தலைவன் ஆசிரியர்!


"நம்ம அரசாங்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம், ஒரு மாதம் வரலைன்னாலும் சம்பளம், மழை பெய்தால் விடுமுறை, சம்பளத்துடன் கூடிய பயிற்சி, பெண் ஆசிரியர்களுக்குப் பேறுகால விடுமுறை ஆறு மாதம்... இவ்வளவும் கொடுக்குது. அது போக, மாணவர்களுக்கு நாலு முறை சீருடை, பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், காலணினு படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்குது. இவ்வளவு சலுகை, வசதிகளுக்குப் பிறகும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கலைன்னா, தப்பு அரசாங்கம் மேல இல்லை. நம்ம மேலதான்!''- அமைதியாக, அதே சமயம் அழுத்தமாகப் பேசத் துவங்குகிறார் கருப்பையன். தன் 37-வது வயதில் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கருப்பையன், 'சாட்டை’ பட தயாளனைத் தூக்கிச் சாப்பிடும் சாதனைகளைச் சத்தம் இல்லாமல் செய்த ஆசிரியர்!

புதுக்கோட்டையை அடுத்த நெடுவாசல் வடக்குப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது முதல் சமூக சேவைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக சேவை..? கருப்பையன் மாற்றியிருப்பது ஒரு பள்ளியை மட்டுமல்ல... ஒரு கிராமத்தை, ஒரு சமூகத்தை!

ஒரு தனிமனிதன் நினைத்தால், இவ்வளவு மாற்றங்கள் சாத்தியமா என்று அதிசயிக்கவைக்கிறது கருப்பையனின் கதை.
''நான் சின்னச் சின்னதாக் கூலி வேலை செஞ்சுட்டேதான் படிச்சேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த 462 மதிப்பெண்கள்தான் என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. 1988-ல அரசுப் பள்ளி ஆசிரியர் ஆனேன். ஏழு வருஷம் உதவி ஆசிரியர் பணி. அப்ப பள்ளிக்கூட அமைப்பில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரணும்னு நினைப்பேன். ஆனா, சுத்தி இருக்கிறவங்களிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. நாம சொல்றதை மத்தவங்க கேட்கணும்னா, அதுக்குத் தலைமை ஆசிரியர் ஆவதுதான் ஒரே வழினு காத்திருந்தேன். 14 வருஷங்கள் கழிச்சு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைச்சது. அப்போ பயிற்சிக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் வடக்குப் பள்ளிக்கு வந்தேன். அந்த சுத்துவட்டாரத்தில் இருந்த வடக்கிகாடு, குயவர் தெருக் கிராமங்கள் கிட்டத்தட்ட 50 வருஷங்கள் பின்தங்கி இருந்தன. அங்கே ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பகல்ல கூலி வேலைக்குப் போயிட்டு, ராத்திரியில் வேட்டைக் குப் போவாங்க. 50 வயசு ஆண்கள், ரொம்பச் சின்ன வயசுப் பெண்களைத் திருமணம் செஞ்சுக்குவாங்க. குயவர் தெருவில் சராசரியா ஒருத்தருக்கு நாலு மனைவிகள் இருப்பாங்க. நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செஞ்சுக்கிறதால, பிறக்கும் குழந்தைகள் மந்தத்தன்மையுடன், உடல்நலக் குறைவுடன் இருக்கும்.அங்கே இருந்த ஒரே ஒரு தொடக்கப் பள்ளியும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அந்தக் கிராமங்களின் நிலைமையையே மாத்தணும்னு முடிவு பண்ணேன்.

நெடுவாசல் தொடக்கப் பள்ளிக்கு பணிமாற்றம் கேட்டேன். கிடைக்கலை. மாவட்ட ஆட்சியரிடம், 'ஒரு அரசாங்கத் தொடக்கப் பள்ளி எப்படி இருக்கணும்னு அரசாங்க விதிகள் சொல்லுதோ, அப்படி அந்தப் பள்ளியை மாத்துறேன். இல்லைன்னா, என் மேல் துறைரீதியா நடவடிக்கை எடுங்க’னு சொல்லி பணிமாற்றம் கேட்டேன். என் உறுதியைப் பார்த்த ஆட்சியர், என்னைப் பணிமாற்றம் செய்தார்.

நெடுவாசல் வடக்குத் தொடக்கப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக முதல் நாள் பொறுப்பேத்துக்க வர்றேன். என் அறையில் தலைமை ஆசிரியரின் நாற்காலி இல்லை. 'எங்கே?’னு கேட்டேன். 'மூணு மணிக்கு வரும்’னு சொன்னாங்க. சரியா மூணு மணிக்குக் கொண்டுவரப்பட்ட நாற்காலியில் எண்ணெய் வடியுது. மஞ்சள் தூள், ரோஜா இதழ்கள் ஒட்டியிருக்கு. விவரம் கேட்டா, அந்த ஊர்ல இறந்தவங்களை மயானத்துக்குக் கொண்டுபோற வரைக்கும் சாத்திவைக்க அந்த நாற்காலியைத்தான் பயன்படுத்துவாங்களாம். சினிமாவில் காட்டப்படும் காட்சிகளைவிட மிக மோசமா இருந்தது நிலைமை!

மாற்றத்தைச் சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் செய்ய முடியாது. அதனால், பள்ளிக்கூடத்தின் நிலைமையை மாற்ற நான் மட்டும் ஆசைப்பட்டாப் போதாதே. என் தொழில், கற்பித்தல். அதுக்கு முதலீடு, மாணவர்கள். முதலாளி, பெற்றோர்கள். அதனால மக்கள் குடியிருக்கிற இடங்கள்ல  கூட்டம் போட்டேன். கூட்டத்தில் சுற்றுப்புறச் சுகாதாரம்பற்றிப் பேசினேன். பொது இடங்களில், பள்ளியைச் சுற்றி, நடைபாதைகளில் அசுத்தம் செய்யக் கூடாதுனு சொன்னேன். முழு சுகாதாரம் உள்ள கிராமங்களுக்கு அரசாங்கம் மூணு லட்ச ரூபாய் பரிசு தரும் திட்டத்தைப் பத்திச் சொன்னேன். அதை நம்ம கிராமம் ஜெயிக்கணும்னு சொன்னேன். பத்து இளைஞர்களை என் துணைக்கு அழைச்சுக்கிட்டேன். அதிகாலை நாலு மணிக்கு தட்டு, கம்பு, டார்ச்லைட் எல்லாம் எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவோம். வீதிகளில் வெளிச்சம் அடிச்சு நடந்து சத்தம் போட்டுக்கிட்டே போவோம். பதினஞ்சு நாள் அப்படி ரோந்து போனதில், அசுத்தம் பண்றது குறைஞ்சது. ஆனா, நிரந்தரத் தீர்வு கழிப்பறை வசதிதானே. கழிப்பறை வசதிக்காக தமிழ்நாடு அரசு, வீடு ஒன்றுக்குக் கொடுக்கும் மானியத்தொகை 2,000 ரூபாயை வெச்சு 36 வீடுகளுக்குக் கழிப்பிட வசதி செய்துகொடுத்தேன். முழு சுகாதாரத்துக்கான மூன்று லட்ச ரூபாயை ஜெயிச்சது நெடுவாசல். அந்தப் பணத்தில் பள்ளிக்குத் தேவையான பொருட்கள், ஒரு சின்னப் பாலம், சாலை வசதிகளைச் செய்தோம்.

அப்புறம் அந்தச் சமூக மக்கள் என்னை முழுசா நம்பினாங்க. கிராம சபாக் கூட்டங்கள் மூலமா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, வீட்டு வசதி, குளம் தூர்வாருதல்னு அரசாங்கத்தின் திட்டங் களைக் கிராமத்தில் செயல்படுத் தினோம். 'திரும்பும் திசை எங்கும் கணினியே’ பாடம் எடுக்க, எங்கள் பள்ளியில் கணினி வசதி இல்லை. கல்விக் கொடையாளர்கள் நிதி, அரசு நிதி எனக் கணினிகள், எல்.சி.டி. பிரின்டர்கள், ஸ்கேனர், இன்டர்நெட்னு எல்லா வசதிகளை யும் ஏற்படுத்தினோம். இன்னைக்கு என் மாணவர்கள் 10 பேர் பிளாக் கரா இருக்காங்க. அன்னைக்கு என்ன படிச்சாலும், உடனே அதை அப்லோட் பண்ணிருவாங்க.

தலைமைக் குணம் என்பது சொல்லிக் கொடுப்பதால் மட்டுமே வந்துவிடாது. அனுபவபூர்வமா அதை ஒவ்வொருவரும் உணரவைக்கணும். பசங்களை மைக்கில் பேசவைப்பேன். அது மேடை பயத்தைப் போக்கும். புவி வெப்பம் அடைவதைத் தடுக்க 12,010 மரக்கன்றுகள் நட்டோம். ஒவ்வொரு மரக்கன்றுக் கும் ஒரு மாணவன் பொறுப்பு. நட்டு, நீர் பாய்ச்சி கண்ணுங்கருத்துமாப் பார்த்துக்கிட்டாங்க. ஒரு இலை உதிர்ந்தால்கூட என்ன ஆச்சுனு பார்ப்பான். அறிவியல் ஆர்வம், உற்று நோக்கும் திறன் வளர்ந்தது. மரம் வெட்டுதல் கூடாதுனு பாடமா மட்டுமே சொல்லிக்கொடுத்தா, அதன் அர்த்தமே அவனுக்குப் புரிஞ்சிருக்காது. ஆனா, ஒரு மரத்தை வளர்க்கிறவன் எப்பவும் ஒரு மரத்தை வெட்ட மாட்டான். ஆக்கினவனுக்கு அழிக்க மனம் வராது.
மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தியபோது, பலருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவா இருந்தது தெரியவந்தது.  நவதானியம் கலந்த பாலை மாணவர்களுக்குக் கொடுத்தேன். அதன் பிறகு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவர்களுடைய ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து இருந்தது. பெற்றோர்களும் புரிந்துகொண்டு வீட்டிலேயே பிள்ளைகளுக்கு நவதானியங்கள் கொடுக்கத் துவங்கினார்கள். மாணவனோ, பெற்றோரோ எதையும் சொல்லிட்டே இருக்காமல், செஞ்சு காமிச்சா உடனே புரிஞ்சுக்குவாங்க. 2010 ஆண்டு விழாவில், எனக்கு அந்தச் சமூக மக்கள் நாகஸ்வரம், மேளம் வாசிச்சுட்டு வந்து, 100 தட்டு, சைக்கிள், ஃபேன், பால், சமையல் பாத்திரங்கள் எல்லாம் அடுக்கி 'கல்விச் சீர்’ கொடுத்தாங்க. நெகிழ்ந்துட்டேன்!

இங்கே படிப்பு வராத மாணவன்னு யாருமே இல்லை. ஒரு ஆசிரியருக்கு விவரம் தெரியாம இருந்தால், அவருடைய மாணவர்களுக்கும் எதுவும் தெரியாது. கற்பிக்கும் முறை மூலமா எந்த மாணவனையும் வல்லவனா, நல்லவனா மாத்தலாம். அதைத்தான் நான் பண்றேன்.

முன்னாடி மாதா, பிதா, குரு, தெய்வம்னு இருந்தது. ஆனா, இப்ப மாதா, பிதா, கூகுள், தெய்வம்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்திருச்சு. அதனால், ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிக்கொடுக்காமல், நவீன மாற்றங்களையும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். அதுக்கு அரசாங்கம் எல்லா வசதிகளும் தந்திருக்கு. அதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் பொறுப்பு மட்டுமே நம்முடையதுனு ஒவ்வோர் ஆசிரியரும் உணர்ந்தாலே, அடுத்த தலைமுறை கம்பீரமாக நிமிரும்!''

- க.அபிநயா
படங்கள்: செ.சிவபாலன்

(ஆனந்த விகடன் இதழில் இருந்து.)

ஆசிரியர்கள் மாற்றத்தின் முகவர்கள் என்பதை செயலில் காட்டிய திரு கருப்பையன் அவர்களுக்கு மனமுவந்த பாரட்டுக்கள். மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு முன்னோடியாக இருப்பதால் இந்த பகிர்வு.

அன்பன்
மது 

Comments

 1. ஆசிரியர் திரு கருப்பையன் அவர்களுக்குப் பாராட்டுகள். வெளிளிட்டு நல்ல ஆசிரியரை உற்சாகப்படுத்திவரும் ஆனந்த விகடனுக்கும், அதையெடுத்துப் போட்ட தங்களுக்கும் நன்றிகள்.
  மிகப்பெரிய பணியைச் செய்துவரும் திரு கரு்பபையனின் பணி தொடர நாமும் உதவுவோம்.
  நிற்க.
  அந்த ஆசிரியருக்கு நம் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது மற்றும் கூடப் பணியாற்றும் மற்ற ஆசியர்களைப் பற்றி ஒரு தகவலும் திரு கருப்பையன் சொல்லவில்லையே படங்களில் கூட அவர்மட்டும்தானே இருக்கிறார் என்பன போலும் சில கேள்விகள் ஏனோ எழுகின்றன

  ReplyDelete

 2. அருமையான ஆசிரியர், அருமையான பதிவு

  ReplyDelete

Post a Comment

வருக வருக