ஒரு கருத்தரங்கம்

காலை நண்பர் அபுவை பார்த்துவிட்டு கோவிலுக்கு சென்று பள்ளிக்கு செல்லலாம் என்று வண்டியை திருப்பிய பொழுது தலைமையாசிரியர் அழைத்தார், இன்று ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் பயிற்சி இருக்கிறது சென்று வாருங்கள் என்று சொன்னார்.எனக்கு சொரேர் என்றது. அடியேன் ஒரு வண்ண சட்டையை அணிந்து பள்ளிக்கு கிளம்பியிருந்தேன். ஜே.ஆர். சி வெள்ளை சீருடையை வலியுறுத்துவது. சரி என்று மிஸ்ட் சென்று கார்டை தேய்த்து ஒரு சட்டையை வாங்கி அங்கேயே அணிய முற்படும் பொழுது வீதியில் சென்ற ஒரு பெண் நக்கலாய் சிரித்துவிட்டு போனாள். எல்லாம் நேரம்டா சாமி.
இது ஒரு ஓவியம் திரு தனபாலன் கைவண்ணம்.

முன்மாதிரிப் பள்ளி புதுக்கோட்டையின் கல்வி அடையாளங்களுள் ஒன்று. என் பள்ளி. எனது இனிய நண்பர் கார்த்திக்கை எனக்கு தந்த பள்ளி.  உள்ளே நுழைந்தவுடன் கொஞ்ச நேரம் வேதியியல் ஆய்வகத்தை பார்த்துக்கொண்டே நின்றேன். என்னுடைய வேதியியல் ஆய்வக செய்முறைத்தேர்வு நினைவிலாடியது. நாங்கள் எல்லோரும் தேர்ச்சியுற தோழன் பாஸ்கல்  தவறிப்போனது அங்குதான். இன்று நான் ஆசிரியர், அவர் கொட்டகைகாரர். ஒரு பெருமூச்சுடன் பயிற்சிக்கு சென்றேன். 

 ஜே.ஆர்.சி மாவட்ட அமைப்பாளர்கள் ராஜேஷ், மீனாட்சி சுந்தரம், சொல்லுக்கும் செயலுக்கும் வித்யாசமில்லாத வாழ்வை வாழ்ந்து காட்டிவரும் பாவலர் பொன்.கருப்பையா, அஜ்மீர், குழிபிறை ராமநாதன் பள்ளி ஓவிய ஆசிரியர் தனபால் என பயிற்சிக் குழுவினர் பரபரப்பாய் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
திரு தனபாலன்

ஆலோசகர்கள் நிறைந்த அரங்கை சிறப்பு அழைப்பாளர்கள் வரும் வரை நிர்வகிக்கவேண்டிய பொறுப்பு திரு பொன்.கா அவர்கள் வசம். மனிதர் கைதட்டல், பாடல் பயிற்சியையும் திறன்பட கையாண்டார்.

மிக மென்மையான இனிமையான குரலில் ச.தொ.தமிழ்மாறன் அய்யா பாடிக் கேட்டிருந்த எனக்கு பாவலர் பொன்.காவின் சிம்மக் குரல் செவி விருந்து. இப்படியும் தத்தி கரோ நிர்மல்  பாடலை பாட முடியுமா? பேராச்சர்யம் எனக்கு.

ஓவிய ஆசிரியர் தனபாலன் அவர்களின் கைவண்ணத்தில் பிளக்ஸ் சின்ன சின்ன திருத்தங்களுடன் ஜொலித்தது. தேதி மாற்றத்தை அவர் மாற்றி எழுதிய விதம் மனிதன் என்றும் தனித்துவமானவன். வண்ணங்களை துப்பும் ஒரு கருவியுடன் மனிதனின் திறனை ஒப்பிடுவது எவ்வளவு மடத்தனம் என்று நினைக்க வைத்தது.
செவ்வாய் புதனாக மாறியிருக்கிறது

விழா மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொறுப்பாளர்கள் ராஜேஷ், மீனாட்சி சுந்தரம் அவர்களின் அனுபவம் மிகத்தெளிவாக தெரிந்தது. அடுத்து விழாவின் சிறப்பு விருந்தினர்கள் வந்ததும் மீனாட்சி சுந்தரம் ஒரு மிக நீண்ட வரவேற்புரையை தந்தார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் திருமிகு. எஸ்.ராஜசேகர் அவர்கள் உரைவீச்சொன்றை தந்தார்கள்.

அரங்கை  பலமுறை குலுங்கி குலுங்க சிரிக்கவைத்து, சிந்திக்கவைக்கவும்  செய்தது அவரது உரை. இப்படி ஒரு உரையை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. அவருடய மாணவன் என்பதில் ஒரு கூடுதல் பெருமையையும் உணர்ந்தேன்.

தொடர்ந்து  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திரு.மிகு பரமசிவம் அவர்களின் நீண்ட உரை. பின்னர் பள்ளித் துணைஆய்வாளர் திரு. மாரிமுத்து, தலைமையாசிரியர்கள் திரு.பாபு, திரு. சரவணன் என அர்த்தமுள்ள உரைவீச்சாளர்களின் பங்களிப்பின் பின்னர் பொன்.கா முதலுதவி குறித்து ஒரு நேர்த்தியான பயிற்சியை தந்தார்.

 ஒருவர் வந்தார் ஒரு வார்த்தை கூட பேசாமல் அனைவரின் மனதிலும் நின்றார். அவர் புதுகையின் முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.நா.அருள்முருகன். ஐசான் வால்நட்சத்திரம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர் பேசிகொண்டு இருந்த பொழுது  குறுக்கீடு ஏதும் இன்றி வந்து கவனித்து பேசாமலே விடைபெற்றார். சில சான்றுகளை மட்டும் வழங்கினார். பேசி முத்திரை பதிப்பவர்களின் மத்தியில் பேசாமலும் முத்திரையை பதிக்க முடியும் என்று உணரவைத்தார்.

வெகுநாட்களுக்கு பின் எனது நண்பர் ஓவியர் ரவி, அண்ணன் அம்ரோஸ் என்று நண்பர்களை சந்திக்க ஒரு வாய்ப்பளித்தது நிகழ்வு.
உணவு ஏற்பாடு, ஒலிபெருக்கி ஏற்பாடு என்று பல விசயங்களை பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்த ஜே.ஆர்.சி. நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கு ஒரு நன்றி..


அன்பன்
மது

Comments

 1. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி... கவிஞரே ...

   Delete
 2. வணக்கம் சகோதரர்..
  அழகாக திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் நிரல்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி. எங்கள் பள்ளியில் இருந்து ஜே.ஆர்.சி பொறுப்பு ஆசிரியர் வேறொருவர் என்பதால் அவர் வருகை தந்தார். நான் வர வாய்ப்பில்லாமல் போனது. அழகாக நடந்ததை அற்புதமான நடையில் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி சகோ..

  ReplyDelete

Post a Comment

வருக வருக