலே அனாயசமாக 90 விழுக்காடு தேர்ச்சியை தரலாம். ஆண்டிறுதி தேர்வின் மதிப்பீட்டை கவனித்து செயல்பட்டால் போதும். மீதம் பத்து சதம் உங்களை நிரூபிக்க. எந்த ஒரு மக்கு மாணவனையும் கொஞ்சம் அர்பணிப்போடு அணுகினால் தேர்ச்சி அடைய வைக்கலாம். கொஞ்சம் போராட்டம்தான். இருந்தாலும் கற்றல் ஆர்வமில்லா மாணவருக்கு பள்ளியை மறுக்காதீர்கள்.
நிறைய பேசுவோம் தோழர்களே
வாழ்த்துக்களுடன்
மது
அடுத்த மடலில்
Comments
Post a Comment
வருக வருக