விமல் என்றோர் நடிகன்

நேற்று அவனைப் பார்த்தேன். ஒரு கருப்பு ஹீரோ ஹோண்டா பாஷனில் வெகு விரைவாக என்னைக் கடந்த அவன் சிறிது தூரம் சென்று திரும்பி வந்து சார் நல்லா இருக்கீங்களா? என்றான்.

அட விமல், என்னடா பண்ற?

ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக இருக்கேன் சார்.
ரொம்ப மகிழ்வாய் இருந்தது. ஆள் ரொம்ப மான்லியாக இருந்தான்.

சந்திப்பு ஒரு மகிழ்வு,

மெல்ல மனதிலொரு கொசுவர்த்தி சுழன்றது.

அது ஒரு வழக்கமான பள்ளி நாள். பத்து மணி அளவில் பள்ளிக்குள் தயங்கி தயங்கி நுழைந்தார் ஒரு பெண்மணி. முகத்தில் கொஞ்சம் பதற்றம். சில விசாரிப்புகளுக்குப் பின்னர் பத்தாம் வகுப்பிற்கு வந்தார்.

பாடம் நடத்திக்கொண்டு இருந்த என்னிடம் கேட்டார் “சார் விமல் வந்துட்டானா?”

விமல் கொஞ்சம் ஒரு மாதிரியான மாணவன். நிலைத்து உறைந்து போன சிரிப்பு, அதீத குறும்பு எப்போதும் யாரோடோவது சண்டை. இது தான் விமல். போதாததிற்கு கற்றல் திறன் குறைபாடு வேறு. லோக்கல் அரசியல் புள்ளி ஒருவர் பெயர் என்பதால் நான் தம்பி ஒண்ணுமில்ல உன் பெயர் ராசி அப்படி. என்று சொல்லி கலாய்ப்பது வழக்கம்.

அவனுடைய அம்மாதான் அவர்.

சார் நீங்களே கேளுங்க சார் காலையில் வீட்டில் சண்டை போட்டுட்டு மேல் சட்டை கூட போடாமல் வீட்டை விட்டு வந்துவிட்டான். இது நல்ல புள்ளைக்கு அழகா?

பயல் ஒரு நைந்து போன பனியனை போட்டிருந்தான். ஏது என்றால் பள்ளிக்கு அருகே ஒரு வீட்டில் எதோ ஒரு காரணத்தை சொல்லி வாங்கியிருக்கிறான்.
மனதிற்குள் தாளமுடியா சிரிப்புடன் ஆறுதல் கூறி அந்த அம்மாவை அனுப்பி வைத்தேன் நான்.

சில நாட்கள் கழித்து ஒரு ஜே.சி பயிற்சியில் ஒரு வேடத்தை நடிக்க வேண்டியிருந்தது. எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “சாமி சிலை திருடன்”. எவ்வளவுதான் முயன்றாலும் என்னால் சிறப்பாக செய்ய முடியவில்லை.

மதுரையில் இருந்து வந்த எஸ்.எம் சிவக்குமார், பாளையில் இருந்து வந்த பேரா. வினோஜி போன்றவர்கள் தனிமுத்திரைபதிக்க பார்த்துகொண்டிருந்த எனக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து ஒட்டிகொண்டது.

மெல்ல யோசித்துப் பார்த்தேன் இந்த மாதிரிப் பயிற்சிகள் என் பள்ளிப் பருவத்தில் ஒருபோதும் எனக்கு கிடைக்கவில்லை என்பதே ஒரு காரணம் என்று தோன்றியது.

பயிற்சிக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பிய நான் விளையாட்டாக எங்களுக்கு ஜே.சி. பயிற்சியில் கொடுக்கப்பட்ட துண்டு சீட்டுகளையே சிலருக்கு கொடுத்தேன். அதில் சாமி சிலை திருடன் விமல்!

சில நிமிடங்களில் தாங்களாகவே ஒரு சீனை தயார் செய்து நடித்தனர் மாணவர்கள். வகுப்பறை கைதட்டலில் அதிர்ந்தது. குறிப்பாக கற்றல் திறன் குறைந்த விமலுக்குத்தான் அதிக கைதட்டல்!

விமல் அந்த நிகழ்வில் இருந்து சுத்தமாக மாறிப்போனான். என்னிடம் கூடுதல் மரியாதையோடு இருந்தான். அவனுக்கான ஒரு தளத்தை, ஏற்பை உருவாக்கி அதுநாள் வரை பரிகசிக்கப் பட்ட அவனை ஒரு ஹீரோவாக்கியதற்கு கிடைத்த வெகுமதி அது. நாட்கள் உருண்டன.

ஏ.பி.சி.டி. கூட ஒழுங்காக எழுதத் தெரியாத அவன் மனப்பாடபாடலின் இரண்டு வரிகளை எழுதிக்காட்டி எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தான்.

இவனுக்கு டி.சி. கொடுத்தால் ஒரு பர்சென்ட் ரிசல்ட் எகிறும் என்கிற பெருமூச்சுகள் எழத்தான் செய்தது. ஆசிரியர்களின் அத்துணை உழைப்பையும் கேலி செய்யும் தேர்வு முடிவுகளைத் தரும் ஒரு மாணவனை எப்படி எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும்?

அவனாக நின்றுகொள்வான் என்று எதிர்பார்த்தோம். வழக்கம் போல் ஏமாற்றினான். தேர்வுகளை எழுதினான். தேர்ச்சி முன்பே தெரிந்ததுதானே? ஆனால் ஆங்கிலத்திலும் அறிவியலிலும் தேர்ச்சியடைந்திருந்தான்! தாய் மொழிப் பாடத்தில்கூட தோல்வி!

இவன் எப்படி இங்லீசில் பாஸ் என்பது சில நாட்களுக்கு விவாதிக்கப்பட்டது. அவனை அவனது சக மாணவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ததில் இருந்தது எனது வெற்றி. நீண்ட நாட்களாக பகடிசெய்யப்பட்ட அவனுக்கு கைதட்டல்களை வாங்கித்தந்ததுதான் காரணம்.

நமது கல்வி முறை ஒருவனின் திறன்களை வெளிக்கொண்டுவருவதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாறாக சில தேர்வு முடிவுகளைக் கொண்டே அவர்களை உனக்கு ஒன்னும் வராது என்று தாழ்வு மனப்பான்மைக் கடலில் தள்ளும் முறை என்று ஒழியும்?

மாணவர்களின் கரம் பற்றி அவர்களின் உலகிற்கு பயணித்து அவர்களின் திறன்களை வெளிக்கொணர்வது கல்வியா, ஐயோ எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது நான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற இயலாமை உணர்வைத் தருவது கல்வியா?
மாற்றம் அவசியம்.

மாறும், காத்திருப்போம்.
அன்பன்
மது

ஒரு முகநூல் கவிதை 

பெருமதிப்பிற்குரிய திரு. வண்ணதாசன் அவர்களின் முகநூல் கவிதை ஒன்றின் கடைசி வரி தந்த கவிதை.. 

சில
நாய்க்குட்டியாய்
காலில் அணைத்துக்கொள்ளும்

சில
அருஞ்சுவை குழம்பியாய்
மனச்சுவை மொட்டுகளில்
மோதித் திரியும்

சில
காதலியின் ரகசியப்
புன்னகையாக
இதயம் இடறும்

சில
சிறகுகளாய்
முதுகில் முளைக்கும்

சில
குழந்தையின்
புன்னகையாய்
எனது ஆன்மாவைத் திறக்கும்

ஆம்
எளிமையாக
கடக்க முடிவதில்லை
சில கவிதைகளை

- மது

Comments

  1. வணக்கம் சகோ.
    கல்வி எப்படி இருக்க வேண்டும்? அது மதிப்பெண் சார்ந்து இருக்கக் கூடாது மாணவர்களின் திறன்களை வெளிக் கொணர்வதாக இருக்க வேண்டுமென்பதை ஒரு உண்மை நிகழ்வின் விளக்கியமைக்கு முதலில் பாராட்டுகளும் நன்றிகளும். இன்றைய கல்வியாளர்கள் நிறையவே மாற்றத்திற்காக சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை அழகாக உணர்த்திய பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் சகோ. கவிதையும் கல்வி உதவித்தொகை செய்தியும் கண்டு மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம் சகோ..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள், ஒரு மாணவனை வெற்றிபெற்றவனாக மாற்றியதற்கு.

    http://sangamliteratureinenglish.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நன்றி முதலில் வருகைக்கு ...

      என்னமாதிரி ஆட்களுக்கு இப்படி அடிக்கடி முகவரிகளைத் தருவது முக்கியம்...
      நன்றி சகோதரி.. முகவரிக்கும்..

      Delete
  3. நல்ல விழிப்புணர்வுப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஆசிரிய பணியில் மட்டுமே கிடைக்கும் Job Satisfaction இதுதான் . வாழ்த்துக்கள் .-கணேசன்

    ReplyDelete
  5. அட.. அட அருமை ஆசிரியரே!
    உங்கள் பணியின் சிறப்பாக, மகுடம் வைத்ததாக இருக்கிறது விமலின் வளர்ச்சி!...

    இப்படி உன்னாலும் முடியும் தம்பி என்று ஊக்குவிக்கும் உங்கள் அருமையான குண இயல்பிற்கு ஒரு சலாம்!

    உள மார்ந்த வாழ்த்துக்கள் சகோ!..

    கவிதையடிப் பகிர்வும் அருமை! மிகவே ரசித்தேன்.
    என் உள்ளத்திலும் ஒட்டிக்கொண்டது...
    பகிர்விற்கு நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருக, எப்படி இத்துணை எத்துணைத் தளம் எத்துனை பின்னூட்டம்
      நீங்கள் பதிவுலகுக்கு லீவ் விட்ட பொழுது
      கொடிகட்டிப் பறக்கும் பதிவர் இளமதி என்று ஒருமுறை மைதிலி சொன்னாங்க...

      Delete
  6. நல்ல பகிர்வு!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஒளி பொருந்திய கவிதை விழிகளுக்கு வணக்கம்..

      Delete
  7. "//நமது கல்வி முறை ஒருவனின் திறன்களை வெளிக்கொண்டுவருவதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாறாக சில தேர்வு முடிவுகளைக் கொண்டே அவர்களை உனக்கு ஒன்னும் வராது என்று தாழ்வு மனப்பான்மைக் கடலில் தள்ளும் முறை என்று ஒழியும்?//"

    - நம் கல்வி முறையில் உள்ள மிகப்பெரிய குறைப்பாடே இது தான். அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

    அன்றைக்கு அந்த மாணவனை, நீங்களும் மற்றவர்களை மாதிரி நடத்தியிருந்தால், இன்றைக்கு அவன் ஒரு நல்ல நிலமையை அடைத்திருப்பானா என்பது ஒரு கேள்விக்குறியாகும்.

    நல்ல மாணவர்களை உருவாக்குவதில் உங்களின் பங்கு கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் தங்களுடைய இந்த தொண்டு. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. ஒரு குட்டிப் பதிவு... பின்னூட்டமாக
      நன்றி திரு.சொக்கன்

      Delete
  8. கல்வி முறையில் மாற்றம் அவசியம்.
    மாறும், காத்திருப்போம்.

    ReplyDelete
  9. டி.சி கொடுத்து அனுப்புவது தனியார் பள்ளிகளின் வேலை! திறமையை ஊக்குவிப்பது திறமையான ஆசிரியர்களின் வேலை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  10. வணக்கம்

    மாணவர்கள் கல் ஆசிரியர்கள் உழி என்பதை நன்றாசொல்லியுள்ளீர்கள்.. கல்லை நன்றாக செதுக்கிவிட்டீர்கள் இப்போது அவனை நம்பி நலுபேர் வாழ்கிறரர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
    கவிதை மிகவும் ஆழ்மனதில் பதிந்துள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. சகோ.ரூபன்

      Delete
  11. எல்லாப் பள்ளிகளிலும் விமல்கள் உண்டு.நம் கல்விமுறை,மதிப்பெண்களால் அவர்களை முடமாக்கும் வேலையைக் கவனமாய்ச் செய்கிறது. நம் தேர்வு முறையோ, அறியாமையை அளவிடும் பணியைச் செய்கிறது.,..மாறும் மற்றதை நோக்கிய நம் பயணம் தொடர்க!..வாழ்த்துகளோடு..!
    www.mahaasundar.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வேதனை அண்ணா
      காலம் ஒருநாள் மாறும் ...
      நன்றி

      Delete
  12. இதுவே உங்களுக்கு வெகுமதி.மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பெறுவது சாதாரண ஒன்று அல்ல..வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கு நன்றி..

      Delete
  13. வணக்கம் சகோ! நல்ல அருமையான பதிவு பல தடவை நான் நினைத்திருக்கிறேன் நிச்சயமாக எல்லோரிடமும் எதோ ஒரு திறமை இருக்கும் அதை பெற்றோரை விடவும் ஆசிரியர்கள் தான் அதை மற்றவர்களோடு ஒத்துப் பார்த்து இனம் கண்டு கொள்ள ஏதுவாக அமையும் என. பல துறைகளையும் படிக்கும் போது எதில் அவர்கள் ஆர்வம் மிகுந்திருக்கிறது எதை இலகுவாக செய்கிறார்கள் என்று கண்டு அறிந்து ஊக்கப் படுத்தவேண்டும். அதுவும் தட்டிக்கொடுத்தால் வெற்றி நிச்சயம். என்று அதை நிரூபிப்பது போல் தங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சியே. இது எவ்வளவு மகிழ்ச்சியை தரும் தங்களுக்கு என என்னால் யூகிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் சகோ ...!

    ReplyDelete
  14. மிக அற்புதமான ஒரு பதிவு நண்பரே!

    //நமது கல்வி முறை ஒருவனின் திறன்களை வெளிக்கொண்டுவருவதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாறாக சில தேர்வு முடிவுகளைக் கொண்டே அவர்களை உனக்கு ஒன்னும் வராது என்று தாழ்வு மனப்பான்மைக் கடலில் தள்ளும் முறை என்று ஒழியும்?

    மாணவர்களின் கரம் பற்றி அவர்களின் உலகிற்கு பயணித்து அவர்களின் திறன்களை வெளிக்கொணர்வது கல்வியா, ஐயோ எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது நான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற இயலாமை உணர்வைத் தருவது கல்வியா?
    மாற்றம் அவசியம். //

    இதைப் பற்றி நாங்கள் நினைப்பது உண்டு, பேசுவது உண்டு, விவாதிப்பது உண்டு! மாற்றம் எப்பொது? தாங்கள் அதை எழுதி விட்டீர்கள்! அழகாக!

    கற்றல் குறைபாடு உள்ளவர்களை மேலை நாடுகளில் தரக் குறைவாக எண்ணுவதில்லை! அவர்களுக்கும் நல்ல சூழல் வழங்கப்பட்டு, மதிக்கப்பட்டு, ஜெயித்தவர்கள் பலர் இருக்கின்றார்கள்!

    நாங்கள் எங்கள் வலைத்தளத்தில் கற்றல் குறைபாடு இருந்த ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்பட்டான், இப்போது எப்படி இருக்கின்றான் என்பதை எழுதி இருந்தோம் சில மாதங்களுக்கு முன்!

    மிகவும் பயனுள்ள ஒரு பதிவு! தொடருங்கள் ஆசிரிய நண்பரே!

    ReplyDelete
  15. கல்வியின் முக்கியத்துவத்தை விவாதிக்கும் பதிவைக் கண்டேன். அருமை.

    ReplyDelete
  16. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

    நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete

Post a Comment

வருக வருக