மிக நீண்ட காலமாகவே கமல் சர்வதேச அங்கீகாரங்ககளின் மகுடம் எனக் கருதப்படும் ஆஸ்கார் பெற வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் அவாவாக இருக்கிறது. இந்த கருத்தினை கொண்டு விஸ்வரூபம் திரைப்படத்தை பார்த்தால் அது ஆஸ்காருக்கு தகுதியுடையதா?
பல தொழில்நுட்ப பாணிகளின் முன்னோடி என்னும் வகையில் இந்தப் படம் விருதுக்குரியதே. இருப்பினும் சில திருப்புமுனை காட்சிகள் படத்திற்கு வேறு விருதுகள் கிடைப்பதை தடுக்கலாம்.
மிக முக்கியமாக ஆப்கனில் அமெரிக்க துருப்புக்கள் இறங்கும் காட்சி. எப்படி கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லை. அத்துணை சொதப்பல் அது முதல் தலைமுறை வீடியோ கேமை நினைவுபடுத்தும் காட்சியமைப்பு. பள்ளிக் குழந்தைகள் போல் காமிராவின் முன்ன ஓடி வந்து நிற்கும் எக்ஸ்ட்ராஸ் காட்சியின் தீவிரத்தை குறைத்து திகிலூட்ட வேண்டிய காட்சியை காமடி காட்சியாக்குகிரார்கள். ஆரோ 3 டி வேறு படுத்துகிறது. இந்த தொழில் நுட்பம் இல்லாத திரையரங்குகளுக்கு ஒரு சிறப்பு பிரிண்டை வழங்கியிருக்கவேண்டும். இன்னும் நிறைய நுட்பமான தவறுகளும் இந்த காட்சியமைப்பில் இருந்தாலும் நிச்சயமாக ஒரு நல்ல முயற்சி, தொழில்நுட்ப ரீதியில். நல்ல லாபி இருந்தால் விருதுகள் கிடைக்கலாம் என்று நினைக்கிறன். எத்துனை சிறந்த படத்திற்கும் லாபி இல்லை என்றால் விருதுகள் கிடைக்காது என்பதே என் கருத்து.
இதே வகையில் நாம் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்ட குருதிப் புனலை பார்த்தோம் என்றால் சில விசயங்களை புரிந்துகொள்ளலாம். பல விசயங்களில் இன்றுவரை குருதிப்புனல் அடித்துக்கொள்ள முடியாத படம். இருந்தாலும் ஆஸ்கர் கிடைக்கவில்லை.
எனக்குத்தோன்றும் முக்கியமான காரணங்கள்
படத்தின் துவக்கம்.
குருதிப்புனல் படம் பாலத்தில் குண்டுவெடிப்பதில் பள்ளிப் பேருந்து சிதறுவதில் ஆரம்பிக்கும். தி ஸ்பெசலிஸ்ட் என்கிற படமும் அப்படியே துவங்கும். இதில் பள்ளி பஸ் அதில் ஜீப்பில் குழந்தை. இப்படி அவர்கள் எடுத்த காட்சியை அவர்களிடமே விருதுக்கு அனுப்பினால் எப்படி?
படத்தின் முடிவு
கிளைமாக்ஸ் காட்சியில் கமலை சுவத்தொடு வைத்து சுடுவான் ஒரு போராளி. இதுவும் இன் தா லைன் ஆப் பயர் என்கிற படத்தில் வந்ததே. இப்படி அவர்கள் சுட்ட ஆப்பத்தை அவர்களுக்கே கொடுத்தால் எப்படி வரும் விருது.மகாநதியின் சிறை சம்பவங்களில் மனதை பாதிக்கும் காட்சிகள் அனைத்துமே லாக் அப் என்கிற சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் படத்திலும் இருக்கும். ஸ்டாலோனின் தாக்கம் கமலின் படைப்புகளில் நிறையவே உண்டு.
ஆஸ்கார் வாங்க என்னதான் செய்வது?
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் எடுக்கும் படங்களை நம்மவர்கள் இயக்க தேவையில்லை. நம்மவர்கள் நம் வாழ்வியல் முரணை அழகை நல்ல கதை சொல்லிகள் மூலமாக படம்பிடிப்பதே விருதுக்கு மெய்யான வழி. இந்தத் துணைக்கண்டத்தில் உண்டு ஆயிரம் விருதுக்குரிய கதைகள்.
எனக்கென்னவோ யாரோ ஒரு புதிய இயக்குனர் ஒரு ஹச் டி காமிராவோடு தமிழுக்கு விருதுகளை வாங்கும் சாத்தியம் இருப்பதாகவே படுகிறது. ஆங்கிலப் படங்கள் அடித்து துவைத்த காட்சிகளை நாம் எடுக்க தேவையில்லை.
சந்திப்போம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக