முகநூலில் இருந்து வருத்தமான ஒரு பகிர்வு




அவன் ஒரு குழந்தைப் பிள்ளை அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான்...


பாலச்சந்திரனோடு பழகிய பொழுதுகள் - வாய் திறக்கிறார் மெய்ப்பாதுகாவலர்

நாம் பார்த்துப் பழகியவைதான். அவற்றை நேரடியாகவும், நிழற்படமாகவும், காணொலியாகவும், பார்த்திருக்கின்றோம். கேட்டிருக்கின்றோம். மரணத்தைக் கட்டிப்பிடித்தபடியே வாழ்வதைத் தான் வாழ்வென்கின்றோம்.
அதுவும், துப்பாக்கி மரணங்கள் மூவேளைக்கும் பொதுவானவை. அதனால் தான் மரணங்கள் பற்றிய செய்திகள் உப்பற்றவைகளாக மாறிவிட்டன. உலக நாடுகளுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்தான் அது தற்போதைக்கு ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்தவகையான மனப்போக்கு நிலைகளுக்குள்ளும் அவனின் படம் விளம்பரப் பொருளாகியிருக்கின்றது.

அந்தப் படத்துக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் என்பது தலையாய அம்சம். பாலச்சந்திரன் எனப்பட்ட 12 வயதே ஆன அந்த சிறுவனின் படம் மீதான அதிர்வுகள் ஐ.நா. வரை கேட்டிருக்கின்றது. உள்ளூரளவிலும் கடந்த இரு வாரங்களாக பல கோணங்களில் எழுதித் தீர்த்தாயிற்று.

ஆயினும் இப்போது தான் சிறுவனுடன் நெருக்கமானவர்கள் வாய்திறக்கத் தயாராகியிருக்கின்றனர். இலங்கையில் இல்லாத அவர்கள் மறைவாயிருந்து பாலச்சந்திரனுடன் பழகிய பொழுதுகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக உரையாடல் வடிவில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிரப்பட்ட ஓர் உரையாடல் இங்கு கட்டுரை வடிவம் பெறுகின்றது. "அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான்.

3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான். எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான்.

காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது. ''அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களையும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார்.

"தலைவர்' வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளில் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்த அதிக இளைஞர்கள் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த நேரமது. இவரும் மட்டக்களப்புக்காரர்.

"தலைவர்' அதிகம் நேசித்த ஊர்க்காரர் தான் என்றபடியால் தன்னையும் மெய்ப்பாதுகாப்புப் பணியில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். இன்னும் சில காலத்தில் "தலைவரின்' குடும்பத்துக் கான பாதுகாவலராக்கப்படுகின்றார்.

தலைவரின் வீட்டுக்கு மெய்ப்பாதுகாவலராக போனதுபற்றி....?

ஆரம்பத்தில் எனக்கும் "தலைவர்' என்றால் பயமாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அந்த நிலைமாறி தலைவரின் மென்மையான பக்கங்களை உணரத் தொடங்கினேன். பயம் போய் அவரை பார்க்கும் நாளுக்காக ஏங்கத் தொடங்கினோம்.

குடும்பத்துடன் இருப்பதற்காக "தலைவர்' வீடு வரும் நாளுக்காகவும், "தலைவரின் கையால் சமைத்துப் போடும் கோழிக் கறிக்கும் இடியப்பத்துக்காகவும்' காத்திருக்கத் தொடங்கினோம். (அந்தக் கால நினைவில் நனைகின்றார்) "அக்கா' (பிரபாகரனின் மனைவி) அன்று சமைக்கமாட்டா. அல்லது தலைவர் சமைக்க விடமாட்டார்.

எல்லோருக்கும் தன்கையால் சமைத்து தானே பகிர்வார். சில வேளைகளில் அவருக்கே இடியப்பம் இல்லாமல் போய்விடும். அந்த அதிசய மனிதருக்குள் இவ்வளவு அபரிமிதமான சமையல் கலையை கற்பித்தது யார் என்ற வினாக்களுக்கான விடை தேடுதலில் பல நாள் இரவுக் காவலரண் பொழுதுகள் முடிந்தன.

தலைவரின் பிள்ளைகளுக்கும் போராளிகளுக்குமான உறவு நிலை பற்றிச் சொல்லுங்கள்...?

தலைவரின் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ் வொரு மாதிரி. நாங்கள் முதலில் கண்டது தம்பியைத் தான் (சார்ள்ஸை சொல்கின்றார்) தம்பி சின்னனில கொஞ்சம் சோம்பேறி. நல்ல குண்டா இருப்பார்.

அவ்வளவு குழப்படி இல்ல. பாண்டியன் ஸ்பெசல் ஐஸ் கிறீம்ல ஒரே நேரத்தில 2 சாப்பிடுவார். கராட்டி, விளையாட்டு, ஓடுறது, பாடுறது எண்ட விஷயங்களில பெரிய வல்லமையானவர் இல்லை. வளர வளர கொம்பியூட்டரோடதான் அதிகமா இருப்பார்.
அதுக்குப் பிறகு தங்கச்சி. படிப்பைத் தவிர அவாவுக்கு வேற எதுவும் தெரியாது. புத்தகங்களுக்குள்ள நாள்களை முடிச்சிருவா. அதுக்குப் பிறகுதான் பாலா. யாருமே எதிர்பாக்காத நேரத்தில பிறந்ததாக சொல்லு வாங்க. அவனும் ஆச்சரியம்தான்.

சரி தலைவரின் கடைக்குட்டி பாலாவோடு பழகிய பொழுதுகள் எப்படியிருந்தன...?

1996 ஆம் ஆண்டு தான் பாலா பூமிக்கு வந்தான். சண்டை கிளை கொண்டிருந்த நேரம். வன்னியில் பல இடங்களிலிலும் தாக்குதல் களங்கள் திறக்கப்பட்டிருந்தன. முள்ளியவளையில் பாலா பிறந்தான். அப்பா அதிக நாள் பாலாவை பார்க்க வரவில்லை.

ஆனாலும் அப்பம்மா, அப்பப்பா (பிரபாகரனின் பெற்றோர்) பாலாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர். மற்றைய பிள்ளைகளை விட இவன் மீது மூத்தவர்களின் கவனிப்பு அதிகம் இருந்தது. பாலா அங்கிள், அன்ரி (பாலசிங்கம் அடேல் தம்பதி) கூட சில காலம் இருந்தார்கள்.
இவர்கள் யாரையும் பாலா அதிகம் விரும்பாமல் வளர்ந்ததுதான் ஆச்சரியம். தீத்தி விடும் உணவை அதிகம் நிராகரிப்பவன் பாலா. (கொஞ்ச நேரம் பாலாவின் குழந்தை பிராயம் நினைவில் தவழ்ந்தவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உரையாடலுக்கு வந்தார்..)

பாலா அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும் போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் எங்களின் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.

எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது.

அதற்குப் பின்னர் அவன் தகர அடைப்பு வேலிக்குள்ளும், பனையோலை வேலி அடைப்பு வீட்டுக்குள்ளும் வாழ விரும்பவில்லை. காவலரண்களுக்கு ஓடி வருவதையே பெரும்பாலும் செய்யத் தொடங்கினான்.
இவர்கள் யாரையும் பாலா அதிகம் விரும்பாமல் வளர்ந்ததுதான் ஆச்சரியம். தீத்தி விடும் உணவை அதிகம் நிராகரிப்பவன் பாலா. (கொஞ்ச நேரம் பாலாவின் குழந்தை பிராயம் நினைவில் தவழ்ந்தவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உரையாடலுக்கு வந்தார்..)



பாலச்சந்திரனும் தலைவரும் சந்திக்கும் தருணங்கள் எப்படி இருந்தன..?

(எந்தக் கேள்விக்கும் நின்று நிதானித்து பதில் தந்தவர் இதற்கு மட்டும் சிரிப்பை தந்தார்). பாலா பிறந்து சில காலங்களின் பின்னரே "தலைவர்' வந்து பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் இடுப்புக்கு மேலாக சாரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கதிரையில் அமர்ந்தார்.

மடியில் தூக்கி வைத்து பாலாவைக் கொஞ்சத் தொடங்கினார். பாலா சொல்லி வைத்தால் போல அப்பாவின் மடியை "நாசம்' செய்தான். அதுவே அவன் வெளிப்படுத்திய அப்பா மீதான முதல் கோபம் என்றார் அக்கா (தலைவரின் மனைவி). அப்பா கோபிக்கவில்லை. தானே அதனை சுத்தப்படுத்தினார்.

எல்லோரும் ஓடிவந்து பாலாவையும், அப்பாவையும் சுத்தப்படுத்த முனைந்தார்கள். தலைவர் சொன்னார், "என்ர பிள்ளை நானே செய்யிறன்''. அன்று முதல் பல தடவைகள் பாலாவை தலைவர் சுத்தம் செய்த பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆக தலைவர், நல்ல அப்பாவும் கூட!

அப்பா ஒரு முறை வீடு வந்திருந்தார். தனது பிஸ்டலை மேசை லாச்சிக்குள் வைத்து விட்டு "பாத் ரூம்' போய்விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா யாரும் கவனிக்காத நேரத்தில் பிஸ்டலை விளையாட்டுப் பொருளாக்கினான். வீட்டிலிருந்த அனைவரும் அலறினார்கள். அப்பா அப்போதும் எந்தப் பயமும் காட்டாது இலகுவாக அதனை எடுத்துக் கொண்டார்.

அது சரி, பாலா யாரோடு விளையாடப் போவான்?

பாலாவுடன் விளையாட சொர்ணம் அண்ணை, சங்கர் அண்ணை வீட்டுப் பிள்ளைகள் எப்போதாவது வருவார்கள். அவனுக்கு அவர்களுடனான விளையாட்டு போதுமானதாக இருக்காது. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தன்னுடன் விளையாட வரச்சொல்லி எங்களை அழைப்பான். வராவிட்டால் வேலிக்கு வெளியே போகப் போவதாக வெருட்டுவான். வெருட்டியதை செய்தும் இருக்கின்றான். நாங்கள் வீட்டு சமையலுக்காக விறகு வெட்டப் போவோம்.

"சும்மா நானும் உங்களோட வரட்டோ?'' என்ற கெஞ்சலை அள்ளி வீசுவான். அனைவரும் பொறுப்பெடுத்து கூட்டிப் போவோம். மரக்குற்றியில் அமர்ந்து காலாட்டிய படி எதையாவது கொறித்தபடி வேலியற்ற வெளியை ரசித்துக் கொண்டிருப்பான் பாலா. அவன் வெளியில் போய் எல்லாப் பிள்ளைகளையும் போல வாழவே அதிகம் விரும்பினான்.

பள்ளிக்கூடத்தில் பாலா எப்படி...?

ஆரம்பக் கற்றலை புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு பாடசாலையில் தான் பாலா படிக்கத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் போல அதிகம் படிக்க ஆசைப்பட்டான் பாலா.

வகுப்பறை மேசைகளிலும், கரும்பலகையிலும் அ, வை கிறுக்கி விளையாட அவன் ஆசைபட்டான். அங்கு சில நண்பர்கள் பாடசாலைப் படலை வரை மட்டும் கிடைத்தார்கள். பிறகு கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்க்கப்பட்டான்.

முன்பிருந்ததை விட பாலாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வகுப்பறையில் அதிகம் அமைதி காத்தான். அதற்கான காரணத்தை அவன் சொல்லவேயில்லை. பாலா அதிகம் கேள்விகள் கேட்டான். வகுப்பறையில் சேமிக்கப்பட்ட முழுச் சந்தேகங்களுக்குமான விடைகளை எம்மிடம் தேடினான்.

அந்தக் காலத்தில் பாலாவுக்கு காலைச் சாப்பாட்டைக் "பொக்ஸில்' கொடுத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் தானியச் சாப்பாடுதான் இருக்கும். அங்கு சாப்பிடுவதற்கு அவனுக்கு பெரும் வெட்கம். எல்லாப் பிள்ளைகளும் சர்வ சாதாரணமாகச் சாப்பிடுவார்கள்.

ஆனால் பாலா அசாதாரணமாக சாப்பிடுவான். புத்தக பையினுள்ளும், புத்தகங்களுக்குள்ளும் மறைத்து வைத்துச் சாப்பிடுவதில் மகா கெட்டிக்காரன். பொது இடங்களில் அதிகம் வெட்கம், பயம் கொண்டவனாக பாலா வளர்ந்தான்.

ஒரு முறை அவனுக்கு பிறந்த நாள் வந்தது. நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ரொபி கொடுக்க விரும்பினான். நாமும் வாங்கிக் கொடுத்தோம். அதைக் கொடுக்கும்போது சில ஆசிரியர்கள் இரண்டு, மூன்று ரொபிகள் எடுத்தனர். "எல்லாருக்கும் குடுக்க வேணும், ஒன்டு மட்டும் எடுங்கோ'' என்று சொல்லி ஏனையவற்றை திரும்ப வாங்கிக் கொண்டான் பாலா.

பாலா ஏதாவது அபாயங்களில் சிக்கியதுண்டா?

பெரிதாக அப்படியொன்றும் நடக்கவில்லை. கிளிநொச்சியில் ஒருமுறை பாலா வசித்த வீட்டுக்கு அருகில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஆசிரியை ஒருவரும் அவரது இரண்டு மகன்மாரும் கொல்லப்பட்டார்கள்.

அதற்குப் பக்கத்து வீட்டில் பாலாவும், அக்காவும், தங்கச்சியும் இருந்தார்கள். அந்த சம்பவத்தோடு வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு என்று பாலாவின் இருப்பிடம் மாறிக் கொண்டிருந்தது.

இறுதியாக முள்ளிவாய்க்கால் வந்து சேர்ந்தான் பாலா. (அதற்குப் பின்னர் அவரால் தொடர்ந்து உரையாட முடியாமல் இருந்தது. என்ன கேட்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. நீண்ட அமைதிக்குப் பின்னர் கடைசிக் கேள்வியை தயங்கித் தயங்கித் தொடுத்தோம்.)

இறுதியில் பாலாவுக்கு ஏன் இப்படி நடந்தது? (அதற்கும் நீண்ட மௌனம். பின்னர் இரண்டு வரிகளில் பதில் வந்தது.)

அது எனக்குத் தெரியாது. நான் கடைசி நேரத்தில பாலாவுடன் இல்லை. (அவரைப் போலவே எங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாலாவைக் காக்க முடியாத குற்ற உணர்ச்சியில் அவர் மட்டுமல்ல நாங்களும் கூனிக்குறுகிப் போனோம். பிறகு எப்படி உரையாடலைத் தொடர முடியும்


 -----------------------------------------------------------------------------------------------------
ஈழம் குறித்த விடாமல் பதியும் பதிவாளர்களுக்கு நன்றி  

கையாலாகாத உணர்வுகளுக்கு எப்போதும் என்னை ஆட்படுத்தும் ஈழம் குறித்த நினைவுகளுடன்

மது  

Comments