எனக்குள் ஒரு கனவு



எனக்குள் ஒரு கனவு

ராஷ்மி பன்சால்
தமிழில் ரவிப்ரகாஷ்
மதிப்பெண்  தராத வெளி வாசிப்பு தேவையில்லை என ஆசிரியர்களே கருதும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் புத்தகங்கள் வாசிப்பது என்பது எப்போதாவாது அரிதாகவே நடைபெறுகிறது. பாட நூலில் கூட முக்கிமான வினாக்களை குறிவைத்து படிக்கும் பாணி இப்போது வெற்றிக்கான சூத்திரமாக முன்மொழியப்படுகிறது.

கியூபப் புரட்சியின் பின்னர் அமைந்த அரசாங்கத்தின் அதிபராக பொறுப்பேற்ற பிடல் இப்படிச்சொன்னார். இனி எனது இரு கரங்களிலும் அறிவாயுதங்களை ஏந்தலாம். ஆம் நிறையப் படிக்க எனக்கு நேரமிருக்கிறது.

அம்பேத்கார் பாரிஸ்டர் பட்டம் பெற்று நம் நாட்டிற்கு திரும்பிய பொழுது பெட்டி பெட்டியாக நூல்களை கொண்டு வந்தார். இன்றைக்கு நாம் வெளிநாடுகளில் இருந்து என்ன எதிர்பார்க்கிறோம்?

கோடாலித் தைலம், நாத்த மருந்து, சோப்பு துணிமணி ரொம்ப முக்கியமான இன்னொரு மேட்டர். தமிழா தமிழா நாளை எப்படி உனது நாளாகும்? நாளை தமிழர் வசமாக ஒரு புத்தகம் இங்கே.

நான் மிக எதார்த்தமாய் வாங்கிய புத்தகம் இவ்வளவு விசயத்தோடு இருக்குமா என்பது என்னை இன்னும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. 
ராஷ்மி பன்சாலின் எனக்குள் ஒரு கனவு பல நாயகர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது. அனைவரும் இந்தியர்கள், சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உழைத்து உலகின் ஒளியாக மாறிப்போனவர்கள். ஆப்ரகாம் லிங்கனையும், வின்ஸ்டன் சர்சிலையும் படித்த தலைமுறைக்கு ஒரு ஆனந்த பரவச அனுபவமாக இருக்கும் இந்நூல்.
சாதனையாளர்கள் அனைவரும் அமெரிக்கர்கள்களாகவோ அல்லது லண்டன் மாநகர மனிதர்களாகவோ இருக்கவேண்டும் என்ற கருத்தை முற்றாக தகர்த்திருக்கிறது இந்த நூல்.

நூலின் முதல்வர் பிந்தேஸ்வர் பதக் ஒரு ஆச்யர்மான மனிதர். ஒரு ஆர்தொடாக்ஸ் ஐயர் வீடு அம்பி, நடத்துவது சுலப் நிறுவனம். ஒரு ஆண்டிற்கு நூற்றி இருபத்தைந்து கோடி வருவாய். தொழில் பொதுக்கழிவறை  பராமரிப்பு!
இந்த வருவாய் உங்கள் வெற்றியா? என்றபோது பிந்தேஸ்வர் தரும் பதில்
இந்தத் தொழில் ஈடுபட்டிருந்த பெண்களை வீடுகளுக்குள் அனுமதிக்கமாட்டார்கள். சுலப் இவர்களுக்கு மாற்று தொழில்களை பயிற்றுவித்திருக்கிறது. இன்றுஅனுமதி மறுக்கப்பட்ட  அதே வீடுகளுக்குள் இவர்கள் தங்களது ஊதுபத்தியை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அந்த வீடுகளின் சோபாவில் அமரும் அவர்களுக்கு அருந்த க்ளாசில் நீரும் கிடைகிறது! இதைத்தான் எனது வெற்றியாக கருதுகிறேன் என்கிறார் பிந்தேஸ்வர். சுலப் பெயரில் தான் சுலப் இவர் கடந்து வந்த பாதை சுலபமில்லை! அத்துணைபாடுகளுக்குப்  பிறகே இது சாத்தியமாயிருக்கிறது.

தனது ஊழியர்களின் தாழ்வுமனப்பன்மையை போக்க இவர் நட்சத்திர விடுதியில் மூன்று லட்ச ரூபாய்க்கு விருந்து தந்தது ஒரு சிலிர்ப்பான விசயம். 



இந்த நூல் மேலும் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்கிறது. கன்சர்வ் நிறுவனத்தின், அணித அஹுஜா, ஆவிஷ்கார் நிறுவனர் வினீத் ராய், ரங்சூத்ரா நிறுவனர் ஸ்மிதா கோஷ், தேசிக்ருவின் சலோனி மல்ஹோத்ரா, ஸ்பிட்டி பள்ளத்தாக்கின் தேவதை இஷிதா கண்ணா, சூரியஒளி வித்தகர், செல்கோ நிறுவனர், ஹரிஷ் ஹண்டே, பிபல் திரி நிறுவனர், சந்தோஸ் பருலேகர், விஞ்ஞானி தீன பந்து சாஹு, சூப்பர் தேர்டி நிறுவனர் ஆனத்குமார், மிராக்கில் கூரியர்ஸ் துருவ் லக்ரா, பிரதம் மாதவ் சவான், கூஞ்சின் அன்ஷி குப்தா, ஏடிஆர் த்ரிலோச்சன் சாஸ்திரி, ஆக்கன்சா சாஹின், பரிவர்தன் அரவிந்த் கேஜ்ரிவால் பார்வயற்றோர் சங்க பூசன் புனானி, அட்சய பாத்திரா மது பண்டித தாசா, பரிவார் ஆஷ்ரம் தந்த விநாயக் மற்றும் பேலூர் மடத்தின் ஹீஸ் ஜாதவ் என இருபது நிஜ வாழ்க்கை நாயகர்கள் இந்தப் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

எதிர்கால இந்தியாவை நேசிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் அவசியத் தேவை. 

இந்த நூலின் நாயகர்கள் பள்ளிக்கு வருவது புதிய நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் என்பதால் இனிவரும் பதிவுகள் இவர்களைப் பற்றிய கட்டுரைகள் அவசியம் வரும்.

புதிய ரோல் மாடல்களை மாணவர்கட்கு தர விழையும் ஆசிரியர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

நூல்            : எனக்குள் ஒரு கனவு
ஆசிரியர்        : ரஷ்மி பன்சால்
தமிழ் வடிவம்   : ரவி பிரகாஷ்
பதிப்பகம்        : விகடன் பிரசுரம்.
விலை          : நூற்றி எழுபது

Comments