தங்கமீன்கள் ... ஒரு சராசரியின் பார்வையில்

எல்லோரும் அவா அவா கருத்தை சொல்லட்டும் என்று காத்திருந்து எழுதும் எனது பார்வை. போற்றுவார் போற்ற தூற்றுவார் தூற்ற என படம் இருவகையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

படம் பல்வேறு இடர்பாடுகளுக்கு பின்னரே வெளிவந்தது. ஆனந்த யாழ் தந்த ஈர்ப்பில் குடும்பத்துடன் சென்றேன். படம் குறிந்து எனக்கு குறைந்த தகவல்களே தெரியும் என்பதால் தயாரிப்பு போட்டான் கதாஸ் என்றவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஒய்யால கெளதம் மேனன் தயாரித்த படத்திற்கே இந்தக் கதியா?

உன்னை மாதிரி நான் இங்க்லீஷ் பேசிக்காட்டினேன்லே என்ன மாதிரி நீ தமிழ் பேசிக்காட்டு  பார்க்கலாம் என்ற வசனதிற்க்காகவே எனக்கு ராமை பிடிக்கும். மிரட்டலான கற்றது தமிழ் படம் தங்க மீன்களின் மீது எனக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாலுமகேந்திராவினால் தேர்ந்தெடுக்கப் பட்ட புகைப்படங்களோடு டைட்டில் ஓட நான் டைட்டிலை உதாசீனம்செய்து படங்களை ரசிக்க ஆரம்பித்தேன். பாதிப் படங்கள் நம் கண்களில் ஒட்டிக்கொள்ளக் கூடியவை.. டைட்டிலை யாரும் படித்திருப்பார்கள் என்றால் அவர்கள் ரசனை குறைவு என்று ஈசியாக சொல்லலாம்.டைட்டிலே இது வெறும் அப்பா மகள் கதைஇல்லை என்பதை ஒரு குறியீடாக காட்டிவிடுகிறது.

எங்கேபோய் பிடித்தார்களோ அவ்வளவு பெரிய அழகான  மலைக்குளத்தை, குட்டிப் பாப்பா தங்க மீனு தங்க மீனு என்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே இறங்கிப் போகும் பொழுது சரியாய் செல்லம்மா என்று அலறி என்ட்ரி ஆகும் கல்யாணி எனக்கு ரொம்ப புதுசாக தெரிந்தது. ஏன் ராம் தனது கதாநாயகர்களை தாடியுடன் அலைய விடுகிறார் என்று நினைத்தேன். (படம் பார்க்கும் பொழுது கல்யாணி பாத்திரத்தில் நடித்து ராம் என்று தெரியாது!) தொடரும் ஆனந்த யாழ் ரொம்பவே ஜோர். நெட்டில் நான் தேடிய முதல் ஆள் அரபிந்து சாராதான், அசத்தல் சாரே. படத்தை  தாங்கும் ஒரு  தூண் ஒளிப்பதிவு.

படத்தின் சிலாகிப்புகளில் ஒன்று பூரி பாப்பா, நல்ல என்ஜாய்மென்ட், பாப்பா வாயை திறந்தால் வெடித்து சிரிக்கிறது தியேட்டர். பின்பாதியில் செல்லம்மாவை தங்கமீன் ஆயிடு என்று சொல்லும் பொழுது பதைக்க வைக்கிறாள். 

மேல்லிருட்டில் அவ்வப்போது தெரியும் சிலுவை, அன்பான கிருஸ்துவ ஆசிரியை, நாமம் தீட்டிய படித்த பிழைக்க தெரிந்த பள்ளி முதல்வர் என மெல்லிய குறியீடுகள் படம் எங்கும் ஈஸ்டர் முட்டைகளாய் விரவி கிடக்கின்றன. சிலுவை ஒரு சர்வதேச திரைகுறியீடு, பிழைப்புவாத முதல்வரின் நெற்றியில் மின்னும் நாமம் நமது சமனில்லா சமூகத்தின்  குறியீடு.

எந்த ஒரு கிராமத்திலும் கல்யாணியை நாம் காண முடியும் என்பது எதார்த்தம்.

காரோடு காத்திருக்கும் தாத்தாவிடம் பையை கொடுத்துவிட்டு அப்பாவின் சைக்கிளுக்கு ஓடும் செல்லம்மா, சிறிது தூரத்தில் அவளை காருக்கு அனுப்பும் அப்பா கல்யாணி என  குட்டி குட்டி விசயங்கள் அருமையாக இருக்கிறது.
ஏர்போர்ட்டில் பைத்தியமாடா நீ குழந்தை ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கி குடுப்பியா, என்று வெடிக்கும் பொழுதும், அதனை தொடரும் வசனங்களும் அருமை. என் அண்ணன் வாங்கிக் கொடுத்தது என்று மகனிடம்  சாக்லேட்டுக்கு சிணுங்குவது என படம் நிறைய ரசனையான காட்சிகள் அருமை. நெகிழவைக்கும் பல சிறுகதைகளை நேர்த்தியாக நெய்ததுபோன்ற திரைக்கதை. 

படத்தின் இறுதிக்காட்சியில் எனது குழந்தைகள் பயந்து அலறத் துவங்க நான் ராம் படத்திற்கு குட்டிச கூட்டிவந்தது நம் தவறு என்று நொந்தேன். நல்லவேளை பொம்மை போய் பாப்பா வந்தது. செத்துப்போன குழந்தமையின் குறியீடாக  தனியே தண்ணீரில் மிதக்கும் குழந்தை பொம்மை.

நல்ல வேலை கற்றது தமிழ் மாதிரி இல்லாது தங்க மீன்கள் உயிரோடு இருப்பது அதன் பின்னால் வலிந்து தொடரும் கருத்து பிரச்சாரம்.
 
தியேட்டரை விட்டு வெளியே வரும்பொழுது எனக்குள் எழுந்த கேள்வி ஒய்யால நான்கு தலைமுறை பாதுகாத்த கலாச்சாரம் சார்ந்த ஆதி குடிகளின் மழைத்தம்பத்தை விற்று வெளிநாட்டு நாய்க்குட்டி வாங்குவது என்ன நியாயம்? (பின்னால் ராம் ஆனந்த விகடனில் சீறிவிட்டார்) ஆனால் அனுதினமும் நாம் அதைத்தானே செய்கிறோம்.ஒவ்வொரு நாளும் என் மகள் குட் மார்னிங் டாடி என்று எழுப்பும் பொழுது நான் இதனை உணர்கிறேன்.

 சில வசனங்கள்பல இதயங்களில் பச்சக் என்று ஒட்டிக்கொள்பவை

 காசில்லாதவன முட்டாள்னு நினைக்காதீங்க.

சிம் விக்குதோ இல்லையோ நாய்க்குட்டி நல்லாவிக்குது (நமது நுகர்வுகலாச்சாரம்) 

காக்கா வந்து உங்ககிட்ட சொன்னதா மிஸ். 

உங்கட்ட குழந்தையாக தானே விட்டுப் போனேன் என்கிற கேள்வி..

சமூகப் பொறுப்பு திரைபடத்திற்கு எதற்கு என்பவர்கள் தவிர்க்கவேண்டும். நிறைய வாசிப்பும் இன்றைய சமூகம் குறித்த வார்த்தைகளில்சொல்ல முடியாஉணர்வுகளோடு இருப்பவர்கள், நிறய வாசிப்பவர்கள் படத்தைநேசிப்பார்கள்.  

படத்தின் பல நிறைகளுக்காகவும், அது எழுப்பும் பல கேள்விகளுக்காகவும்
நாம் படத்தை பார்க்கலாம்.

படத்தின் மூலமாக நான் கருதுவது ஜன்னலில் ஒரு சிறுமி (டோட்டோ சான்), எனக்குரிய இடம் எங்கே, கிஜுபாய் போன்ற கல்வி ஆய்வு நூல்களை. இவை எல்லாவற்றையும் திரையில் கலந்தால் கிடைப்பது தங்க மீன்கள்.  இதற்காவே ஆசிரியர்கள் ஒருமுறை படத்தை பார்க்கலாம். 

சில படைப்புகள் அவற்றின் காலத்தில் சரியாக அங்கிகரிப்படாமல் போவதும் பின்னால் கொண்டாடப்படுவதும் இலக்கியத்தில் இதெல்லம் சகஜமப்பா. இந்த திரைப்படத்திற்கு இது பொருந்தும்.

அன்பன் 
மது 

மிக நீண்ட நாள்கள் கழித்து ஒரு பதிவிடும் அவசியத்தை இந்தப் படம் உருவாக்கியது. அதற்காக ஒரு நன்றி.

Comments

 1. நேர்த்தியான தொடக்கம்(ஒரு சராசரியின் பார்வையில்...)
  என்னை ஈர்த்த வரிகள்
  -*- ஈஸ்டர் முட்டைகளாய் விரவி கிடக்கின்றன.
  -*- பிழைப்புவாத முதல்வரின் நெற்றியில் மின்னும் நாமம் நமது சமனில்லா சமூகத்தின் குறியீடு.
  -*- நிறைய வாசிப்பும் இன்றைய சமூகம் குறித்த வார்த்தைகளில்சொல்ல முடியாஉணர்வுகளோடு இருப்பவர்கள், நிறய வாசிப்பவர்கள் படத்தைநேசிப்பார்கள்.
  ஒரு திரைப்படம் என்பது அவன் வாழுகிற சமூகத்தின் அன்றைய நடைமுறை சூழலை பிரதிபலிக்க வேண்டும் என்ற சமூக பொறுப்பை உணர்த்தும் தங்களின் வீரியமான விமர்சனத்திற்கு எனது பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி திரு கார்த்திக் நண்பா.

  ReplyDelete

Post a Comment

வருக வருக