கறம்பக்குடி கவிதைப் பயிலரங்கம் ஒரு நினைவுக் குறிப்பு...

 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ,கரம்பக்குடி கிளை சார்பில் கவிதை பயிலரங்கம் கரம்பக்குடி ரீனா மெர்சி பள்ளியில் நடைபெற்றது.கவிதை கண்காட்சி,கவியரங்கம்,விவாத மேடை,கவிதைகள் வாசித்தல்,மண் மணம் கமழும் பாடல்கள் என நாள் முழுவதும் கவிதை நிகழ்வுகள் அரங்கேறின..

கவிதை கண்காட்சியில் காதல்,சமூகம்,பெண்ணியம் பேசும் கவிதைகள் அழகான ஓவியத்துடன் இடம் பெற்று இருந்தன

கவிதை கண்காட்சியில் கூடுதல் சிறப்பு -ஓவியங்களை வரைந்தவர் வாய் பேசா காது கேட்கா மாற்று திறனாளி இளம் கல்லூரி மாணவி என்பது.அந்த பெண் தீட்டிய ஓவியங்கள் பார்ப்போரை நெகிழ செய்தது.

வினோதா என்ற அந்த மாணவி இளங்கலை ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

அவர் கவிதையை படித்து பொருளை உள்வாங்கி விரல்கள் வழியே ஓவியத்தில் இறக்கியது தனி ரசவாதம்.

அவள் பேசாததை அவள் ஓவியங்கள் பேச பார்ப்போர் விழி வியந்தனர்.

கவிதை கண்காட்சியை திறந்து வைத்த சுபபாரதி கல்வி குழும தலைவர் குரு.தனசேகரன் மாணவி வினோதாவின் கல்லூரி மேல் படிப்பிற்கு தன் கல்வி குழுமத்தில் இலவச இடம் அளிப்பதாக அங்கேயே அறிவித்தார்.

மாவட்ட செயலாளர் ரமா ராமநாதன் தொடக்க இலக்கிய உரை ஆற்றினார்."ஆதலினால் கவிதை செய்வீர் "என்ற தலைப்பில் கவிஞர்.ஜீவி கவிதைகளை மேற்கோள் காட்டி பேசி உற்சாகமூட்டினார். வந்தவாசி அகநி பதிப்பாளர் கவிஞர்.மு.முருகேஷ் ஹைக்குகளோடு ஒரு கைகுலுக்கினார்.

கவிஞர்.தங்கம்.மூர்த்தி தலைமையில் கவிஞர்கள் மதியழகன்,ஸ்டாலின் ,சுவாதி,கவிபாலா,சிவா ஆகியோர் பங்கேற்ற சுழலும் கவியரங்கம் நடைபெற்றது.கவியரங்க தலைப்புகள் சுவராஸ்யம் மிகுந்தவையாக இருந்தன.கவிதையில் தன் அறிமுகம்,மரத்திற்கு இலை எழுதும் கடிதம்,கடல் மீன்கள் பேசினால் என வித்தியாசமான தலைப்புகளில் கவிஞர்கள் அசத்தினர்.

கவிதைக்கு மிகவும் முக்கியம் எது என்ற தலைப்பில் கவிஞர்.முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற விவாத மேடையில் கவிஞர் ராசி பன்னிர்செல்வன்,பேராசிரியர் மாதவன்,ஞாசே ,அண்டனூர் சுரா,சந்திர சூர்யா ஆகியோரும் பேசினார்.

இளங்கோ,ஜெயலக்ஷ்மி,உத்தம் சிங் ,சுரேஷ் மான்யா,பீர்முகமது ,புதுகை புதல்வன் ஆகியோர் அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் சில நிமிட கவியுரை வழங்கினர்.

வெள்ளைசாமி,அன்பழகன்,அந்தோனிசாமி ஆகியோர் பாடல்கள் இசைத்து செவியில் தேன் வார்த்தனர்.அரிபாஸ்கர் , ,சிவானந்தம்,ராகசூர்யா,கீதா,மணிவண்ணன்,முத்துகுமரன் கவிதை சரம் தொடுத்தனர்.

காலை நிகழ்வில் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் உடனடி கவிதை எழுதி சமர்பித்தனர்.அதில் சிறப்பு கவிதைகள் குழு அமைக்கப்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்டது .
பார்வையாளர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகளுடன் ஒய்வு பெற்ற ஆசிரியரும் கூட கவிதை எழுதி சமர்பித்தார்.

கரம்பக்குடி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் சத்யவாணி முத்து எழுதிய அம்மாவின் அழகு என்ற தலைப்பிலான கவிதை மிகுந்த பாராட்டு சான்றும் பரிசும் பெற்றது.

"பிரசவ வலியில்
துடித்த பெண்
தனது அம்மாவை அழைத்து
கேட்டாள்...
குழந்தைக்கும் வலிக்குமா?"

என்பதே அந்த கவிதை.

காலை 10 மணியிலிருந்து மாலை 4.30 வரை அரங்கமெங்கும் கவிதையே பரவி மணத்தது.
நிகழ்வு முடிந்து கூட்டி அள்ளப்பட்ட குப்பை காகிதங்களில் கூட கவிதையே கிறுக்கப்பட்டு இருந்தது.

பங்கேற்ற அனைவரது இதழ்களும் ,செவிகளும் தமிழ் கவிதைகள் ஆக்கிரமித்து இருந்த நாளாக அன்றைய பிப்ரவரி 16 அமைந்தது என்றால் மிகை அல்ல.

நிகழ்வு ஏற்பாட்டுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ,கரம்பக்குடி கிளை செயலாளர் ஸ்டாலின் ,தலைவர் செல்லி மனோகர்,கிளை நிர்வாகிகள் திரவி,காசி,சிவானந்தம்,உமாநாத்,வீரய்யன்,பால் கென்னடி,ஜேம்ஸ் உள்ளிட்ட நண்பர்கள் செய்திருந்தனர்.

விழாவில் பேசிய ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷ் தொலைந்து போன மனிதம் குறித்து பேசுகையில் குறிப்பிட்ட மீன்கள் சம்பவம் ஆயுசுக்கும் மறக்காது.

மனிதர் ஒரு மீன்பன்னையை பார்த்திருக்கிறார். அங்கே வேலையில் இருந்த ஒரு பெண்மணி சில மீன்களை எடுத்து ஏதோசெய்திருக்கிறார். என்ன செய்கிறார் என்று கூர்ந்து பார்க்கையில் ஒரு ஊக்கை எடுத்து சில மீன்களின் கண்ணை மட்டும் குத்தியிருக்கிறார்.

நம்ம ஆள் விசாரிக்க விளக்கியிருக்கிறார். பெண்மீன்களின் கண்ணை குருடாக்கி விட்டால் அங்கெ இங்கே ஓடாமல் ஒரே இடத்தில நிற்கும். எனவே ஆண்மீன்கள் சுலபமாக இணையும். முட்டைகள் சீக்கிரம் கிடைக்கும். சீக்கிரம் காசு பாக்கலாம்.

ஒரு காகிதம் நம்மை எவ்வளவு குரூரமானவர்களாக மாற்றியிருக்கிறது. கேட்டவுடன் நெற்றிப் பொட்டைப் பிடித்தவாறு குனிந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த கவிபாலாவோ முகம் மாறிப் போய் கைகளை முன்னும் பின்னும் அதிர்ச்சியில் அசைத்தவாறே இருந்தார்.

நண்பர் ஸ்டாலின் சரவணனோடு

மது

Comments

 1. பதிவில் உள்ள கவிதைகள் அனைத்தும் அருமை. அதுவும் நீங்கள் சொன்ன மாதிரி "அம்மாவின் அழகு" கவிதை - உலக அழகு.

  தங்களின் நண்பர் ஸ்டாலின் சரவணனின் கவிதையும் அம்மாவின் அழகை பேசுகிறது.

  தாங்கள் எதுவும் கவிதையை படைக்கவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்,
   தாய் குறித்த இலக்கிய படைப்புகள் என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணம் அக்கவிதை..
   அப்புறம் தோழர் எனது மாணவர்கள் பங்கேற்ற போட்டி அது ...
   எனது மாணவி காளிஸ்வரி இரண்டாம் பரிசு பெற்ற போட்டி...
   புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பை தர நான் எழுதவில்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க ... நான் பல்ப் வாங்க விரும்பவில்லை...என்பதுதான் உண்மை

   Delete
  2. தங்கள் மாணவிக்கு பாராட்டுகள்.
   நீங்கள் எல்லாம் பல்ப் வாங்க கிரும்பவில்லை என்று சொன்னால், நானெல்லாம் என்ன சொல்லுவது.

   Delete
 2. ஓவியம் வரைந்தவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

  ReplyDelete
 3. மீன்கள் சம்பவம் ஐயோ...!

  மற்ற கவிதைகள் அருமை... சத்யவாணி முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அருமையானத் தொகுப்பு!

  "பிரசவ வலியில்
  துடித்த பெண்
  தனது அம்மாவை அழைத்து
  கேட்டாள்...
  குழந்தைக்கும் வலிக்குமா?"

  9ஆஅம் வகுப்பு படிக்கும் சத்தியவாணியிடமிருந்து சத்தியமான கவிதை! மூளையில் வாணி வீற்றிருக்கிறாள்!! பாராட்டுக்கள்!
  சத்தியவாணி!

  வெள்ளை உடையில்தான்
  தேவதை இருப்பாள்
  எவன் சொன்னது!
  அழுக்கு உடையில்
  அடுப்படியில் அம்மா!

  மகுடம் சூட்டப் பட வேண்டிய கவிதை! அயர்ந்து விட்டோம்! இரு கவிதைகளையும் வாசித்து!

  நல்ல பகிர்வு நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா.
   நாம் தளம் கொடுத்தால் மாணவர்கள் சாதிப்பார்கள் என்பதை நான் உணர்ந்த தருணம் அது..
   இந்த நிகழ்வில் பங்கேற்ற 23 மாணவர்களிடம் தொடர்ந்து கவிதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.. பாப்போம்..

   Delete
 5. ///பிரசவ வலியில்
  துடித்த பெண்
  தனது அம்மாவை அழைத்து
  கேட்டாள்...
  குழந்தைக்கும் வலிக்குமா?"///
  சத்யவாணி முத்துவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. விரிவான பதிவு மீண்டும் என்னை அந்நிகழ்விற்கு அழைத்துச்சென்றது .கவிதை சூப்பர்.மீன்.பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது.கொடுமை.நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞரே...

   Delete
 7. கவிதைகள் அனைஹ்த்தும் அருமை..
  வினோதாவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்..

  வெற்றிபெற்ற கவிதை மிக அருமை!

  மீன் தகவல்...தலை சுற்றுகிறது..இப்படியா இருக்கிறது உலகம்!!!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞரே..
   இதே உலகில் தான் நாம் இருக்கிறோம்.

   Delete
 8. வணக்கம் சகோ
  அப்பப்பா நடந்தவற்றை இதை விட கோர்வையாக கூற முடியாது பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். கவிதைகள் அனைத்தும் கண்களில் அப்படியே ஒட்டிக்கொள்கிறது. கல்லூரி மாணவி வினோதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அவரின் ஓவியங்கள் புருவம் தூக்கிப் பார்க்க வைக்கிறது. மீன் பண்ணை பற்றிய செய்தி நெஞ்சை உறுத்துகிறது. ஒற்றைக்காகிதத்தில் உலகம் சுற்றுகிறது பாஸ். திரு. ஸ்டாலின் சரவணன் உள்ளிட்ட அனைத்து விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்..

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் வந்திருக்கலாம்
   இருந்தாலும் புதுமாப்பிள்ளை எனவே நோ டிஸ்டபன்ஸ் ... என்று விட்டுவிட்டேன்..

   Delete
 9. வணக்கம் சகோ ! கவிதைகள் அருமை அம்மா இன்னும் அழகு
  ஓவியம் வரைந்தபிள்ளைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

  மீன்களது நிலை தான் வருதத்திற்குரியது.
  நல்ல பதிவு

  நன்றி வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞரே...

   Delete
 10. கவிதைகள் அருமை. ஓவியத்தை வரைந்த சிறுமி பாராட்டுக்குரியவர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக