எப்பாடுபட்டாவது தன் குழந்தைக்கு சிறந்த கல்வியை தந்து, அழகான வாழ்கையை ஏற்படுத்தி தர வேண்டும் என நான் பிறக்கும் முன்பே கனவு கண்டவர்கள் என் பெற்றோர். தன் மகளுக்கு தமிழரசி என பெயர் வைத்தாலும், ஆங்கில வழி பள்ளியில் படிக்கவைக்க விருப்பப்பட்டனர். நான் மூன்றாம் வகுப்பு பயிலும் போது, என் அப்பாவின் மாத வருமானம் ரூ.1,000. என் பள்ளி மாதக்கட்டணம் ரூ.325. அதாவது என் தந்தையின் 30 சதவீத உழைப்பை என் கல்விக்கு செலவிட வேண்டும்.
சம்பளம் வர தாமதமாகும் சில மாதம் கல்விக்கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்த முடியாது. ஒரு முறை கல்வி கட்டணம் செலுத்தாததற்காக, முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கபடவில்லை. பணத்துடன் பள்ளிக்கு வந்தால் தான், தேர்வு எழுத முடியும் என கூறி என்னை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். என்னசெய்வது என தெரியாமல் வீட்டிற்கு வந்தேன். வீட்டில் இருந்த அம்மா என்னை பார்த்ததும் பதற்றமடைந்தாள். அம்மா படிக்காதவள். இன்றைய தினம் தேர்வு எழுதாவிட்டால், தன் மகளின் படிப்பே தடைபட்டுவிடும் என நினைத்துக்கொண்டாள்.
அம்மாவிடம் பணம் இல்லை. அப்பா வேலைக்கு சென்று விட்டார். அப்போது தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. அம்மாவிற்கு என்ன செய்வது என புரியாமல், வீட்டிற்கு அருகில் தெரிந்தவர்கள் பலரிடம் பணம் கேட்டு, அரைமணிநேரம் அலைந்துதிரிந்து ஒரு வழியாக பணத்தை புரட்டினாள்.
தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடம் என இரண்டு தண்ணீர் குடங்களை ஒரே நேரத்தில் எளிதாக தூக்கி நடக்கும் என் அம்மா, அப்போது லேசானா அந்த ரூபாய் தாள்களை கையில் நாம்பிபிடிக்க முடியாதவளாய் தடுமாறினாள். மூச்சிறைக்க என்னை தூக்கிக்கொண்டு பள்ளியை நோக்கி வேகமாக நடந்தாள். உடனடியாக கல்விக்கட்டணத்தை செலுத்திவிட்டு, தேர்வு எழுத போ என அனுப்பி வைத்தாள். அப்போது தான் என் அம்மாவின் முகத்தில் இருந்த பதற்றம் தணிந்தது.
இத்தனைக்கும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி நான். அதை கூட அந்த தனியார் பள்ளி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை. படிப்பிற்கு இல்லாத மரியாதை பணத்திற்கு தான் உண்டு என்பதையும், இலவச இணைப்பாக தாழ்வு மனப்பான்மையையும் என் எட்டாவது வயதிலேயே எனக்குள் அந்த பள்ளி விதைத்தது.
பணம் இருக்கும் இடத்தில் பணம் இல்லாமல் இருப்பது கடினம் என்பதை அப்போதே என் கல்வி எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு முறையும் பள்ளிக்கு கல்விக்கட்டணம் செலுத்த என் பெற்றோர் பட்டபாட்டையும், ஒரு குழந்தையாக நான் அதை எதிர்கொண்ட போது இருந்த மனநிலையையும் தங்கமீன்கள் படத்தில் அப்படியே எதார்தமாக பார்த்தேன்.
மோசமான கல்வி முறையை விவரிக்கும் தோனி உள்ளிட்ட சில படங்கள் தமிழில் ஏற்கனவே வந்திருந்தாலும், தன் குழந்தைகளின் கல்வி மீதான பெற்றோரின் கனவுகளை, தனியார் பள்ளிகள் எப்படி பணமாக மாற்றுகிறது என்பதை சொல்லியிருக்கிறது தங்கமீன்கள். கல்வியை வியாபாரமாகவும், குழந்தையை வாடிக்கையாளராகவும் தனியார் பள்ளிகள் கையாளும் போக்கை படத்தில் அற்புதமாக சொல்லியிருக்கிறார் ராம்.
தனியார் பள்ளிகளின் மோசமான செயல்பாடுகளை தாண்டி, தந்தை மகள் உறவு, தொழில்நுட்ப வளர்ச்சியால், நலிவடையும் சிறு, குறு தொழில்கள், குடும்ப உறவுகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் அவல நிலை என பலவற்றை படம் பேசியிருக்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத, அழகிய படைப்பு தங்கமீன்கள். அரசு பள்ளிகளை தாங்கி பிடித்ததற்காகவே, தங்கமீன்களை கொண்டாடலாம்..
Nice words from https://www.facebook.com/tamilarasi.dhandapani.1
பெற்றோர்களின் ஏக்கங்கள் அவர்களின் கவலைகளை தனியார் பள்ளிகள் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு தேவை பணம். மனித உணர்வுக்கு அங்கே இடம் இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர்களைப் பெற்றோர்கள் மனமுவந்து சேர்க்கும் சூழ்நிலையை இன்றைய ஆசிரியர் சமுதாயம் உருவாக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete