கண்மூடி கடப்போம்?

திருச்சி மாநகரின் புதிய பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று அந்தக் கடை. பெண்கள் நீண்ட நேரம் உடை தேர்விலும் ஆண்கள் இளைப்பாற நிறைய வழிகளையும் கொண்டது, குழந்தைகளுக்கும் குதூகலமான விளையாட்டுக்கள் உண்டு.

எதேச்சையாக தெரிந்து கொண்ட தகவல்கள் நிறையவே என்னை சிந்திக்க வைத்தது. வேறொன்றும் இல்லை ஊழியர்கள் காலை 9 மணிக்கு வந்து இரவு 9 மணிக்குதான் திரும்புகிறார்கள் அனைவரும். சம்பளம் 5000 ரூபாய்களில் ஆரம்பம்.

எட்டுமணி வேலை என்பது விதியாய் இருக்க 12 மணி நேரம் உழைக்கும் உழியர்கள். பேசினாலோ சங்கம் அமைத்தாலோ வேலை பணால் என்பது எல்லோர்க்கும் தெரிந்ததே.

நாம் செய்ய சில கடமைகள் இருப்பதாக உணர்ந்த தருணம் அது. நாம் இந்தமாதிரி அல்ட்ரா மாடர்ன் கடைகளில்  பணிபுரியும் உழியர்கள் தினசரி வேலைக்கு கைநாட்டு வைப்பதை வலைமூலம் வெளிப்படையாக அறிவிக்க செய்து  அவர்களின் உரிமை பாதுகாக்கப் பட்டதை உறுதிசெய்து ஒரு மக்கள் தரச்சான்றினை அளிக்கவேண்டும். 

மக்கள் தரச் சான்று பிரபலப் படுத்தப் படுவதோடு மக்கள் ஆதரவையும் பெறுவது அவசியம். மேலாண்மை பட்ட மாணவர்கள் இந்த கருத்தை நிறுவனமாக்கி நியாமான முறையில் பணம் ஈட்டவும் முடியும். 

செய்வார்களா நம் இளைஞர்கள்?

மக்கள் தரச்சான்று தரப்படவேண்டிய இன்னும் சில நிறுவனங்கள்.

போக்குவரத்து துறை (தனியார் மற்றும் பொது)

சில ஆண்டுகளுக்கு முன் உறவினரை அழைக்க விமான நிலையம் சென்ற பெண்மணியின் கார் மீது ஏறி நின்றது ஒரு தனியார் பேருந்து. இரண்டு உயிர்களை பலிவாங்கிய அந்த விபத்தின் காரணம் அதன் ஓட்டுனர் தூக்கமின்றி மூன்றாவது நாளாக பேருந்தை இயக்கியதே.

இப்படி ஊழியர்களின் பணி நேரத்தை கண்காணிப்பதின் அவசியம் நிறையவே இருக்கிறது. இளைஞர்கள் முன்வரவேண்டும். அரசும் இதற்க்கு உதவ வேண்டும்.

மருத்துவமனைகள், அங்காடிகள் என நாம் கண்மூடி கடக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தொழிலாளர் நசுக்கப் படுகிறார். இவர்களின் நலன் குறித்து சிந்தித்தல், செயல்படுதல் ஒரு நல்ல சமூகத்திற்கு அவசியம்.

சந்திப்போம்

மது 

Comments