டேக்கன் 2


இயக்குனர் ஆலிவர் மேகடானின் டேக்கன் ஒரு அருமையான கொஞ்சம் மூளைக்கு வேலைவைக்கும் ஒரு ஆக்சன் செண்டிமெண்டல் படம். ஒரு இசைக்குழுவின் பின்னே உலகம் சுற்ற கிளம்பிய பெண்ணை கடத்தும் கும்பல். ஏகப்பட்ட ஆக்சன் அதிரடிகளுக்கு பின் பெண்ணை மீட்கும் தந்தை என சுழலும் கதை. டேக்கன் கொடுத்த வெற்றி இயக்குனரை இன்னொரு பாகத்தை எடுக்க வைத்திருக்கிறது.

ஹாலிவுடில் இது சாதாரண நிகழ்வு. ஒருபடம் வெற்றிபெற்றால் அதே போல் வரிசையாக படங்களை எடுத்து தள்ளுவார்கள். ஜுராசிக் பார்க், லீதல் வெப்பன் என்று பெரிய லிஸ்டே உண்டு. சமீபத்தில் வந்திருக்கும் எ குட் டே டு டை ஹார்ட் டைஹார்டின் ஐந்தாம் பாகம்.

டேக்கன் முதல் பாகம் ரொம்பவே இயல்பாக இருந்தாலும் இரண்டாம் பாகம் ஒரு கரம் மசாலா கடலை.

படத்தின் டைட்டில் பணியே அருமை. கடந்த பாகத்தில் இறந்த வில்லன்களின் சவப்பெட்டியை சுமந்து வரும் விமானம் இழையும் இசை மாறி மாறி மறையும் காட்சிகளும் எழுத்துக்களும் ஹேய் இப்படிக்கூட செய்யலாமே என்று யோசிக்க வைக்கும் டைட்டிலிங் அருமை.

 ஏகத்திற்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் டைட்டிலுக்கு பின் வரும் காட்சிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

இஸ்தான்புல்லுக்கு பணி நிமித்தம் செல்லும் ஹீரோ மகளின் நலமறிய தொலைபேச தோளுக்குபின் கேட்கிறது ஹாய்! மனைவியும் மகளும் ஒரு இஸ்தான்புல் வந்து ஹீரோவை ஆச்சர்யப் படுத்துகிறார்கள்.

மறுநாள் மனைவியுடன் கடத்தப்படுகிறார் ஹீரோ. தனது அறிவையும் ஆயுதத்தையும் பயன்படுத்தி எப்படி தப்பி மனைவியை மீட்கிறார் என்பதே கதை.

விரைகின்ற மேர்சிடெஸ் பென்ஸ் தோட்டக்களால் துளைக்கப்பட்டு அரண்களைத் தாண்டி அமரிக்க எம்பசிக்குள் பொத்துக்கொண்டு நுழையும் கார், ஏம்பா இது கொஞ்சம் ஓவரில்லையா?

மூன்று நம்பர்களைமட்டும் வைத்திருக்கும் தீப்பெட்டி சைஸ் செல்போன் வாவ்.
கலாசார தொட்டிலான இஸ்தான்புல்லில் படக்குழு கேமராவை வைத்துக்கொண்டு விளையாடியிருக்கிறது. பலமுறை பல படங்களில் பார்த்த
லொக்கேசன்தான்(தமிழில் குரு , ஆங்கிலத்தில் இண்டர்நேசனல், ஸ்கைபால் )  என்றாலும் இன்னும் ஆர்வத்தை தூண்டும் இடம் தான் இஸ்தான்புல்.
இந்த நகரை திரையில் ரசிப்பதற்காகவே இந்தப் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

படம் முழுக்க மேர்சிடெஸ் கார்களையும் ஜீப்களையும் மனம் போல் உருட்டி விளயாண்டிருக்கிறார்கள்.  இஸ்தான்புல்லில் டாக்சிஎல்லாம் மெர்க்கா அல்லது திரைபடத்தில் மட்டும் தானா  என்பது தெரியவில்லை.

டைட்டிலில் இருந்தே இழையும் இசை அருமை. 

படக்குழு

இயக்குனர் ஆலிவர் மேகாடான் 
கதை  லக் பெசன், ராபர்ட் மார்க் காமென் 
இசை  நாதேனியல் மெகாலே 
ஒளிப்பதிவு ரோமின் லாக்ரூபாஸ் 
ஸ்டன்ட்  லுடோவிக் பெர்னார்ட், சையீன் கார்,
கதாநாயகன் லியாம் நீசன் 
நாயகி  பாம்கி ஜான்சன் 
மகள் மாகி கிரேஸ் 
வில்லன்  ரேடிசேர்பாட்சியா 

Comments