நாயாகவேனும் பிறந்திருக்கலாமோ.?


 ஒரு சிறிய புல்லின் இதழில் கடவுளைக் காணும் பக்குவம் எனக்கு வேண்டும் என்கிறான் ஒரு ஆங்கிலக் கவிஞன்.  கவிதைக்காரர்கள் மனம் செயல்படும் விதம் எதார்த்த மனிதர்களின் மனங்களில் இருந்து முற்றிலும் வேறானது.
 நாம் ஒரு பார்வை வீச்சில் அலட்சியப்படுத்தும் ஒரு சிறு செயல் இவர்களின் கவிதையில் அமரத்துவம் பெற்றுவிடுகிறது.  அப்படி ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
வழக்கம் போல் நந்தனின் கவிதைதான் இது..




நாயாகவேனும் பிறந்திருக்கலாமோ..
அன்றைய வசூல்
ஐம்பது ரூபாய்
கொடுக்காததற்காக
அந்த
பூக்காரப் பெண்மணியின்
கற்பு பற்றிய சந்தேகங்களை
பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்
அந்த
கந்து வட்டிக்காரர்..

அண்ணே..
கொஞ்சம் பக்கத்துல
வாங்கண்ணே
என்றழைத்து
அந்த தட்டை
துழாவி கண்டடைந்து
சத்தமெழுப்பாமல்
ஐந்து ரூபாய்
பிச்சை போட்டு விட்டுப்
போகிறார்
கண் தெரியாத பேனா விற்பவர்..

இரவு நேர
உணவுக்கடையின்
கழிவுகளை அப்புறப்படுத்தும சிறுவன்
கடைதாண்டி
மட்டையாகிக் கிடக்கும்
அவனது அப்பா போன்ற ஒருவனின்
வேட்டியை
சரி செய்துவிட்டுப் போகிறான்..

தங்கியிருக்கும்
விடுதியின் கைப்பிடிச்
சுவர் தாண்டி
வேடிக்கை பார்க்கிறேன்..

உடல் சுருண்டு
குளிரை
வரவேற்பதாகவோ வெறுப்பதாகவோ
படுத்துக் கொண்டிருக்கிறது செவலை நாய்..

பிடித்தவன் என்றால்
வாலை ஆட்டும்..
பிடிக்காதவன் என்றால்
குலைக்கும் அல்லது கடிக்கும்..
இந்த எளிய நாயின்
நீதிகள் கூட இல்லாத நான்

.....
.....
.....

நாயாகவேனும் பிறந்திருக்கலாமோ..'


---
எப்படி இருக்கிறது கவிதை? 

007 என்பது இயான் பிளமிங் தினம் பயன்படுத்திய லண்டன் நகர பேருந்தின் எண்.

வெகு மக்களின் கவனம் பெறா ஒருதெருநாய் இக்கவிதையின் மூலம்  முகநூலில் உலா வருகிறது.

இட்ஸ் எ டாக்ஸ் டே மக்கா ..

அன்பன் 
மது


Comments

  1. எனது மனமார்ந்த நன்றி தோழர்..

    - நந்தன் ஶ்ரீதரன்

    ReplyDelete
    Replies
    1. கவிதை பிடித்திருந்தது எனவே பகிர்ந்தேன் தோழர்

      வருகைகு நன்றி தோழர்

      Delete
  2. மிக அருமையான கவிதைப் பகிர்வு சகோதரரே!

    வாழ்வியல் நாடகத்தில் நாம் ஏற்று அல்லது இதுதான் உனக்கெனத் (திணிகப்பட்ட) தரப்பட பாத்திரங்களில் நாம் நமது பங்கை மிகச் சரியாகவே ஆற்றிக் கொண்டிருக்கின்றோம்...

    நாயாகப் பிறந்தாலும் நம்ம தலையெழுத்து அங்கு எப்படி மாற்றப்பட்டிருக்குமோ.. அன்றி மாறியிருக்குமோ யார் கண்டா?...:)

    நல்ல பகிர்வு! ரசித்தேன்! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்த ஒரு கவிதையை நீங்களும் ரசித்திருப்பது மகிழ்வு..

      நந்தன் மிக நல்ல எழுத்தாளர் ... அவருடைய சொல்லாடல்கள் "சொல் புதிது பொருள் புதிது" ரகம் நான் மிகவும் ரக்சிக்கும் இன்னொருவர் வண்ணதாசன், மாரி செல்வராஜ் இன்னும் பலர் வருவார்கள் பகிர்வுக்கும்..

      நன்றி சகோதரி ...

      Delete
  3. சகோவிற்கு வணக்கம்
    அருமையான கவிதையைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோ. இது தான் வேண்டும் தான் படித்ததில் பிடித்ததை மற்றவர்களுக்கும் பகிரும் தங்களின் உயர் குணத்திற்கு நன்றிகள். இது போன்ற செயல்கள் படைப்பாளியையும் வாசகர்களையும் இரு சேர மகிழ்விக்கும். திறமைகள் எங்கு இருந்தாலும் தேடிச் சென்று பாராட்ட தயங்கக் கூடாது எனும் ஒரு விடயத்தை மனதில் தேக்கி வைத்திருந்தாலும் தங்கள் உள்ளிட்ட நமது நண்பர்கள் மூலம் தான் செயல்படுத்தக் கற்றுக் கொண்டேன் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன் சகோ. பகிர்வுக்கு நன்றி சகோதரர்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக