இலக்கிய ஆர்வலர் சந்திப்பு கூட்டம் இரண்டு



இலக்கிய ஆர்வலர்கள் கூடி விவாதிக்கும் தளமாக புதுகையில் ஒரு இலக்கிய ஆர்வலர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்வதை நீங்கள் அறிவீர்கள்.


இரண்டாம் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு அடியேனுக்கும் திரு. சுரேஷ் மான்யா அவர்களுக்கும் கிடைத்தது. கூட்ட நிகழ்விற்கு வழக்கம் போல் ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியின் நிறுவனர் திரு. சுரேஷ், அவரது கூட்ட அரங்கு ஒன்றைத் தந்தார்கள்.

திட்டமிட்டபடி கடந்த 09/02/2014 அன்று புதுகையின் பெரும் இலக்கிய ஆர்வலர்கள் கூடி இரண்டாம் கூட்ட நிகழ்வை நடத்தினர்.

கூட்டத்தில் கவிஞர் பீர்முஹமது "புத்தகம்" என்ற தலைப்பில் ஒரு கவிதையை வாசிக்க அனைவரும் அதன் நிறைகளை சிலாகித்து பேசினார்கள்.

பின்னர் ஒரு ஆய்வு தொடங்கியது! இன்னும் எப்படி இருந்தால் கவிதை நன்றாக இருந்திருக்கும் என்று ஆரோக்கியமான வழிகாட்டுதல்கள் தரப்பட்டன.

குறிப்பாக கவிஞர் முத்துநிலவன், கவிதை இரு கருப்பொருள்களை கொண்டிருப்பதையும், (நூல் மற்றும் நூலகம்) எப்படி இதனைத் தவிர்த்திருக்கலாம் என்றும் விவாதித்தார். அவர் சொன்ன பாணி ரொம்பவே நுட்பமான, வெகுசிரத்தையாக ஒன்றாக  இருந்தது.

கொடுத்து வைத்தவர் பீர். பின்னர் பேசிய பொன்.கருப்பையா அய்யா அவர்களும் தனது பாணியில் வழிகாட்டினார். வெகு நீளமாக இருக்காது சுருக்கென்று இருக்க வேண்டிய அவசியத்தை சொன்னார்.

முனைவர். அருள் முருகன், கவிதையில் நேரடியாக புத்தகம் என்று குறிப்பிடாமல் அதனை வாசகர்கள் உணர வைத்திருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொன்னார்.

பீரின் கவிதையும் அதைத் தொடர்ந்து எழுந்த இலக்கிய ஆய்வும், வழிகாட்டுதலும் புதுகையின் இலக்கிய பயணத்திலும் பங்களிப்பிலும் முற்றிலும் புதிது. அது மிகுந்த ஆரோக்கியமானதும் அவசியமானதும் என்று நான் உணர்ந்த தருணம் அது.

தொடர்ந்து திரு. குருநாதசுந்தரம் ஒரு சிறுகதையை விமர்சனம் செய்தார்.  சமுத்திரம் அய்யாவின் ஏவாத கணைகள் என்கிற சிறுகதை அது. அதைத் தொடர்ந்து எழுந்த விவாதம் ஒரு அருமையான இலக்கிய அனுபவம்.

சமுத்திரம் அவர்களின் எழுத்துப் பாணியும், கதை சொல்லும் பாங்கும் விவாதிக்கப்பட்டன. முனைவர். அருள்முருகன் மிக நீண்ட ஒரு விரிவுரையைத் தர, தொடர்ந்து சுரேஷ் மான்யா பேச ஆரம்பித்ததும் எனக்கு சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை.

கடந்த நிமிடம் வரை மிக அமைதியாக இருந்த சுரேஷ் பேச ஆரம்பித்தவுடன்  முற்றிலும் புதுநபராக இருந்தார். கண்ணீர் என்கிற குரலில் அவையின் கவனத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த அவர் சிறுகதை ஆசிரியருக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள வேறுபாட்டினை தெளிவாக விளக்கினார்.

தமிழ் பதிப்புலகில் எடிட்டர்கள், அவர்களுக்கான தேவைகள், அண்ணாவின் எழுத்துப் பாணி, விமர்சனப் பாணிகள் என பல்வேறு இலக்கிய தலைப்புக்கள் விவாதிக்கப்பட்டன.

அழைப்பினை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

ஆரோக்கியமான விவாதங்களைத் தொடர்ந்து  கலந்தாய்விற்கான ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதில் விவாதம் தொடர்ந்தது.  உறுப்பினர்களின் தேர்வில் இறுதியில் மகிழம் மற்றும் ஆயம் என்கிற இரண்டு பெயர்கள் பட்டியலில் உள்ளன. நீங்களும் கூட சொல்லலாம். பின்னூட்டத்தில்!

அடுத்த கூட்டம் முனைவர்.துரைக்குமரன் மற்றும் கவிஞர். குருநாதசுந்தரம் வசம். கலக்குவார்கள் என்றே நினைக்கிறன்.

எந்த இலக்கிய பின்புலமும் இல்லாத மிகச் சாதாரண வாசகனான எனக்கு இந்த வாய்ப்பினைக் தந்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு பெரு நன்றி...

இந்தக் கூட்டத்தின் நல்வரவு திரு. ஆண்டனி மற்றும் கவிஞர் நாகூர்.

அன்பன்
மது,

Comments

  1. இலக்கியக் கூட்டத்தை நடத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பல!

    ReplyDelete
  2. வணக்கம் சகோ
    தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கலந்து கொள்ளவில்லை என்ற தவிப்பை உங்கள் பதிவு போக்கி விட்டது. இலக்கிய ஆர்வலர் சந்திப்பு புதிய தளம் நோக்கிப் பயணிப்பது மகிழ்ச்சியாய் உள்ளது. அடுத்த கூட்டத்தில் பெயர் சூட்டுவிழா தானோ! இரு பெயர்களும் நன்றாக உள்ளன. ஆயம் எனக்கு பிடித்துள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ. விரைவில் சந்திப்போம்..

    ReplyDelete

Post a Comment

வருக வருக