மதுரை ஒரு சமூக ஆய்வு சில அதிர்வுகள்

tamil, granny
“தேசிய அளவில் முதியோரைத் துன்புறுத்துவதில் மதுரை முதலிடத்தில் உள்ளது.” என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய ஆய்வு. ‘பாசக்கார பயபுள்ளைய’ நிறைந்த மதுரையிலா இப்படி.? அதிர்ந்து போனோம். தில்லியில் செயல்படும் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் குறித்து ‘இந்தியாவில் முதியோர் துன்புறுத்தல்- 2013’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு நாளான ஜூன் 15-ஆம் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டது.


இந்திய முதியோர்களில் ஐந்தில் ஒருவர் அவர்களுடைய குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் முதியவர்களை துன்புறுத்துவதில் பெருநகரங்கள் 63.5% மதுரை தேசிய அளவில் முதியவர்களை துன்புறுத்துவதில்
1.ஹைதராபாத்
2.கொல்கத்தா
3.தில்லி
4.சென்னை

இந்திய முதியோர்களில் ஐந்தில் ஒருவர் அவர்களுடைய குடும்பத்தினரால் துன்புறுத்தப் படுகின்றனர் . தேசிய அளவில் முதியோரைத் துன்புறுத்துவதில் மதுரை முதலிடத்தில் உள்ளது. மதுரையில் 63.5 சதவிகிதம் முதியவர்கள் தங்களது குடும்பத்தினரால், உறவினர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முதியோர் துன்புறுத்தல் 60 சதவிகிதமாக உள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தவரை முதியவர்களை துன்புறுத்துவதில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கொல்கத்தா, தில்லி நகரங்கள் உள்ளன. சென்னைக்கு நான்காவது இடம்.

முதியோர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? என நாம் விசாரிக்கத் தொடங்கி பின்னர் காதுகளில் வந்து விழுந்த தகவல்கள் அத்தனையும் கண்ணீரை வரவழைக்கும் ரகம்..

முதியோரை வீட்டில் வைத்திருக்கவும் பிடிக்காமல், முதியோர் இல்லத்தில் அனுப்பினால் தங்களைப் பற்றி வெளியே என்ன சொல்வார்களோ என நினைத்து அவர்களைக் கொல்வது சர்வசாதாரணமாக நடக்கிறது தெரியுமா?” கேள்வி எழுப்பினார் சமூக ஆர்வலர் ஒருவர். அவரே தொடர்ந்தார். மதுரை மட்டுமல்ல விருதுநகர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலுள்ள சில கிராமப்பகுதிகளில் ‘படுத்த படுக்கையாகக் கிடக்கும் பெற்றோரை’ பராமரிக்க அவர்களது பிள்ளைகள் விரும்புவதில்லை. அவருக்கு தேதி குறித்துவிடுவார்கள். அதாவது, முதலில் அவர்களுக்கு ‘தலைக்கோதல்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வார்கள். தலைக்கோதல் என்றால் நோய்வாய்ப்பட்டிருக்கும் நபரின் தலையில் தாராளமாக நல்லெண்ணெயை அரக்கத் தேய்த்து படுக் கவிடுவார்கள். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவரைத் தூக்கி வைத்து குளிப்பாட்டு வார்கள். அதிலேயே அவருக்குக் காய்ச்சல் வந்துவிடும். பின்னர் வலுக்கட்டாயமாக அவருக்கு வாந்தி வரும் வரை இளநீர் ஊட்டுவார்கள். இதனால் காய்ச்சல் உச்சகட்டத்தை அடைந்து ஜன்னி கண்டு இரண்டு நாட்களுக்குள் அந்த வயதானவர் இறந்துவிடுவார். இப்போது இரண்டு நாட்கள் கூட பொறுப்பதில்லை. படுத்த படுக்கையானவரை ஊசி போட்டு ஒரு சில மணி நேரத்தில் கொன்றுவிடுகிறார்கள்..” என்ற அதிர்ச்சித் தகவலைச் சொன்னார் அவர்.

இந்தத் தகவலை நம்மிடம் உறுதி செய்தார் விருதுநகர் மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சி.ஐ.டி.யூ. தலைவருமான அசோகன்

“விருதுநகர் ரயில்வே காலனியின் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்த என் உறவினர் . அவரது மனைவி இறந்த பின்னரும் மகன்களிடம் செல்லாமல் சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்துவந்தார். ஒருநாள் வேலைமுடிந்து நடந்து வந்து கொண்டிருந்த அவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் கீழே விழுந்தார். விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை முழுமை பெறாத நிலையில் வீ ட்டில் வைத்து மருத்துவம் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லி அவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றுவிட்டனர். அங்கும் அவரை வீட்டின் ஒரு சந்து போன்ற பகுதியில் போட்டுவிட்டனர்.

இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக எனக்குத் தகவல் தெரிவித்தனர் . நான் அங்கு சென்ற போ து அருப்புக்கோட்டை முனிசிபல் காலனியில் வசிக்கும் ஒரு பெண்ணைக் கூட்டி வந்து அவருக்கு பீஸாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து விஷஊசி போட்டுக் கொன்றதாக அறிந்தேன். இப்படி விஷஊசி போட்டுக் கொல்ல அந்தப் பகுதியில் ஒரு கும்பலே இயங்கி வருவதாகத் தெரியவந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர், விருதுநகர் மாவட்ட கலெக்டர், காவல்துறை எஸ்.பி. ஆகியோருக்குப் புகார் செய்தேன்” என்றார் அசோகன்.

அதுமட்டுமல்லாமல், நோய்வாய்ப்பட்டிருக்கும் முதியோருக்கு விவசாய பூச்சி மருந்துடன் இனிப்பைக் கலந்து ‘டானிக்’ என வாயில் ஊற்றி கொல்லும் ‘டெக்னிக்’ நடைமுறையில் இருக்கிறது. அதுபோல தென்னைமரத்தில் வண்டுகளை ஒழிக்க வைக்கும் மாத்திரையை சத்துமாத்திரை என விழுங்க வைத்துக் கொல்லும் முறையும் நடைமுறையில் இருக்கிறது. ” என்கிறார்கள் சிலர்.

சமூக ஆர்வலரும் பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவரும் முதியோர் புறக்கணிப்பைக் கண்டித்து தொடர் பிரசாரம் செய்து வருபவருமான ஆர் சொக்கலிங்கம் கூறுகையில்,

“வயதாகி விட்டால் உடல் நலிந்து, தோல் சுருக்கம் விழுந்து, சாப்பிடுவது குறைந்து, நோயில் விழுந்து முதியோர் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் முதியவர்கள், வீ ட்டில் இருப்பவர்களின் அலட்சியத்தை, நிராகரிப்பைத்

தாங்க முடியாமல் தவிக்கிறார்கள். பெற்றோர் சம்பாதித்த சொத்து களைத் தங்கள் பெயரில் மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு அவர்களுக்குச் சாப்பாடு கூட போடாமல் இம்சிப்பது நடக்கிறது. தரக்குறைவாகத் திட்டுவது , ஆசைப்பட்டு ஏதாவது கேட்டாலும் வாங்கித் தராமல் அலட்சியப்படுத்துவது என பல வகைகளிலும் முதியோர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். முதியவர்களுடன் இவர்கள் பேசாததோடு பேரன், பேத்திகளைக் கூட பேச அனுமதிப்பதில்லை. இதைத் தாங்க முடியாமல் மனம் புழுங்கிப் போகிறார்கள் வயதான பெற்றோர்.இந்த உளவியல் ரீதியான கொடுமைப்படுத்துதலை

நோயுற்று உணவு உட்கொள்ள இயலாத பெற்றோரை, பிள்ளைகளே அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்ட, திரும்பிப் பார்க் காமல் செல்லும் நிகழ்வுகளும் அதிகமாகி வருகின்றன. அப்படி விட்டுச் செல்லும் முதியோரை மருத்துமனைகளும் நிராகரிக்கின்றன. இதனால், அந்த முதியோர் போக்கிடம் இன்றி மருத்துவமனை அருகிலோ வளாகத்தினுள்ளோதுவண்டு கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மதுரையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அநாதை முதியோர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கொடைரோடு அருகே உள்ள தனியார் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

பெற்றோருக்கு ஆகும் மருந்துச் செலவு கூட பிள்ளைகளுக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. எனவே அரசு முதியோர்களுக்கான மருந்து, மாத்திரைகள் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடியிலும் கிடைக்கச் செய்யலாம்.. முதுமை தரும் சில நோய்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்கின்ற ஆலோசனையை முதியவர்கள் புரிந்து கொள்ளும் வகையில்சொல்லக்கூடிய ‘ஜெரியாட்ரிக் கவுன்சிலர்’களும் முதியோர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். ” என்றார் சொக்கலிங்கம்.

முதியோர் நலனுக்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் மதுரை இந்திரம் டிரஸ்ட் அமைப்பின் வழக்குரைஞர் கா. ராம்பிரபு நம்மிடம்..

“முதியோர்கள் துன்புறுத் தலைத்தடுக்க எங்கள் அறக்கட்டளை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதியோர் தரும் மனுக்களைப் பெற ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சிறப்பு எஸ்.ஐ. நியமிக்க வேண்டும் என்று தென்மண்டல காவல் துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டொம், அத்தோடு முதியோர் நிலையங்களில் அனுமதிக்கப்படுவோர், வெளியேறுவோர், இறந்து போவோர் பற்றிய தகவல்களை அந்தந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் முதியோர் இல்ல நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டு வந்தோம். இதெல்லாம் சில காலம் நடந்தது. அதன் பிறகு அப்படியே விட்டுவிட்டார்கள். அதுபோல அரசு மருத்துவமனையில் முதியோர்களுக்குத் தனியாக வார்டு, மருந்துவாங்குமிடம் போன்றவையும் ஏற்பாடு செய்யப் பட்டது. காலப்போக்கில் அதையும் கைவிட்டார்கள்.

மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பு குறித்தும், நிதிப் பாதுகாப்பு குறித்தும் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதியோர், பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் சொல்கிறது.

முதியோர் பாதுகாப்புச் சட்டப்படி மாவட்டம் தோறும் முதியோர் நலன் பேணும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கலெக்டர் தலைவர். அதில் நானும் உறுப்பினர். ஆனால் ஆண்டுகள் பல ஆகியும் இந்தக் குழு இதுவரை கூடவில்லை. முதியோர் பாதுகாப்புச் சட்டத்தை தீவிரமாக அமலாக்க சமூகநலத்துறையில் தனி அதிகாரி நியமிக்கப்படவேண்டும். இதையெல்லாம் ஏன் மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பி பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளேன். குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்தியது போல முதியோர் இல்லங்களையும் முறைப்படுத்திட வேண்டும்.” என சொன்னார் வக்கீல் ராம் பிரபு.

கடைசியாக பெற்றோரைக் கொண்டுவிடும் இடமாக முதியோர் இல்லங்கள் மாறி விட்டன. இது குறித்து முதியோர் இல்ல நிர்வாகி பியூலா கூறுகையில்,

“ முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை மற்ற ஊர்களைவிட மதுரையில் மளமளவென அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. முதியோர் இல்லங்கள் என்ற பெயரில் இல்லாமல் இலவச உணவு வழங்கும் இடம்.. தங்கும் இடம்.. என்ற பெயரில் கிராமங்களில் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. பணம் கொடுத்து தங்கும் முதியோர் இல்லங்கள் எண்ணிக்கை குறைவு தான்.

நல்ல பணியில் இருக்கும் மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் என அனைவரும் இருந்தும் ஒரு மூதாட்டி அநாதை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். மாமியாரை அநாதை இல்லத்தில் சேர்த்த மருமகள் மாமனாரை தன்னுடன் தங்க அனுமதித்திருந்தார். அதற்குக் காரணம் மார்க்கெட் போக, பிள்ளைகளைப் பள்ளிகளில் கொண்டு விட்டு கூட்டிப்போக அவர் தேவைப்பட்டார்.

முதியோர் இல்லங்களில் முதி யோர்களை சேர்த்துவிடும் போது சரியான முகவரியைச் சொல்வதில்லை. அத்தோடு அவர்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத் தையும் பலர் சொல்வ தில்லை. முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்படுகிறவர்களில் 65 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இங்கிருப்பவர்களின் பொது குணாதிசயங்கள் என்னவென்றால் தங்களுடன் யாராவது பேசவேண்டும் என நினைப்பார்கள். அதிலும் பேரன், பேத்தி வயதிலுள்ளவர்கள் வந்தால் ரொம்பவே மகிழ்வார்கள். அவர்கள் மகிழ்வாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்கும் மனது லேசாகும். வாழ்க்கை என்பது இதையெல்லாம் தவிர வேறு ஏது..?” சொல்லி முடித்த பியூலா கண்ணில் நீர் முட்டியது.

முதுமையில் வரும் நோய் மற்றும் பிரச்னை குறித்து தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சிலின் தலைவரும் பிரபல டாக்டருமான ஜி.பி. ஹனிமனிடம் கேட்டோம்..

“முதுமை ஒரு நோயல்ல. அது வாழ்வின் ஒரு பருவமே. முதுமைப்பருவம் (Old Age) என்பது நாணயத் தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. ஒரு பக்கம் வயதின் முதிர்ச்சி, அனுபவம், அறிவு. மறு பக்கமோ தள்ளாமை, கொடிய நோய், வறுமை, தனிமை, மரணபயம் போன்றவை.

உடல்ரீதியாகவும், உளரீதியாகவும், சமூக ரீதியாகவும் இவர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. வயது முதிர்வுறும் வேளையில் நண்பர்களை இழக்க நேரிடும், இளையோர் மீது கோபம் ஏற்படும். பழைய நினைவுகள் மறந்து போகும். வரப்போகும் நோய்கள் பற்றிய பயம் ஏற்படும். எந்த மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் திறன்குறையும். கண்பார்வை குன்றும். தலைமுடி நரைக்கும் . நிமிர்ந்த நடை குறையும், பற்கள் வலு குறைவடையும், உடலில் எங்கும் வலி ஏற்படும்.

முதுமையில் வரும் முக்கிய நோய்களான உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல சிகிச்சை உண்டு. ஆனால் ஒருசில நோய்கள் முதியவர்களை நேரிடையாகவோ அல்லது மறை முகமாகவோ தாக்கும் அபாயம் உள்ளது. அதில் அறிவுத் திறன் வீழ்ச்சி (டிமென்ஷியா) எனும் நோய் முதியவர்களுக்கு வரலாம். இந்த நோயின் முக்கிய அறிகுறி ஞாபக மறதி. நிகழ் காலத்தை அறவே மறந்து விடுவார்கள். முக்கியமாக 70 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இது அதிகமாக வருகிறது. நம் நாட்டில் 50 லட்சம் முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதியவர்களைத் தாக்கும் மற்றொரு நோய் எலும்பு பலவீனமடைதல் (ஆஸ்டியோ பொரோஸிஸ்) வயதான காலத்தில் சில முதியவர்களுக்கு, முக்கியமாகப் பெண்களுக்கு எலும்பிலுள்ள சுண்ணாம்பு சத்து மற்றும் சில ஊட்டச்சத்துகள் குறைவதால் எலும்புகள் வலிமை இழக்கின்றன. நோய்களெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.முதியோரை அதிகம் பாதிப்பது, தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லையோ என்ற எண்ணம் தான். இப்போது இதை நாம் கவனிப்பது மிக அவசியம். ஏனெனில் முதியோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அடுத்த 25 ஆண்டு களில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 18 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். அதை எதிர்கொள்ள இப்போதே தயாராகவேண்டும் என்றார் டாக்டர் ஹனிமன்.

தாய் போனால் அன்பு தொலையும். . தந்தை போனால் அனுபவம் தொலையும்.. இதெல்லாம் நினைவில் நிற்கும் வார்த்தைகளாக மட்டும் மாறிவிடுமோ என்ற கவலை மனதை அரிக்கிறது.

- ப.திருமலை

Comments

  1. மனம் கனக்கிறது.வார்த்தைகள் வர மறுக்கின்றது

    ReplyDelete

Post a Comment

வருக வருக