ஒரு நடிகரும் மோனலிசா புன்னகையும் (R. Paarthipan)



ஒரு வித்தியாசமான திரைப்பட விளம்பரம். இன்று பெரிய பெரிய யானைகளின் படமெல்லாம் வெளிவருகிறது. அந்த யானைகளுக்கு வைக்கும் உணவில் ஒரு பொறி போதும் இந்த எறும்புக்கு ரசிக மகா ஜனங்களே என்றது அந்த விளம்பரம்.

நடத்ததோ வேறு! சில வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் சொன்னார் (ரஜினி) அந்த எறும்பே எல்லா பொறியையும் சாப்பிட்டுருச்சு. யானைக்கு ஒரு பொறி கூட கிடைக்கவேயில்லை.

தமிழ் திரையுலகில் புதியபாதை மூலம் ஒரு ராஜ பாட்டையை போட்டு என்ட்ரி கொடுத்த பார்த்திபன்தான் அது.

தனது தனித்துவமான படைப்பாற்றல் மூலம் தமிழக திரையுலகில் தனது பெயரை மாற்றவோ மறைக்கவோ முடியாது செதுக்கிவிட்ட கலைஞன் பார்த்திபன்.

எனது திரை ஆதர்சங்களில் ஒருவர் பார்த்தீபன். அவரது செயல்பாடுகளை பயாஸ்கோப் பார்க்கும் கிராமத்து சிறுவனைப் போல  மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வந்திருக்கிறேன். இந்தப் பதிவு வெறும் புகழ்ச்சியல்ல. ஒரு கலைஞன் குறித்த எனது நெடிய ஆச்சர்யகுறி.

திரைக்கலைஞன் என்பதை தாண்டியும் பார்த்திபன் ஒரு நல்ல மனிதனாய் பலமுறை தன்னை வெளிப் படுத்தியிருக்கிறார்.

குமுதம் இதழுக்கு ஒரு வாரம் ஆசிரியராக அவர் தந்த தோஷ நிவாரணங்கள் மனிதம் வழியும் புதிய பிரார்த்தனை முறை. மஞ்சளை பூசிக்கொண்டு கோவில் படிகளில் உருள சொல்லவில்லை அவர். அவரது தோஷ நிவாரணங்கள் ஏழை மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்குவதில் இருந்து பார்வையற்ற குழந்தைகளுக்கு உணவு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு
உடை என புதிய தலைமுறைக்கான புரட்சிகரமான தோஷ நிவாரணங்கள். சுயநலம் நிறைந்த நம்மிடம் அது எடுபடாமல் போனது ஆச்சர்யம் இல்லை.

சில மாதங்களுக்கு முன் ஒரு ஒளிப்பதிவாளர் எதேச்சயாக எனது வீட்டிற்கு வந்திருந்தார். விளம்பர படங்களில் பிசியாக இருப்பதாக சொன்னார். தொழில்நுட்பம் குறித்து அவர் சொன்ன விசயங்கள் அனத்துமே ஆச்சர்யம். எப்படி சார் இப்படி என்று நான் வியந்த பொழுது சொன்னார். நான் மட்டும் பார்த்திபனை (மூர்த்தி) பார்திருக்காவிட்டால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது என்றார்.

நான் பீல்டுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தாலாட்டு பாடவா என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக அரக்குவேலி என்ற மலை பள்ளத்தாக்கிற்கு சென்ற யூனிட்ல் சும்மா லைட்பாயாக போயிருந்தேன். மலை முழுதும் பூக்கள். காலையில் ஒரு ரயில்விட்டால் திரும்ப மாலையில் தான் வரும். எனவே அதிகாலை ரயிலில் யூனிட் முழுதும் பள்ளத்தாக்கில் வந்து இறங்கி மாலையில் திரும்புவது வழமை.

ஒரு நாள் சிறிதாக தூற்றல் போடவே ஷூட்டிங் தாமதம் ஆனது. ஹீரோ பார்த்திபன் ஸ்டேசனின் ஒரு மர பெஞ்சில் குடை பிடித்தவாறு அமர்ந்திருந்தார். என்ன நினைத்தாரோ என்னவோ திடீரென என்னை அழைத்தார். முதல் கேள்வியே ஏடாகூடாமாக இருந்தது. உன் அப்பா என்ன சிவாஜியா இல்லை எம்.ஜி.ஆரா? குழம்பி நின்ற என்னை பார்த்து அடுத்து கேட்டார் ரொம்ப படிச்சிருக்கிராயா?

பள்ளியில் பெயில் என்று சொல்ல வீட்டில் பயந்துகொண்டு ஓடிவந்து திரையுலகில் சேர்ந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த எனக்கு இந்தக் கேள்விகள் எப்படி சங்கடமாக இருந்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நீ இப்படி வெட்டியாக சீன் போட்டே பிழைக்க முடியாது இந்த துறையில். முதலில் தொழிலை முறையாக கற்றுக்கொள் இல்லை என்றால் உன்னை தூக்கி எறிந்துவிடும் இந்த பீல்ட் என்று சொல்ல எனக்கு எதோ புரிந்தது.

அவர் சொன்னதில் உள்ள உண்மை புரிந்த நான் மெல்ல எனது சக ஊழியர்களை அணுகி அண்ணே ட்ரைபாட் என்றால் என்ன என்று கேட்டேன். அப்படி ஒவ்வொரு விசயமாக கேட்டு கடைசியில் தொழிலை கற்றுக் கொள்ள சரியான இடம் லென்சுகளை வாடகைக்கு விடும் பெரிய ஸ்டுடியோதான் என்று புரிந்தது. அவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்தால் தெளிவு கிடைக்கும்.

சரியான நபர்களை பிடித்ததும் ஒரு ஸ்டுடியோவில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. எந்த லென்ஸ் எந்த காட்சிக்கு, எந்த லைட்டிங் எந்த காட்சிக்கு என்று அத்துப்படியாக தெரிந்தபின் மீண்டும் ஷூட்டிங் ஸ்பாட்!

இந்த முறை ஒரு லைட்டிங்கில் இயக்குனர் ஒரு காட்சியை வைக்கிறார் என்றால் அவர் சொல்லாமலே ரிப்லக்டர்களில் இருந்து ட்ராலி வரை மின்னல் வேகத்தில் அவற்றின் இடத்தில் இருக்கவே இயக்குனர்களின் இன்றியமையாத தேவைகளில் நானும் ஒருவனாக சேர்ந்தேன். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காமிராவை கையாண்டு தனியார் தொலைகாட்சிகளில் வெகு பிசியான ஒளிபதிவாளர்.

சில ஆண்டுகளில் எனக்கு சில லட்சங்களில் இங்கும் அங்கும் சென்னையில் வீடுகள் சேர்ந்தன. எனது பையன் இன்று விஸ்காம் படிக்கிறான். இவை எல்லாத்திற்கும் காரணம் அரக்குவேலியில் பார்த்திபன் எனக்கு சொன்ன சில நிமிட அட்வைஸ்தான் என்று அவர் சொன்னபோது எனக்கு ஒரு பாடலில் பென்ஸ் காரில் வரும் தமிழ் ஹீரோதான் நினைவிற்கு வந்தான். ஹாட்ஸ் ஆப் டு பார்த்திபன்.

நினைத்து பார்த்தால் வாழ்வின் மோனலிசா புன்னகை மாதிரி இருந்தது அந்த சந்திப்பு. ஒரு படத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண லைட் பாய் இன்று சென்னையில் ஒரு விளம்பர நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில்! ஒரு சூப்பர் டூப்பர் ஹீரோ ஏன் ஒரு லைட் பாய்க்கு கவுன்சிலிங் தர வேண்டும். வாழ்வின் எதிர்பாரா திருப்பங்கள் எங்கும் எப்போதும் ஒரு கூடை நிறைய ஆச்சர்யங்களையோ அதிர்வுகளையோ நமக்காக வைத்திருக்கின்றது. தகுதிப் படுத்திக் கொண்டால் உயர்வு நிச்சயம்.

லைட் பாய்க்கே லைட் போட்ட பார்த்திபன் மீண்டும் ஒரு மிரட்டலான படத்தை தருவார்... விரைவில் என்று நம்புகிறேன்...

சந்திப்போம் நண்பர்களே...

அன்பன்

மது








Comments