புதுகையில் ஒரு வாசக வட்டம்


பிரியத்துக்குரிய நந்தன் ஸ்ரீதரன் மதுரை கூழாங்கற்கள் இலக்கிய கூடலுக்கு வருமாறு அழைத்திருந்தார். எட்வின் அய்யாவும் இந்நிகழ்வினை குறித்து எழுதியிருந்ததால் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஏனோ தெரியவில்லை பங்கேற்பிற்கான நாள் தள்ளிக்கொண்டே போகிறது என்ற வருத்தம் எனக்கு இருந்தது.

இந்நிலையில் அய்யா முத்துநிலவன் அழைத்து வாசிக்கும் பழக்கமுள்ள நண்பரகளுக்காக ஒரு சந்திப்பு ஒன்று புதுகை ஆக்ஸ்போர்ட் சமயற்கலை கல்லூரியில் 05/01/2014 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாலை நான்கு மணிக்கு வந்துவிடுங்கள் என்று சொன்னார்.

ஆறுமணி நேரத்தை செலவிட்டு பேருந்தில் சென்றால்தான் தோழர் கடங்கநேரியானின் கூழாங்கற்கள் நிகழ்விற்கு செல்லலாம். ஒரு திராட்டில் திருகலில் வீட்டின் அருகில் இப்படி ஒரு வாகான வாய்ப்பு! தவறாமல் சென்றேன்.

மிக குறைந்த பங்கேற்பாளர்களே அவையில் இருந்தனர் மொத்தம் இருபத்தி ஐந்துபேருக்கும் குறைவாகவே பங்கேற்றனர். இருந்தாலும் நிகழ்வு மிக அருமையாக இருந்தது.

முதல் நிகழ்வாக நம்மாழ்வாருக்கு ஒரு நினைவேந்தல் மற்றும் மௌன அஞ்சலி. மிக நிறைவான தொடக்கம். புதுகையின் தொல்பழங்கால பாறை ஓவியங்களை கண்டறிந்த  முனைவர். நா. அருள்முருகன் பொதுவாக எப்படி நிகழ்வு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், தலைமை சார்ந்து இயங்காமல் இயக்கம் சார்ந்து செயல்படுவதின் அவசியம் குறித்தும், பங்கேற்பாளர்கள் எவ்வாறு பங்களிப்புகளை தரவேண்டும் என்றும் வழிகாட்டி நெறிமுறைகளை கூற அது குறித்த விவாதம் தொடர்ந்தது.பெருமாள் முருகன் சில வேளைகளில் இல்லாவிட்டால் கூட  கூடு நிகழ்வு நாமக்கல்லில் தொடர்ந்து நடைபெற்றுவருவதை குறிப்பிட்டார்.

நிகழ்வில் முத்துநிலவன் அண்ணா இலங்கை தமிழ் ஆய்வாளர் மௌனகுருவின் பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும் என்கிற நூலையும் அதன் வீச்சையும் குறித்து சிறப்பாக அறிமுகம் செய்தார். சிவத்தம்பியும், கைலாசபதியும் அகில உலக கவனம் பெற்றவர்கள் மௌனகுரு அவர்களுக்கு ஓர் மாற்றுக்கூட குறைவில்லாதவர் என்று கூறினார்.

தொடர்ந்து நிகழ்வின் குட்டி சுட்டி சூர்யா ஹாரி பாட்டரும் இரசவாதமும் என்கிற மொழிபெயர்ப்பு நூல் குறித்தும், சக்தி வந்தார்கள் வென்றார்கள் குறித்தும் பேசினார்கள்.

கவிஞர் கீதா தொ. பரமசிவனின் அறியப்படாத தமிழகம் என்கிற நூலை அறிமுகம் செய்து விவாதித்தார். கவிஞர் மகா சுந்தர் தொ.பாவின் இன்னொரு நூலையும் அறிமுகம் செய்தார்.

நூல்களின் கருத்துக்கள் குறித்த விவாதத்தில் சான்றோர் சொன்ன விளக்கங்கள் ரொம்ப அருமை. ஒரு புதிய அனுபவம். ஒரு இன்டராக்டிவ் இலக்கிய கூட்டம். குறிப்பாக முனைவர். அருள் முருகன் இலங்கை தமிழ் ஆய்வாளர்கள் குறித்து விளக்கி கூறியதின் மூலமே நான் அவர்களின் மேன்மையை உணர்ந்தேன். 

பதத்திற்கு ஒரு பருக்கை

"தமிழுக்கு சோறு போட்டவர்களும், தமிழ்த்தாய்க்கு சோறு போட்டவர்களும் வாழும் நாடு நமது தமிழ் நாடு, ஆனால் அவர்கள் (இலங்கை தமிழ் அறிஞர்கள்) மிக ஆழமான ஆய்வுகளை செய்தாலும் இப்படி நினைத்து கூட பார்த்தவர்கள் அல்லர்", என்றார் முனைவர்.

 இறுதியாக சுரேஷ் மான்யா ஆங்கரை பைரவியின் விரல் தொட்ட வானம் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார். நான் கவிஞரின் கையொப்பத்துடன் ஒரு பிரதியை வாங்கி வந்தேன்.

பொழுதை பொன் செய்வது என்று பிரபஞ்சன் அடிக்கடி சொல்வார். இன்று நான் அதைத்தான் செய்தேன்.

மொத்தத்தில் மிக நல்ல ஆரம்பம். ஆரம்பித்த நல்ல இதயங்களுக்கு நன்றிகள்.


அன்பன்
மது

இந்தப் பதிவின் இடியம் 


நல்ல நண்பர்களை எப்படி அழைப்பது?

பாஸ்ட் பிரண்ட்ஸ் !
fast friends
நல்ல, விசுவாசமான நண்பர்களை இப்படி அழைக்கலாம்.

Sanjai and Saravanan are fast friends since college.

கல்லூரி காலத்தில் இருந்தே சஞ்சயும் சரவணனும் நல்ல நண்பர்கள்.

ஓகே சந்திப்போம்
அடுத்த பதிவில்

https://drive.google.com/?tab=jo&authuser=0#folders/0B5pZ7qrTEBeKdzc2RGpJWTYzQjQ


Comments

 1. சகோவிற்கு வணக்கம்
  மிக சிறப்பாக சந்திப்பில் நிகழ்ந்த விடயங்களைப் பகிர்ந்து விட்டது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. புதுக்கோட்டையில் இனிதாய் துவங்கிய இவ்விலக்கிய அமைப்பு வருங்காலங்களில் மிக சிறந்த படைப்பாளிகளைத் தரும் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. படிக்கும் பழக்கத்தை இலக்கிய நண்பர்களிடம் வளர்க்கும் விதமான சந்திப்பு அமைந்ததும், அதில் நானும் பங்கு பெற்றதும், பங்கெடுத்து கொள்ள போவதிலும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சந்திப்பு குறித்து நானும் பதிவிட்டுள்ளேன், தங்களது படத்தைப் பயன்படுத்தியுள்ளேன். பகிர்வுக்கு நன்றிகள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. நன்றி மது. எதிர்பார்த்த சிலர் வரவில்லை, எதிர்பாராத புதியவர்கள் சிலர் வந்திருந்தார்கள். வழக்கம் போலவே தாமதமாகத் தொடங்கியதால் அடுத்து நான் போயிருக்க வேண்டிய ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தவறவிட்ட வருத்தம் இருந்தாலும், இது ஒரு நல்லதொடக்கம் என்றே தோன்றுகிறது. அடுத்த கூட்டத்தை கஸ்தூரியும் சுரேஷ்மான்யாவும் அழைப்பது, ஒருங்கிணைப்பது என்று எடுத்த முடிவைச் சிறப்பாகச் செயல்படுத்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக நல்ல ஒரு ஆரம்பமாக தோன்றுகிறது...

   அய்யாவின் முயற்சிகள் சில ஆண்டுகளில் நன்றியுடன் நினைத்து பார்க்கப் படும்..

   Delete
 3. அருமையான ஒரு விசயம், துவக்கம்..பாராட்டுகள் மது!! மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போல பல கூட்டங்கள் நடக்க வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மனம் கனிந்த வாழ்த்துக்களுக்கு நன்றி

   Delete
 4. நடந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பின்னூட்ட வேகம் குறித்தும் பேசினோம்... நன்றி...

   Delete

Post a Comment

வருக வருக