ஒரு அரசுப் பள்ளியும் சில நல்ல ஆசிரியர்களும்

சாட்டை படத்திற்கு பின்னர் அரசுப்பள்ளி குறித்த விமர்சனங்கள் பார்வைகள் முன்னைவிட தீவிரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இயங்கிகொண்டிருக்கும் இந்த தருணத்தில் நான் பார்த்த ஒரு முன்மாதிரி அரசுப்பள்ளியை குறித்து பதிவு செய்வது முக்கியமாக படுகிறது எனக்கு.

மாயவரத்தில் இருக்கிற எனது மாமா நல்லாசிரியர் நடராஜன் (தொடர்ந்து 17 ஆண்டுகளாக தனது பாடத்தில் 100 சதவிகித தேர்ச்சியை தந்தவர்) ஒருமுறை திடீரென அழைத்து தம்பி நெடுவாசலில் 1973இல் நான் பணிபுரிந்தேன் அதற்கான சான்று ஒன்று தேவைப்படுகிறது கொஞ்சம் வாங்கி தரமுடியுமா எனக்கேட்க சரி என்று சொல்லி ஒரு சுபயோக சுப தினத்தில் நண்பர் பிரதீப்புடன் நெடுவாசல் கிளம்பினேன்.

பேருந்து வசதிகள் குறித்து உறுதியான தகவல்கள் சேகரிக்காத காரணத்தினால் பேசாமல் எனது ஹீரோ ஹோண்டாவிலேயே பயணித்தேன். புதுகை வறட்சி மாவட்டம் என்றாலும் திருவரங்குளத்தை தாண்டிய பின் பசுமைதான்.

நெடுவாசலை நெருங்க நெருங்க பசுமை கண்களைத் தழுவத்தொடங்கியது. காவிரியின் கடைமடைப் பிரதேசம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமே இல்லை. வாய்க்கால் நிறய தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது.

ஒருவழியாய் பள்ளியை அடைத்தோம். மிக அற்புதமான உட்கட்டமைப்புடன்  இருந்தது பள்ளி. உள்ளே நுழைந்தவுடனேயே சில மாணவர்கள் உடற்கல்வியில் ஈடுபட்டிருக்க பக்கத்தில் ஒரு ஆசிரியர் சில வேலைகளை சொல்லிக்கொண்டிருக்க நான் மெல்ல அவரிடம் சென்று சார் என்ன பண்றீங்க என்று கேட்டேன்.

சார் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற இருப்பதால் அதற்கான தயாரிப்பில் இருக்கிறோம் நான் இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் என்றார்.

நான் வேண்டுமென்றே புதிய உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் பென்சன் கூட கிடையாதே நீங்கள் ஏன் கஷ்டபடுறீங்க என்று கேட்டேன். நல்லா  சிரித்த அவர் சார் நான் 5000 ரூபாய் நியமனம் எனக்கு அந்த பேச்சே கிடயாது, எனக்கு ஸ்போர்ட்ஸ் முதல்ல அப்புறம்தான் எனது சம்பளம் என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்றே  தெரியாமல் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தேன். அவரிடம் பேசியதில் இருந்து அவர் அந்த விளையாட்டு போட்டியை தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்திவருவதும் புதுகையின் முதன்மை கல்வி அலுவலர் திரு. சுகுமார் தேவதாஸ் அவர்களால் முன்மாதிரி உடற்கல்வி ஆசிரியர் என்று அழைக்கப்பட்டதும் தெரியவந்ததது. 

சதுரங்கத்திற்கான தனியறை மேலும் அதற்க்கான பயிற்சியும் தரப்படுவது இப்பள்ளியின் சிறப்பு. 

பள்ளியின் தலைமையாசிரியர் திரு. மோ. ரவிச்சந்திரன் அவர்களின் அற்பணிப்பு சிறப்பானது. திரு. நூர்முஹம்மத் மற்றும் ஏனைய பட்டதாரி மற்றும் முதுகலை  ஆசிரியர்களுடன் பள்ளியை மிக சிறப்பாக வழிநடத்திச் சென்றுகொண்டிருகிறார். 

அதிகாலை ஆறுமணிக்கு துவங்கும் சிறப்பு வகுப்புக்கள் மாலை ஏழுமணி  வரை நீடிக்கப்படுகிறது. அரசு உத்தரவின் படி பெண்குழந்தைகள் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும்  மாணவர்கள் 7 மணி வரை பள்ளியில் இருந்து அரசுத் தேர்வுக்கு தயார் செய்வது பாராட்டுக்கு உரிய செயல். 

சாட்டை படம்போல் ஒரே ஒரு தயாளன் ஆசிரியரால் ஒரு நாள் கூட செயல் படமுடியாது என்பதே உண்மை. பள்ளி செயல்பாடு ஒரு குழு செயல்பாடு. குழுவில் நிறய தயாளன்கள் இருக்கிற போது மாணவர்களுக்கு நன்மை பிறக்கிறது. நாளய சமுதாயம் சீரமைக்கப் படுகிறது. 

நெடுவாசல் பள்ளி நிறைய நல்ல ஆசிரியர்களுடன் இருப்பது மனநிறைவு. இந்த முறையும்  நல்ல தேர்ச்சியை பெற வாழ்த்துக்கள்.


வரும் வழியில் பிரதீப் சார் எனக்கு அந்த ஆசிரியர் எனக்கு ஸ்போர்ட்ஸ் முதல்ல அப்புறம்தான் எனது சம்பளம்னு  சொன்னது இன்னும் காதிலேயே கேட்டுட்டு இருக்கு சார். எல்லாரும் இப்படி வேலை பார்த்தால் நம்ம பசங்க எங்கயோ போயிருவாங்க சார் என்றார். நான் ஒரு வெற்று சிரிப்பை உதிர்த்து வண்டியை கிளப்பினேன். 


அன்பன் 

மது 

பிற்சேர்க்கை : செய்தியாளர்களை பொறுத்தவரை நாய் மனிதனை கடித்தால் செய்தியல்ல மனிதன் நாயை கடித்தால்தான் செய்தி என்பதே தாரக மந்திரம். நல்ல ஆசிரியர்கள் செய்தியல்ல! ஆனால் நான் நல்ல ஆசிரியர்களை குறித்து பதிவது  அவசியம் என்று கருதுவதால் இந்த பதிவு.

Comments