வாசிப்பை நேசிப்போம்... இவனுக்கு அப்போது மனு என்று பெயர்..


ஜே சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தென்காசி வரை செல்ல வேண்டி இருந்தது. டவேரா கொள்ளும் அளவிற்கு மேல் ஆட்களை அழுத்திக்கொண்டு பயணப்பட்டோம். நீண்ட பயணங்கள் நல்ல புரிதல் உள்ள நண்பர்களைதர வல்லது.  பயணம் மனிதர்களின் இறுக்கத்தை தளர்த்தி பேசவைக்கும். பல்வேறு விசயங்களின் மீது தாவிய பேச்சு கடைசியில் வாசிப்பு குறித்து திரும்பியது.  வாசிப்பின் சுவை கிராமத்து மாணவர்களுக்கு பிடிபட்டுவிட்டால் அவர்கள் வளர்ச்சி துரிதப்படும் என்று நான் சொல்ல, அதுவரை அமைதியாக வந்த எனது தோழர் ஒருவர், ஆம். என்றார் தொடர்ந்து சொன்னார் நான் அனுபவித்திருக்கிறேன். நான் புரியுறமாறி சொல்லுங்க என்றேன்.


நான் என் மேல்நிலைப் படிப்பிற்கு அப்புறம் படிப்பை மூட்டை கட்டி தூக்கி போட்டுவிட்டு கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் எனது மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு புத்தகத்தை படிக்கலாம் என்று படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க அந்த நூல் என்னை எதோ செய்து என்னுள் ஆயிரம் கேள்விகளை விதைக்க நான் விடைகளை தேட ஆரம்பித்தேன். எனது பயணத்தை துவக்கியது அந்த நூல்தால். நான் அப்படி என்ன நூல் அது என்று கேட்க உன்னால் முடியும் தம்பி என்றார்.

இன்று அவரை தெரியாத புதுகை மக்களே இல்லை அவரது வளர்ச்சி எல்லாம் ஒரு வயலில் மர நிழலில் கிடைத்த ஒரு புத்தகத்தின் தாள்களுக்குள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது என்பது எவ்வளவு விநோதமானது. வாசிப்பு வாழ்வை மாற்றும் தோழர்களே, பகத்தால் தூக்கு கயிற்றின் நிழலில் கூட வாசிக்கமுடிந்திருகிறது. ஆனால் இன்றய மாணவ சமூகம் வாசிப்பென்றால் என்னவென்றே தெரியாது வளர்கிறது. சமீப காலம் வரை வாசிப்பிற்கு எதிரான தனிப்பெரும் பேரியக்கமாக  நமது கல்வி முறை இருந்ததையும் நாம் நினைவுகூர வேண்டியிருகிறது. சமசீர் எ. எல். எம் என்று கொஞ்சம் ஆரோக்கியமான மாறுதல்கள் கல்வியையும் சமூகத்தையும் நேசிக்கும் நெஞ்சங்களில் வெளிச்சத்தை விதைத்திருக்கிறது.



ஆமா புத்தகம் என்ன செய்யும். சிரிக்க வைக்கும், நெகிழ்த்தும், அறிவுறுத்தும் ஒவ்வொன்றும் ஒரு தனித்த அனுபத்தை தனக்குள் வைத்துக்கொண்டு தீண்டும் விரல்களுக்கு விளக்கேற்றும். இத்துணை ஆண்டு பணிக்குப் பிறகும் மாணவரை அணுக மனிதத்துடன் அவர்களை நடத்த நமக்கு வாசிப்பு தேவைப்படுகிறது. மாடசாமியின் எனக்குரிய இடமெங்கே? படிக்காது ஆசிரியராக இருத்ததல் சாத்தியமா? அவ்வப்பொழுது இதுமாதிரி நூல்கள் வருவது கல்வித்துறைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்லது.

அப்படி ஒரு புத்தகம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது, யப்பா புத்தகமா அது? ஒவ்வொரு தாளையும் புரட்டும்போது என் இதயத்தை ஒருமுறை புரட்டியது. எஸ்ராவின் சில படைப்புகளை படித்துவிட்டு அவற்றின் உணர்வும் சுவையும் மனதில் இறங்க ஈரம் கசியும் விழிகளோடு மோன நிலையில் இருதிருக்கிறேன். கங்கையில் மகனுக்கு பாரமாக இருக்ககூடாது என குதித்த பாட்டியின் ஏதார்த்தம் ஒரு பருக்கை. இது போன்ற அனுபவங்களை எப்போதாவதுதான் பெற முடியும் என நினைத்திருந்தேன். கடந்த ஞாயிறு வரை.

கடந்த ஞாயிறு அன்று அறிமுகமான தோழர் ஒருவர் ஒரு நேர்த்தியாக அச்சிடப்பட்ட அழகாக அட்டையிடப்பட்ட ஒரு நூலை நட்புடன் வழங்க நான் எதார்த்தமாய் வாங்கி வைத்தேன். ஆரம்பித்த கணத்திலேயே முடிக்காமல் வைக்ககூடாது என்று தோன்றியது. ஒரு பச்சை மண்ணை கிழிந்த பனியனில் வாங்கிய அவலத்தை ஒரு எளிய அலாதியான பக்குவப்பட்ட நடையில் இவர் விவரிக்கும் விதத்தில் நம்மை விம்ம வைக்கிறார். ஒரு ஏழாம் வகுப்பு மாணவிக்கு தெரிந்தது கூட அரசுக்கு தெரியாதா என்கிறபொழுது நம்மை ஒரு பெருமூச்செரிய வைக்கிறார். ஒரு கைப்பக்குவம்வாய்த்த சமையர்கலைஞரின் அறுசுவை விருந்தைப்போல் நூல் நெடுக இவர் எடுத்தாண்ட கவிதைகள் ஆகா ஆகா ஆகாகா.

"பலரும் சொல்கிறார்கள்
பெயரில் என்ன இருக்கிறது?
சேரி
பறையன்
தேவடியாள்
பீ, மூத்திரம், கொசு
பண்ணி,
கழுதை, கருவாடு
பூணூல்
அப்பம், வடை, தயிர், சாதம்
ஆங்கிலம்
சமஸ்கிருதம்
மனு
அமெரிக்கா
சங்கர மடம்
கொழும்பு
வள்ளாலார்
பெரியார்
அம்பேத்கர்
மார்க்ஸ்
பெயருக்குப் பின்னால்
எல்லாம் இருக்கிறது"
                இரா.காமராசு
என ஒரு கவிதையை எடுத்து மிக சரியாக அதை சரியான இடத்தில சொருகுகிறபொழுது, எப்படி இப்படி ஒரு கவிதையை தவறவிட்டோம் என ஒரு ஆயாசம், அதை தொடர்து இவரது கட்டுரை ஒரு நேர்க்கோட்டில் பயணித்து ஒரு அதிவினை பதிவு செய்து அப்படியே முடியும் பொழுது ஒரு நல்ல வாசித்தல் அனுபவத்தை தருகிறது. ஒரு கருத்தை அறிமுகம் செய்வது, வளர்ப்பது, அதிரடிப்பது இறுதியாக மருந்துதடவுவது என எத்துணை ஜாலங்களை செய்கிறது இவர் எழுத்து. புரையோடிப்போன தற்கால கல்விமுறைமீது இவர் தொடுக்கும் போர் எது செய்யக் கல்வி என விரிகிறது.

நெடு நாள் திரு முருகா
நித்தம் நித்தம்
இந்தெழவா?
இந்த வாத்தியாரு சாவார?
என் வயித்தெரிச்சல் தீராத?

என்ற கவிதையை நான் வகுப்பில் வாசித்த பொழுது ஒன்பதாம் வகுப்பை விட பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலாகித்து சிரித்தார்கள். எவ்வளவு நாள் இறுக்கமோ? இப்படியாவது தளர்ந்ததே என்ற நினைப்பில் நான். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாக இவர் விவாதிக்கும் இர்பானின் செயல் ஏன் அவன் தனது ஆசிரியையைக் கொன்றான் என்று விவாதித்து முடிவுகளை சொல்லும் பொழுது நாமும் சிந்திக்க தொடங்குகிறோம். காமராஜுக்கு ஒரு கடிதம் முடியும் பொழுது நாமும் விழிநீரை வடிக்கிறோம். கல்வி குறித்தும், அதில் ஆரோக்கியமான மாற்றம் குறித்தும் பொறுப்புடன் சிந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரின் இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல், நூல் இல்லத்தில் இருக்கட்டும் கருத்து உள்ளத்தில் இருக்கட்டும். தவறவிடக் கூடாத நூல் தோழர்களே. இது போன்ற வாசிப்பு என்னை புத்தாக்கம் செய்கிறது. எனது மாணவர்களை வேறுமாதிரி பார்க்க வைக்கிறது. நன்றி தோழர் எட்வின்.

நூலின் பெயர் : இவனுக்கு அப்போது மனு என்று பெயர்
ஆசிரியர் : இர. எட்வின்
பதிப்பகம் : சந்தியா
ISBN : 978-93-81343-11-1
sandhyapathippagam@gmail.com
sandhyapublication@yahoo.com
PH: 044-24896979
www.sandhyapublications.com


அன்பன்
மது



Comments

  1. சிறந்த நூல் .தங்களின் விமர்சனமும் அருமையாக உள்ளது.அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  2. ஆவலைத் தூண்டும் விமர்சனம்... தகவலுக்கு நன்றி...


    துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
  3. படிக்கத் தூண்டும் பதிவு அருமை. சிறந்த நூலுக்கு சிறப்பான விமர்சனம். எப்படிங்க பதிவாப் போட்டுத் தள்ளிறீங்க! உண்மையில் உங்கள் சுறுசுறுப்பு நான் கற்றுக் கொள்ள வேண்டியது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக